மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல 5
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே.

ஒரு ஆறு.

இந்த ஆறு மேற்கே இருந்து கிழக்காமல் நீளமாய் நீண்டு கிடக்கிறது. ஒரு இளம்பெண் அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு மாம்பழம் தண்ணீரில் மிதந்து மிதந்து மேற்கே இருந்து கிழக்காமல் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீரில் மிதந்து மிதந்து வந்த அந்த மாம்பழம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண் மேல் மோதி அந்த மாம்பழம் அவளுக்குப் பக்கத்தில் மணந்துகொண்டிருக்கிறது.

அந்த மாம்பழம் புதுசா இருக்கு. அது மணந்து கெடக்கு அந்த மாம்பழத்தைத் திங்கணும் போல் அவளுக்கு ஆசை ஏற்படுகிறது.

அவள் அந்த மாம்பழத்தை எடுக்கிறாள். அவள் கன்னங்களில் வைத்து அதை உருட்டுகிறாள். மோந்து பார்க்கிறாள், கடிக்கிறாள்.

திங்கத்திங்க ருசியாக இருக்கிறது, அந்த மாம்பழம். அழகான அந்த இளம்பெண் ஆசையோடு அந்த மாம்பழத்தை ரசித்துத் தின்று கொண்டிருக்கிறாள்.

அங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் அந்த இளம்பெண் மாம்பழம் தின்பதைப் பார்க்கிறார்கள்.

இந்த மாம்பழம் அரசனுக்குச் சொந்தமான ஒரு பெரிய மாந்தோப்பில் இருந்து ஆற்றில் விழுந்தது. இந்த மாம்பழம் அரசனுக்குச் சொந்தமானது.

ராணுவ வீரர்கள் அந்த இளம்பெண்ணைக் கைது செய்கிறார்கள். அவர்கள் அவளை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.

அரசன் அந்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.

அந்த இளம் பெண்ணின் தந்தை, தன் மகள் செய்த தப்பை மன்னித்து தன் பெண்ணுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு அரசனிடம் மன்றாடுகிறார்..

“அரசே.. என் மகள் செய்த தப்புக்குத் தெண்டமாக அவள் எடைக்கு எடை தங்கத்தில் சிலை செய்து தருகிறோம்..”

“அரசே.. எங்கள் மகள் செய்த தப்பை மன்னித்து எங்கள் மகளை எங்களிடம் உயிரோடு திருப்பிக் கொடுங்கள்..”

அரசன் மனம் இரங்கவே இல்லை.

அரசன் அழகான அந்த இளம் பெண்ணை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டான்.

பரணர்
குறுந்தொகை 292