து போதையில் வாகனம் ஓட்டுவது தவறு என்று மது அருந்தியவனுக்கு தெரியாத விசயம் அல்ல. இருசக்கர வாகனத்தில் ஏற்படும் விபத்துகளில் 80 சதவிகிதம் மது போதையால் நிகழ்வனதான். போதையில் பயணிப்பவர் ரோபோவுக்கு நிகராக ஆகிவிடுகிறார். போதையில் தலை போகிற விசயம்கூட தூசுபோல் தோன்றும். மனதில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சிந்தித்தபடி சாலையில் பயணிக்கிறார் அவர். எவ்வளவு வேகத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற கட்டுப்பாடு தெரிவதில்லை. தவிர டூவீலரை ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம் என்ற நினைவும் இருப்பதில்லை. கூடவே துணைக்கு இன்னொரு நண்பரும் பின்னிருக்கையில் உள்ளார் என்றால் விசயம் சுலபம். இருவரும் ஏதோ டாஸ்மார்க் பாரில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோல் பயணத்தில் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் செல்வார்கள். மோதலோ, சறுக்கலோ சாலையில் திடீரென நடந்தால்தான் இருவருமே உணருவார்கள்.

விபத்துகள் ஒரு நொடியில் நடந்தேறிவிடுகின்றன. கையிலோ, காலிலோ எலும்பு முறிவு ஏற்பட்டு காலம் முழுதும் காலை கோணல்மாணலாக சாய்த்துச் சாய்த்து நடக்கையில் மற்றக் குடிகாரர்களுக்கு குடியின் தீமைகள் பற்றி பாடம் சொல்லுவார்கள்.

ஷாராஜ் எழுத்தின் மூலமாக நண்பனாக அமைந்தவன். கேரளத்தின் ஓழலப்பதியில் தாய் தந்தையுடன் வாழ்க்கை ஓட்டிவந்த அறிவு ஜீவி. ஓவியங்கள் வரைவதில் கெட்டிக்காரன். அவ்வபோது கவிதைகளும் கதைகளும் எழுதியவன். முதலாக அவனை விஜயமங்கலம் நிறுத்தத்தில் நான் சந்திக்கையில், ‘மருத்துவமனையிலிருந்து நேராக எழுந்து வந்தாயா?’ என்றே கேட்டேன். அப்போது அவன் சிந்திய சிரிப்பும் புன்னகையும் இன்றுவரை மாறவில்லைதான்.

வெறும் கையில் முழம்போடுவது என்பது ஒரு சொலவடை. அதாவது கையில் மல்லிகைச்சரம் இல்லாமலேயே முழம் முழமாய் பெண்களுக்கு அளந்து அளந்து விற்பனை செய்வதாயும், காசை வாங்கி கல்லாவில் போடுவதாயும் கற்பனையில் வியாபாரியாவது. ஷாராஜிடம் அப்படியான எதிர்காலத் திட்டங்கள் பற்றியான பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். நம்பிக்கை என்ற நார் அவன் கையில் இருப்பதாயும் உதிரிப்பூக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாய் வந்து நாரில் வரிசைக் கிரமமாக ஒட்டிக்கொள்வதாயும் அவன் பேச்சிருக்கும். தனிமை ஒரு மனிதனை பலவித யோசனைகளுக்காட்படுத்தி பைத்தியக்குழியில் தள்ளிவிடும் உபாயம் செய்துவிடும். வாழ்வின் மீதான பயத்தை சற்றேனும் உணராத என்னிடம் அவனுடைய கோட்பாடுகளை பேசியிருக்க வேண்டியதில்லைதான். அவனுக்கே அவனுக்கான தயார் நிலையிலான அந்த விபத்து பொள்ளாச்சியில் அரங்கேறிவிட்டது.

நடந்து முடிந்தவைகளுக்காக வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இருப்பதில்லைதான். கொண்டாட்டமான மனநிலைக்கும், அழுத்தமான மனநிலைக்கும் அடிக்கடி தாவி வாழும் மனதுடைய சாய்ராஜுக்கு (என் அம்மா அவனை அப்படித்தான் இன்றும் அழைப்பார்) இந்தத் தண்டனை மிகப் பெரியதுதான். இரண்டு வருட காலமாகிவிட்டது விபத்து நடந்து முடிந்து இப்போது. இருந்தும் அவன் ஓவியங்களை தொடர்ந்து வரைந்துகொண்டேயிருக்கிறான். பழைய உற்சாகத்தில் பொள்ளாச்சியில் வீட்டோடு இருப்பவனை போய்ச் சந்தித்து மகிழ்ச்சியாய் அளாவ மனது தடை சொல்கிறது. இதுகூட ஜீன் விசயமாக இருக்குமோ என்ற ஐயம்தான்.
என் தந்தையார் கோவை ஞானியிடம் மிக நெருக்கமான நட்புறவோடு இருந்தார். அப்படி நட்புறவோடு இருக்க விஜயமங்கலத்தில் வசிக்கும் ஓடைதுரையரசன்தான் காரணம் அப்போது. எழுபதுகளில் கோவை ஞானி தீவிரமான மார்க்சீயவாதி. அவரது படைப்புகளை கண்ணுற்ற என் தந்தையார் அவரை சந்தித்துப் பேச ஆவலானார். விஜயமங்கலத்தில் இருக்கும் ஓடை துரையரசனை என் தந்தையார் சந்தித்ததில்லை. காற்றுவாக்கில் ஞானி நான்தான்! என்கிற தகவலை ஊத்துக்குளி, பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் கசியவிட்டார் ஓடை. ‘இவத்திக்காலிக்கி இருக்குற மார்க்சீயவாதியை சந்திக்காம இருக்கமே! என்ன காலக் கொடுமையிது?’ என்று தன் பள்ளி ஆசிரியத் தோழர்களுடன் சைக்கிளில் ஞானியை நேராக சந்திக்க என் தந்தையார் சென்றிருக்கிறார்.

அது ஒரு மழைக்காலம். ஞானி தன் புத்தகங்கள் எல்லாம் மழையில் நனைந்துவிட்டதே என்ற வருத்தத்தில் மரத்தடியில் விரித்துப்போட்டு அதனருகே கட்டிலைப்போட்டு படுத்திருக்கிறார். புத்தகங்கள் ரொட்டிபோல காய்ந்து எழுந்து கிடக்கின்றன! புத்தகங்களுக்கிடையே ஒரு மனிதர். புதியவர்கள் இடம் கண்டுபிடித்துச் சென்று கட்டிலில் படுத்திருந்தவரிடம், ‘இங்கே ஞானீன்னு?’ என்று வினவ, ‘நான் தான் வாங்க வாங்க!’ என்று ஓடை வரவேற்றிருக்கிறார்.

பிற்பாடு அவரிடமே, ‘ஏன் ஞானி நான் தான்னு சொன்னீங்க துரை?’ என்று என் அப்பா வினவ, ‘அப்பத்தானே என்னைப் பார்க்க நீங்கெல்லாம் வருவீங்க!’ என்றாராம். இந்த விசயம் கேள்விப்படுகையில் எனக்கு விநோதமாயிருந்தது. பின்பாக ஒரிஜனல் கோவை ஞானியை என் தந்தையார் சந்தித்தப் பிறகு இருவருக்குமான நட்பு ஒத்த சிந்தனையுடையவர்களாய் இருந்ததால் பலப்பட்டுவிட்டது.

கால ஓட்டத்தில் ஞானிக்கு கண்பார்வையில் பிரச்சனை ஏற்பட்டு பார்வையை இழந்த சமயம் என் தந்தையார் அவரைச் சென்று சந்திப்பதை தவிர்த்துவிட்டார். அதற்கான காரணம் ஒரு நண்பரை எப்படி பார்வையற்றவராய் சென்று சந்திக்க முடியும்? என்ற தவிப்பிலேயே விட்டுவிட்டார். தந்தையாரின் மரணத்திற்கு ஞானி துணையாக ஒருவரோடு வந்திருந்தார். என் வீட்டிலேயே மதிய உணவு உண்டவர் தந்தையாரைப் பற்றியான பழைய தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தந்தையாரின் புத்தக அடுக்கை தடவிப்பார்த்து மகிழ்ந்தார். கடைசியா என்ன வாங்கினார்? என்றார். சாருவின் ஜீரோ டிகிரி நாவலை கையிலெடுத்துக் கொடுத்து ‘இதுதான்’ என்றேன். ‘ஓ! ஜீரோ டிகிரி வரைக்கும் வந்துட்டாரா அப்பா!’ என்று ஆச்சரியமாய் பேசினார். பிற்பாடு எழுத்தில் நான் தீவிரம் காட்டிய சமயத்தில் ஈரோடு மீட்டிங் ஒன்றிற்கு வந்தவர் என்னிடம், ‘என்னடா எழுதுறீங்க நீங்கெல்லாம்? நீயும், அந்த கெளதம சித்தார்த்தனும்? ம்!’ என்றபோது நான் புன்னகைத்தது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.

ஓடை இன்றும் நல்ல வாசிப்பாளராக இருக்கிறார். அவருக்கு தமிழில் வரும் அனைத்து இதழ்களும் காலம் தவறாமல் கிடைத்துவிட வேண்டும். புத்தகங்களை ஒரு மனிதர் காதலோடு வாங்கி வாசித்து மகிழ்கிறார் என்றால் என் கண்ணுக்குத் தெரிந்து அவர்தான். என் அப்பா இறந்தபிறகு அவரை விஜயமங்கலம் பகுதியில் சந்தித்தால், ‘எதாச்சிம் எழுதிட்டு இருக்கியா?’ என்றே விசாரிப்பார்.  ‘அப்பா போனதுல இருந்து புத்தகங்களை வாசிக்க வசதியில்லீங்க! இனி எங்க நானு காசு போட்டு புத்தகம் வாங்கி வாசிக்கப்போறேன்? அவரு வெச்சிருந்த புத்தகங்களையும் வீட்டை அடைச்சிட்டு கிடக்குதுன்னு எடைக்கிப் போட்டுட்டேன்!’ என்றபோது வருத்தப்பட்டவர் தன்னிடமிருந்து புத்தகங்களை எடுத்துப்போய் வாசிக்கச் சொன்னார். கொஞ்சம் காலம் அப்படியும் நடந்தது.

‘கள்ளி அருமையான நாவல்’ என்பார். சமீபத்தில் ‘நடுகல் அருமையா வருது!’ என்றார். எல்லா சொற்றொடர்களும் அவரிடமிருந்து ஊக்கமாகவே அமையும். அவரது அம்மா அவரது வீட்டின் முகப்பில் கட்டிலில் அமர்ந்திருப்பார். அந்தக் காலப் பெண்மணி. ‘ஆத்தா நல்லாயிருக்கீங்களா?’ என்ற விசாரிப்பை இவரைச் சந்திக்கச் செல்கையில் வைப்பேன். ‘இவனுக்கென்ன இன்னும் சின்னப் பையன்னு நெனப்பா? சாமமாயிடுச்சுல்ல இப்ப? இன்னும் வண்டிய எடுத்துட்டுப் போனவனைக் காணம் பாரு! வயச்சுக்கு தக்கனாப்ல இருந்துக்க தெரியுதா ஒன்னா இவனுக்கு?’ என்று அவர் பேசுகையில் ஒன்று புரிந்தது. காக்கை இருக்கும் காலம்வரை தனது குஞ்சு என்றுமே பொன் குஞ்சுதான்.

இதே போன்று தான் திங்களூரில் அம்மாயியைக் காணச் சென்றிருந்தேன். அப்போது திருமணமான புதிது. வேறொரு விசயமாக துணைவியாரோடு செல்லவில்லை அன்று. அம்மாயி வெத்தலை பாக்கு புகையிலைபோடும். அதற்கென அவைகளை வாங்கி ஒரு மழைக்காகிதத்தில் பொட்டணம் மடித்துச் சென்றிருந்தேன். நான் சென்றபோது அம்மாயி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தது. ‘வா சாமி! எங்க அவளையுங் கூட்டீட்டு வந்திருக்கலாமல்லொ!’ என்றது. ‘ஒரு சோலியா திங்களூரு வழியா வந்தனம்மாயி… அப்பிடியே உன்னியும் பாத்துப்போட்டு போலாம்னு வந்தேன்’ என்றேன். கொஞ்சம் சப்தமாகத்தான் பேச வேண்டும். அம்மாயிக்கு வயது எண்பது தாண்டியிருக்கலாம். ‘கோழிக மேயுது ஊட்டச் சுத்தியும்! ரெண்டப்புடிச்சுட்டு போயிரு போறப்ப!” நான் ஒன்று சொல்ல அது ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது. பாசத்திற்கும் முன்னால் காதாவது கண்ணாவது!

நான் டி.வி.எஸ். ஒருகாலத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.  ‘எல்லோரும் ஓட்டறாங்க சார், நீங்களும் வாங்குங்க!’ என்று என் தந்தையாரைத் தூண்டி வாங்க வைத்துவிட்டார்கள். வாங்கிய முதல் நாளே பொறவுக்கு அமர்ந்திருந்த நண்பரோடு மிதமான போதையில் நேராக காட்டுக்கு அடைப்புக்கு போட்டிருந்த டில்லிமுள் கூட்டத்தில் கொண்டுபோய் செலுத்தினாராம். முன் வீல் பஞ்சரானது. ஏழு பஞ்சர் அடைத்ததாக சொன்னார்கள். அதன்பிறகு என் தந்தையார் டி.வி.எஸ்.சை கடைசிவரை தொடவில்லை. அதை நான் கைப்பற்றிக்கொண்டேன்.

அந்த சமயத்தில் நானும் எனது நண்பரும் பமீலா ஒயின்ஸிலிருந்து நல்ல போதையில் கிளம்பினோம் எங்கள் ஊர்நோக்கி. இந்த இடத்தில் நண்பரின் பெயர் தவிர்க்கப்படுவதற்கு காரணம் என்று எதுவுமில்லை. அவர் இப்போதும் என் நண்பர்தான். எங்கள் ஊரின் பக்கத்து ஊரைச் சேர்ந்த 55 மதிக்கத்தக்க அற்புதமான மனிதர் பேருந்துக்கு கைகாட்டுவதுபோல நீட்டி ஊர்வரை தன்னை ட்ராப் செய்து விடும்படி ஏறி நடுவில் அமர்ந்துகொண்டார். அவரும் கணக்கான போதைதான். இப்படி இன்று வரை கைகாட்டி ஊர் வரை லிப்ட் கேட்டு யாரேனும் ஏறிக்கொள்ள இரண்டு பேருந்துகளே எதேனும் ஒரு நேரத்தில் ஓடுவதே காரணமாகிவிட்டது.

நடுவில் அமர்ந்து கொண்டவர் நண்பர்களுக்கு பட்டப்பெயர் சூட்டுவதில் கில்லாடி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நண்பர்களை ஒட்டுமொத்தமாக மொட்டுக்குஞ்சுகள் என்பார். மறுதரப்பு கட்சிக்காரர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்பார். ஊரூராய் வீட்டில் சண்டை போட்டுவிட்டு ஓடிவிடும் நண்பன் ஒருவனுக்கு நேசனல் என்று பெயர் சூட்டியிருப்பார். வாயில் பல் இல்லாதவருக்கு மணிபர்ஸ். இப்படி யாரையும் ஒரிஜனல் பெயர் கொண்டு கூப்பிடவே மாட்டார். வண்டி கிளம்பிற்று.

இரண்டு ஊர்களை தாண்டும் வரை இருவரும் நாயம் பின்னிருக்கையில் நொங்கெடுத்து வந்தார்கள். மூன்றாவது ஊர் வருகையில் என் தோளைத் தட்டினார் என் முதுகோடு ஒட்டி இருந்தவர். “குஞ்சு குஞ்சு! புலியக் காணம்” என்றார். என்ன? என்று வண்டியை நிப்பாட்டினேன். எனது நண்பரை பின் இருக்கையில் காணவில்லை. வண்டியில் மூன்றுபேரும் அமர்ந்த பிறகு, போலாம் ரைச்! என்று நண்பரின் குரல் வந்தபிறகு தான் கிளப்பினேன். பின் நண்பர் எங்கே? வண்டியைத் திருப்பினேன். பார்த்தால் நடு ரோட்டில் லுங்கி கிழிந்து கையில் பிடி கம்பியைப் பிடித்துக்கொண்டு நண்பர் நாங்கள் தாண்டி வந்த ஊரில் சாலையில் அமர்ந்திருந்தார். இடுப்பில் அடி என்றார்.

“பொறவுக்கு புடிமானத்துக்கு புடிச்சிருந்த கம்பி கையோட வந்துடுச்சு. அப்பிடியே பின்னாடி சாய்ஞ்சுட்டேன். லுங்கி எங்கியோ சிக்கி கிழிஞ்சி போச்சு. அத்தனை சத்தம் போட்டேண்டா! நில்றா! நில்றான்னு.. காதுலயே உனக்கு விழலையா?” என்றார். அதே நண்பர் அடுத்த வருடத்தில் இதேபோல் வேறொரு நண்பருடன் சென்று அடிபட்டு காலில் ப்ளேட் வைத்து ஆப்ரேசன் செய்தார். இன்னமும் காலை இழுத்து இழுத்துத் தான் நடக்கிறார். குடியை இன்னமும் விட்டபாடில்லை.
டிவி திரையில் வரும் பிம்பங்கள் மதுக்கிண்ணத்தை பிடித்திருந்தால், சிகரெட் பிடித்திருந்தால் ஓரத்தில் கட்டம் கட்டி புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு, மது அருந்துவது உடலுக்கு தீங்கு என்று வருகிறது. டொபாக்கோ கில்ஸ் என்று ஆங்கிலத்தில் கொட்டை எழுத்தில் போட்ட புகையிலை பாக்கெட்டுகளும், பான்பராக் பொட்டணங்களும் மளிகைக்கடையில் சரம் சரமாய் தொங்கின காலம் பின்னகர்ந்து கடையினுள் மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்கும் பாவனையில் துண்டுப்பேப்பரில் மடித்துக் கொண்டு வந்து நீட்டுகிறார்கள். சமீபத்தில் ரெய்டு என்று விஜயமங்கலத்தில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றி ஒருவார காலம் சாத்திக் கிடந்தது ஒரு மளிகைக் கடை. செலவு ஆகிவிட்டது! அவ்வளவுதான். மறுவாரம் கடை நீக்கப்பட்டுவிட்டது. இப்போது பழைய போதை விரும்பிகள் விரல்களை நீட்டி ரெண்டு, ஒன்னு என்று சிக்னல் காட்டினால் கடைக்காரரிடமிருந்து அவர்களுக்கு சிக்னல் கிடைக்கிறது கைகளை இல்லையென ஆட்டியபடி!

செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்று சொலவடை உண்டு. ஒருவர் இறந்தால் தான் சுடுகாடு வரை சொந்தபந்தங்கள் சென்று அவரை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்புகின்றன. எப்படியும் பத்து நாட்களுக்கு இறந்தவரின் நினைவுகள் விவாதங்களாக இருக்கும். ஒரு நபர் இறந்த பிறகு சுடுகாடு வரை சென்று வருகையில் தான். பலருக்கும் சுடுகாடு பற்றியான நினைவு வருகிறது. மற்றபடி அது நினைவில் இருப்பதில்லை. கிராமப்புறங்களில் ஒரு நல்ல காரியத்துக்கு தவிர்க்க இயலாமல் செல்ல இயலாவிடினும் துக்க காரியத்துக்கு கண்டிப்பாக சென்று விட வேண்டும். போக, சென்றால் பிணத்தை அடக்கம் செய்து விட்டு தான் வீடு திரும்ப வேண்டும்.
போதையூட்டும் மதுபாட்டில்களின் விலையை உயர்த்திக் கொண்டேயிருக்கிறது அரசு. கடைக்குறைப்பு வேலைகளை அரசாங்கம் நிகழ்த்திக் காட்டிய போது குடிமக்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. பெருந்துறை நகரில் மதுபானக்கடை ஒன்று கூட இல்லை என்கிறபோது சாதாரண குடிமகன் ஈங்கூர் வரை பேருந்து ஏறிச் சென்று திரும்பும் பணியைச் செய்தான். ஒரு பையில் பெருந்துறையில் காத்திருக்கும் தன் போன்ற சாதாரண கூலித் தொழில் குடிகாரர்களுக்கு என பாட்டில்களை மறு பேருந்தில் வாங்கிக் கொண்டு பெருந்துறைக்கு திரும்பினான். வாகனம் வைத்திருப்போர் பெருந்துறையிலிருந்து ஈங்கூர் வரை பிரயாணம் மேற்கொண்டார்கள்.
இப்படியாக ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் பொதுமக்கள் அவரவர் காரியத்தில் இருந்தார்கள். வாகனங்களில் குடிபோதையில் வருபவர்களை மடக்கிப் பிடிக்க போலீஸ் அதிகாரிகள் சாலையில் நின்றார்கள். தூங்கி விழித்ததும் ப்ளாக்கிலாவது கட்டிங் கிடைக்குமா? என்று வந்து குடித்துப்போகிறவர்களை மடக்குவதற்காக போலீஸ் அதிகாரிகள் தங்கள் பணியினை காலையிலேயே துவங்க வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டிலேயே குடியில் வாகனம் ஓட்டியவர்கள் அதிகமாக அரசாங்கத்திற்கு கட்டணம் கட்டிய கணக்கில் பெருந்துறை தான் முதலிடமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் கடமையைத்தான் செய்கிறார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவன் பெரிய விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறான். தான் போவதுமில்லாமல் தன்னோடு பலரையும் கூட்டிச் சென்று விடுகிறான்.
என் நண்பனொருவன் வாகன சோதனையில் சிக்கி, இரவு நடந்த கூத்தைக் கேளேன்! என்றான். திருப்பூர்ல இருந்து வந்துட்டு இருக்கேன். கடை வேற

சாத்தீருவானுங்களே பத்து மணியானா! ஊத்துக்குளியில ஒரு கோட்டர் வீசிட்டு இன்னொன்னு வாங்கி கவர்ல போட்டுட்டு கிளம்பிட்டேன். பின்ன சென்னிமலை வந்ததீம் போதை தெளிஞ்சு போயிடுதே! சரக்கா விக்குறாங்க சரக்கு? சாவச் சொல்லி பாலிடாயிலவே தமிழ்நாட்டுல குடுத்துடலாம்! பாக்குறீல்ல பேப்பர்ல.. குடிமகன் அதிர்ச்சின்னு டைட்டில் போடுறாங்கள்ள! பாட்டிலினுள் பல்லி, பாட்டிலினுள் ப்ளாஸ்டிக் பொருள்னு! ஊத்துக்குளி தாண்டி வந்துட்டு இருக்கேன் நிறுத்தீட்டாங்க! வாயை ஊதச் சொன்னாங்க! குப்புனு ஊதுனேன். வண்டியை ஓரங்கட்டச் சொல்லிட்டாங்க!

ஸ்பாட் ஃபைன் கட்டுறியா? அப்படின்னாங்க! ‘என்னங்க சார் நியாயம் இது? பத்துமணி வரைக்கும் கடை இருக்கும்னு அரசாங்கம் சொல்லுது! திருப்பூர்ல காலைல இருந்து கட்டிங் வெட்டி களைப்பா திரும்புறேன் தினமும். ஒரு கோட்டர் குடிச்சுட்டு போறவனையும் புடிச்சு நிக்க வெச்சுட்டு ஃபைன் கட்டுங்கறீங்க! காசுக்கு நான் எங்க சார் போவேன்? அப்படின்னு ஆரம்பிச்சேன்!

நண்பர் சக்தி ஒரு குஜால் பேர்வழி எப்போதுமே! இந்திய அரசியலில் இருந்து உலக அரசியல் வரை சரளமாய் பேசுவார். போதையில் மிக அதிகமாக பேசுவார். என்ன அவர் ரஜினிகாந் ரசிகர் இன்னமும். தலைவன் ஆட்சி தான் இனி வரப்போகுது! தலைவர் வந்த பிறகு தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் ஆட்சி மலரும்! என்று திடமாய் நம்புகிறார். தலைவர் எலக்சனில் நிற்கும் காலம் வருவதற்குள் குடிவிரும்பியான அவர் ஓட்டுப்போட உயிரைத் தக்கவைத்திருக்க வேண்டும்.

முன்பாக இப்படித்தான் விஜயகாந்த் அரசியலில் குதித்த போது ஒரு நண்பர் தன் பெயரை கேப்டன் என்று மற்றவரை அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். குடிபோதையில் இன்னமும் என்னைக் கண்டால், ‘தலைவர் பையன் காலிசீட் கெடச்சிரும்ணா! நீங்க என்னை அடுத்த வாட்டி பாக்குறது சென்னையிலயாத்தான் இருக்கும்! என்னடா குடிகாரன் ஒலறுறானேன்னு நினைக்காதீங்க! படம் பண்றோம் ஜெயிக்கிறோம்! உங்க போன் நெம்பரைக் கொடுங்க! நீங்க தான் நம்ம படத்துக்கு வசனம்! இது போல பலமுறை என் அலைபேசி எண்ணை வாங்கி பதிவு செய்துவிட்டார். போதையில் செல்போன் தொலைப்பது அவரது ஹாபியாக இருக்கலாமென நினைத்துக் கொள்வேன்.

சக்தியிடம் மாட்டிய அதிகாரியின் நிலை சிரமம் தான். அஞ்சு பைசா இல்லை எனச் சொல்லி பேசிப் பேசியே நொங்கெடுத்திருக்கிறார் அதிகாரியை. கடைசியில் அதிகாரி, ‘சித்த வண்டியெ எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணுப்பா நீயி!’ என்றே சொல்லி விட்டாராம்.

ரொம்ப வருடங்களுக்கு முன்பாக எக்ஸெல் சூப்பரில் ஈரோட்டிலிருந்து வருகையில் திண்டல் தாண்டி வாகன சோதனையில் அடியேன் மாட்டிக் கொண்டேன். ’என்ன வேலை?’ என்றார் அதிகாரி. ‘ரைட்டர் சார்’ என்றேன். ‘எந்த ஸ்டேசன்ல?’ என்றார் அவர். நான் போதையில் சிரிக்கவும், ‘என்ன சிரிப்பு?’ என்றார் அவர். விசயத்தை சொன்னேன். ‘எழுத்தாளரா இருந்துட்டு இப்படி நீங்களே தப்பு பண்ணலாமா?” என்றார். வண்டியை அங்கேயே விட்டு விட்டு அடுத்த நாள் ஈரோடு சென்று இரண்டாயிரத்தி ஐநூறு கட்டி வண்டியையும், ஒரிஜனல் லைசென்சையும் வாங்கி வந்தேன். லைசென்ஸில் ஒரு துவாரமிட்டுத் தருவார்களாம். எனக்கு அது நடக்கவில்லை.

பின்பாக அதே மாதத்தில் விஜயமங்கலத்திலிருந்து என் கிராமம் செல்லும் பாதையில் சிக்கினேன். இங்கெல்லாமா ஹைவே பெடரோல் வண்டி நிற்கும்? ‘சார் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் சார்! எழவொன்னு ஊர்ல வுழுந்துடுச்சாமா! அவசரம் சார்’ என்றேன். சீட்டை எழுதி கையில் கொடுத்து விட்டார். இந்த முறை லைசென்ஸ் இருக்கிறது என்று சொல்லவில்லை. நல்லவேளை, அரசாங்கத்திற்கு பணம் கட்டுங்க! என்று சொல்லி வண்டியோடு அனுப்பி விட்டார்.
அடுத்த நாள் பெருந்துறை கோர்ட் வாயிலில் என் பெயரை எப்போது கூப்பிடுவார்கள்? என்று எதிர்பார்த்து நின்றிருந்தேன் கூட்டத்தாரோடு. திருட்டு வீசிடி விற்பனை செய்யும் கடை வைத்திருந்த சமயத்தில் பேண்ட் சர்ட் என்று போய் நின்றிருந்த ஞாபகம் வந்தது. அன்று நான் லுங்கியும் கழுத்தில்லா பனியனும் அணிந்திருந்தேன். என் பெயர் அழைக்கப்பட்ட போது லுங்கியை அவிழ்த்து கீறிறக்கி விட்டு உள்ளே சென்று ஐயாவுக்கு ஒரு வணக்கம் வைத்தேன். “தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டினியா?” கேள்வி பிறந்தது. “ஆமாங்க” என்று சொன்னால் சொல்லப்படும் ஃபைன் தொகையை கட்டி விட்டு வந்து விடலாம். நான் ’ஆமாம்’ சொல்லவில்லை.

“ஐயா நான் தெனக்கூலிக்கி போயிட்டு வந்துட்டு இருக்கனுங்க! எங்க ஊட்டுக்கு போறப்ப அங்க நின்னுட்டு புடிச்சுட்டாங்க!”

“எங்கே உன் ஊரு?”

“வாய்ப்பாடிங்க! போற வழியில வேட்டகாரன்கோயல்கிட்ட நின்னு புட்ச்சாங்க!”

ஜட்ஜ் ஐயா என் காகிதத்தை தூர வீசினார். அதிகாரியிடம் தாவினார். “உனக்கு டூட்டி ஹைவேல தானே? அங்கெங்கே போன நீ?” ஐயாவுக்கு மீண்டுமொரு வணக்கம் வைத்து விட்டு மறு கதவு வழியாக வெளியேறினேன்.

வாகன பரிசோதனையில் நிற்கும் காவல் துறையினர் டிரிங்க் அண்ட் டிரைவ் என்றால் ஓட்டுனர் அதிகாரியின் முகம்நோக்கி ஊதிக்காட்ட வேண்டும். சென்னிமலை சின்னு அரேபியா போய் வேலை செஞ்சானாம். என்னடா வேலை என்றால் ஒட்டகத்துக்கு பல்லு சுத்தம் பண்ணுற வேலையாம். ப்ரஸ்ஸை கையில் இவன் எடுத்ததுமே ஈஈஈ என்று காட்டுமாம். வாசம் குடலை புறட்டுமாம். காவல்துறை பாவம் தான்.

திருப்பூரில் காங்கயம் சாலையில் பெரிய ஹோட்டல் அருகே வாகன பரிசோதனை செய்கிறார்கள் என்றால் பத்து நிமிடத்தில் பிடித்தால் தான் உண்டு. பதினொராவது நிமிடத்தில் அந்த வீதியில் ஒரு இரு சக்கர வாகனம் கூட வராது. தகவல் உடனடியாக திருப்பூர் முழுக்க பரவி விடும். சரி இது என்ன நியாயம்? அரசாங்கமே இரவு பத்து மணிவரை சரக்கை விநியோகம் செய்யுமாம். குடித்து விட்டு சந்து சந்தாக முட்டிவந்தால் லபக்கென பிடித்துக் கொண்டு கட்டு பணத்தை அரசாங்கத்துக்கு! என்று சொல்லுமாம்!

நான்கு பேருடன் சியர்ஸ் போட்டு உலக விசயம் பேசிக் கொண்டே குடித்தால் தான் அது குடி. வீடு வாங்கிப் போய் ஒத்தையாக அமர்ந்து பிசாசுபோல் ஒருவனே குடிக்க இயலுமா? இன்னையோட செரி நாளையில இருந்து குடிக்க மாட்டேன் என எல்லா குடிகாரர்களும் தான் சொல்கிறார்கள். அப்படி எல்லோரும் விட்டுவிட்டால் அரசாங்கம் நிலை தடுமாறிப் போய்விடும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிகரெட் குடிப்பதை பார்த்துத்தான் நான் சிகரெட் குடிக்கப் பழகினேன் என்று யாரும் சொல்வதில்லை. இருந்தும் பாபா படத்தில் மனுசன் காட்சிக்கு காட்சி ஊதித் தள்ளுகிறாரே அவரது உடம்பு என்னத்துக்கு ஆகிறது என்று வருத்தப்பட்ட கட்சி ஒன்று அவரை வன்மையாக கண்டித்தது. அவர் பிறகு சுவிங்கம் மென்றார். பிறகு அதையும் விட்டொழித்து விட்டார். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சிகரெட்டை பலவித கோணங்களில் உதட்டில் வைத்து விளையாடி வித்தை காட்டியவர் தன் படங்களில் அதை விட்டு விட்டார்.

புரட்சித்தலைவர் தன் படங்களில் புகைபிடிக்கும் காட்சியை தவிர்த்தே வந்தார். நீங்களும் ஏதேனும் அரசியல் கட்சி உங்கள் வீடு தேடிவந்து குடியை விடச் சொல்லி கோஷம் போட்டால் குடியை விட்டு விட்டு தம்ஸ் அப். கொக்கொ கோலா என்று குடிக்கப் பழகி விடாதீர்கள். பிறகு நாடு என்னத்துக்கு ஆவது? போக சாலையில் உங்களுக்காக காத்திருக்கும் அதிகாரிகளை ஏமாற்றமடையச் செய்து விடாதிர்கள்!

போதையில் வாகனம் ஓட்டுங்கள். அதிகாரிகளை ஏசுங்கள், சந்து சந்தாய் முட்டிப் போய் அதிகாரிகளை ஏமாற்றி விட்டு சந்தோசமாய் வீடு செல்லுங்கள்! அடுத்தவன் மீது மோதி அவனையும் சாவடிக்காதீர்கள்! நீங்கள் மட்டும் தனியே ஒரு மின் கம்பத்திலோ, அல்லது புளியமரத்திலோ மோதி விடைபெறுங்கள்!