பொதுவாக இலக்கிய கேங்க் வார் என்றால் அதில் உயிர்மை நிரந்தரமான ஒரு தரப்பாகவும் மாற்றுத்தரப்பு மட்டும் அவ்வபோது மாறிகொண்டும் இருக்கும். இந்த முறை சீன் மாறிவிட்டது. தாமிரபரணி பாசக்கார க்ரூப்பிற்கும் அர்பன் ப்ளேபாய் க்ரூப் ஒன்றிற்கும் நடுவே சண்டை மூண்டிருக்கிறது. நியாயமாக இது ஒரு பெரிய கலாசார யுத்தமாக நடந்திருக்கவேண்டியது கடைசியில் புத்தக பைண்டிங்க் தொடர்பான சில்லரை விவகாரமாக நடந்துகொண்டிருக்கிறது.

சாரு கலாப்ரியாவின் வேனல் நாவல் குறித்து – “அந்த நாவல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்படி ஒரு நாவல் வெளிவந்ததே யாருக்கும் தெரியாது. புத்தக பைண்டிங்கும் ஏதோ பன்னண்டாம் வகுப்பு கணித நூல் மாதிரி இருக்கிறது” என்று எழுத கலாப்ரியா தன் பதிப்பாளருக்கு ஆதரவாக பொங்கி எழுந்துவிட்டார். (எல்லாம் நமக்கு வாய்த்த ரத்தக்காட்டேரிகள் மாதிரியா இருப்பார்கள்?)

சாருவுக்கு வேனல் நாவல் வந்ததே தெரியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவரை இருட்டறையில் வைத்திருக்கும் அவரது வாசகர் வட்ட நண்பர்கள். நாலு பேர்கிட்ட பேச பழக விடாம இப்படியே பணைய கைதியாக வைத்திருந்தால் இப்படித்தான் ‘மழையா பெய்கிறது?’ என்று கேட்கத் தோன்றும். மேலும் சாரு எழுத்தாளர்கள் அனைவரையும் ஃபேஸ்புக்கில் இருந்து பிளாக் செய்துவிட்டதால் வேனல் பற்றி எழுதப்பட்ட குறிப்புகள் எதுவும் அவரை எட்டாமல் போயிருக்க வாய்ப்புண்டு.

இந்த நாவல் வெளிவந்ததே தெரியாது என்று சாரு எழுதியிருந்தது கலாப்ரியாவைவிட வண்ணதாசனை மிகவும் எரிச்சல்படுத்திவிட்டது. இந்த சமூகம் அவரை வைத்துபூட்டிய அன்பின் சிறையை உடைத்துக்கொண்டு தன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். வண்ணதாசனையே கோபப்படுத்திவிட்டார் என்றால் சாருவின் அக்கினிப் பரிட்சை எப்பேர்பட்டது என்று பாருங்கள்!

கலாப்ரியாவின் பதிவிற்குக் கீழிருக்கும் பின்னூட்டங்கள் சாருவைப் பதட்டப்படுத்திவிட்டன. இப்போது சாரு வாசகர் வட்டம் வண்ணதாசனை டார்கெட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

முதல் சாருவை ஒரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும். ஏற்கனவே ஒரு கவிஞர் புத்தக அட்டைப்படங்களை வைத்து இலக்கியச் சர்ச்சை ஒன்றை தூண்டினார். இப்போது சாரு அதை பைண்டிங்கைற்கு நகர்த்திருக்கிறார். அடுத்து புத்தகம் அச்சிடும் காகித வாசனை பற்றி யாராவது பேசினால் நல்லது. சூழலை எப்படி உயிரோடு வைத்திருக்க முடியும்?

மேலும் என்ன புத்தகங்கள் வருகின்றன என்பது நாமாகத்தான் போய் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகங்கள் என்ன ரஜினி, விஜய் படமா? தானாக பெயர் தெரிய. திருக்குறள் என்ற புத்தகம் இருந்ததே இரண்டாயிரம் வருடங்களாக தெரியாத சமூக அய்யா இது.

மேலும் பணிரெண்டாம் வகுப்பு கணக்குப் புத்தகங்கள் நேர்த்தியாக பைண்டிங்க் செய்யபட்டிருக்கின்றன என்பதுதான் என் கருத்து. எங்கள் அப்பா படிக்கும்போது எனக்கு பழைய புத்தகங்கல்தான் வாங்கித் தருவார். பழைய புத்தகங்களில்கூட பைண்டிங்க் கட்டுவிடாமல் நேர்த்தியாக இருக்கும்.

“400 ரூபாய்க்கு விலைபோட்டால் இப்படித்தான் பைண்ட் பண்ண முடியும். மணிபாலில் அச்சடித்தால் உலகத் தரமான பைண்டிங் கிடைக்கும். ஆனால் அதற்கு 2000 ரூ விலை வைக்க வேண்டி வரும்.’’ என்று சாரு எழுதுகிறார். மணிபாலில் தங்க நூலில் பைண்ட் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் ஒரு பிரதி விலையில் 1600 ரூபாய் வித்தியாசம் வராது. உயிர்மை வெளியிட்ட சாருவின் நூல்கள் பக்கத்தில்கூட அவர் குறிப்பிடும் விலையுயர்ந்த பைண்டிங்க் வராது. இங்குதான் ராயப்பேட்டையில் தைக்கிறார்கள். சாரு தான் போடுகிற ஷீவைப் பற்றி பேசுவதுபோலவே எல்லாவற்றையும் பற்றி உயிர்வு நவிற்சியுடன் பேசுகிறார். மணிப்பாலாவது புலிப்பாலாவது.

இவ்வளவு எழுதியபிறகும்கூட நான் இந்த விவகாரத்தில் சாருவின் பக்கமே நான் நிற்கிறேன். காரணம் வண்ணதாசன் – கலாப்ரியா பின்னால் இருக்கும் வாசகர் படையை ஒப்பிட்டால் சாருவின் படை மிகச் சிறியது. ஒரு சமமற்ற போரில் பலவீனர்கள் பக்கம் நிற்பதே அறம்.

இரண்டாவதாக தாமிரபரணி எழுத்தாளர்களிடையே நிலவும் இந்த ஒற்றுமையும் பாசமும். அத்தோடு தங்கள் பதிப்பாளனின் மேல் கொண்டிருக்கும் பற்று. இது என்னைப் பொறாமையில் மனம் வாடச் செய்கிறது.

எனவே வேனல் நாவலை சாரு இன்னும் படிக்காவிட்டாலும் அதன் பைண்டிங் தொடர்பான அவரது அக்கறை முற்றிலும் நியாயமானதே.

ஆனால் ஒன்று, சாருவையும் வாசித்தவன், வேனல் தெருவையும் வாசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…  சாருவுக்கு வேனல் பிடிக்க வாய்ப்புகள் குறைவு.