‘ஒன்றுதும்’ என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
‘அன்னவோ, இந் நன்னுதல் நிலை?’ என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென 5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! 10

ஒரு தொழு.

அது பாழடைந்த தொழு.

அந்தத் தொழு மழையில் நனைந்து சதசதன்னு சேறும் சகதியுமாக் கெடக்கு.

அந்தத் தொழுவில் அந்தச் சேத்துக்குள்ள ஒரு பசு நின்று கொண்டிருக்கிறது.

அந்தப் பசு மாட்டின் தலைக்கயிற்றை பாழடைந்த அந்தத் தொழுவின் உச்சியில் ஒரு கை மரத்தில் கெட்டியிருக்கு.

அந்தப் பசுமாட்டால் படுக்க முடியல.

அந்தப் பசுமாட்டால் நின்றுகொண்டிருக்கவும் முடியல.

இரவு நேரம்.

இருட்டாருக்கு.

குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பசுமாடு பாழடைந்த அந்தத் தொழுவில் அந்தச் சகதிக்குள்ள நிக்கிறதுக்கு முடியாமலும், படுக்கிறதுக்கு முடியாமலும், நின்ன இடத்திலேயே நின்றுகொண்டு அந்தப் பசு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பசுவின் துயரத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

மீளிப் பெரும்பதுமனார்
நற்றினை 109