‘பளீச் பளீச்’ என்று வாசலில் தண்ணீர் தெளிக்கும் ஓசை கேட்டது.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த நான் சத்தம் கேட்டு எழுந்துகொண்டேன். ஜன்னல் கதவை திறந்து வாசலை பார்த்தேன். பக்கத்து வீட்டு ஜோதி அத்தை கோலம் போட தயாராகிக்கொண்டிருந்தாள்.

நான் எப்போதுமே காலை எட்டு மணிக்கு முன்பாக எழாதவன். ஏனெனில் ராத்திரி பன்னிரண்டுக்கு முன் படுத்ததில்லை.   நான்காவது தலைமுறையாக வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத தலைமுறை என்னுடையது. அப்பன் தாத்தன் சொத்துக்கள் ஏக்கர் கணக்கில் வானக்கூரையின் கீழ் படர்ந்து கிடக்கின்றன. விளைச்சல், வியாபாரம், லாபமெல்லாம் ஊழியம் பார்ப்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஊழியம் பார்ப்பவர்களை அப்பா பார்த்துக்கொள்கிறார். எனக்கு எந்த வேலையும் இல்லை என்று சொல்வதை விட ஏதேனும் வேலைக்கு போய் அப்பன் தாத்தன் மானத்தை வாங்க விரும்பவில்லை என்று சொல்வது பொறுத்தமாக இருக்கலாம்.

 

ஜோதி எங்கள் தெருவில் மிகவும் பிரபலம். அவள் போடும் கோலங்கள் அத்தனை நேர்த்தியாக இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்கு அந்த பிரபல்யம் இருந்தது. அது ஏன் என்று எனக்கு சில நேரம் புரிந்தது. ஆனால் அதில் கேள்விகள் இருந்தன. ஒரு பேருந்து நிலையம், ஒரு சினிமா கொட்டாய், ஒரு ரயில் நிலையம், ஒரு கல்லூரி என்று இருந்ததால் எங்கள் வீடு இருப்பது ஒரு டவுன் என்று சொல்ல முடியும் தான். ஜோதி தவிர வேறு யாரும் அத்தனை நேர்த்தியாய் கோலம் போட முயல்வதில்லை என்பது என் அவதானிப்பாய் இருந்தது. அதனால் தான் ஜோதி பிரபல்யமாக இருக்கிறாள் என்று அவ்வப்போது தோன்றும்.

ஜோதி அத்தையின் வீட்டுக்கோலம் ஒரு வகையில் ஒரு பாதுகாவல் அரண். அழகாக இருக்குமென்பதால் எல்லோர் பார்வையும் அதன் மீதே படிவதால் சாலையோரம் இருக்கும் ரோஜாச்செடிகள் தப்பிவிடும். யாரும் அதன் பூக்களை கிள்ள மாட்டார்கள். அந்த பூக்களிலிருந்து மகரந்தம் சேர்க்க வண்டுகள் வரும். அதன் ரீங்காரம் ஒரு ரம்மியமான இசையாக கேட்கும். அழகான கோலத்தை மிதிக்காமல் செல்ல வேண்டிய பிரயத்தனம் கடக்கும் அத்தனை பேரிடமும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும். சாதாரணமாக ஒழுங்கை மீது எச்சில் துப்பிக்கொண்டே நடப்பவர்கள் கூட எச்சிலை விழுங்கி நடப்பார்கள். ஒதுங்கிச் செல்வார்கள். இது அத்தனையும் கூட்டாக சேர்ந்து கொண்டு வரும் ஒழுங்கு அந்த சாலைக்கே அழகு கூட்டுவதாக இருக்கும்.

ராத்திரி சாப்பிட அமர்கையில் அவ்வப்போது ஜோதியின் கோலம் குறித்து அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வதை வைத்து கோலம் குறித்த அடிப்படை அறிவு ஓரளவு எனக்கு இருந்தது.

அதன் படி, அதிகாலையிலேயே கோலம் இட வேண்டும். வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும். கோலம் போடுகையில், புள்ளி இடுகையிலும், கோடு இழுக்கையிலும் ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதை காலால் அழிக்க கூடாது. கையால் தான் அழிக்க வேண்டும். வீட்டின் வெளி முற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசி மாடம், பூஜை அறை இங்கெல்லாம் கோலமிட வேண்டும். அமர்ந்தவாறு கோலம் போடக்கூடாது. வேலையாள் வைத்தும் போடக்கூடாது. சுப காரியமென்றால் இரட்டை கோடுகள் பயன்படுத்த வேண்டும். அசுப காரியமெனில் ஒற்றை கோடு மட்டுமே. ஐந்து இழை கோலமெனில் சுற்றிலும் செம்மண் இட வேண்டும். கோலங்களுக்கான மாதம் மார்கழி. மார்கழி மாதங்களில் கோலமிட்டு பசுஞ்சாணத்தில் பூசணிப்பூ வைக்கப்பட்டிருந்தால்  அந்த வீட்டில் திருமணத்திற்கு இருக்கிறாள் என்று பொருள். ஆடியில் விதைக்க, அறுவடை மார்கழியை கடக்கும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற சொற்றொடருக்கு அர்த்தங்கள் பல.

கோலமிடப்பட்ட வீட்டிற்கு தேவர்களும், லட்சுமியும் வருவார்கள் என ஐதீகம். பச்சரிசியை இடித்து பொடியாக்கி அதில் கோலமிடலாம். புள்ளிக்கோலம், கோட்டுக்கோலம், கம்பிக்கோலம், மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி , நேர் புள்ளி கோலம், இடைப்புள்ளி கோலம் என்னும் பெயர்கள் எனக்கு அப்போதே பரிச்சயமாகியிருந்தன. ரங்கோலியும், பூக்கோலமும் போடுவது எளிது. புள்ளி வைத்த கோலத்தில் புள்ளிகள் சரியாக வைக்கப்படவில்லையெனில் கோலம் சரியாக வராது எங்கிற நெளிவு சுளிவெல்லாம் ஓரளவிற்கு நான் தெரிந்து வைத்திருந்தேன்.

வீட்டுப்பெண் நன்றாக தூங்கி எழுந்திருக்க வேண்டும். சிந்தை தெளிவாக இருந்தால் தான் அந்த நாளுக்கான சரியான கோலத்தை தேர்வு செய்ய முடியும். எல்லா நாட்களிலும் பூக்கோலமும், மாக்கோலமும் போட்டுவிட முடியாது. வாசலில் இடப்பட்டிருக்கும் கோலத்தை வைத்து வீட்டுக்குள் அன்றைய தினம் நுழைய வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பழக்கம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக அகலவில்லை. ஆதலால் ஒரு பெண் இடும் கோலம் அவளை அண்டும் உறவுகள், நண்பர்களை தீர்மானிக்கும்.

இதெல்லாம் ஜோதி அத்தை பேசக்கேட்டு  நான் கற்றிருந்தேன்.

ஜோதி அத்தைக்கும் ஒரு பெண் உண்டு. பெயர் மீனா. பொறியியல் படித்துவிட்டு ஒரு கணிணி நிறுவனமொன்றில் வேலையில் இருக்கிறாள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவாள். அவள் வருகையிலெல்லாம் நான் பெரும்பாலும் நூலகத்தில் ஏதேனும் புத்தகத்தில் மூழ்கியிருப்பேன். ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். பெரிய அழகி தான். ஜோதி அத்தையின் கோலங்கள் போலவே. நேர்த்தியான வட்ட முகம். உருண்டையான பெரிய கண்கள். அடர்த்தியான புருவம். நீளமான கூந்தல். நிறுத்தி நிதானித்து அவதானிக்குங்கால் ஜோதி அத்தை வரிசையாக புள்ளிகளிட்டு ஒவ்வொன்றையும் மற்றொன்றோடு சேர்த்து உருவாக்கும் அழகான கோலம் ஒன்றைப்போலவே அவள் இருப்பதாக தோன்றும். ஜோதி அத்தைக்கு மட்டும் எப்படி இத்தனை நேர்த்தியாக எல்லாமும் அமைகிறது என்று கூட அவ்வப்போது யோசித்ததுண்டு.

அவள்  தினம் தினம் இடும் கோலங்கள் அவ்வளவு நேர்த்தி மற்றும் அழகு. அவளுடைய பெண்ணிடமும் அதே நேர்த்தி, அழகு.  பொதுவாக சொல்வார்கள் ‘வைத்தியன் புள்ளை சீக்கு’ என்று. ஆனால் ஜோதி அத்தை விஷயத்தில் அப்படி இல்லை. என் கேள்வி என்னவென்றால், ஜோதி அத்தை மாதிரி ஆட்களிடமெல்லாம் இந்த சொலவடை ஏன் செல்லுபடி ஆவதில்லை என்பதுதான். அப்படியானால், இந்த சொலவடை செல்லுபடி ஆகும் நபர்களின் எண்ணிக்கை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பது அடுத்த கேள்வி. ஒரு நிலப்பரப்பில் ஜோதி அத்தை மாதிரியான பெண்களை மொத்தமாக குழுமவைத்து பிழைக்க வைத்தால் எண்ணாகும்? வைத்தியன் புள்ளை வைத்தியன் என்றாகி, பரிணாம வளர்ச்சியின் ஏதோவொரு இழையில்,  நோயாளி பிள்ளையும் வைத்தியனாகிவிட்டால்? இவையெல்லாம் என் உப கேள்விகள். எதற்குமே பதில்களில்லை என்னிடம்.

 

அன்றைக்கு பெருமழை. ஒரு வட்டா தண்ணீரை எடுத்து அப்படியே தலைமேல் கவிழ்த்தது போல், வானம் மழையை கவிழ்த்துவிட்டிருந்ததில் நூலகத்திற்கு செல்லும் வழியெங்கும் அடைபட்டுவிட்டிருந்தன. நான் வீட்டிலேயே தங்க நேர்ந்ததில் தான் அம்மா மூலமாக விஷயம் தெரியவந்தது.

மீனாவுக்கு யாருடனோ காதல் மலர்ந்திருக்கிறது. ஜோதி அத்தைக்கு அது பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொல்லி நெருங்கின உறவில் பையன்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னாளாம். அம்மா மூலமாக தெரிந்துகொண்டேன். கேள்வியின் மறைமுக இலக்கு நான் தான் என்பது எனது அம்மாவின் நினைப்பு. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் வெறும் புற அழகை பார்த்து திருமணம் வரை யோசிக்கும் நிலைப்பாட்டிலிருந்து மேலெழும்பி நான் வேறெங்கோ வந்துவிட்டிருந்தேன். ஆதலால், என்னை நானே ஜோதி அத்தையின் இலக்கிற்கு ஒப்புக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. ஆயினும் அது, பல காரணங்களில் ஒன்று தான்.  என்ன இருந்தாலும் இன்னொருவனை நேசிக்கிற பெண் அவள். அவள் மனம் நிரம்பியிருக்கலாம். அதுதான் பிரதானமான காரணம். அவள் விரும்பியவனையே மணக்க உதவுவதுதான் பொருத்தமாக இருக்குமென்பது தான் எனது பார்வையாக இருந்தது. நான் ஏதும் பெரியதாக சொல்லிக்கொள்ளவில்லை. எனது மெளனம் எவ்விதம் வேலை செய்யும் என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்.

ஜோதி அத்தை மீனாவின் காதலை ஏன் ஏற்க மறுக்கிறாள் என்பது எனக்கு புரிந்திருக்கவில்லை. மீனா காதலிக்கும் பையன் அவளுடன் ஒன்றாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்பவன் என்பதை எனது அம்மா மூலமாக நான் அறிந்திருந்தேன். தர்க்க ரீதியாக யோசிக்குங்காலும் மீனா தன்னையொத்த படித்த பையனை மணப்பதே சரியான தேர்வாக இருக்கமுடியும் என்கிற பின்னணியில் மீனாவின் தேர்வில் எனக்கு பெரியதாக குறைகள் ஏதும் தென்படவில்லை.  கணிணி, மென்பொருள் நிறுவன வேலை, உலகமயமாக்கல், தொழில்துறையின் முன்னேற்ற படிக்கட்டுகள் என எல்லாவற்றுக்குமே ஜோதி அத்தையிடம் ஒரு புரிதல் இருந்தது. அது மீனாவின் காதலுக்கு கைகொடுக்கவில்லை என்பதை மட்டும் பல்வேறு சூழல்களால் நான் புரிந்துகொண்டிருந்தேன்.

உதாரணமாக வீட்டுக்கான மின் கட்டணத்தை மின்சார அலுவலகத்தில் வியர்க்க விறுவிறுக்க வரிசையில்  நினறுதான் செலுத்துவாள் ஜோதி அத்தை. இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் மீனாவின் மடிக்கணிணி ஒன்று இருந்தது. வீட்டில் வைஃபையும் இருந்தது. அதை எனக்கு தெரிந்து மீனா மட்டும் தான் வார இறுதிகளில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பயன்படுத்தியிருக்கிறாள்.  இது ஒரு புறமென்றால், மறுபுறம் வீட்டில் எல்லோரிடமும் தொடு திறை அலைபேசி இருந்தது. திடீரென வீட்டுக்கு வாக்காளர் அடையாள கேட்டோ, ரேஷன் அட்டை கேட்டோ, ஆதார் அட்டை கேட்டோ, மருத்துவ காப்பீட்டின் நகல் கேட்டோ, தொலைக்காட்சிப்பெட்டியின் உத்திரவாத அட்டை கேட்டோ யாரேனும்  வந்து விட்டால் ஜோதி அத்தை வீட்டை போகிப் பொங்கல் ஆக்கிவிடுவாள். கட்டில் இடுக்குகளிலிருந்தும், பீரோ மூலையிலிருந்தும்,  பரன் மேலிலிருந்தும், தொலைக்காட்சிப்பெட்டி பின்னாலிலிருந்தும்  நினைத்து நினைத்து உருவுவாள்.  பிற்பாடு, பீரோ மூலையிலிருந்து எடுத்ததை பரன் மேலும், பரனிலிருந்து எடுத்ததை தொலைக்காட்சிப்பெட்டி பின்னாலும், தொலைக்காட்சிப்பெட்டி பின்னாலிலிருந்து எடுத்ததை கட்டில் இடுக்கிலும் வைத்துவிடுவாள். 1960 களின் படிப்பு படித்தவள் என்பதால் அவளை பெரும்பாலானோர் குறை சொல்வதற்கில்லை. தொழில் நுட்ப உலகுடன் எல்லோருக்கும் ஒத்துப்போய்விடுவதில்லை என்கிற சலுகை அவளுக்கிருந்தது.

இருபதுகளின் இறுதியில் திருமணம் செய்து, நாற்பதுகளின் மத்தியில் ஒரு வீடு கட்டி, ஐம்பதுகளின் பாதியில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாமா என்று யோசிக்கும் வேகம் தான் அவளின் வகையான மாப்பிள்ளை மீதான எதிர்பார்ப்பு என்பது அரசாங்க உத்தியோகமோ, வங்கி உத்தியோகமோ அல்லது ஏதேனும் கல்லூரியில் விரிவுரையாளர் வேலையிலோ உள்ள மணமகன் குறித்து அவள் என் அம்மாவிடம் கேட்டதில் இருந்து நான் புரிந்துகொண்டேன். அந்த வேகம் எப்படி மீனாவின் மத்திய இருபதுகளிலேயே வீடு வாங்கி, கிரகப்பிரவேசம் செய்த கையோடு அதையும் கிடைத்த வெளி நாட்டு வாய்ப்புக்காக வாடகைக்கு விட்டுவிட்டு , பிற்பாடு கிரீன் கார்டு வாங்கிய காரணத்தால் வந்த விலைக்கு விற்கும் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் என்பது எனது கேள்வியாக இருந்தது.

ஜோதி அவள் வாதத்தில் வலுவாகவும், மீனாவும் அவள் வாதத்தில் ஜோதியை விடவும் வலுவாக இருந்ததில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாமல் மீனா சென்னை திரும்பிவிட்டிருந்தாள். என் அம்மா மீனா குறித்து உறவில் சொல்லப்போக எனக்கு தெரிந்து வேலை வெட்டி இல்லாமல், சிதம்பரம் அருகே உள்ள அந்த பணக்கார பல்கலைக்கழகத்தில் காசை விட்டெறிந்து வாங்கிய டிகிரியை பெயருக்கு பின்னால் போட்டவனெல்லாம் மாப்பிள்ளையாகிவிட்டிருந்தான். என் அம்மா மூலமாகவே மணமகன்களின் புகைப்படம் மற்றும் ஜாதக பரிமாற்றம் நடந்தது. நான் அதிலெல்லாம் தொட்டும் தொடாமல் ஒதுங்கியே இருந்தேன்.

மறு நாளுக்கு மறு நாள் காலை திங்கள் கிழமை. வீட்டு வாசலில் கோலமிட தண்ணீர் தெளிக்கும் ஓசை கேட்டது. நான் ஏற்கனவே பல் துளக்கிவிட்டு குளித்துவிட்டிருந்தேன் என்பதால் இயல்பாகவே ஜோதி அத்தையை, அவள் வரையும் கோலத்தை தரிசிக்கும் பொருட்டு அண்டிவிட்டிருந்தேன்.

ஜோதி அத்தை ஒரு பதினாறு புள்ளி கோலத்துக்கு தயாராகிவிட்டிருந்தாள்.

அது ஒரு இடைப்புள்ள் கோலம் என்பதை அவள் கோலத்தை துவங்கிய விதத்திலேயே புரிந்துகொண்டுவிட்டிருந்தேன். ஒரு நேர்கோட்டில் பதினாறு புள்ளிகள் வைத்துவிட்டு அதன் மேலும் கீழும் ஒவ்வொரு இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் ஒரு புள்ளியென இட்டாள். கடைசி வரியில் எட்டு புள்ளிகள் இருந்தன.  பிறகு புள்ளிக்குவியல்களின் வலது விளிம்பில் துவங்கி ஒரு கோடிழுக்கையில் நான் கேட்டேன்.

“அத்தை, எந்த புள்ளியை எந்த புள்ளியோடு இணைக்கவேண்டும் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?”

அவள் என்னை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு, மீண்டும் கோலத்தில் கவனத்தை திருப்பினாள்.

“எல்லாம் பழக்கம்தாண்டா” என்றாள்.

“பழக்கம்ன்னா?”

“இதுக்கு முன்னாடி எத்தனை தடவை இதை போட்டிருப்பேன்? அந்த பழக்கம் தான்”

“அப்போ போட்ட கோலத்தையே தான் திரும்பத்திரும்ப போடணுமா அத்தை?”

“ஏன் கூடாது? நல்லாத்தானே இருக்கு?”

“நல்லாத்தான் இருக்கு. ஆனா போட்டதையே போட்டா, அதுல என்ன சவால் இருக்க முடியும் அத்தை? போனவாரம் கூட இதே நாள் இதே கோலம்தான் போட்டீங்க. ”

“அதனால?”

“பதினாறு புள்ளி தானே இருக்கு. அதை வச்சி போடுற கோலங்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை வந்துடுதே அத்தை? ஒரு கட்டத்துல எல்லாமே பாத்த கோலமாவே இருக்கே”

“அதான் சொல்லிட்டியே.. போட்ட கோலத்தையே போடுறேன்னு”

“அதில்லை அத்தை. நான் என்ன சொல்ல வரேன்னா, போட்ட கோலத்தையே போட்டா ஒரு கட்டத்துல எந்த புள்ளியோட எது இணையணும்ன்னு ஒரு முன்தீர்மானம் வந்துடுதே.”

“அதுனால என்ன?”

“அடுத்த புள்ளியை எதோட இணைக்கப் போறீங்கன்னு தெரிஞ்சிட்டா கோலம் போடுறப்போ பார்த்து ரசிக்கிறதுல ஒரு எதிர்பாராத தன்மை இல்லாம போயிடுதேன்னு சொன்னேன் அத்தை”

“இப்படி போட்டாத்தாண்டா அழகா இருக்கும்”

“கோலம்ன்னா பார்வைக்கு அழகாவே தான் இருக்கணுமா அத்தை”

“பார்வைக்கு அழகா இல்லாத கோலம் ஏன் போடப்படணும்னு ஒரு கேள்வி இருக்குல்ல”

“வாஸ்தவம் தான்”

என்று சொன்னேனே ஒழிய எனக்கு அவள் பதிலில் எவ்வித உடன்பாடும் இருக்கவில்லை.

“நீங்க போடுற கோலம் நம்ம ஏரியாவும ரொம்ப பிரசித்தி அத்தை”

“அப்படியாடா?”

“ஆமா. உங்க அளவுக்கு யாரும் நம்ம ஏரியாவுல கோலம் போடுறதில்லை அத்தை. பெரும்பாலும் மார்க்கெட்ல கிடைக்கிற அச்சை வச்சுத்தான் கோலம் போட்டுக்குறாங்க. அது ரொம்ப எளிமையா இருக்கு. இன்னும் சொல்லப்போனா நிறைய வீடுங்கள்ல கோலமே போடுறதில்லை. கோலம் மாதிரி இருக்கிற ஏற்கனவே வரையப்பட்ட ஒண்ணை எடுத்து வாசல்ல போட்டுடறாங்க. பிற்பாடு அப்படியே அதை எடுத்து மடிச்சு வச்சிடறாங்க. தண்ணி தெளிக்க வேணாம். புள்ளி வைக்க வேணாம். கோடு இழுக்க வேணாம். எல்லாமே ஏற்கனவே ரெடி. அதான்  நீங்க போடுற கோலத்துக்கு இங்கே மவுசாகிப்போச்சு”

லேசாக சிரித்தாள் அத்தை. ஆயினும் அவள் விரல்கள் தொடர்ந்து புள்ளிகளை கோடுகளால் இணைப்பதிலேயே இருந்தது. அது ஒரு அணிச்சை செயலாக நடந்துகொண்டிருந்தது. பழக்கத்தினால் அப்படி இருக்கலாம் என்று நினைப்பதைத்தவிர வேறெப்படியும் என்னால் அதை விளக்க முடிந்திருக்கவில்லை.

“கோலப்பொடியும் மண்வாசனையுமா கோலம் போட நினைக்கிறவங்க உங்க கோலத்தை பார்த்துத்தான் கத்துக்குறாங்க அத்தை” என்றேன் தொடர்ந்து.

“கத்துக்கட்டுமே.. நல்லதுதானே”

“ஆனா, என்னைக்கு என்ன கோலம் வரையணும்ங்குறது நீங்களா முடிவு பண்றதுதானே அத்தை. திங்கள் கிழமைகள்ல பதினாறு புள்ளி கோலம்ன்னு உங்களை பாத்து எல்லாரும் கத்துக்கிட்டா ஞாயித்துக்கிழமைகளுக்கு பதினாறு புள்ளி கோலம் கிடைக்கிறது அரிதாயிடும் தானே”

“உனக்கு என் கோலம் புடிக்கிறதில்லையோ?” என்றாள் அத்தை.

“தெரியலை அத்தை. ஆனா இன்னைக்கு வேற கோலம் போடுவீங்கன்னு நினைச்சு வந்தேன். இதே பதினாறு புள்ளி கோலம் போன வாரமே போட்டுட்டீங்க.. அதுனால அடுத்து எந்த புள்ளியை எதோட இணைக்கப் போறீங்கங்குறதுல ஒரு எதிர்பார்ப்பு இப்போ இல்லை”

“அதனால என்ன? நாளைக்கே வேற புது கோலம் போட்டுட்டா போச்சு”

இந்த பதில் என்னை குழப்பமடைய வைத்தது. அதெப்படி வேறு ஒரு புதிய கோலத்தை அவர் இட முடியும் என்பதுதான் அந்த குழப்பம். அவள் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தத்தை வைத்திருந்தாள். அதன் படி, ஒட்டுமொத்த எண்ணிக்கையிலான கோலங்களில் ஒரு வாரத்தின் ஒரு நாளின் அதிகாலை வேளையில் வீட்டு வாசலை அலங்கரிக்க பல கோலங்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. குறிப்பிட்ட சில கோலங்களுக்கே அந்த வாய்ப்புகள் கிட்டின. அந்த சில கோலங்களுக்கே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் வாய்ப்பு இயற்கையாகவே எழுந்தது. கரி நாட்களிலான கோலங்கள் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்ட கோலங்களாகவே பார்க்கப்படும் அபாயம் இருந்தது. உதாரணமாக சில வீடுகளில் அமாவாசை நாட்களில் காலையில் கோலமிடப்படுவதில்லை. இழவு விழுந்த வீடுகளில் ஒரு வருடத்துக்கு கோலமோ விளக்கோ இருக்காது. நாள் பண்டிகை கூட இல்லை.  இந்த பின்னணியில் அவளின் ‘வேற புது கோலம்’ என்கிற பதம் எதை குறிக்கிறது என்று நான் குழம்பியதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்று பிற்பாடு என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ‘காலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு’ என்று நா வரை வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டேன்.

“நாளைக்கு உனக்கு புடிச்சா மாதிரி ஒரு கோலம் போட்டுடறேண்டா” என்றாள் ஜோதி அத்தை மீண்டும் என்னை சமாதானம் செய்யும் விதமாக.

மறு நாள் என்றால் அது செவ்வாய்க்கிழமை என்றாகிறது. அப்படியானால்  திங்கள் கிழமைகளில் பதினாறு புள்ளி கோலம் தான் என்னும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் திங்கள் கிழமைகளில் ஜோதி அத்தையின் கோலம் புள்ளி புள்ளியாக ஜனித்து ஒருங்கிணைவதை பார்ப்பதில் எந்த சுவாரஸ்யமுமில்லை என்றாவதில் எனக்கு செக்கு மாட்டின் மலட்டுத்தன்மை தெரிந்தது. வழமையாக ஜோதி அத்தையின் கோலங்களில் கழியும் திங்கள் கிழமை காலை வேளைகளை வேறு ஏதேனும் செய்ய ஒதுக்கலாம் என்றாகிவிடுவதில் உள்ள சாத்தியங்களில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது அபாயகரமான மேலாண்மையாக இருந்தது. நான் அவளின் திங்கள் கிழமை கோலங்களில் சலிப்புற்று வேறு சாகச நிகழ்வுகளுக்கு திங்கள் கிழமை காலைகளை ஒதுக்கப்போக, வீட்டுக்கு அருகாமையில் அதிக சிரமமின்றி அதிக பிரயத்தனங்களின்றி கிடைக்கும் இது போன்ற என் ரசனைக்குட்பட்ட இயல்பான நிகழ்வுகளிலிருந்து நானாக என்னை விலக்க நேரலாம். அதில் இயற்கைக்கோ கடவுள் தன்மைக்கோ வேலை இருப்பதாக எனக்கு தோன்றியிருக்கவில்லை.  அது போன்ற விஷயங்களில் பிரபஞ்சத்தன்மை இருப்பதில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது.

“நீங்க ஏன் அத்தை திங்கள் கிழமைன்னா பதினாறு புள்ளி கொலம் போடறீங்க?” என்றேன் நான் மீண்டும்.

“அதுவா, ஞாயித்துக்கிழமைல தான் வீட்டுல எல்லாரும் இருக்காங்கடா.. காபி போடணும்..டிபன் செய்யணும்.. எல்லாருக்கும் பரிமாறணும்.. அவங்களை சாப்பிட வச்சி பாக்கணும்.. பதினாறு புள்ளி கோலம் போட்டா நேரமாகும்.. திங்கள் கிழமை யாரும் இருக்க மாட்டாங்க.. உங்க மாமாவும், மீனாவும் வேலைக்கு போயிடுவாங்க..  வேற வேலை எதுவும் இல்லை.. அதுனாலதான்” என்றாள் அத்தை.

“இதுல என்ன இருக்கு அத்தை. ஞாயித்துக்குழமைக்கு மட்டும் ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு? அவுங்கவுங்க பாத்திரத்தை அவுங்கவுங்க கழுவப்போறாங்க.. சாப்பாடு செய்யிறதுலகூட அவுங்கவுங்க காரியத்தை அவுங்கவுங்க பார்க்கப்போறாங்க.. நீங்க டீ போடலைன்னா மீனா போடப்போறா.. இல்லைன்னா மாமா போடப்போறாரு.. நீங்க பதினாறு புள்ளி கோலம் போடுறதுல என்ன பிரச்சனை?”

“அடப்போடா.. அதெல்லாம் பேசலாம்.. எதுவும் நடக்காது” என்று மட்டும் சொன்னாள் ஜோதி அத்தை. நான் அதற்கு மேல் அதுபற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஜோதி அத்தை சில புள்ளிகளை இணைத்து நேர்கோடுகள் இட்டாள். நேரான கோடுகளில் என்ன கோலம் உருவாக்கி விட முடியும்? முற்றிலும் நேராக இல்லாமல் இடையிடையே வளைந்தவாறும் புள்ளிகளை இணைத்ததில் தான் அழகான கோலம் உருவாகிக்கொண்டிருந்தது. அவள் ஒரு நேர்கோட்டால் இணைத்த இரண்டு புள்ளிகளை என் ஆள் காட்டி விரலால் சுட்டிக்காட்டி,

“அதை ஒரு வளைவா மாத்துங்களேன் அத்தை.. அழகா இருக்கும்ல?” என்றேன்.

“ஹேய்.. உனக்கு கூட இதெல்லாம் தோணுதே” என்றாள் கோலத்தின் மீதான கவனம் சிதறாமல்.

ஆயினும் அவள் என் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கவில்லை.

“ஏன் அத்தை? அப்படி போடக்கூடாதா?” என்றேன்.

“இல்லைடா.. அதெல்லாம் பாக்க நல்லா இருக்காது.  நேர் கோடு தான் சரி” என்றாள்.

“அதை யார் சொல்றது அத்தை? நான் பார்வையாளன். நான் தானே சொல்லணும்?” என்றேன் ஒரு வித இயலாமையுடன். அவள் வரையும் கோலம் அது. ஆலோசனை சொல்வதைத்தவிர நான் வேறு என்ன செய்துவிட முடியும்? என்ன மாற்றமென்றாலும் என் வீட்டு கோலத்தில் வேண்டுமானால் நான் காட்டிக்கொள்ளலாம் இல்லையா?

“ஊருன்னா நீ  ஒருத்தன் மட்டும் தானா? எத்தனை பேரு? எல்லாருக்கும் பொதுவா புடிச்சிருக்கணும்ல? நேர் கோடுதான் சரி இந்த இடத்துக்கு”  என்றவாறே அவள் தனது கோலத்தை தொடர்ந்து முடித்தாள்.

எது புள்ளியாக இருக்க வேண்டும், ஒரு கோலத்துக்கு எத்தனை புள்ளி இருக்க வேண்டும், எந்த புள்ளி எந்த புள்ளியோடு இணையவேண்டும் என்பதையெல்லாம் ஒரு வாய்ப்பாடு போன்று அவள் கையாள்வது போல் பட்டது எனக்கு.

“புள்ளிகளை அடிப்படையா வச்சித்தான் இந்த கோலம் உருவாகியிருக்குன்னா, புள்ளிகளுக்கு நடுவுல இருக்கிற வெற்றிடத்துல கூட ஒரு புள்ளி வரலாம் தானே அத்தை” என்றேன் நான்.

“அதுதாண்டா இந்த புள்ளிகள் எல்லாம்” என்றாள் ஜோதி அத்தை.

“நீங்க வச்ச முதல் புள்ளியே தப்பா இருந்தா?” என்றேன் நான்.

“அட போடா.. கோலம் நல்லாருக்கா? அதை சொல்லு”  என்றாள் ஜோதி அத்தை.

இறுதியில் ஒரு மாக்கோலம் உருவாகியிருந்தது. அழகாக இருந்தது என்று சொல்ல முடியுமா என்று சற்று தெளிவில்லாமல் இருந்தது. காரணம், அதே கோலத்தை அதற்கு முன்பு அனேகம் முறை பார்த்திருந்தேன். அதில் ஒரு ‘வழமை’ இருந்தது. அதன் பக்க விளைவுகள் ஊகிக்கமுடிவதாய் இருந்தது. கடந்து செல்லும் யாரும் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. ஏனெனில் என்னைப்போலவே பலரும் அதை ஏற்கனவே பார்த்திருக்கலாம். அப்போதைக்கு ஒரு ரோஜாச்செடியும், தெருவின் சுகாதாரமும் பாதுகாக்கப்பட்டன. என் சிற்றறிவுக்கு இந்த இரண்டு பலன்களே புலப்பட்டன. என் சிற்றறிவுக்கு அப்பாலான பலன்களின் எண்ணிக்கை இரண்டுக்கும் மேற்பட்டதாயும் இருக்கலாம். என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை எனில் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றாகிவிடப்போகிறதா என்ன?

“சரிடா.. உள்ள வேலை கிடக்கு.. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு ஜோதி அத்தை வீட்டுக்குள் சென்றாள். கண்களை விட்டு அகன்றாள்.

நான் அந்த கோலத்தையே பார்த்து  நின்றேன். நான் குறிப்பிட்டு சொன்ன இடத்தில் ஒரு நேர் கோட்டிற்கு பதிலாய் ஒரு வளைவு வரையப்பட்டிருந்தால் அந்த மாக்கோலத்திற்கு வேறொரு அர்த்தம் கிட்டியிருக்கும். அது கிட்டாததில் ஜோதி அத்தையின் ‘வழமை’க்கு பெரும்பங்கு இருந்தது. அந்த வழமையை அவள் தனக்குத்தானே விதித்துக்கொண்டிருந்தாள். அதைத்தாண்டிச்செல்ல அவள் மனம் இசையவில்லை. அவள் மனம் இசையாததற்கு காரணம் இருந்தது. அவள் வரையும் கோலம் ரசிக்கப்பட வேண்டும் என்பது அவளது இலக்காக இருந்தது. ரசிக்க முடியாத கோலம் வரையப்பட வேண்டியதில்லை என்பது அவளது எண்ணமாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லாவற்றையும் தொகுத்து பார்க்குங்கால் புள்ளிகளும், அவற்றை இணைக்கும் கோடுகளுமே கோலத்தின் போக்கை தீர்மானிக்கின்றன என்பது ஜோதி அத்தையின் அவதானிப்பாக இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.  ஆனால்  இரண்டு புள்ளிகளுக்கு இடையிலுள்ள புள்ளிகளற்ற புள்ளிகள் தாம் கோலத்தின் போக்கை தீர்மானிக்க வல்லவையாக எக்காலமும் இருந்திருக்கின்றன என்பதை இத்தனை காலமும் அவள் வரைந்த அத்தனை கோலங்களில் ஒன்றால் கூடவா அவளுக்கு உணர்த்த முடிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமூட்டும் தகவலாக இருந்தது.  அதுவே அவள் வரையும் வழமையான கோலங்கள் மீதான எனது விமர்சனமாகவும் அமைந்தது.

நான் மெளனமாக எனது வீடு நோக்கி நடந்தேன். புள்ளிகளும், அவைகளை இணைக்கும் கோடுகளும் என் மனக்கண் முன் ஒரு சிலந்தி வலையைப்போல் பின்னிக்கிடந்தன. அதன் மீது சிலந்திக்கு பதிலாய் ஒரு பட்டாம் பூச்சி அலைபாய்ந்துகொண்டிருந்தது.

(ramprasath.ram@gmail.com)