பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, 5
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென, 10
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!

அவுக வீடு பெரிய வீடு.

ரொம்ப வசதியானவுக அவுக.

அவுக வீட்டுக்கு முன்னால் ஒரு பந்தல் இருக்கு. அந்தப் பந்தலில் பச்சப் பசேர்ன்னு முல்லைக்கொடிகள் எப்போதும் படர்ந்திருக்கின்றன.

அந்த வீட்டில் ஒரு பாப்பா இருக்காள்.

அந்தப் பாப்பாவ வளர்க்கிறதுக்கு மட்டும் அந்த வீட்டில் ரெண்டு பாட்டி இருக்காக.

பாப்பாவுக்குத் தங்கத் தம்ளாரில் தான் பால் கொடுப்பாக. பாலில் தேன் கலந்து கொடுப்பாக.

பாப்பா, அவள் கால்களில் தங்கச் சிலம்பு அணிந்திருக்கிறாள். அழகான அந்தத் தங்கச் சிலம்பில் அழகான முத்துப்பரல்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

பாப்பா பால் குடிக்கிற நேரம் இது.

பால் குடிக்கிறதுக்குப் பாப்பாவ ரெண்டு பாட்டியும் கூப்புடுதாக.

பாப்பா ஒரு பெரிய தூணில் சாய்ந்து நின்று கொண்டாடிருக்கிறாள்.

“எனக்குப் பால் வேண்டாம் பாட்டி… எனக்குப் பால் வேண்டாம் பாட்டி…என்று அந்தப் பாப்பா அவள் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.

பாப்பாளப் பிடிக்கிறதுக்கு ரெண்டு பாட்டியும் ஓடுதாக.

பாப்பா, ரெண்டு பாட்டியையும் ஏச்சங்காட்டிட்டு, அந்தப் பாப்பா வீட்டுக்கு வெளிய ஓட்டமா ஓடியாந்துட்டாள்.

பாப்பாளப் பிடிக்கிறதுக்கு ரெண்டு பாட்டி மாரும் அவள் பின்னாலேயே ஓடி வாராக.

முல்லைக் கொடிகள் படர்ந்திருக்கிற அந்தப் பெரிய பந்தலைச் சுற்றிகொண்டு பாப்பா குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

ரெண்டு பாட்டியாலேயும் பாப்பாளப் பிடிக்க முடியல. ரெண்டு பாட்டிமார்களும் தவிச்சிப் போய் உக்காந்துட்டாக.

பாப்பா பால் குடிக்கல.

காலம் இந்தச் சின்ன மனுஷியைப் பெரிய மனுஷியாக்கியது.

பாப்பாள வகையான ஒரு இடத்தில் கெட்டிக் கொடுத்தாக.

மகா வாக்கப்பட்டுப் போன அந்த வீடு நொடிச்சிட்டுது.
பிறந்த வீட்டில் செல்லமா வளர்ந்த மகா.
புகுந்த வீட்டில் ஒருவேளச் சோத்துக்கு மானா மருகுதாள்.

அப்பா கொடுக்கிற எதையுமே மகா வாங்கமாண்டன்னுட்டாள்.

வகுத்துக்குக் குடிச்சும், வகுத்துக்குக் குடிக்காமலும் கணவன் வீட்டில் வறுமையில் வாழ்ந்தாலும் ‘மகா’ கண்கலங்காமல் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பாப்பாளப் பார்க்கிற நமக்குத் தான், செல்லமாவளர்ந்த மகா இப்படிக் கஷ்ட்டப்படுதாளே என்று நம்ம கண்களில் இருந்து தான் கண்ணீர் சிந்துகிறது.

பூதனார்
நற்றிணை 110