தலை பஞ்சாய் நரைத்திருந்தாலும் கையும் காலும் உழைப்பதை நிறுத்தாமலிருந்த இருந்த பாட்டி அவள். எங்கள் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளித்தான் வசித்தாள். வெயிலில் சூரியக் கதிர் உள்ளே நுழைந்து கண் சிமிட்டுகிற, மழைக்காலத்தில் அவரைப் பந்தலாகிவிடுகிற வீடு. ஓட்டை மாற்றி காத வருஷமாயிருக்கும். பாட்டிக்கு ஒரு மருமகள், இரண்டு பேத்திகள் இருந்தார்கள். மருமகளுக்கு கடைத்தெருவில் ஒரு சின்னத் துணிக்கடையில் வேலை. பாட்டி அக்கம்பக்கத்து வீடுகளில் காசுக்கு சின்ன விசேஷம் என்றால் கோலம் போட்டுத்தருவது,  சமையலுக்கு உதவி செய்வது, பரிமாறுவது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போலத் தன்னாலானதை செய்து குடும்ப பாரத்தையும் தன் குருவி தலையில் ஏற்று நிர்வகித்து வந்தாள்.

அவள் பையன் மலேசியாவில் இருக்கிறான் என்று அடிக்கடி எல்லாரிடமும் சொல்லிக்கொள்வாள். வருடந்தோறும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பும் தவறாமல் காசு அனுப்புவான் எனத் தெரிந்தது. ஏழ்மையான குடும்பம் என்பது இதைப் படிக்கும்போதே வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்,

பாட்டிக்குக் கொஞ்சம் வாய் பார்க்கும் பழக்கம் உண்டு. இரண்டு பேர் பேச ஆரம்பித்தால் போதும் அவர்கள் முடிக்கும் வரை அங்கே பக்கத்தில் நிற்பாள். அவள் அடிக்கடி வந்துபோகும் வீடுகளில் ”பாட்டி வந்துடும்” என்று சொல்லியபடி அவள் வருவதற்குள் பண சமாச்சாரங்களை, திட்டங்களைப் பேசிமுடிப்பார்கள். இத்தனைக்கும் அவள் யாரிடமும் கைமாற்று வாங்கியதில்லை. ஆனாலும் தங்களைவிட வசதி குறைந்தவர்கள், ஏழைகள் என்றால், அவர்கள் தங்களிடம் பணம் இருப்பது தெரிந்து கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று உலகத்தில் பெரும்பான்மையோருக்கு இருக்கும் அபத்த எச்சரிக்கை உணர்வு அந்தத் தெருக்காரர்களுக்கும் இருந்தது.

பாட்டி தான் வந்துபோகும் வீட்டில் யாராவது பேசிக்கொண்டிருந்தால் சும்மா கேட்டுக்கொண்டிருப்பதோடு மாத்திரம் நிற்கமாட்டாள். உடனே ஏதாவது சொல்லிவிட வேண்டும் அவளுக்கு. அதுவும்  யாராவது ஏதாவது சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தால் போதும்,  அது உலக விவகாரமாக இருக்கட்டும், உள்ளூர் விவகாரமாக இருக்கட்டும், அவள் குச்சிக் கைகள் நடுங்கத் தொடங்கும், உதடுகள் படபடக்கும். “அவன் கெடக்கான், நாசமாப் போயிருவான்” என்று தன்னை ஆதரிப்பவர்களின் ஆதரவுக்கு வந்துவிடுவாள். ஒரு சனிக்கிழமை மாலை, சனிக்கிழமைகளில் வழக்கமாக நடப்பதைப் போல, எங்கள் வீட்டு முற்றத்தில் அப்பாவின் ஜமா கூடியது.  அப்பாவின் நண்பர் ஒருவர் அவரிடமும் வந்திருந்தவர்களிடமும்  ஊர் எம்.எல்.ஏ லாரிகளில் ஆற்று மணலை ஏற்றி வந்து வியாபாரம் செய்து கொழிக்கிறான், இதனால் எப்படி தண்ணீர் கஷ்டத்துக்கு எல்லாரும் ஆட்படப்போகிறோம் என்று ஆத்திரமும் உருக்கமுமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேர வீச்சுரை.

அவர் பேசத் தொடங்கியவுடன் அருகிலேயே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்துவிட்ட பாட்டி இதெல்லாம் நடக்குமா என்பதுபோல தன் தலையை ஆட்டி மறுத்தபடிக்குக் கேட்டுக்கொண்டிருந்தாள். நண்பர் ஒரு இடைவெளி விட்டபோது  “அவன் கெடக்கான், நாசமாப் போயிருவான்” என்று தடக்கென்று கருத்துரைத்தாள். அப்பாவின் நண்பருக்கு ரொம்பத் திருப்தியாகிவிட்டது. அவர் நாற்காலியை அவள் பக்கம் திருப்பி “பாட்டி, சரியாச் சொன்னீங்க” என்று இன்னும் ஒரு மணி நேரம் உரையாற்றத் தொடங்கினார். அப்பா கொஞ்சம் சிரிப்போடும் கொஞ்சம் ஏமாற்றத்தோடும் உள்ளே சென்றதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

சில சமயம் பாதிக்கப்படுபவருக்கான பாட்டியின் ஆதரவு ஒரு கோட்டைத் தாண்டி, ரசிக்க முடியாதபடிக்குச் சென்றுவிடும். ஒரு நாள் சாயந்திரம் என் ஆறு வயதுத் தங்கை  பள்ளிக்கூடத்தில் தன்னுடைய துணுக்குப் பென்சிலை பக்கத்தில் உட்கார்ந்த மாணவன் திருடிவிட்டதாக அம்மாவிடம் புகார் செய்துகொண்டிருந்தாள்.  வாழ்க்கையில் தான் தொலைப்பதையெல்லாம் பிறர் திருடிக்கொள்வதாகக் கருத வேண்டும் என்ற வெற்றியை ஈட்டித்தரும் மனோபாவத்தை அந்த வயதிலேயே  கற்றுக்கொண்டிருந்தவள்  அவள்.  புகாரைக் கேட்டுக்கொண்டிருந்த பாட்டி சரியான இடத்தில் “அவன் கெடக்கான், நாசமாய்ப் போயிருவான்” என்று படபடத்தாள்.  அம்மாவுக்கு ஒரு சின்னப் பையனை பாட்டி அப்படி திட்டியதில் உடன்பாடில்லை. “விடுங்க பாட்டி” என்றபடி, பாட்டி திட்டியதற்காக தங்கையின் முதுகில் கூடுதலாக ஒரு மொத்து வைத்தாள்.

மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் எல்லா நேரமும் பாட்டி சரியாகக் கேட்டாள்  என்று சொல்லிவிட முடியாது. ஒரு கும்பகோண மகாமகத்தின்போது அப்போதிருந்த  பெண் முதல்வர் ஆரவாரமாகக் கும்பகோணத்துக்குக் குளிக்கச் சென்றிருந்தார். அவரும் அவர் தோழியும் புனித நீராட பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. படித்துறையிலிருந்து  முதல்வர் மக்களைப் பார்த்து கையசைத்தார், அவரைப் பார்க்க, வடக்குவீதியில் இருந்த தர்மசாலா கட்டிடத்தின் பழைமையான கட்டைச்சுவர் மீது முண்டியடித்து ஏறிய கூட்டத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் உண்டான தள்ளுமுள்ளுவில் அங்கேயும் இங்கேயும் மக்கள் அலறிக்கொண்டு ஓடினார்கள். குழப்பத்திலும் பதற்றத்திலும் பலர் அங்கேயே இடிக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, உயிரைவிட்டு வெவ்வேறு கடவுள் லோகங்களுக்குச் சென்றார்கள். இன்னும் பலர் மருத்துவமனைகளுக்கு எடுத்துப் போகும் வழியில், மருத்துவமனைகளில் செத்துப்போனார்கள்.

இதெல்லாம் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும், மேலும் குறுங்கதையில் வளவளக்க முடியாது, ஆக நேரே விஷயத்துக்கு வருகிறேன். செய்தித்தாளில் இதையெல்லாம் வாசித்துக்கொண்டிருந்த அப்பா மிக வருத்தத்தோடு “கூட்டம் கூடும்னு தெரியாதா, இவங்க ரெண்டு பேரும் எதுக்கு அங்கே குளிக்கப் போவணும்னு கேக்கறேன்” என்று விமர்சித்துக்கொண்டிருந்தார். ”பொம்பளைங்க குளிச்சா யாரா இருந்தாலும் கூட்டம் கூடிடும்” என்று காப்பி தம்ளரோடு வந்த அம்மா மையமாகச் சொல்லி வைத்தாள். “எதாச்சிம் உளறாதே, இவங்க எதுக்குப் போவணும்?  இங்கே பொம்பளங்க, ஆம்பளங்கல்லாம் எங்கே வந்தாங்க, கலைஞர் போயிருந்தாலும்தான் அங்கே கூட்டம் கூடியிருக்கும்” என்றார் அப்பா அவளை முறைத்தபடி. “ஆனா அவரு அப்படிப் போயிருக்க மாட்டாரு”  அவர் ஆதரிக்கும் தலைவரை, அரசியல் கட்சியை அம்மா எப்போதாவது ஆதரித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் வேரோடியிருந்தது. அது அம்மாவுக்கும் தெரியும். சந்தர்ப்பம் தனக்குச் சாதகமாக இல்லை என்று தெரிந்துகொண்டு “பாவம் நெறய பேர் போயிட்டாங்க” என்று முணுமுணுத்தபடி அம்மா நழுவப் பார்த்தாள்.  அப்போது காப்பித் தண்ணிக்காகக் காத்திருந்தபடியே காய் நறுக்கிக்கொண்டிருந்த பாட்டி தன் பழக்கத்தை விடாமல் “அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்” என்று உரக்கச் சொன்னபடி அப்பாவுக்கு ஆதரவு தருகிற முக பாவனையோடு அப்பாவைப் பார்த்தாள்.

அப்பாவுக்கு ஒரே கோபம்.  அவர் வார்த்தைகளில் கூறப்போனால்  ‘எந்தவித அரசியல் கூருமில்லாத, மொண்ணையான தமிழ் மக்களின்’ மொத்த உருவமாகப் பாட்டி அவருக்குக் காட்சி தந்திருக்க வேண்டும். “இனிமே காலங்கார்த்தால இங்கே வராதே” என்று விரலை நீட்டித் திட்டிவிட்டு அங்கிருந்து விருட்டென்று நகர்ந்தார். சமையற்கட்டு நிலைப்படிக்கு அருகே போய்க்கொண்டிருந்த அம்மா அப்படியே நின்றாள். பாட்டிக்கு என்னவோ போலாகிவிட்டது. “நா என்ன சொல்ல வந்தேன்னா…” என்று சமாதானமாக பேச ஆரம்பித்தாள். “கூட்டம் மிதிச்சி செத்துப் போனவங்களை நீ திட்ட வேற செய்வியா பாட்டி?” என்று அம்மா வேறொரு அரசியல் பார்வையிலிருந்து அவளிடம் கடுகடுத்தாள். பாட்டி வெடவெடத்துப் போய்விட்டாள். காப்பித் தண்ணியை வைத்த அம்மா பாட்டியின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. அன்று காப்பியைக் குடித்துவிட்டுப் போன பாட்டி கிட்டத்தட்ட ஒரு மாதம் எங்கள் வீட்டுப் படியேறவில்லை.

கொஞ்சம் சமாதானமானவுடன் பாட்டி மீண்டும் வந்துபோகத் தொடங்கினாள். எங்களுக்கும் அவள் இல்லாமல் வேலை ஓடவில்லை. அந்த வருடம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு வீட்டுக்கு வந்த பாட்டிக்கு முகமே சரியில்லை. அம்மாவோடு கூட ரவாலட்டு பிடித்துக்கொண்டிருந்தவளிடம் “மவன் காசு அனுப்பினானா இல்லியா?” என்று விசாரித்தாள் அம்மா. பாட்டி மௌனமாக இருந்தாள். பிறகு மெதுவாக அவள் மகன் மலேசியாவிலேயே வேறொரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டிருக்கிறான் என்றும் அவன் குடும்பம் இப்போது வேறாகிவிட்டதால் காசு அனுப்பமுடியாது என்று லெட்டர் போட்டிருப்பதாகவும் சொன்னாள்.

சற்று அதிர்ந்துபோன அம்மா  “என்ன பாட்டி சொல்றே” என்று கேட்டாள். பாட்டி பேசாமலிருந்தாள். “இப்டியுமா ஒத்தன் இருப்பான், ரெண்டு புள்ளங்க இங்கே வளந்து நிக்குது, ஊருக்கு வர்ற வழியக் காணோம், இதில இன்னொருத்தி, இன்னொரு கல்யாணம்” என்று ஆதங்கித்தாள் அம்மா.  மௌனமாக இருந்த பாட்டியின் குச்சிக் கையைப் பிடித்தபடி “அவன் கெடக்கான்…” என்று அம்மா ஆரம்பித்தாள். பாட்டி வாயைத் திறக்கவில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
  10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  11. போகாதே-பெருந்தேவி
  12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
  13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  14. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  15. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  16. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  17. துச்சலை- பெருந்தேவி
  18. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  19. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
  20. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  21. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  22. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
  23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்