வீட்டை இழுத்துச் சார்த்தி பூட்டி பிறகு, சாவியை தாலிக் கயிற்றில் முடிந்து முன்னால் போட்ட ஜெயமாலா, பூட்டை ஒருமுறை இழுத்துப் பார்த்துக் கொண்டாள். காட்டுச் சாலையை தொட்டபடி இருக்கும் வீட்டு வாசலில் நின்று மேற்கு பக்கமாகப் பார்த்தாள். வெய்யில் தெளிந்து  ஆடோட்டும் நேரமாகியிருந்தது. அவள் வீட்டிலிருந்து இலேசாக கீழே இறங்கும் சாலையில், அங்காளப் பரமேஸ்வரி கோயில் ஒற்றைக்கண் வாராவதி பாலத்தின் மேல், சில இருளர் வீட்டு ஆட்டு மந்தைகள் போய்க் கொண்டிருந்தன. தலையாடுகள் சிலவற்றின் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகள் எழுப்புகின்ற சத்தம் கூட தெளிவாகக் கேட்டது

பரபரப்பு தொற்றிக் கொண்டதும் முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டாள். பழந்துண்டை இடுப்பில் சுற்றி முன்னால் முடிந்தாள். ஒரு கையில் சாப்பாட்டுத் தூக்கையும், மறு கையில் தொரட்டிக் கோலையையும் வெட்டுக் கத்தியையும் சேர்த்தெடுத்துக் கொண்டு புழக்கடைப் பக்கமாகப் போனாள். பட்டிக்கு அருகாமையில் அவள் வருவதைப் பார்த்ததும் உள்ளே நின்றிருந்த செங்கையன் வெள்ளாடுகளை இன்னும் பலமாக அதட்டினான்.

ஆட்டு மூத்திரத்தால் பட்டித்தரை பழுப்பேறித் தெரிந்தது. பழைய ஆட்டுப் புழுக்கைகள் பூவங்காய்க் கொட்டைகளைப்போல பட்டி முழுவதும் சிதறிக்கிடந்தன. புதுசாகப்போட்ட புழுக்கைகள் இன்னும் காயாமல் இளம்பச்சையில் ஆடுகளின் குளம்புகளில் மிதிபட்டன. செங்கையனின் தோல் செருப்பிலும் அவை நன்றாக அப்பியிருந்தன. ஆடுகள் பட்டியின் இடுக்கமான வழியில் முண்டியடித்து வெளியேறின. அவை உரசியுரசி மொழு மொழுவென ஆகியிருந்த தடுக்கு கட்டும் கூட்டம் இப்போதும் உராயடிபட்டது. அது நல்ல முற்றிய பொறிச்சி. பட்டியின் வேலிகளுக்கும் வட்டதாரி மரக்கொம்புகளாய்ப் பார்த்து அவனே வெட்டிக்கொண்டு வந்து ஊணியவை தான். எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் அப்படியே இருக்கின்றன.

மொடக்கு போட்டு பட்டிக்குள்ளேயே சுற்றிய உருப்படிகள் வெளியேறுவதற்கு வாகாக செங்கையன் நெட்டித் தள்ளினான். கூட்டத்தில் சேராமல் திரிந்த கரிமூஞ்சிக் கிடாய் அடித்தொண்டையில் முணகிக்கொண்டே ஒரு பெட்டையின் மேல் ஏறியது. அரசங்குருத்து போல் விறைத்திருந்த குறி அடங்காததால் இன்னும் சில பெட்டைகளை அது துரத்தியது. திட்டிக் கொண்டே அதன் பக்கத்தில் போய் முதுகில் வசமாக ஒன்று வைத்தான்.

“ஏய். இத்றி! காத்தாலியே வேலையப் பாரு!”

கிடாயை உனக்கரமாகப் பார்த்தபடியே நிற்கும் ஜெயமாலாவிடம் திரும்பி கமுக்கமான குரலில் செங்கையன் கேட்டான். அவன் வலது தோளில் கயிற்றில் கட்டி மாட்டியிருந்த இரண்டு தண்ணீர் புட்டிகள் ஆடின. அவள் முகத்தில் சிறிது புன்னகை வெட்டி மறைந்தது.

”கையிலக்கீற எதானா ஒன்னக் குடுக்கிறயா, எடுத்துக்கிறேன்?’

“ஒன்னும் மாணா. நீ ஆடுங்கக் கூடவே போனா போதும். ஜார பண்டைக்கா பாரெஸ்டுக்காருங்க வெச்ச செடிங்களை யாருதோ ஒரு மந்தை கொனகொனையா கடிச்சிடுச்சாம். நேத்தே அந்த வாச்சரு திட்னான். கொவனத்துலக் கீதா?”

”ம்…”

செங்கையனை அவள் அவசரப்படுத்தினாள். அவன் ஜெயமாலாவை ஓரக்கண்ணால் ஒரு நொடி நேரம் பார்த்துவிட்டு பட்டியிலிருந்து கடைசியாக வெளியேறி, தடுக்கை இழுத்து மூடி இறுக்கமாகக் கட்டினான். ஜெயமாலாவை இலேசாக உரசியபடி முந்திச்சென்று ஆடுகளோடு இணையாக நடக்கத் தொடங்கினான். அவன் மந்தையை அதட்டும் சத்தம் உரக்க எழுந்தது.

“கூ…ஊ…பிர்ர்….இத்றி…இத்றி!”

ஜெயமாலாவும் பின்னாலேயே நடந்தாள். கட்டுச்சாலையில் ஆட்டுக் குளம்படிகளின் பொடிச் சத்தம் எல்லாம் ஒன்று திரண்டு வலுவாகக் கேட்டது. சில ஆடுகள் புழுகைகளைப் போட்டுக்கொண்டே நடந்தன. அவை பெய்த மூத்திரம் சாலையில் இளமஞ்சள் நிறத்தில் கம்பிக்கோலம் இழுத்ததைப் போல் தெரிந்தது.

சில அங்கிருந்தே சாலையோரத்து செடிகளைக் கொறித்தபடி மேய்ச்சலைத் தொடங்கின. கரிமூஞ்சிக் கிடாய் ஓயாமல் பெட்டைகளை தொந்தரவு செய்து மந்தையை அலைகழித்தது. ஆடுகளால் அந்தச் சாலையில் கொஞ்சமாய் புழுதி கிளம்பியது. ஜெயமாலாவின் காலடியும், செங்கையனுடையதும் காட்டின் மௌனக்கடலில் சிறுகல்லாய் விழுந்து தொலைந்தன. அவ்வப்போது ஆடுகளை அதட்டும் செங்கையனின் குரலும், செங்கையனை அதட்டும் ஜெயமாலாவின் குரலும் பின்னிப் பின்னிக் கேட்டன.

வாராவதியைத் தாண்டினதும் சாலையை ஒட்டியபடி மேலேறும் இடப்புறக் குன்றின் அடி முனையில் இருந்த வனத்துறைப் பலகையை செங்கையன் கவனமின்றி பார்த்தான். அந்த அடிவாரத்தைப் பிடித்துக்கொண்டே வெகு தூரத்துக்கு செல்லும் காட்டுச்சாலை இறுதியாக அடர்ந்த காட்டில் முடியும். குதிரை லாடம் போல அமைந்திருக்கும் அந்த மலைத்தொடரின் எதிர்முனை வலப்புறத்தில் ஓடுகின்ற காட்டாற்றைத் தாண்டி கூப்பிடு தொலைவில் தெரிந்தது. ஆனால் அது தனியாய் இல்லை. உயர்ந்த பாறைக் குன்றுகளோடு எங்கிருந்தோ வரும் மலைக்குன்றுகளுடன் சேர்ந்திருந்தது.

வனத்துறை எச்சரிக்கைப் பலகையின் இரும்புத் தண்டுக்கு முன்னங் கால்களை முட்டுக் கொடுத்தபடி புதர்களில் படர்ந்திருக்கும் முடக்கத்தான் கொடிகளை கரிமூஞ்சிக் கிடாய் விருப்பத்துடன் மேய்ந்தது. நல்ல மேய்ச்சலுக்கு இன்னும் உள்ளொடுங்கிச் செல்லவேண்டும். ஆனாலும் ஆடுகள் வழிமுடிய பார்க்கின்ற செடிகளிலெல்லாம் வாயை வைக்கும். செங்கையன் சிறிது தாமதித்து அதை அதட்டுவான். பிந்தியிருந்த ஜெயமாலாவும் அவனுடன் வந்து சேர்ந்துகொண்டாள். இருவரும் ஆடுகளுடன் நடந்தார்கள். காட்டுக்குள்ளிருக்கும் தொன்னப்பாறை கிராமத்திலிருந்து வருகிறவர்கள் எப்போதாவது ஒன்றிரண்டு பேராக நடந்தோ, வண்டிகளிலோ அவர்களைக் கடந்தார்கள். ஜெயமாலாவுக்கு அந்த ஊர் தான்  என்பதால் அவளுடன் யாராவது சில உறவுக்காரர்கள் நின்று பேசிவிட்டு போனார்கள்.

”உன்னுங் கொஞ்சம் உருப்படிங்களை வாங்கிக்கிறது ஜெயா?”

“ரெண்டு பேருக்கு இதுங்க போறாதா? இதுங்களே பரவுலம் ஆனா போதும்!”

இருபது வெள்ளாடுகளும், ஒரு பொலிக்கிடாயும் கொண்ட அவர்களின் மந்தை ஊரிலேயே நடுத்தரமானது. ஒருவரால் இருபத்தைந்து ஆடுகளை மேய்க்க முடியும். ஐம்பது என்றால் இருவர் தேவை. அந்த ஊரில் சிலர் ஐம்பது உருப்படிகளைக்கூட வைத்திருந்தனர். ஆடுகளை வைத்துக் கொள்வது பெரிதல்ல. மேய்க்க வேண்டும். பற்றாததற்கு ஓர் உருப்படிக்கு இவ்வளவு என்று காட்டுக்காரனுக்கு காசு கட்ட வேண்டும். மாதம் ஒன்று ஆனால் போதும். காக்கி உடுப்பில் விறைப்பாக வந்து வீட்டு முன்னால் நின்றுவிடுவான். கேட்கிறவர்களிடம் இருக்கின்ற நிலவரத்தை சொல்லி குறைபட்டு நடந்தாள் ஜெயமாலா.

வலப்புறம் காட்டாறும், நிலங்களும், இடப்புறம் குன்றின் அடிவாரமுமாக வந்துகொண்டேயிருந்தன. களி ஊறுகாய் பாறையைத் தாண்டினால் தான் இடப்புற குன்று கொஞ்சம் தள்ளிப்போகும். அந்தப்பாறையை அணைத்துக் கொண்டு அடர்ந்திருக்கும் மூங்கில் புதர்களையும், குட்டையையும் தாண்டினால்   அமரிக்கையாக உட்கார்ந்து ஆடுகளை மேய்ப்பதற்கு ஏற்ற சமதளமும் நல்லகாடும் வரும்.

“பாத்து. நெலத்துக்கா எறங்கப்போது. ஊர் வாயோட என்னால நிக்க முடியாது. நல்லா கூசுல் போடு. வலுவில்லயா கத்தறதுக்கு?”

ஜெயமாலா செங்கையனை மறுபடியும் முடுக்கினாள். உடனே அவன் சற்று ஏத்தமாக ஆடுகளை அதட்டினான். அவர்கள் மந்தையை அதட்டியபடியே நடந்தார்கள். இப்போது காட்டின் இருப்பை நன்றாக உணர முடிந்தது. சில்வண்டுகளின் இரைச்சல் ஓயாமல் கேட்டது. பெரிய மரங்களும், குட்டைச்செடிகளும், புதர்களுமாகத் தென்பட்டன. ஈரக்காற்று வீசியது.

அவர்கள் மூங்கில் புதர்களுக்கு அருகில் வந்தபோது ஆற்றோர நிலத்திலிருந்து இரண்டுபேர் அவர்களை நோக்கி கத்திக்கொண்டே ஓடிவருவதைக் கண்ட செங்கையன் மந்தைக்கு அணைபோட்டான். அருகில் வந்த இருவரும் ஆடுகளை சிறிது நேரம் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்கள்.

“நெலத்துல செரியான காட்டுப்பன்னி ஒன்னு மாட்டிக்கிச்சிணா. அத்த மடக்கி ஓட்டிணு வர்றாங்க. இப்பிடிதான் அது மூங்கபொதுர்க்கா ஓடியார்ணும். எதான நடமாட்டத்தப் பாத்துடுச்சி, அப்பாறம் கபால்னு நெலத்துக்கா திரும்பிக்கும்”

செங்கையன் ஆடுகளைப் பார்த்து பலவாறாக ஒலியெழுப்பினான். காட்டுப்பன்றிகள் ஆடுகளை ஒன்றும் செய்யாதுதான். சிறுத்தை, காட்டு நாய்கள், நரி என்றால் தான் பயம். மந்தை பிக்கல் பிக்கலாகச் சிதறிவிடும். சில நேரங்களில் மந்தைக்கு ஊர் நாய்களுமே கூட மோசந்தான்.

நிலத்திலிருந்து காட்டுப்பன்றியை விரட்டிக்கொண்டுவரும் ஆட்களின் சத்தம் சிறிது சிறிதாக அதிகரித்து கேட்டது. தடாலென்று வலப்புறத்து மூங்கில் புதரிருந்து காட்டுப்பன்றி ஒன்று சாலையின் குறுக்காகப் பாய்ந்து இடப்புற காட்டுக்குள் ஓடியது. அதற்கு பிடரிமயிர் சிலிர்த்து, முன் பற்கள் நீண்டிருந்தன. அதன் தோற்றத்தைக் கண்ட ஜெயமாலா கதறினாள்.

“அய்யோ, எந்தே பெர்சு?”

சலசலப்புகள் அடங்குவதற்கென காத்திருந்த அவர்கள் தங்கள் மந்தையுடன் மேலும் முன்னேறினார்கள். முங்கில் புதர்களைக் கடந்து சிறிது தொலைவு நடந்ததும் வந்த சின்மான் மொடுகுக்கு அருகில் செங்கையன் ஆடுகளை மேயவிட்டான். நல்ல சதுரமாக கிடந்த நிலப்பரப்பில் புற்களும் செடிகளும் மானாவாரியாக முளைத்துவிட்டிருந்தன. அங்கங்கே தரையை ஒட்டியமாதிரி தேலியிருந்த பாறைகளில் குழிகள் ஏற்பட்டு நீர் தேங்கியிருந்தது.

கொண்டு வந்திருந்த சாப்பாட்டுத் தூக்கையும், தண்ணீர் புட்டிகளையும் ஒரு நல்ல இடமாகத்தேர்ந்து வைத்துவிட்டு உட்கார்ந்த ஜெயமாலா கொஞ்சம் காலாற்றிக் கொண்டாள். ஆடுகள் இலைகளைக் பறித்து மெல்லும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. மரங்களிலும் புதர்களிலும் இருந்த பறவைக்கூட்டம் இடைவிடாமல் கூச்சலிட்டன. காடு அமைதியாக முறைத்து பார்த்து கொண்டிருந்தது.

“செத்த நேரம் படு. நான் பாத்துக்கிறேன்”

செங்கையனின் குரலுக்கு காத்திருப்பதுபோல இருந்த ஜெயமாலா நிழல் பாய்ந்த ஒரு பாறையாகப் பார்த்து தலைசாய்ந்தாள். அவள் எழுந்தது உட்கார்ந்த போது கரிமூஞ்சிக் கிடாய் ஒரு பெட்டையைத் துரத்திக் கொண்டு வந்து அதன் மேல் தாவியது. பெட்டை அங்கிருந்து அகன்றதும் மீண்டும் விடாமல் அதை விரட்டிக் கொண்டு ஓடியது. அதன் பின்னாலேயே துரத்திக்கொண்டு ஓடிய செங்கையன் சிறிது நேரம் கழித்து வந்து ஜெயமாலாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“கெரிமூஞ்சிக்கு அமக்களம் ஜாஸ்தியா பூட்சி. ஆட்ட மேய உடமாட்டேந்து”

இருவரும் கைகளைக்கழுவிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினர். அவளுக்கு கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு அவன் மேல் மூடியில் போட்டுக் கொண்டான். சாப்பிட்டு முடித்த பிறகு ஜெயமாலா ஆடுகள் மேயும் இடத்தைத்தேடி அப்படியும் இப்படியுமாக ஒரு நடைப் போனாள். பொழுது உச்சிக்கு வந்து மேற்கில் சாயத் தொடங்கியிருந்தது.

அவள் போகின்ற இடமெல்லாம் பெட்டைகளை கரிமூஞ்சிக் கிடாய் வந்து தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. ஒரு ஆடு மேய்வதற்கு வாகாய் சுருளைத் தழையை தன் துரட்டிக்கோலால் கீழே இழுத்துப் பிடித்துக் கொண்டு அவள் நின்றபோது அருகில் வந்த கரிமுஞ்சி அந்தப் பெட்டையின் முதுகில் முன்னங் கால்களைப் போட்டுத் தாவியது. கட்டைக்குரல் முணகலுடன் குறியை நுழைத்து விடுவித்ததும் மீண்டும் கணைத்துக் கொண்டு உடலை ஒருமுறை உதறியது.

ஜெயமாலா கரிமூஞ்சியையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆடு கொறிக்கும் வரை மேலும் கொஞ்சநேரம் அங்கேயே இருந்துவிட்டு பிறகு வேறொரு இடம் பார்த்துப்போனாள். இன்னும் சிறிது நேரத்துக்குப் பிறகு பறவைகளின் சத்தம் அதிகமாகக் கேட்கத் தொடங்கின.

“வூட்டுக்கு ஓட்லாம்”

செங்கையன் ஜெயமாலாவைப் பார்த்து கத்தினான். அவள் எங்கோ பார்த்துக்கொண்டு இருப்பதை போல முகத்தை வைத்துக் கொண்டு நடந்து வந்தாள். அவள் பக்கத்தில் வர இன்னொருமுறை அவன் சொன்னான். அவன் சொல்வதை சட்டை செய்யாதவள் மாதிரி நெருங்கி வந்த அவள், அவனுடைய சட்டையைக் கொத்தாகப்பற்றி முகத்திலும், நெஞ்சிலுமாக மாறிமாறி குத்தினாள். செங்கையன் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் அவனுக்கு சரமாரியாக அடிகள் விழுந்தன.

மருத்துவர் தன் அருகில் நிற்கும் செங்கையனையும், ஜெயமாலாவையும் மாறி மாறி பார்த்தார். செங்கையனின் கன்னம் சிவந்திருந்தது. வலது கண் புருவம் நன்றாக வீங்கி கண்ணை மூடியிருந்தது. வலியை வெளியே காட்டிக் கொள்ளாதவன் போல நின்ற செங்கையனின் மெலிந்த தோற்றம் மருத்துவரின் இரக்கத்தைத் தூண்டியது.

“இப்பிடி ஒக்காருயா. என்னா ஆச்சி?”

“ஆடு மேய்க்கச் சொல்லோ பாறமேல உளுந்துட்டாரு சார்!”

“நீ யாரு?”

“இவரு ஊட்டம்மா?”

 “எந்த ஊரு?”

“இங்க காட்டுக்குள்ள. தொன்னப்பாற சார்”

“உளுந்துட்டதா? இல்ல சண்ட கிண்டயா? சரியா சொல்லுமா? அப்பறம் போலீஸ் கேசாயிடும்”

“இல்ல சார். உளுந்துட்து தான் சார்! கால் தடுக்கி உளுந்து அப்பிடியே ரெண்டு பெரண்டு பெரண்டிட்டாரு. நாந்தான் ஓடிப்போயி தூக்னேன். முட்டியில கூட கொஞ்சம் அடி. ஒடம்புல வலுவே இல்ல சார்!”

வாடஞ்சாட்டமாக நிற்கும் ஜெயமாலாவை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார் மருத்துவர். அவள் உயரம் இலேசான அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. மருத்துவர் மறுபடியும் ஒருமுறை ஜெயமாலாவைப் பார்த்துவிட்டு செவிலியைக் கூப்பிட்டார். ஆட்டோவில் அடைந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருகையில் ஊர்க்காரப் பெண்கள் ஜெயமாலாவின் வாயைப் பிடுங்கியபடியே வந்தார்கள். செங்கையன் எதையும் கவனிக்காமல் தூங்குவதைப் போல பாவனை செய்தபடி வந்தான்.

“பாத்து எக்கா, ஆட்டோ கூரைக் கிழிஞ்சிடப் போது! தலையை நல்லா தொங்கப் போட்டுணு ஒக்காரு”

“எல்லாம் எனுக்குத்தெரியும். மூடிணு வாங்கடி!”

“அப்பத்திலிருந்தே மாமன் மட்டும் யாங்யிப்பிடி நோஞ்சானாவே கீறாரு? சோறாக்கிப் போடறயா இல்லியா?”

“உங்க மாமன் வாய் திரும்பாத கொளந்த. வந்து காலுமேல கடத்திணு கொஞ்சம் ஊட்டி உட்டுட்டு போங்கடி!”

ஆட்டோவில் பலவகையான பேச்சுகள் கிளம்பியபடி இருந்தன. ஜெயமாலாவுக்கு அப்போது கொஞ்சம் ஊர் நினைப்பும் வந்து போனது. காட்டுக்குள் உள்ளொடுங்கியிருக்கும் தொன்னப் பாறையிலிருந்து நகரத்துக்குப் போகும் கூட்டுச்சாலையில் வந்து கொத்துக் கறிக்கடை ஒன்றை போட்டார் ஜெயமாலாவின் அப்பா.

தினமும் மசால் கறித்தூக்கை சுமந்து கொண்டு நான்கு கிலோமீட்டர் வந்து போய்க்கொண்டிருந்த அவரின் கைச்சுவைக்கு ஆட்கள் நிறையவே இருந்தார்கள். தினமும் கறி வாங்கிச் சாப்பிடுவதற்கு வருகின்றவரில் ஒருவர் தான் செங்கையனை அவரின் மகள் ஜெயமாலாவுக்கு முடித்துவிடும்படி கைக்காட்டி விட்டார்.

செங்கையன் வீட்டிலிருந்து பெண் பார்ப்பதற்குப் போயிருந்த அன்று, ஜெயமாலாவின் கைகளால் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொத்துக்கறியும், கறிப்பக்கோடாவும் கொடுக்கச் செய்தார் அவளின் அப்பா. தலை குனிந்து கொண்டே ஜெயமாலா கொண்டுவந்து கொடுத்த கறிச்சில்லியின் ருசி செங்கையனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

கல்யாணத்துக்கு முந்தின நாள் மாலையில் பெண்கூட்டிக் கொண்டு போனபோது தொன்னப் பாறையிலிருந்து கூட்டுச்சாலை வருகின்ற வரைக்கும் மேளக்காரர்கள் அடித்துக்கொண்டு வந்தது இன்னமும் அவள் நெஞ்சில் அதிர்கிறது. காட்டு வழியில் அவர்கள் மேளத்தை அடித்தபோது காடும் அதை உள்வாங்கி திருப்பி அடித்தது. காட்டின் எதிரொலியைக் கேட்டு குதுகலமடைந்த மேளக்காரர்கள் இன்னும் இன்னும் என்று அடித்தார்கள். மேச்சத்தமும் எதிரொலியுமாக குழைந்து வினோதமானதொரு சப்தம் அங்கே உருவானது.

செங்கையன் முட்டி சிராய்ப்பு காயும் வரை கொஞ்சம் சிரமப்பட்டு நடந்தான். சில நாட்களுக்கு அவனை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு ஜெயமாலா மட்டும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு போனாள். அந்த வருடம் பொங்கலுக்கு வீட்டுப் பிறகால் இருந்த ஆட்டுப் பட்டியை நன்றாகச் சுத்தம் செய்து இருவரும் பூசை போட்டார்கள். ஆனால் இம்முறை பண்டிகை கொஞ்சம் புகைச்சலோடே கழிந்தது. திருநாள் என்பதால் ஆடொன்றுக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று காட்டிலாக்கா ஆட்கள் வந்து நின்றார்கள். செங்கையன் சில ஆடுகளை விற்றான். பொங்கல் கழிந்த சில வாரத்திலேயே திடீரென்று ஆடுகளுக்கு திக்கு நோய் வந்து சேர்ந்தது. சூடு வைத்தும், புளிய இலையைத் திண்ணக் கொடுத்தும் பார்த்தான் செங்கையன். ஆனாலும் சில உருப்படிகளை வந்த விலைக்கு தள்ள வேண்டியதாகி விட்டது.

கொஞ்சம் பிழைப்பு குதிரியதும் செங்கையனின் பட்டி ஆடுகள் சில ஒரே மூட்டாய் சினை பிடித்தன. ஒரு ஆடு மூன்று குட்டி வரைக்கூடப் போடும். அப்படிப் போட்டு விட்டால் மந்தை சீக்கிரமே பெருகிவிடுமென ஜெயமாலா நினைத்துக் கொண்டாள். நல்ல மேய்ச்சலுக்குப்பிறகு ஆடுகள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நாக்கு தொங்கி விடும். அதற்காகவே தண்ணீர் இருக்கிற கரடி தொன்னை, ஜவுக்குப் பாறை பக்கமாகப் பார்த்து இருவரும் மேய்ச்சலுக்கு அலைந்தார்கள். அவர்கள் கொஞ்சம் தூங்கினாலும் கூட ஆடுகள் அங்கேயே மேயும். ஆனாலும் ஜெயமாலா விழிப்புடன் மேய்த்தாள். மேயும் ஆடுகளை அடையாளம் காண்டுக் கொள்ள இன்னும் இரண்டு ஆடுகளுக்கு செங்கையன் மணி கட்டி விட்டான். வீட்டுக்குத் திருப்பி ஓட்டிக் கொண்டு வரும்போது ஆடுகள் பட்டியில் கொறிப்பதற்காக தொட்டில் தழையையும், பூனைப்புடுக்கு கொடியையும் அரியரியாக சுமந்துக்கொண்டு வந்தான்.

ஒருநாள் குஜ்ஜி மேட்டுக்கு அருகிலிருந்த சதுரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது நிறையாடு ஒன்று குட்டி போட்டது. முதலில் பின்னங்கால்கள் வெளியே வந்தன. பிறகு முழு உடம்பும் வந்து விழுந்தது. ஆட்டின் அருகில் உடகார்ந்திருந்த ஜெயமாலா அதை கவனித்தவாறு இருந்தாள். குட்டி போட்டதும் விழுந்த செத்தையை குச்சியால் ஒதுக்கித்தள்ளிய அவள் செங்கையனைப் பார்த்து இரைந்தாள்.

“இத்த தள்ளிணு போயி ஒரு புத்தைப் பாத்து அதும்மேல போடு. நாய் கீய் தின்னுட்சினா, அப்பறம் தாய் குட்டிய பால் குடுக்க சேர்த்துக்காது!”

பிறந்தக் குட்டி கொஞ்சநேரம் அப்படியே இருந்தது. அதன் பக்கத்திலேயே செங்கையனும், ஜெயமாலாவும் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். பிறகு தடுமாறி எழுந்த குட்டி தாயின் மடியை முட்டி பால் குடித்தது. பிறகு மெதுவாக அப்படியும் இப்படியுமாக நடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயமாலா திடீரென்று ஆவேசம் கொண்டவளாகி செங்கையனிடம் திரும்பி அவன் முகத்தில் சரமாரியாகக் குத்தினாள்.

காடு களகளவென்று அல்லியிருந்தது. காட்டாற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடியது. இப்படி தண்ணீர் ஓடி பல வருடங்கள் ஆனதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். காட்டுச்சாலை நெடுகவும் ஓரங்களில் உண்ணிப் புதர்களையும், செங்கம் புதர்களையும் பற்றிக் கொண்டு பலவிதமான கொடிகள் செழித்து வளர்ந்திருந்தன. சீக்கைப் புதர்கள் பூத்து அசைவதைப் பார்க்க காடே மல்லிகைச் சரங்களைச் சூடிக்கொண்டு அசைவது போலத் தோன்றியது. மூங்கில் புதர்களோ மேலும் செழித்துவிட்டன.

திடீரென்று அவர்களுக்கு காலமே மாறிவிட்டதாகத் தென்பட்டது. ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் காட்டில் பலமுறை மழையைப் பார்த்தார்கள். சிலநேரங்களில் ஓவென்ற இரைச்சலுடன் சுழன்று சுழன்று அடிக்கும் காற்று. நிலை கொள்ளாமல் தவிக்கும் தாவரங்கள். வானத்திலிருந்து பொலப் பொலவென கொட்டும் நீருருண்டைகள். சில நேரத்திலோ பேரமைதியில் ஒடுங்கியிருக்கும் காட்டின் மீது. வானத்திலிருந்து இடையறாமல் எய்யப்படும் நீர்ப்படிக அம்புகள்.

மழை வரும்போது வானம் கருத்ததும் செங்கையனும், ஜெயமாலாவும் ஆடுகளை ஏதாவது ஒரு மரத்தடிக்கோ, பாறை பதுங்குக்கோ ஓட்டிச்சென்று அணைபோடுவார்கள். மழையில் ஆடுகள் நனைந்தால் அவற்றின் மேலிருக்கும் ரோமங்கள் உடம்போடு ஒட்டிக்கொண்டு வற்றித் தெரியும். செங்கையனுக்கு அதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அவன் ஆடுகளின் மேல் இரக்கப்படுவான்.

காடு முழுக்க மஞ்சுப்புற்களும், சிறு செடிகளுமாக முளைத்திருந்தன. கரடிப் பாறைப் பக்கமாக ஒரு நாள் ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றபோது அங்கு முழங்கால் புதையும் அளவுக்கு புற்கள் முளைத்துக் கிடப்பதைப் பார்த்த ஜெயமாலா மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் செங்கையனுக்கோ அங்கிருப்பது இரண்டு மனதாகவே பட்டது. சொத்தகளக்காய் செடிகள் அந்த இடத்தில் அதிகம் என்பாதால் அந்தப் பழங்களைத் தின்ன அங்கு கரடிகள் வரும் என்பதை அவன் கேள்விபட்டிருந்தான். புற்கள் மலிந்திருக்குமிடத்தில் பாம்புகளும் அதிகமென்று அவனுக்கு யோசனையாக இருந்தது.

டவுனிலிருந்து வந்து கூட்டுச் சாலையில் இறங்கி தொன்னைப் பாறைக்கு நடந்துச் செல்கிறவர்கள் அளவுக்கு அதிகமான பாம்புகளைப் பார்ப்பதாகவும், அவை அவர்களின் வழியில் குறுக்கிடுவதாகவும் அவனுக்குச் சொல்லியிருந்தார்கள். அதனால் வழக்கத்துக்கு மாறாக அன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு “கெவனம்.கெவனம்” என்று ஜெயமாலாவிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தான் செங்கையன். நன்பகலில் இருவரும் சாப்பிட்டு முடித்து, ஆளுக்கொரு பக்கமாக ஆடுகளைக் கண்காணிப்பதற்குச் சென்ற சிறிது நேரங்கழித்து ஜெயமாலாவிடமிருந்து கூச்சல் கேட்டது.

“யேய் இங்க செத்த ஓடியாயா”

செங்கையன் அவளைத் தேடிக்கொண்டு ஓடினான். புற்கள் பரவியிருக்கும் ஓரிடத்தில் ஜெயமாலா நடுங்கியபடி நின்றிருந்தாள். அவள் கை காட்டிய இடத்தில் ஆடு ஒன்றை நன்றாகச் சுற்றிக் கொண்டு மலைப்பாம்பு ஒன்று விழுங்குவதற்கு முயற்சிப்பது தெரிந்தது. பாம்பின் பிடியில் சிக்கியிருந்த ஆட்டின் குரல் மெலிதாகக் கேட்டது.

“நீ போயி ஆடுங்களை உட்டசேத்து நிறுத்து”

ஜெயமாலாவிடத்தில் சொல்லிக் கொண்டே துரிதமாக ஓடிச்சென்று வெட்டுக் கத்தியைக் எடுத்து வந்த செங்கையன் தடித்த ஒரு கொம்பை வெட்டி பாம்பின் வாயில் குறுக்காக நுழைத்தான். துரட்டிக் கோலால் பாம்பின் உடலை சிறிது சிறிதாக நெம்பி ஆட்டை விடுவித்தான். பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டு உடலை ஒருமுறை உதறிக்கொண்ட ஆடு மற்றவையுடன் போய் சேர்ந்து நின்று நினைத்து நினைத்து கத்தியது. புதருக்குள் ஊர்ந்து நழுவும் மலைப் பாம்பை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த செங்கையன், ஜெயமாலாவிடம் வந்து கெலிப்புடன் முகத்தைப் பார்த்தான். அந்த முகத்திலிருந்து ஒன்றையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு கொஞ்சம் சத்தம் கூட்டி அவளிடம் சொன்னான்.

“ம்…ஆடுங்கள ஓட்டு. போலாம்”

“ஆமா!”

பதிலை அவள் கொஞ்சம் இழுத்துச் சொன்னது போல அவனுக்குக் கேட்டது.