வர வர என்னுடைய மனதில் அடிக்கடி எதிர்மறையான எண்ணங்களும், சில சமயம் வக்ர எண்ணங்களும் தோன்றுகிறன. அதை எல்லாம் என்னால் வெளியே சொல்ல முடியாது. யாருக்காவது தெரிந்தால் என்னை மிகவும் கேவலமாகப் பார்ப்பார்கள். ஏன் எனக்கே கேவலமாகத்தான் தெரிகிறது. எனக்கு அவ்வாறு எண்ணங்கள் தோன்றுவது தவறு என்று தெரிந்தாலும், அப்படித் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஏனென்றால் என்னைமீறி அந்த செயல் நடக்கிறது.

கோமதியை நான் மணம் முடிக்கும்போதே அவளுக்கு வயது 28. மிகவும் ஏழ்மையான குடும்பம். கையில் ஒரு பைசா வாங்காமல் திருமணம் செய்து கொண்டேன். மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழல். இருந்தும் சந்தோசமாகத்தான் இருக்கிறோம். சந்தோசத்திற்கான சாட்சியாக மூன்று பெண் குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஓரளவுக்கு அவர்களைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். என் இப்போதைய கவலை எல்லாம் “நான் எப்படி இவர்களை கரைசேர்க்கப் போகிறேன்” என்பதுதான். அவர்கள் திருமணத்திற்கு வேறு பணம் சேர்க்க வேண்டும். வரும் வருமானம் வாயிக்கும் வயிற்றுக்குமே போய்விடுகிறது. இந்த நிலையில் எங்கிருந்து நான் பணம் சேமிக்க? எனக்கும் இன்னும் பத்து வரும் சர்வீஸ்தான் இருக்கிறது. அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான், என் நண்பன் சேகர் அந்த யோசனையைச் சொன்னான்.

LICயில் ஏதோ புதிதாக ஒரு ஸ்கீம் வந்திருப்பதாகவும், அதில் சேர்ந்தால். பாலிஸிக்கு பாலிஸியும் ஆச்சு, பெண்கள் கல்யாணத்துக்குச் சேமித்தார் போலும் ஆகிவிட்டது என்று கூறினான். எனக்கு ஆரம்பத்திலிருந்து LIC என்றாலே ஒரு பயம் உண்டு. யாராவது அதைப் பற்றி பேசினால் காத தூரம் ஓடுவேன். LIC என்றாலே எனக்கு சாவுதான் நினைவுக்கு வரும். அலுவலகத்தில் எல்லோரும் இன்கம்டாக்ஸை குறைப்பதற்காக பாலிஸி எடுத்திருக்கிறார்கள்.

எவ்வளவோ நண்பர்கள் வற்புறுத்தியும் நான் எந்த பாலிஸியும் எடுக்கவில்லை. சாவு பயம் மட்டும் காரணமில்லை. இன்கம்டேக்ஸ் கட்டும் அளவிற்கு என் சம்பளம் இல்லை என்பதும் ஒரு காரணம். ஆனால், நண்பர்களோ “இன்கம் டேக்ஸுக்காக என்று ஏன் நினைக்கிறாய்? ஒரு சேமிப்பாகக்கூட பாலிஸி எடுக்கலாம் இல்லையா?” என்று எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டேன்.

ஆனால் சமீபகாலமாக, ஒருவித பயம் என்னை ஆட்கொண்டு என்னை நிம்மதி இல்லாமல் செய்கிறது. வேறு ஒன்றும் இல்லை? “எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ?” என்று அதிகம் பயப்படுகிறேன். அப்படி ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், மூன்றுப் பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு கோமதி கஷ்டப்படுவாளே? என்று கவலையாக இருக்கிறது.

இரவில் படுக்கும்போது கடவுளிடம் “நான் காலையில் எழுந்துவிட வேண்டும்” என்று வேண்டிக்கொண்டே படுக்கச் செல்கிறேன். இதனால் அடிக்கடி முழிப்பு வந்து என்னைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். உயிரோடிருப்பதை உறுதி செய்துகொள்கிறேன். தினமும் இப்படித்தான் நடக்கிறது.

சமீபகாலமாக இந்தப் பயம் மிகவும் அதிகரித்துவிட்டது. காரணம் என் சம வயதைக் கொண்ட இரு நண்பர்களின் மரணம். அவர்களைப்போல் எனக்கும் ஏதேனும் ஆகிவிட்டால்? இதில் என்னக் கொடுமை என்றால் அனைத்தையும் என்னால் என் மனைவியிடம் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. நான் என் கவலைகளைச் சொல்லி அவளைப் பயமுறுத்த விரும்புவதில்லை. இருக்கும் கஷ்டங்களில் இந்தக் கஷ்டத்தை வேறு அவளுக்குக் கொடுக்க விரும்பவில்லை.

அதனால் சேகர் சொன்ன யோசனையின்படி பாலிஸி எடுக்க முடிவுசெய்து அவனிடம் சொன்னேன். அன்று மாலையே சேகர் ஒரு LIC ஏஜெண்டை வீட்டிற்குக் கூட்டிவந்தான். ஏகப்பட்ட ஸ்கீமை என்னிடம் விவரித்தார் அந்த ஏஜெண்ட்.

முடிவில் நான்,

“சார், அநாவசியமா எதுக்கு எல்லாத்தையும் என்னிடம் விளக்குறீங்க. என்னோட பட்ஜெட்டுக்கு ஏத்த பாலிஸிய சொல்லுங்கன்னு” ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்னேன்.

முடிவில ஒரு 1,50,000 ரூபாய்க்கு ஒரு பாலிஸியை ஒப்புக்கொண்டேன்.

“என்னால் மாதா மாதம் பிரிமியம் கட்ட முடியாது. வருடத்திற்கு ஒரு முறைதான் கட்ட முடியும்” என்றேன்.

ஒரு வழியாக ஒப்புக்கொண்டு “வருடத்திற்கு ரூபாய் 15,000 பிரிமியம் கட்ட வேண்டும்” என்றார்.

“சரி” என்று சொல்லி கையெழுத்து போடப் போகும்போது, என்னைப் பார்த்து அவர்,

“சார், அப்படியே உங்க மனைவி பேர்லயும் ஒரு பாலிஸி போடுங்க” என்றார்.

எனக்கு கோபம் வந்து, “அதெல்லாம் வேணாம்” என்றேன்.

அவர் என்னை விடவில்லை. தொடர்ந்து வற்புறுத்தினார். அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கிச் சொன்னார். நான் கேட்பதாக இல்லை.

மீண்டும் அவர், “வேண்டுமானால், உங்கள் பாலிஸி தொகையைக் குறைத்துக்கொண்டு, உங்கள் பெயரில் ஒரு லட்சத்திற்கும், உங்கள் மனைவி பெயரில் ஒரு லட்சத்திற்கும் பாலிஸி எடுங்களேன். பிரிமியம் ஆளுக்கு 10,000 ரூபாய்தான் வரும். கூட ஒரு 5,000 ரூபாய்தான் நீங்கள் கட்ட வேண்டி இருக்கும்” என்று எடுத்துக் கூறினார்.

சேகரும், “ஆமாம் சார், அவர் சொல்வது சரிதான். அப்படியே செய்யலாமே” என்றார். எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. கடுப்பில், “அப்படி என்றால் நான் எந்த பாலிஸியும் போட விரும்பவில்லை” என எழுந்தேன்.

“கோபித்துக்கொள்ளாதீர்கள் சார். உங்கள் நல்லதுக்குச் சொன்னேன். பிடிக்கவில்லை என்றால் வேண்டாம். உங்களுக்கு மட்டும் போடுங்கள்”

பின் சமாதானமாகி பாலிஸியில் கையெழுத்திட்டேன். சேகர்தான் என்னை மிகவும் கடிந்து கொண்டான்,

“கோமதி பெயரிலும் பாலிஸி எடுத்திருக்க வேண்டும். ஏன் இப்படி இருக்கின்றீர்கள்?. என்னால் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்றான்.

“அதுக்கு இல்லை சேகர். ஏனோ என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பிடிக்கவில்லை”

“என்னக் காரணம்?”

“காரணம் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை”

“ஓரளவுக்கு என்னால் உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் அதிகம் பயப்படுகிறீர்கள், நெருப்பு என்று சொன்னால் சுடாது சார்”

“இருந்தாலும் வேண்டாம் சேகர்”

அதன்பிறகு சேகர் என்னைத் தொந்தரவு செய்வதே இல்லை. இருந்தாலும் அவ்வப்போது மரண பயம் வந்து போய்க்கொண்டுதான் இருந்தது. பாலிஸி எடுத்ததால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இது நடந்து ஒரு ஆறு மாதம் ஆகி இருக்கும். அதிகாலை 4 மணி. கோமதி என்னை எழுப்பினாள்,

“என்னம்மா இப்ப?” தூக்கக் கலக்கத்தில் நான்.

“கொஞ்சம் எழுந்துருங்களேன்”

“ஏன், என்ன? ஆறு மணி ஆயிடுச்சா என்ன?”

“இல்லை நெஞ்செல்லாம் ஏதோ பிசையறா மாதிரி இருக்கு. இடது தோள் பட்டைல வலிக்கிறா மாதிரி இருக்கு”

பதறி அடித்து எழுந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிகாலை என்ன செய்வது? ஏதாவது முதலுதவி செய்ய வேண்டுமா? என்றுகூட யோசிக்கவில்லை. உடனே அவளைப் அப்படியே படுக்கவைத்துவிட்டு பெரிய பெண்ணை எழுப்பி பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஆட்டோ பிடிக்க ஓடினேன். எப்படியாவது ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய்விடலாம். ஒன்றும் ஆகாது. மனதை திடப்படுத்திக்கொண்டு ஓடினேன்.

ஆட்டோ கிடைக்க இருபது நிமிடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஒரு வழியாக ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வருவதற்குள், என் ஆசை மனைவியின் உயிர் என்னைவிட்டு பிரிந்து போய்விட்டிருந்தது.

பிள்ளைகள் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார்கள். என் கண்களில் தாரத்தாரையாக கண்ணீர்.

உயிருக்கு உயிரான மனைவி இறந்துவிட்டாள். வாழ்க்கையின், உயிரின் ஒரு பாதி முடிந்துவிட்டது. இனி எப்படி பிள்ளைகளைக் கரைசேர்க்க போகிறேன்?

ஆனால், அப்போதுதான் அந்த எண்ணம் மனதில் தொன்றியது:

“கோமதிக்கும் பாலிஸி எடுத்துருக்க வேண்டுமோ” வர வர என்னுடைய மனதில் அடிக்கடி எதிர்மறையான எண்ணங்களும், சில சமயம் வக்ர எண்ணங்களும் தோன்றுகிறன. அதை எல்லாம் என்னால் வெளியே சொல்ல முடியாது. யாருக்காவது தெரிந்தால் என்னை மிகவும் கேவலமாகப் பார்ப்பார்கள். ஏன் எனக்கே கேவலமாகத்தான் தெரிகிறது. எனக்கு அவ்வாறு எண்ணங்கள் தோன்றுவது தவறு என்று தெரிந்தாலும், அப்படித் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஏனென்றால் என்னை மீறி அந்த செயல் நடக்கிறது.