நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை 5
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன்- ஐய!- மை கூர் பனியே!
என் தலைவனே.

நீ என்னைச் சந்திக்கிறதுக்கு இந்த இருட்டான இருட்டில் இந்த நடு ராத்திரியில் வருகிறாய்…

நீ எங்கள் காட்டுப் பாதையில் நடந்து வருகிறாய்…

நீ எங்கள் காட்டாற்றில் நீந்தி வருகிறாய்…

என் தலைவனே…

இது எங்கள் காடு.

எங்கள் காடு எங்களுக்குத் தேன் தருகிறது… சந்தனம் தருகிறது… தந்தங்கள் தருகின்ரன… பளிங்குக் கற்கள் தருகிறது… எங்கள் காடு எங்களுக்குத் தங்கமும் தருகிறது.

என் தலைவனே…

எங்கள் காடு உனக்குத் துன்பத்தைத்தான் தருகிறது.

எங்கள் காட்டில் யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. எங்கள் காட்டாற்றில் முதலைகள் வாழ்கின்றன. எங்கள் காட்டாற்றில் நீர்ச் சுழிகளும் இருக்கிறது.

எங்கள் காட்டில் வாழ்கிற வேடவர்களாலும் கூட உன் உயிருக்குத் தீங்கு ஏற்படும்… எங்கள் வேடவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது.

என் தலைவனே..

நீ உன் உயிர்…

நீ எனக்கு வேணும்..

நீ இல்லாமல் நான் உயிர்வாழ்வதை என்னால் நினைத்துப்பார்க்க முடியாது.

நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்…

நீ என்னைச் சந்திப்பதற்கு இங்கே இரவில் வருவாயானால் நான் உயிரோடு
இருக்க மாட்டேன். நீ இல்லாமல் இந்தப் பனியில் இந்தக் கடுங்குளிரில் நான் தனியாகவும் வாழ மாட்டேன்.

என் தலைவா…

என்னைத் திருமணம் செய்து கொள்.

நல்வேட்டனார்
நற்றிணை 292