கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன 5
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.

எங்கள் வீட்டில் நாங்கள் ஒரு பசு வளர்க்கிறோம். எங்கள் பசு நேற்று ஒரு கன்றுக்குட்டியை ஈன்றிருக்கிறது.

எங்கள் பசு இன்று ஊர் மாடுகளோடு சேர்ந்து காட்டுக்கு மேய்ச்சலுக்குப் போய் இருக்கிறது.

பொழுது மறைந்துவிட்டது.

எங்கள் பசு வீட்டுக்கு இன்னும் திரும்பி வரவில்லை.

எங்கள் கன்றுக்குட்டிக்குக் கழுத்துப் பெலம் இல்லை. கழுத்துப் பெலம் இல்லாததால் கன்றுக்குட்டியின் தலை ஆடிக் கொண்டே இருக்கிறது.

நேற்றுத்தான் பிறந்த இந்தப் பிஞ்சுக் கன்றுக்குட்டி அதன் தாயைப் பார்ப்பதற்காக அது தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது.

-சிறைக்குடி ஆந்தையார்
குறுந்தொகை 132