முதுகில் படீரென அடி விழ பதறியடித்து எழுந்தமர்ந்தாள் சாதனா. தான் எங்கு இருக்கிறோம் என்று உணரவே சில நொடிகள் பிடித்தது.

சாதனா நேற்று காலையில் திருமணம் முடித்து இரவில் முதலிரவை முடித்த புதுப்பெண். 24 வருடங்களில் முதன்முறையாக தன் வீட்டை, தன் அறையைத் தவிர்த்த வேறொரு இடத்தில் உறங்கியிருக்கிறாள்.

காலை 6 மணி முகூர்த்தத்திற்கு 4.30 மணிக்கு எழுந்து, குளித்து, அரை அங்குலத்திற்கு மேக் அப் செய்து, கழுத்து வலிக்க மலர்களும் மாலையும் சுமந்து, வந்து போனவர்கள் காலிலெல்லாம் இடுப்பொடிய விழுந்து எழுந்து அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையிலே தலை சுற்றியது. சுற்றிக் கொண்டிருக்கும் போதே….

” ஹேய்… அம்மா வந்து டைம் ஆச்சுனு எழுப்பிட்டு போறாங்க. அது கூட கேக்கலயா? எவ்ளோ நேரம் நேரம் தட்றேன் எந்திரிக்கவே மாட்ற..அவ்ளோ அலுப்பா?” என்று அவள் தோள்களில் இடித்தான் சாதனாவின் கணவன் ஹரி.

“என்னது உங்கம்மா வந்து எழுப்புனாங்களா?” என அதிர்ந்தவாறே மணியைப் பார்த்தவளுக்கு தூக்கி வாறிப் போட்டது. மணி 8.30யை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவசர அவசரமாக எழுந்து கூந்தலையும் உடைகளையும் சரி செய்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே முழு கட்டிலிலும் விரித்துப் போட்டுப் படுத்தான் ஹரி.  குளித்துக் கொண்டிருந்த நேரம் வெளியில் ஹரி யாருடனோ பேசும் சத்தம் கேட்டது.

“சரிங்கண்ணி… சாதனா குளிக்கிறா. வந்ததும் பேச சொல்றேன். ”

வெளியே வந்ததும், “உங்கக்கா வந்துட்டு போனாங்கடி..நீ வந்ததும் கூப்ட சொன்னாங்க”

“என்னது டி’யா? ” எனப் பொய்யாக முறைத்துக் கொண்டே தன் அக்காவை அலைபேசியில் அலைத்தாள்.

” ஆமா…அதான் கல்யாணமும் ஆய்ருச்சு மத்தெல்லாமும் ஆய்ருச்சு…அப்றமென்னடி…?” என ஹரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முன்னெச்சரிக்கையாக சாதனா சாதனா என ஏலம் போட்டவாறே அவர்கள் அறையை நெருங்கினாள் சாதனாவின் அக்கா முறைக்காரி ஒருத்தி. மணமாகி முதன்முதலில் கணவன் வீட்டிற்கு வரும் பெண்ணுடன் துணையாக புகுந்த வீட்டிலிருந்து ஒரு திருமணமான பெண்ணை அனுப்பி வைப்பது வழக்கம். அந்தப்பெண் அன்றிரவு மணமகன் வீட்டிலேயே தங்கியிருப்பார். புதுப்பெண்ணிற்கு முதலிரவு நேரத்தில் எதும் சங்கடங்களோ சந்தேகங்களோ ஏற்பட்டால் முன்பின் தெரியாத இடத்தில் யாரிடம் கேட்பது எனக் கூச்சப்பட நேரும் என்பதால் இந்த ஏற்பாடு.

சாதனாவுடன் அக்கா முறையுடைய பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளுடன் இதுவரை பெரிதாகப் பேசியது கூடக் கிடையாது. முதலிரவு அறைக்கு செல்லும் முன், ” பாத்து நடந்துக்க சாதனா. சத்தம் கீது போட்ராத எந்த சத்தமும் வெளிய கேக்க கூடாது. நமக்குத்தான் அசிங்கம். புரிஞ்சுதா?” என அவள் சொல்லும்போதே சாதனாவிற்கு உடல் கூசியது. எரிச்சலாக வந்தது.

” சாதனா நீங்க நைட் யூஸ் பண்ணுன பெட்ஷீட் மெத்தை விரிப்பெல்லாம் கொடுமா. தொவைச்சு போட்டுடுறேன்.”

“என்னக்கா அதெல்லாம் எதுக்கு இப்ப செய்யனும்? அதும் நீங்க ஏன் அதெல்லாம் செய்றீங்க விடுங்க நான் பாத்துக்குறேன்.”

“அதில்லமா இதை பொண்ணு கூட தொணைக்கு வரவங்க தான் செய்யனும். அது ஒரு சாங்கியம் சாதனா. எடு.”

உடலெல்லாம் எதோ நெளிவது போல இருந்தது சாதானாவுக்கு. இதெல்லாம் என்ன சாங்கியம் ச்சை என்றிருந்தது. தலை நிமிராமல் எடுத்துக் கொடுத்தனுப்பினாள்.

அவளை அனுப்பி விட்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கொண்டிருந்த போதே ஹரியின் அக்கா அதேபோல சாதனாவின் பெயரை ஏலம் போட்டவாறே வந்தாள்.

” சாதனா தம்பி எங்க?”

” தூங்கிட்டாரு போல அண்ணி எழுப்பட்டா?”

“வேண்டாம் வேண்டாம் விடு…நீ ஒரு நிமிசம் இப்டி வா.” என்று தனியே அழைத்தாள்.

” நைட்டு எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? ரொம்ப எதும் அவன் படுத்திடலைல…. காயம் எதும் ஆச்சா என்ன?”

” இல்லண்ணி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல. ” என்று சொல்லித் தலையை குனிந்து கொண்டாள்.

” சரி விடு போகப் போகப் பழகிரும். நீ ரெடி ஆகிட்டு வா. அம்மா தேடிட்ருக்காங்க.”

“என்ன இது முன்னப்பின்ன பரிச்சயம் இல்லாத பெண்ணின் அந்தரங்கங்களில் எப்படி இவ்வளவு தூரம் தலையிட முடிகிறது. என்ன சாங்கியங்கள் இவை கருமம்” என நினைத்து தலையிலடித்துக் கொண்டே உள்ளே சென்றாள் சாதனா.

பட்டுப்புடவையைச் சுற்றி நகைகளை எடுத்து மாட்டி புதுப்பெண்ணின்  முகப்பொலிவுடன் அம்சமாகத் துலங்கினாள் சாதனா. ஹரியை எழுப்பி குளிக்கச் சொல்லி விட்டு வெளியே சென்றாள்.

வெளியே அனைவரும் இவளை வித்தியாசமாகப் பார்த்தனர். இன்னுமா இவர்களெல்லாம் வீட்டிற்கு கிளம்பவில்லை என நினைத்துக் கொண்டே தலை குனிந்தவாறு சென்றாள்.

” என்னாமா புதுப்பொண்ணே….வந்திருக்கவுங்க வா’ன்னு கூட கேக்க மாட்டியா?” என நீட்டி முழங்கினாள் ஒருத்தி. அவள் என்ன முறையென்று சட்டென சாதனாவிற்கு நினைவு வரவில்லை.

” பேசுனாக்கா முத்து உதுந்துரும் போலயே..” எனப் பக்கத்தில் இருந்தவளிடம் அவள் சொல்ல…ஆஹா விடிஞ்வுடனே வில்லங்கம் போலயே என நினைத்த சாதனா,

“இல்லங்க நீங்க இங்கதான இருக்கீங்க. எதுக்கு வாங்கனு தனியா கேக்கனும்னு நெனைச்சேன். ஸாரி. ” என்றாள்.

” மலரு பாத்தயா உம்மருவள…கல்யாணம் முடிஞ்சுதுல்ல கெளம்பாம இங்கயே இருக்கீங்கனு கேக்குறா? நல்லா பொண்ணாத் தான் புடிச்சுருக்க” எனக் கத்தத் தொடங்க பதறிப் போனாள் சாதனா.

” அய்யோ இல்லங்க நான் அப்டி சொல்லல. வெளில இருந்து வரவங்கள தான வாங்க’னு சொல்லனும். நீங்க இங்கதான இருக்கீங்கனு சொன்னேன். தப்பா நெனைக்காதீங்க. ஸாரி.”

அதற்குள் குறுக்கிட்ட மாமியார், ” சாதனா என்னம்மா இன்னும் போங்க வாங்கன்னு சித்தினு கூப்டு. ” என சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பி, “விடுங்கத்தாச்சி சின்னப்புள்ள தான. பதட்டத்துல எதும் சொல்லிருப்பா. நீங்க தப்பா நெனைச்சுக்காதீங்க.” என்றவாரே சாதனாவை சமையலறைக்கு வருமாறு சைகை காட்டி விட்டு அவசரமாக உள்ளே சென்றார்.

சாதனா உள்ளே வந்தது தெரிந்ததும் ஆரம்பித்தார்.

” இது நம்ம வீடு. நீ வரப்போ விருந்தாளிக யாரும் இருந்தா வாங்கனு சொல்லனும் சாதனா. அதான் மரியாதை.”

“சரிங்க ஆன்ட்டி. ஸாரி”

” என்ன இன்னும் ஆண்டி போண்டினு அத்தைனு கூப்டு”

“சரிங்கத்தை ஸாரி.”

” காலைல வந்து அவ்ளோ நேரம் கதவை தட்றேன். ஹரி வந்து தெறக்குறான். நான் வந்ததால சரியாப் போச்சு. வேற யாராவது வந்து அவன் கதவைத் தெறந்திருந்தா நல்லாவா இருக்கும். என்ன பொண்ணுமா”

“ஸாரிங்கத்த”

” கல்யாணத்துக்கு அடுத்த நாள் நம்ம வீட்டு பழக்கப்படி புது மருமக தான் சமைக்கனும். அதான் வழக்கம். உங்க வீட்ல சொல்லி விட்ருப்பாங்கனு நெனைச்சேன். பரவால்ல இப்ப நானே சமைச்சுட்டேன். சாப்ட்டுட்டு மதியம் நீ சமைச்சுரு.”

” ஸாரிங்கத்த எனக்குத் தெரியாது.” எனச் சொல்லும் போதே சாதனாவிற்கு கண் கலங்கியது.

வீட்டு ஞாபகம் வந்தது. அம்மாவைத் தேடியது. அழுது அழுது முகம் வீங்கப்போய் அவளை வழியனுப்பி வைத்த தம்பியும் தங்கையும் நினைவுக்கு வந்தனர்.

“இது என்ன இடம், யார் இவர்கள்…இதுதான் என் வீடா, வீடு என்பது என் மனிதர்கள் இருப்பதுதானே. திருமணமாகி விட்டால் இவர்கள் என்னை எப்டி வேண்டுமானாலும் நடத்தலாமா. முதல் நாளே இத்தனை அந்நியமாக நடத்தும் இவர்கள் என் மனிதர்களா. எப்படி என் இத்தனை வருட வாழ்க்கை ஒரே நாளில் மாறிப் போய் விட்டது. இங்கு நான் என்ன செய்வது?” தன்னையறியாமல் ம்மா…எனத் தேம்பினாள். அழுகை முட்டியது.

” போய் ஹரியை கூட்டிட்டு வா… சாப்ட்டு வேலையை ஆரம்பி.” என மாமியார் குரல் கேட்க, வேகமாகத் இப்போதைய தன் அறைக்குத் திரும்பினாள்.

ஹரி, “ஹம்மஹம்மஹம்மா….” என ஹம் பண்ணியவாறே கண்ணாடி முன் நினைறு தலை துவட்டிக் கொண்டிருந்தான்.

” வாடி என் புதுப்பொண்டாட்டி…” என இழுத்தணைக்க, சாதனா திமிறியவாறே, “சும்மா டி டி னு சொல்லாதீங்க. சாப்ட வாங்க உங்கம்மா கூப்புட்றாங்க. ” என்றவாறே வேகமாக வெளியே சென்றாள்.

வெளியே சென்று விட்டாலே தவிர அங்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லோரும் பழக்கப்பட்ட இடத்தில் தங்களுக்கு பழக்கப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். யாருடனும் எதுவும் பேசவும் முடியாது. பேசும் மனநிலையில் இல்லை என்பதை விட எதைப் பேசினாலும் தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறதே என பயமாக இருந்தது. உட்காரவும் முடியாது. பெரியவர்கள் முன்னால் கொஞ்ச நாளுக்கு சேரில் எல்லாம் உட்கார வேண்டாம் என அம்மா சொல்லி அனுப்பியிருந்தாள். எல்லோரும் நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது தான் மட்டும் கீழே அமர்வது என்ற எண்ணமே சுயமரியாதையை என்னவோ செய்தது. சமையலறை ஓரத்தில் சென்று நின்று கொண்டாள். துணைக்கு வந்த அக்காவும் அவளுக்கு மாப்பிளை வீட்டிலிருந்த தர வேண்டிய சீரை வாங்கிக் கொண்டு , சாதனாவிடம் சொல்லிடுங்க என அவர்களிடமே சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள். ஹரி சீக்கிரம் வந்து விட மாட்டானா என்றிருந்தது.

அவன் கூடத்திற்கு வந்ததும் வீடே பரபரப்பானது. எல்லோரும் என்னென்னவோ விசாரித்தனர். கிண்டல் கேலி பேசினர். ஹரி சத்தமாக சிரித்தான். கண்களை சுழல விட்டு சாதனாவைத் தேடினான். அவளைக் கண்டதும் கண்களை மலர்த்தினான்.

“ஹரி சாப்ட வா… சாதனா இதெல்லாம் எடுத்து வச்சு அவனுக்கு பரிமாறுமா. இனிமே நீதான் பாத்துக்கனும்.” என்றார் ஹரியின் அம்மா. சாதனாவுக்கும் பசித்தது.

சாப்பிட்டுக் கொண்டே…” சாதனா நீ சாப்டல? ஏன் ஒரு மாதிரி இருக்க? மா எதும் சொன்னீங்களா பொண்டாட்டிய?” என்றான் ஹரி. பக்கென்று இருந்தது சாதனாவிற்கு.

” ஆமா சொல்றாங்க உன் பொண்டாட்டிய. வேலையை பாத்துட்டு சாப்ட்டு கெளம்புடா. அவளை எப்ப சாப்ட சொல்லனும்னு எங்களுக்குத் தெரியும். மதியம் உன் பொண்டாட்டி சமைச்சு வைப்பா வந்து சாப்டு.” என்று சிரித்துக் கொண்டே சொன்னவாறு சாதனாவைப் பார்த்தார். அந்தக் கண்கள் சிரிக்கவேயில்லை.

” வாவ்…நீ சமைக்கப் போறயா சாதனா?”

சாதனா எதுவும் சொல்லவில்லை.

“ஆமாடா அதான முறை. வேற யார் உதவியும் இல்லாம புதுமருமக சமைச்சு விருந்து வைக்கனும்”

” வாட்? யாரும் ஹெல்ப் பண்ணக் கூடாதா? அப்போ நான் ஹெல்ப் பண்றேன். நாங்க ரெண்டு பேரும் சமைக்கிறோம். சரியா டாலிங்” என சாதனாவைப் பார்த்து கண்ணடித்தான்.

” ஹரி கொஞ்சமாச்சும் பக்குவமா நடந்துக்க. இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் எப்டி நடக்கனுமோ அப்டித்தான் நடக்கனும். பெரியவங்க முன்னாடி மரியாதையா நடந்துக்க. இன்னும் நீ சின்னப்பையன் கெடையாது.”

வந்துட்டான் டாலிங்கு கீலிங்குனுட்டு என முனகியவாறே சமையலறை நோக்கி விரைந்தார் சாதனாவின் மாமியார். சாதனாவிற்கு அப்படியே அங்கிருந்து ஓடிவிடலாம் போல இருந்தது. அவமானமாக உணர்ந்தாள். அழுகையாக வந்தது. அதற்கு பிறகு ஹரி எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு, ” வா சாதனா சாப்டலாம்.” என தோளில் கை வைத்து அழுத்தி அமர வைத்தாள் ஹரியின் அக்கா.

” கல்யாணமான புதுசுல கொஞ்ச நாளுக்கு அப்டித்தான் இருக்கும் சாதனா. யாருக்கும் யார் பத்தியும் தெரியாதுல்ல. எல்லாருக்கும் ஒரு வித பயம் இருக்கும். ஆனா அது நம்மளத் தான் ரொம்ப அஃபெக்ட் பண்ணும். பழகிரும் சாதனா. கவலைப்படாத.” என்றாள். அந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் சாதனாவிற்குத் தேவையாகத்தான் இருந்தன. சரியென்று தலையாட்டி விட்டு பெரிதாகப் பேசாமல் சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடித்து கை கழுவ எத்தனித்தவளை, “சாதனா…” என அவசரமாக அழைத்தாள் ஹரியின் அக்கா.

” தட்ல கை கழுவாத அம்மாக்கு புடிக்காது. எழுந்து போய் கை கழுவு” என்றாள்.

“அய்யோ…ஆண்டவா…இவ அம்மாக்கு புடிக்காட்டி எனக்கென்ன?” எனத் தோன்றிய மறுகணமே, “நல்ல வேளை சொன்னாளே..” என்றும் தோன்றியது. எழுந்து சென்று கையை கழுவி விட்டு, தட்டையும் கையோடு கழுவி வைத்து விட்டுத் திரும்பியவள், பின்பு ஏதோ நினைத்தவளாக தொட்டியில் கிடந்த அனைத்து பாத்திரங்களையும் கழுவத் தொடங்கினாள்.