புனிதர்கள் நீங்கள்

பாதம் ஒட்டிய தூசியில்

எங்களை உயிர்க்கச் செய்வீர்கள்

உம் தொடுகையில்

மரத்த உடலது என்று

எப்படி புரியவைப்போம்

உங்கள் கடைக்கண்

பார்வையின் அமிர்தம்

தேவையில்லை இப்போது

புகட்ட முயற்சிக்காதீர்கள்

ஆலகாலம் என்றாலும்

தேர்வு எங்களுடையதாய்

மட்டுமே இருக்கட்டும்

தங்கள் விரல்தடவ

எம் உடலில் பரவுவது

இன்பச் சிலிர்ப்பென

யார் சொன்னது உங்களிடம்?

அரிப்பெடுக்கும் தோலை

உதற முயல்கின்றோம்

அவ்வளவே…

வெக்கை நிரம்பிய

அந்த சமையல்அறைக்குள்

தவறியும் நீங்கள் வந்ததில்லை

இருந்தும்கூட

கல்லறைக்குள் நிரம்பும்

வெப்பக்காற்றை வெளிதள்ளும்

விசிறியின் இறகோடு

சுழல்கிறது உங்கள்

கருணை மீதான ஆச்சர்யங்கள்

சிறகை விரிக்க

எத்தனித்த நொடியில்

இறுகி பிடிக்கின்றன

உங்கள் திருக்கரங்கள்

உற்று பாருங்கள் கையில் ஒட்டியது

வண்ணங்களோடு குருதியும் தான்

முதுகில் தழும்போடு

தேவதைகளாய் நடிக்கவே

சபிக்கப்பட்டிருக்கிறோம்…

உங்களிடம் கேட்பது

இவை மட்டும்தான்…

இன்னும் எத்தனை நாட்கள்

இந்த உடலுக்குள்

புதைந்து கிடப்பது?

இன்னும் எத்தனை நாட்கள்

இச்சதை கோளங்களை சாபமென

தூக்கி சுமப்பது?

இன்னும் எத்தனை நாட்கள்

எம் உடற்கூற்றை வெறுத்து

வெற்று பிண்டமாய் நடப்பது?

இன்னும் எத்தனை நாட்கள்

உங்கள் சிறுமைக்கு

என்னை நான் பலி கொடுப்பது?

இன்னும் எத்தனை நாட்கள்

உம் அரசியலின் மேடையாய்

என் உடலை கிடத்துவது?

                              – ஸ்ரீ