பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின், செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே 5
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும்- இவ் இருவரது இகலே.

 

ஒரு வயல்.
அது பெரிய வயல்.

அந்தப் பெரிய வயலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் வரப்புக்கள் உயரமாகவும், அகலமாகவும் இருக்கிறது. அந்த வரப்புக்களில் பாகல் செடிகள் கொடி வீசிப் படர்ந்திருக்கிறது. அந்தப் பாகல் இலைகளில் எறும்புகள் கூடு கெட்டியிருக்கிறது.

ஒரு நாரை அந்த வயல் வரப்பில் கொடி வீசிப் படர்ந்திருக்கிற பாகல் கொடி மேல் வந்து உக்காருகிறது. அந்த நாரை அந்த பாகல் கொடியைக் கொத்திக் கொத்தி தூக்கித் தூக்கி உதறிக் கொண்டிருக்கிறது.

பாகல் இலைகளைச் சுருட்டிக் கூடு கெட்டியிருந்த அந்த எறும்புக் கூடுகள் உடைகின்றன.

அந்த எறும்புக் கூட்டில் செக்கச் செவேர்ன்னு செவத்த எறும்புகள் கணக்கில்லாமல் இருந்தது. அந்த எறும்புக் கூட்டில் வெள்ள வெளேர்ன்னு சின்னச் சின்ன முட்டைகளும் எண்ண முடியாமல் இருந்தது.

அந்தச் செவத்த எறும்புகளும் அந்த வெள்ள முட்டைகளும் சிதறிக் கிடக்கிறதப் பார்க்கும்போது செகப்பு அரிசியும் வெள்ள அரிசியும் சிந்திக் கிடப்பதுபோல் இருக்கிறது.

கயமனார்
நற்றிணை 180