மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு 5
கவர் படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறிஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை 10
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

பொழுது இப்பத்தான் மறைஞ்சிருக்கு.

எங்க அய்யா நேரத்தோடேயே படுத்துட்டார்.

எங்க அய்யா நேரத்தோடேயே படுத்துட்டாரே தவிர அவர் இரவு பூராவும் உறங்கல.

நாளைக்கு நாங்க எங்க வயல்ல நாத்து நட்டப் போறோம்… எங்க அய்யா நாளைக்கு நடுவை போடுவதைப் பத்தியே யோசிச்சிக்கிட்டு இரவு பூராவும் உறங்காமப் படுத்திருக்கார்.

எங்க அய்யா நேரத்தோடேயே படுத்த மாதிரி எங்க அய்யா நேரத்தோடேயே எந்திரிச்சிட்டார்.

நேரம் இன்னும் விடியல.

எங்க அய்யா எங்க வீட்டில் எங்க அடுப்பாங்கரையில் இருக்கார்.

நெல்லுச் சோத்துப் பானையில் தண்ணீர்விட்ட நெல்லுச்சோறு பொங்கிய சோறு ஒரு பானச் சோறும் அப்படியே இருக்கு.

மீன்கறிச் சட்டியில் சுண்டச்சுண்டச் சுட வைத்த மீன்கறி சட்டியில் சுண்டிப்போய் இருக்கு.

எங்க அய்யா ஒரு மண் சட்டியில் நெல்லுச் சோத்த அள்ளி அள்ளி வைக்கிறார். மீன் கறியை மீன் கறிச் சட்டியோடு தூக்கி நெல்லுச் சோத்தில் கொட்டுகிறார். எங்க அய்யா நெல்லுச் சோத்தையும் மீன் கறியையும் சேர்த்துப் பிசைகிறார். அவர் பிசைந்த சோத்தை உருட்டி உருட்டி அவர் உருண்டை பிடிக்கிறார். எங்க அய்யா அந்தச் சோத்து உருண்டையை கவளம் கவளமாக விழுங்குகிறார்.

எங்க அய்யா சாப்பிட உக்காந்ததே தெரியல. அவர் சாப்பிட்டுக் கையைக் கழுவிட்டார். சாப்பிட்ட சட்டியையும் கழுவிக் கவுத்திட்டார்.

எங்க வயலில் நடுவே நடந்து கொண்டிருக்கிறது.

எங்க சொந்தக்காரவுக குலவை போட்டுக்கிட்டும், நடுவைப் பாட்டுப் பாடிக்கிட்டும், வாய் நெறய்யாச் சிரிச்சிக்கிட்டும் நிறை நிறையா நின்னு அவர்கள் நெல் நாற்றுக்களை அழகாக நட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்க அய்யா நாற்றங்காலில் மண்டி போட்டு உக்காந்துக்கிட்டுருக்கார்.

தூங்கல் ஒரியார்
நற்றிணை 60