அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்           5
காம நெரிதரக் கைந்நில் லாவே.

எங்கள் ஊரில் ஒரு ஏரி இருக்கிறது. அந்த ஏரிக் கரை அந்த ஏரியில் இருந்து எடுத்த மண்ணால் அமைக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் ஏரியில் எப்போதும் தண்ணீர் இருக்கும்.

ஏரிக்கரை தாங்கக்கூடிய அளவுக்கு மட்டும் ஏரியில் தண்ணீர் இருக்கும்.

ஒருநாள் எங்கள் ஏரிக்கு ஒரு பெரிய வெள்ளம் வந்தது. அந்தப் பெரிய வெள்ளத்தை எங்கள் ஏரிக்கரையால் தாங்க முடியவில்லை.

கரை உடைந்தது.

என் காமமும் அப்படித்தான்.

என் காமம் முன்பெல்லாம் என்னால் தாங்கக்கூடிய அளவில் இருந்தது. அதனால் என் நாணம் அடக்கமாக என்னிடத்தில் வெகுகாலம் வரை இருந்தது.

இன்று என் காமம் எல்லை மீறி என்னை மீறிவிட்டது. என்னால் என் காமத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நான் என் நாணத்தைக் கைவிட்டு விட்டு நான் என் காதலலோடு போய்க் கொண்டிருக்கிறேன்.

வெள்ளி வீதியார்
குறுந்தொகை 149