இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
யானும் தாயும் மடுப்ப, தேனொடு 5
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப- தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. 10

எங்கள் தொழுவில் ஒரு பசலைக்கொடி தன்னாக்கலேயே முளைத்து அது தன்னாக்கலேயே வளர்ந்து தளதளன்னு கொடி வீசிப் படர்ந்து கிடந்தது.

கன்று ஈன்ற ஒரு பசுமாடு அந்தப் பசலைக்கொடியை மொட்டக் கட்டையாத் தின்னுட்டுது.

எங்கள் தொழுவில் எங்கள் பசுமாடு எங்கள் பசலைக் கொடியைத் தின்னதைப் பார்த்துக் கொண்டிருந்த எம்மகா அழுதுக்கிட்டு கண்ணக் கசக்கிக்கிட்டு கீழ விழுந்து புரள்கிறாள். எம்மகா வெளையாண்டுக்கிட்டிருந்த பந்தைத் தூக்கித் தூர எறிகிறாள். எம்மகா அவளிடம் இருந்த பொம்மைகளையெல்லாம் தூக்கித் தூக்கித் தூரத் தூர எறிகிறாள். எம்மகா அழுவுதாள் அழுவுதாள் அப்படி அழுவுதாள். எம்மகா அவள் அடிவயிற்றில் அவள் கையைக்கொண்டு அடிச்சிக்கிட்டு கூப்பாடு போட்டு அழுகிறாள்.

எம்மகா கண்கள் குட்டிமான் கண்கள் மாதிரி அழகாருக்கும். எம்மகா அழுது அழுது அவள் கண்கள் கலங்கிச் சிவந்து அவள் கண் அழகெல்லாம் கெட்டுவிட்டது.

அவளப் பெத்த நானும், அவள வளர்த்த அம்மையும் பால் குடிக்கச் சொல்லி அவளத் தாங்கு தாங்குன்னு தாங்கினோம்.

விம்மி விம்மி
அழுதுக்கிட்டிருந்தாளே தவிர பாலைக் குடிக்க மாட்டேன்னுட்டாள்.

அவள் அழுகையும் அவள் ஆத்திரமும் அடங்கவே இல்லை.

நான் பெத்த எம்மகா நேத்துவரைக்கும் இப்படிக் குழந்தைத் தனமாகத்தான் இருந்தாள்.

நான் பெத்த எம்மகா நேத்துவரைக்கும் இப்படிக் குழந்தைத் தனமாகத்தான் இருந்தாள்.

நான் பெத்த எம்மகா நேத்து வரைக்கும் இப்படித்தான் வெகுளித்தனமாக இருந்தாள்.

நேத்து இரவு எம்மகா, யாருமே போறதுக்கு அச்சப்படுகிற ஒரு பாலைவனம் வழியாப் போய்ருக்காள்.

ஒரு தாடிக்கார எளவட்டம் கூட குறுஞ்சிருப்பாணியாச் சிரிச்சிக்கிட்டுப் போனாளாம்.

அந்தக் கருந்தாடிக்காரப் பய புளுகின பொய்யை யெல்லாம் – அப்படியே நம்பிக்கிட்டு அந்தக் கருந்தாடிக்காரன்கூடப் போய்ட்டாள் எம்மகா.

நான் பெத்த எம்மகா இவ்வளவு சின்ன வயசில் எப்படித்தான் குடும்பம் நடத்துவாளோ என்று அவளப்பெத்த என் மனம் கலங்குகிறது.

உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்
நற்றிணை 179