சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

ஒரு மூங்கில் காடு.

அந்த மூங்கில் காட்டில் மூங்கில் அரிசி கொட்டிக் கெடக்கு. அந்த மூங்கில் அரிசி வெள்ளவெளேர்ன்னு அழகாருக்கு.

அந்த மூங்கில் காட்டுக்கு ஒரு யானை வந்துருக்கு. அந்த யானை அந்த மூங்கில் அரிசியை வளைத்துப் பிடித்துத் தின்கிறது. அந்த யானை வயிறு நெறைஞ்சதுக்குப் பிறகு அது அசைந்து அசைந்து நடந்து போய்க்கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய காட்டில் பெரியபெரிய சந்தன மரங்கள் இருக்கின்றன. அந்த பெரிய சந்தன மரங்களுக்கு ரொம்பச் சின்ன இலைகள். இந்த சின்ன இலைகள் வெயிலுக்கு வாடி இருக்கிறது.

மூங்கில் காட்டில் இருந்து அசைந்து அசைந்து நடந்து போய்க்கொண்டிருந்த அந்த யானை ஒரு சந்தன மரத்தின் நிழலில் படுத்திருக்கிறது.

சந்தனக் காற்று தாலாட்டித் தாலாட்டி யானையை உறங்க வைக்கிறது.

நல்வெள்ளியார்
நற்றிணை 7