எண்பதுகளில் கிராமத்தில் சைக்கிள் வைத்திருந்தவர்கள் கொஞ்சம்பேர் இருந்தார்கள். தொழில் நிமித்தமாக விஜயமங்கலம், ஊத்துக்குளி, சென்னிமலை என்று தினமும் பத்து கிலோமீட்டர்கள் பயணப்பட அவர்கள் சைக்கிளை உபயோகித்தார்கள். என் கிராமத்தில் ஒரு சைக்கிள் கடை இருந்தது. எப்போது வேணுடுமானாலும் விழுவேன் என்கிறமாதிரியான மண் அரித்த பத்துக்கு எட்டு அளவிலான கட்டிடமது. சுத்துப்பட்டு பதினைந்து கிராமங்களுக்கும் அது ஒரே கடைதான்.

அவர் புளியம்பாளையம் என்கிற ஊரிலிருந்து (ஒன்னரை கிலோமீட்டர்) காலையில் வந்து சேர்ந்து கடையை நீக்கி அமர்ந்திருப்பார். மதிய உணவுக்கு அவரது சைக்கிளிலேயே வீடு செல்லும் சமயம் கடையைப் பூட்டி விட்டெல்லாம் செல்ல மாட்டார். யார் சைக்கிள் பஞ்சரானாலும் இடம் தேடிச் சென்று பஞ்சர் ஒட்டித் தர செல்ல மாட்டார். அதேபோல் மாலைவரை கடையில் இருப்பார். அப்போது ஹெர்குலஸ், அட்லஸ் சைக்கிள்கள் நல்ல தரமுடன் இருந்தன. இப்போது ஒரு கையால் பூமாதிரி தூக்கிக்கொண்டு செல்வது மாதிரியான சைக்கிள்கள் வந்துவிட்டன. அப்போதைய சைக்கிள்களை அப்படித் தூக்க முடியாதுதான்.

கிராமத்திலிருந்த சைக்கிள் கடை அவர் உயிருடன் இருந்த காலம்வரை இருந்தது. ஒரு சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார். மிக நிதானமாக தண்ணீருக்குள் காற்றடைத்த டியூப்பை கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்தி குமிழிகள் வருகின்றனவா? என்று சோதித்து முடிப்பார். பின் தன் வேட்டியிலேயெ நனைந்த டியூப்பை துடைத்து உரைப்புக் கட்டையால் நன்கு உரைத்து, பழைய சைக்கிள் டியூப்பிலேயே சதுரமாகவோ, வட்டமாகவோ கத்தரியால் வெட்டி அதையும் தேய்ப்புப் போட்டு பிறகுதான் சொல்யூசனை பிதுக்கித் தடவுவார். பின் அதை வாய்க்காற்றால் ஊதி ஊதி பிறகாக பஞ்சர் இடத்தில் ஒட்டுவார்.

ஒருவர் சைக்கிள் டியூப்பில் இருபதிற்கும் மேல் ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்டிருந்தாலும் ‘டியூப்பை மாத்திக்கோப்பா! இனி இது தாங்காது!’ என்கிற வார்த்தையை பார்ட்டியுடம் சொல்லவும் மாட்டார். பின்பாக பஞ்சர் ஒட்டி முடித்தவுடன் சைக்கிளுக்கு காற்றடிக்கும் வேலையை அவர் செய்ய மாட்டார். சைக்கிள் பார்ட்டியே தன் சைக்கிளுக்கு பம்ப்பால் காற்றடித்துக்கொள்ள வேண்டும். இப்போது மிக எளிதாக காற்றடிக்க சைனா பம்ப்புகள் விற்பனைக்கு வந்துவிட்டன. சந்தைக்கடைகளிலும் சாலையோரங்களிலும் அவைகள் நூறு ரூபாய்க்கு கிடைக்கின்றன.

அவரது பெயரை யாரும் உச்சரிக்காததால் அது எனக்கு இப்போதும் தெரியவில்லை. அவர் வெறுமனே சைக்கிள்கடைக்காரர் என்றே மற்றோரால் அழைக்கப்பட்டார். அவரது மகன் பெயர் சைக்கிள்கடைக்காரர் பையன். அஞ்சல் துறையில் பணியிலிருந்த அவரது மகன் பிற்காலத்தில் நான் டிசைன் டிசைனாக வாங்கி ஓட்டி அவசரத் தேவைகளுக்கு விற்றுவிடும் நிலையில் என்னிடமிருந்து இரண்டாவது கையாக வாங்கிய சைக்கிளை வெகு காலம் ஓட்டிக் கொண்டிருந்தார். பின்பாக ஊரில் இரண்டு சைக்கிள் கடைக்கார நண்பர்கள் உதித்தார்கள்.

நான் நான்காவது வகுப்பில் வாசித்துக்கொண்டிருக்கையில் கொரங்குப்படலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். உயரமான மேட்டுப்பகுதிக்கு முக்கி முக்கி அரை குரங்குப்படலில் சென்று இறக்கத்தில் வேகமாக வருவது பிடித்தமாக இருந்தது. எனக்கு சைக்கிள் பழக்கிவிட்ட அண்ணன் இன்றில்லை. ‘ஓட்டு ஓட்டு, அப்படித்தான்! நான் பின்னாடி பிடிச்சிட்டேதான் வர்றேன்!’ என்று பிடித்துக்கொண்டு வருபர் குரல் திடீரென கேட்காது! திரும்பிப் பார்த்தால் அண்ணன் வெகு தொலைவில் நின்றிருப்பார். பதறிக்கையில் சைக்கிளானது டிச்சுக்குழிக்குச் சென்றதும் தெரியாது.

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கையில் கால் முட்டியில் ஏற்படும் காயங்கள் எல்லாம் வீரத் தழும்புகளாக பிற்காலத்தில் மாறிவிடுகின்றன. சாண்டில்யனின் கதைகளில் வரும் வீரகுமாரன்கள் நெஞ்சில் ஏகப்பட்ட கூர்முனைக் கத்திகளின் வடுக்களை இளவரசிகள் பார்த்து, ஏராளாமான போர்களை கண்ட மாவீரனோ? என்று ஏங்குவதாக எழுதுவார்.

டவுசர் போட்டுக்கொண்டு திரிந்த காலத்தில் நண்பர்கள் எல்லோருக்குமே கால் முட்டியில் புண்கள் இருந்துகொண்டே இருக்கும். காகிதத்தைக் கிழித்து எச்சில் தொட்டு ஈரக்காகிதத்தை புண்களின்மீது ஒட்டியிருப்பார்கள். டெராமிசின் என்கிற புண் மருந்துகள் எதாவது ஒரு சமயத்தில் டாக்டரிடம் செல்கையில் அவர் தடவிவிட்டு அனுப்பினால் உண்டு. மத்தபடி புண்களை ஆற்றுவதற்கு உடைந்துகிடக்கும் சீமையோட்டை கல்லில் தண்ணீர்விட்டு உரசி அதை எடுத்து புண்களின்மீது பூசிக் கொள்வதே நடக்கும்.

இது போக துளசித் தலைகளைப் பறித்து வாக்கணத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில்வைத்து சூடேற்றி பின்பாக அதை விரலால் பொடித்து அப்படியே எடுத்து புண்களின்மீது வைத்துக்கொள்வது நடக்கும். ஒரு நபருக்கு உடம்பில் எப்படியும் ஐந்தாறு இடங்களில் சீல் வடியும் புண்கள் இருக்கும். முக்கியமான இடங்களாக கைமூட்டுகள், கால் மூட்டுகள்தான். அதிக அசைவுகளுக்கு உள்ளாகும் இடங்களில் இருக்கும் புண்கள் ஆறுவதற்கு நாட்கள் அதிகமெடுத்துக் கொள்ளும். போக பட்ட காலிலேயே படும் படும் என்று சொலவடை சொல்வதுபோல ஆறிவரும் புண் மீதே புதிய காயங்களும் ஏற்படும்

குறுநகரங்களில் வாடகைக்கு சைக்கிள்கள் தரும் கடைகள் அப்போது இருந்தன. விஜயமங்கலத்தில் இருந்து என் அப்பிச்சி வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வருவார். அடித்தது லக்கிதான் எனக்கு. என் தந்தையாரின் சைக்கிளை நான் ஓட்டுவதற்கு ஊருக்குள்ளிருக்கும் தண்ணீர் டேங்கிலிருந்து பத்து நடை தண்ணீர் கொண்டுவந்து வீட்டில் ஊற்றினால் மட்டுமே என் தாயார் இரண்டு ரவுண்டு சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதிப்பார். அது துன்பம்.

இப்படி உறவுச் சனம் வாடகை சைக்கிளில் வந்துவிட்டால் தூக்கிச் சென்று விடுவதுதான். அப்படி ஒருமுறை வாடகைச் சைக்கிளை நான் தூக்கிப்போய்விட்டேன். நல்ல இறக்கத்தில் வேகமாய் வருகையில் எதிரே நண்பனும் ஏத்தம் ஏறிவிட வேண்டுமென அழுத்தோ அழுத்தென அழுத்தி வர, இடது வலது அறியாமல் இருவருமே நேருக்கு நேர் மோதிவிட்டோம். அப்பிச்சியும் அப்பாவுமே அந்த இடத்திற்கு வந்து சைக்கிளை தூக்கிப் போக வேண்டியதாகிவிட்டது.

அந்த மாபெறும் மோதலில் எதிர் நண்பணுக்கு முட்டியில் பெரிய காயமும் போனசாக தலையில் கீறலும் விழுந்திருந்தன. எனக்கு அன்றைய அதிர்ஸ்டம் ரோட்டில் விழுந்து எழுந்து டவுசரில் இருந்த மண்ணை தட்டிவிட்டது மட்டும்தான். அந்த வாடகை சைக்கிளுக்கு அந்தக் காலத்திலேயே இரண்டு நூறு ரூபாய்கள் செலவாயிற்றாம்.

சைக்கிள் ஓட்டாமலேயே ஒரு ஆசிரியர் ஊத்துக்குளிக்கு தினமும் நடந்து சென்றே வந்தார் என்பது ஆச்சரியம்தான். அவர் முகத்தை என்ன முயற்சித்தும் என்னால் கிஞ்சித்தும் ஞாபகத்திற்கே கொண்டுவர முடியவில்லை. தினமும் பதிமூன்று கிலோ மீட்டர் நடந்துசென்று பள்ளியில் பாடம் நடத்திவிட்டு மறுபடியும் பதிமூன்று மைல் (அப்போது கிலோ மீட்டரை மைல் என்றே) நடந்தே வீடு வருவார். அவரது ஒல்லியான உருவமும், வெள்ளை முழுக்கை சட்டையும் வேட்டியும் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது.

முன்பாக விஜயமங்கலத்திலிருந்து நானே ஏழு கிலோ மீட்டர்கள்வரை நடந்து வந்திருக்கிறேன். ஊருக்குள் முதலாக சைக்கிள் வடிவில் லூனா என்கிற வாகனம்தான் முதலாக வந்தது. அதுவும் ஏதோ பரிசாக விழுந்த வண்டி. நண்பன் அந்த வாகனத்தை தண்ணீர் எடுத்துப்போக சிலகாலம் பயன்படுத்தினான்.

சாலைகள் அன்றெல்லாம் மெட்டல் சாலைகள்தான். தார்சாலைகள் குறுநகரங்களில் மட்டும்தானே! சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் ஓடி கறுங்கற்கள் தூக்கிக்கொண்டு கலைந்துகிடக்கும். சைக்கிளில் இருந்து விழுந்தால் பலத்த காயங்கள் ஏற்பட அந்தக் கற்களே காரணம். போக அந்த சாலையிலும் ஒரு சிறு பாதையை சைக்கிள் ஓட்டிகள் உருவாக்கியிருப்பார்கள். கொரங்குப்படல் போட்டு செல்லும் சிறார்கள் அதில் லாவகமாகத்தான் செல்ல முடியும். ஒருகல்லில் முன்புற வீல் டயர் செதுக்கினால் வண்டி பேலன்ஸ் இழந்து விழ வேண்டியதுதான்.

விடுமுறைக்காலங்களில் கோவை வடமதுரைக்கு சென்றுவிடுவது நடந்து விடும் எனக்கு. மாமா அப்பொழுது வடமதுரையில் டெய்லரிங் கடை வைத்திருந்தார். ஒரு சமயத்தில் பத்து புதிய ஹீரோ சைக்கிள்கள் கேரியர் இல்லாமல் வாங்கி கடை முன்பாக வாடகைக்கு நிறுத்திவிட்டார். பஞ்சர் ஒட்டவும் செய்தார். அங்குதான் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவது எப்படி? என்கிற சூத்திரத்தைக் கற்றுக்கொண்டேன். வாடகைக்கு அனுப்பும்போது எடுப்பவர் பெயர், ஊர், வீதி என்று நோட்டில் எழுதி வைத்துக்கொடுக்க வேண்டும். மணிக்கணக்கில் தருவதென்றால் சிறார்களுக்குதான். ஒரு மணி நேரத்திற்கு என்ன வாடகைத் தொகை என்று எப்படி யோசித்தாலும் இப்போது தெரியவில்லை.

அப்படி ஒருவருக்கு மாமன் இல்லாத சமயத்தில் வாடகைக்கு கொடுத்துவிட்டேன். அவரை மாலையாகியும் காணவில்லை. மாலையில் வந்த மாமாவிடம் பயமாய் விசயத்தைக் கூறினேன். அவரோ அதை பெரிய விசயமாய் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் இரவில் எனக்கு தூக்கம்வர வெகு நேரமாயிற்று. காலையில் எழுந்ததும் அதே நினைவுதான். மறு நாள் கடைக்குச் சென்ற அரைமணி நேரத்தில் அந்த சைக்கிள் வந்து சேர்ந்தது. மாமா அவரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு, அப்பாடா! என்றிருந்தது.

சென்னிமலையிலிருந்து தாவி ஊத்துக்குளியில் உயர்நிலைப்பள்ளிக்கு வருகையில் எனக்கென தந்தையார் புதிய சைக்கிளை வாங்கிக் கொடுத்துவிட்டார். அதற்கு ‘ஜாலிரெயில்’ என்கிற பெயரிட்டேன். என்னோடு படிக்கவரும் நண்பர்களும் தங்கள் சைக்கிள்களுக்குப் பெயரிடும் வழக்கத்தை உருவாக்கிவிட்டேன். இறந்துபோன நண்பன் ஒருவன் தன் சைக்கிளுக்கு ‘ஜூபிடர்’ என்று பெயர் வைத்தான். ‘நான் போய் ஜூபிடரை எடுத்தாறேன்!’ என்றே செல்வான். என் கதையொன்றில் வெகு முன்பாக கிண்டலாய் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது. அதாவது, ‘சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது எப்படி?’ என்கிற புத்தகம் எழுதி அதை மணிமேகலை பிரசுரத்திற்கு முப்பது முறை அனுப்பி, அது முப்பத்தி மூன்றுமுறை திரும்பி வந்ததாக எழுதியிருப்பேன்.

டிவிஎஸ் வந்த பிறகு சைக்கிள்களின் பயன் குறைந்து போயிற்று. வீட்டில் சும்மா கிடக்கும் சைக்கிள்கள் துருப்பிடித்து இற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் மெதுவாய் குறைந்த விலைக்கு விற்றுவிட்டார்கள் பலர். என் பையனுக்கு யார் சைக்கிள் கற்றுக்கொடுத்தார்கள் என்று அவன் என்னிடம் சொல்லவில்லை. இருந்தும் இரண்டாவது கையாக அவன் நான்காவது வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு சைக்கிளை வாங்கிக் கொடுத்தேன். தட்டிலேப்பினான். உடைந்த அதை எடைக்குத்தான் போட வேண்டியாயிற்று.

அடுத்து ஈரோடு கூட்டிச் சென்று சைக்கிள் கடையில் விட்டுவிட்டேன். எல்லா சைக்கிள்களையும் தொட்டு நுகர்ந்து பார்த்துவிட்டு ஆறாயிரம் செலவில் ஒரு சைக்கிளை முடிவெடுத்துவிட்டான். அப்போது அவன் ஐந்தாவதில் இருந்தான். வண்டியில் எக்ஸ்ட்ரா பிட்டிங் செய்ய மட்டுமே இரண்டு மணி நேரமாயிற்று. பின் அதை ஈரோட்டிலிருந்து விஜயமங்கலம் கொண்டுவருவது எப்படி? ஆட்டோ வாடகை கொடுக்க என் பாக்கெட் காலி. பாக்கெட்டில் மிச்சமிருப்பது நான்கு நூறு ரூபாய் நோட்டுகளும் சில்லரைகளும் மட்டுமே!

ஒரு குருட்டுத் தைரியத்தில் அவனைப் பின் இருக்கையில் அமரவைத்து ஈரோட்டிலிருந்து கிளம்பினேன். அவனுக்கு இருந்த ஆர்வத்தில் வீடுவரை சைக்கிளில் செல்லும் முடிவிலிருந்தான். எத்தனையோ காலத்திற்குப் பிறகு சைக்கிளை மிதிப்பது சிரமமாயிருந்தாலும் ரோசத்திற்கு பிழைத்து வந்தவனாகிய நான் முடிவிலிருந்து பின்வாங்காமல் ஏத்தம் கண்ட பக்கமெல்லாம் இறங்கி உருட்டினேன். அவனிடம், ஏத்தம் ஏறி நில்! என்று சைக்கிளையும் தரவில்லை. வாகனங்கள் சாலையில் அத்தனை செல்கின்றனவே! இப்படி ஒரு வழியாக பெருந்துறை வந்து சேர்ந்தோம். பெருந்துறையிலிருந்து நேராக விஜயமங்கலம். விஜயமங்கலம் சைக்கிள் ஸ்டேண்டில் என் வண்டி நிற்பதால் விஜயமங்கலம் வந்ததும் அவன் கையில் சைக்கிளைக் கொடுத்து வாய்ப்பாடி சென்றுவிடும்படி அனுப்பிவிட்டேன். விஜயமங்கலம் பாரில் சரக்கைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவன் துணைவியாருக்கு போன் அடித்து ‘வந்துட்டானா பையன்?’ என்றேன். ‘அவன் அப்பலையாவே வந்துட்டான்!’ என்றதும் நான் அடுத்த பீர் சொன்னேன்.

கிராமப்புரத்திலிருந்து செல்லும் வழிகளில் நிழலான பெரிய மரங்கள் உள்ள இடங்களில் ஆணியடித்தோ, கட்டித் தொங்கவிட்டோ டிவிஎஸ் டயர்கள் இருக்கும். அதில் கோணல்மாணலாக அலைப்பேசி எண் எழுதப்பட்டிருக்கும். திடீரென பஞ்சர் ஆன இருசக்கர வாகனங்களை ஸ்பாட்டுக்கே பைக்கில் வந்து பஞ்சர் போட்டு அனுப்பும் ஆட்கள் கிராமங்களில் முளைத்துவிட்டார்கள். வந்த தூரத்தைக் கணக்கிட்டு ஒட்டிய பஞ்சருக்கான தொகையும் சேர்த்து பஞ்சரொட்டுபவர் வாங்கிக்கொள்வார்.
பஞ்சர் என்றில்லாமல் ஸ்டார்ட் ஆகாமல் விழி பிதுங்கி சாலையில் நிற்பவர்களுக்கு உதவும்வகையில் பஞ்சர் ஒட்டுபவரே தனது பையில் சில கருவிகளை வைத்திருப்பார். ஸ்பார்க் ப்ளக்கை கழற்றி சாலையில் ஒரு தேய் தேய்த்து ஜிங்கடி வேலை செய்து வண்டியை ஸ்டார்ட் செய்துவிடுவார். இப்படி பஞ்சர் போக சின்னச் சின்ன சிக்கல்களையும் தீர்த்துவைக்கும் இரண்டு நபர்களும் கொஞ்சமாய் நனைத்தும் கொள்வார்கள். நனைத்தது அதிகமென்றால் போனை எடுக்க மாட்டார்கள். (நனைப்பது : போதை)

சமீபத்தில் சிப்காட் வேலைக்கு வாகனங்களில் சென்றுகொண்டிருந்த சிலர் எரிபொருள் விலை உயர்வால் தங்களின் பழைய சைக்கிளை செட்டிலிருந்து வெளியேற்றி துடைத்து ‘கிறீச்முறீ’ச்சென சைக்கிள் ஒலி எழும்ப பணிக்குச் செல்கிறார்கள். இப்படி அனைவரும் செய்ய முடியாதுதான். வண்டியிலேயே சென்று பழகிய உடம்பு வளையாது. வாகன விபத்துகள் அதிகமாகி இருக்கும் சூழலில் சைக்கிளில் பொங்கு பொங்கென ஓரம்பாரமாய் சென்று வருவது வாழ்க்கைக்கான உத்திரவாதம்தான்.
சைக்கிள்களில் செல்கையில் ஓட்டுபவருக்கு சில ஊர்களில் நாய்களின் தொந்தரவுகள் வரும். நாய்களின் பார்வையில் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறங்களே! போக ஒருவர் நடந்து செல்கிறார் என்றால் ஸ்லோமோசனில்தான் அவைகளின் கண்களுக்குத் தெரியும்போல! சைக்கிளிலோ, பைக்கிலோ செல்கையில் அந்த ஸ்லோமோசன் மாறுபாடு வேகமாக அதிகரிப்பதால் அவைகள் திடீர் மாற்றத்தைக் கண்டு துரத்துகின்றன. அப்படி துரத்தும் நாய்களுக்கு அண்ணன் அழகான வைத்தியம் கைவசம் வைத்திருந்தார்.

துரத்தும் நாய் வைத்திருப்பவரின் வீடு வருகிறதென்றால் மிக வேகமாக சைக்கிளை மிதித்து வேகத்தை கூட்டிக்கொள்வார். நாயானது திடுகுப்பென சைக்கிளைத் துரத்தும். அண்ணன் பெடல் கட்டைகளை பின் புறமாக வேகமாக சுழல வைத்துவிட்டு கால்களை உயர்த்திக் கொள்வார். குலைத்துக் கடிக்க வந்த நாயி தாவாங்கட்டையில் சைக்கிளின் பெடல்கள் தட தடவெனப் பட வலியில் கைக்கைக்கைகென கத்தி நின்றுவிடும். அந்த பயத்தில் அவைகளும் பின்னர் சைக்கிள்களை துரத்தும் பணியை நிறுத்திவிடும்.

என் பள்ளி வாழ்க்கையில் தலைமையாசிரியர் உள்ளூரே! மதிய உணவு முடித்து வீட்டில் சைக்கிளை எடுத்தாரென்றால் ஒரு கிலோ மீட்டருக்கும் இந்தப் புறமிருக்கும் பள்ளிக்கே அவரது சைக்கிள் சப்தம், கிறீச்…. கிறீச்சென கேட்கும். ‘வாத்தியாரு கெளம்பீட்டாருடா!’ என்பார்கள் சக ஜோட்டாளுகள். மாட்டுவண்டிகளையோ, கூட்டு வண்டிகளையோ இப்போது சாலைகளில் காணமுடிவதில்லை. நான்கு வருடம் முன்பாக சென்னிமலை நண்பருடன் சென்று கொண்டிருக்கையில் வண்டியை நிப்பாட்டச் சொன்னார். என்ன ஏது? என்று பார்த்தால் ஒரு மாட்டு வண்டியை ஒரு பெரியவர் ஓட்டியபடி வந்தார். “எவ்ளோ நாளாச்சு ஒரு மாட்டு வண்டியப் பார்த்து! பாத்துட்டுப் போலாம் சித்தெ!’ என்றார் நண்பர்.

பேட்டரி சார்ஜ் போட்டு ஓடும் சைக்கிள்கள் வந்த காலத்தில் மாடுகள் வண்டிகளைப் பாரமிழுக்காமல் ஓய்வெடுக்கட்டும்! நானோ கார்கள் விற்பனைக்கு வராமல் போக இனி பஜாஜ் கார்கள் பெட்டி சைசில் வருவதாய் தந்தியில் இன்று போட்டிருக்கிறார்கள். அது தங்க நாற்கரச் சாலைக்கு ஆகாதாம்! ஊருக்குள் சுத்த ஆகுமாம்! நானும் வாங்கி தண்ணி சுமக்க ஊருக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்தான்! நெனப்புத்தான் ஆனையச் செய்ய சாமானம் தான் எட்டலியாம்!