சொந்த பந்தங்களை அழைத்து விருந்துபோடுவதற்கென்றே திருவிழா சமயத்தில் ஆடு வாங்கி ஒரு வாரம்போல் இலை தலைகளை கட்டிவைத்தே ஊட்டியும், ஆடு உண்பதற்காக தீனிகளைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்டும் காப்பவர்கள் ஒருபுறம் இருப்பர். காடுகரை வைத்திருப்பவர்கள் ஆள்காரரைப் போட்டு ஆடுகள் வளர்ப்பில் ஈடுபடுவர். காடுகரை இல்லாதவர்களும் ஆடுவளர்ப்பில் கணிசமாகத் தொகை கிட்டுவதால் பத்து உருப்படிகளை ஓட்டிச் சென்று சாலை ஓரங்களிலும் மேய்ப்பர். சிலர் குத்தகைக்கு ஒருவர் காட்டை வாங்கியும் அதில் மேய்ப்பர். இதுவெல்லாம் எழுபது எண்பதுகளில்.

அப்போது பனைகள் சூழந்த கிராமம் எங்களுடையது. இன்றிருக்கும் பனைமரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கள்ளைப் போதை வஸ்தென தடைசெய்த பிறகு பனைகளின் வீழ்ச்சி துவங்கிவிட்டது இங்கே. சும்மா மொட்டைக்காட்டில் வெய்யிலில் காய்ந்துகொண்டு நின்றிருந்த பனைமரங்களை பணத்திற்காக விற்றுவிட்டார்கள். இப்போது இயற்கை விரும்பிகள் ஆங்காங்கே பனைகளை நட்டுவித்து மகிழ்கிறார்கள். பனைகள் உயர்ந்து வளர பத்து வருட காலங்களாகிவிடும். அதன் பயன்கள் என்று பார்த்தால் மிக முக்கியமானது பனங்கருப்பட்டி.

இன்று அது அதிசயப் பொருளாகவும் வைத்தியத்திற்கான பொருளாகவும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது. சித்த வைத்தியத்தில் பனங்கருப்பட்டியின் பங்கு அதிகம். வைத்தியத்தில் தென்னங்கருப்பட்டிகளைவிட பனங்கருப்பட்டிகளே அதிக பயன் தரும். ‘மனுவு இப்போ எப்படி போவுதுங்க?’ என்ற குரலை இப்போது கேட்க முடியவில்லை. ‘ஒரு வெள்ளாட்டை ஆனை வெலை சொல்றானப்பா அவன்!’ என்கிற குரலை மட்டும் கேட்க முடிகிறது.

புதுசுக்கு வன்னான் கடுசுக்கு வெளுப்பான் என்றும், புது வட்டலைக் கண்டு ஏழு வட்டல் சோறு திம்பானாம் என்றும் சொலவடைகள் பேசுவார்கள். ஆறு வருடங்களுக்கும் முன்பாக கொங்குப் பகுதியில் திடீரென கள் இறக்கினார்கள். அது தேர்தல் சமயம். கெடுபிடிகளும் அதிகமில்லை என்கிறபோது வியாபாரம் பனை மரங்களுக்கு அடியில் சிறுவலூர், கோபி பகுதிகளில் சூடுபிடித்தது. சனம் அதிசயப் பொருளைக் கண்டதுபோல பனைமரங்களுக்கு அடியில் குந்தியது.

புதிதாக குடிக்கவந்த இளவட்டம் முகத்தை சுழித்துக்கொண்டே குடித்தது. சிலருக்கு வயிற்றுப் போக்கு கண்டது. அது நல்லதுதான், உடலில் உள்ள சேமிப்புக் கழிவுகள் அனைத்தும் பீச்சியடித்துக்கொண்டு வந்துவிடும்! என்று சிலர் ஆறுதல் சொல்ல தொடர்ந்தார்கள். புதியவர்களுக்கு இரண்டு வாரங்களில் கள்ளானது சிறந்த போதை வஸ்தாகத் தெரியவில்லை. உடனே அவர்கள் வழக்கம்போல குடல்களை சீக்கிரமே கெடுத்துக் கொள்ள டாஸ்மாக்கையே நாடினார்கள். முன்பாக கள்ளருந்திய பாக்கியவான்களுக்கு ஒருமாதம்போல திருப்திதான். தொடர்ந்து கள் இறக்க அனுமதி வேண்டுமென கொங்கு மண்ணில் சில போராட்டங்கள் நடந்தன.

பனைகள் அதிகமிருந்த காலத்தில் நான் டவுசர் பாண்டி. அதிகாலையில் சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு காடுகளில் பயணம் மேற்கொள்வேன். இப்படி நான் மட்டுமல்ல. ஊரில் சிறுவார்கள் பலரும் ஏரியா பிரித்துக்கொண்டுச் செல்வார்கள். அரைகுறை வெளிச்சத்தில் ஒவ்வொரு பனைமரங்களுக்கும் அடியில் எப்படியும் நான்கைந்து பனம் பழங்கள் கிடைக்கும். அவைகளைச் சாக்கினுள் சேகரித்துக்கொள்வேன். முடிந்த அளவு தூக்கும் சுமை சேர்ந்தால் வீடு திரும்பிவிடுவேன். என்ன மீறி மீறிப் போனால் பதினைந்து காய்கள் அந்த வயதில் தூக்கி வந்திருப்பேனா? இருக்கலாம்.

ஆனால் பனம் பழங்களை சுள்ளிமுள், கள்ளிகளினுள் சேகரித்து மறைத்து வைத்துவிட்டு வருவேன். அடுத்த நடையில் அவைகளை வீடு தூக்கி வந்துவிடுவேன். இப்படி அரைகுறை வெளிச்சத்தில் பனம்பழம் சேகரிக்கச் செல்கையில் ஒருமரத்தினடியில் இருக்கையில் தூரத்து பனைமரத்திலிருந்து பொத்து பொத்தென பனம் பழங்கள் விழும் சப்தம் கேட்கும். அந்த மரத்தடிக்கு மிகச் சரியாக ஓடிப் பார்க்கையில் எதுவுமிருக்காது. குட்டிப் பெசாசுகளின் வேலைதான். அவைகளுக்கு என் போன்ற டவுசர் பாண்டிகளை ஏமாற்றுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

குருத்து விழுந்துவிட்ட பனைமரங்கள் மொட்டையாய் நின்றிருக்கும். காய்ந்து கருவாடாய் நின்றிருக்கும் அவைகளில் கிளிகள் துவாரமிட்டு தங்குமிடமாக மாற்றியிருக்கும். என் ஜோட்டாளுகள் கிளி வளர்ப்பின் மீது ஆவல் கொள்வார்கள் திடீரென. அப்படி ஒரு சிலர் வீட்டில் கிளிக்குஞ்சுகல் கூண்டினுள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாத்தியாரின் பையனாக நானிருந்தமையால் கிளி வேட்டைக்கெல்லாம் செல்ல எனக்கு தடை விதித்திருந்தார்.

என் சிறுவயதில் எல்லாவற்றிற்குமே தந்தையாரின் தடைகள் ஏராளமாயிருக்கும். எதற்காக என்னை அப்படி வளர்த்தார் என்பது இன்றுவரை புரியவேயில்லை. கிளி வேட்டைக்குச் சென்ற ஒரு பயல் மரத்திலிருந்து விழுந்து கையை முறித்துக்கொண்டான். அவன் கோணக்கையன். அவன் பெயரானது குப்புச்சாமி என்பது போய்விட்டது. எனக்கென்று சாட்டைக்குச்சி ஒன்றை விலைகொடுத்து வாங்கி வீட்டின் தாழ்வாரத்தில் செருகி வைத்திருப்பார் என் தந்தையார்.

சாட்டைக்குச்சிகளைப் பயன்படுத்துபவர்கள் மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் மட்டுமே! மாட்டை அடித்து வேகமாய் வண்டியைச் செலுத்த பயன்படுத்துவார்கள். இன்று எந்த மளிகைக் கடையிலும் சாட்டைக்குச்சிகள் விற்பனைக்கு இல்லை. சாட்டைக்குச்சிகள் தரமானவைகளாகவே தயாரிக்கப்படுபவை. ஆனால் இரண்டு மூன்று விளாசலில் என் உயிர் போய்விட்டதைப் போல ஊரைத்தூக்குமளவு கத்துவேன். மூலையில் ஒண்டினாலும் முதுகில் விழும். குச்சி உடைந்துவிடும். தந்தையார் ஒரு விசயத்திற்காக சாட்டைக் குச்சியை தூக்கமாட்டார். இரண்டு மூன்று விசயங்கள்  அவரிடம் சேகரமான பிறகுதான் சாட்டையை எடுத்துக்கொள்வார். ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி தாக்குவார்.

நான் நினைகிறேன்… என் தந்தையார் என்னை ஒரு சிறப்பான மாதச் சம்பளக்காரனாக மாற்றிவிடும் நோக்கில்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறார். அதற்கான ஊர் அல்ல வாய்ப்பாடி. இங்கே சாராயம் எல்லா இட்டேறிகளிலும் டம்ளர் டம்ளராக கிடைக்கும். பெற்றோரிடம் மிதி வாங்காத என் ஜோட்டாளுகள் இன்று மாதச் சம்பளக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். என் பையனை நான் பிறந்ததிலிருந்தே தாக்குவதில்லை. ஆக அவனொரு மாதச் சம்பளகாரனாக மாறிவிடுவான் என்பதில் எனக்கு இப்போது ஐயமேதுமில்லை.

வீட்டின் பின்புறமாக நான் சேகரித்த பனம்பழங்கள் மலைபோல குவிந்திருக்கும். வீட்டின் பின்புறம் சென்றாலே பனம்பழ வாசனை தூக்கும். பனம்பழங்களைப் பிய்த்து பாத்தி போடும் வேலை எனக்கு அப்போது தெரியாது. அந்தப் பணியை என் அப்பாரு செய்வார். பழங்களைப் பிய்த்து ஒரு புறமாய் அடுக்கிக் கொண்டே வருவார். சுத்தமாக எல்லாக் கொட்டைகளையும் அடுக்கிய பிறகு மேலே மண்ணைப் போட்டு மூடிவிடுவார். சுற்றிலும் பாத்தி கட்டி தண்ணீரை குடம் குடமாய் தினமும் ஊற்றச் சொல்லிவிடுவார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு பாத்தியை ஒரு ஓரத்திலிருந்து மம்பட்டியால் பறைத்து அடுக்கடுக்காய் நின்றிருக்கும் பனங்கிழங்குகளைத் தேவைக்கு பிடுங்கிக் கொள்ளலாம். அப்பாரு கிழங்கில் துளி அளவுகூட நார் இராமல் உரித்து பொடிப்பொடியாய் நறுக்கிப் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ஆட்டாங்கல்லில் போட்டு உலக்கையால் இடிப்பார். இறுதியாக பந்துபோன்ற வடிவில் கிழங்கைச் செய்துகொண்டு போய் தனியே வைத்துக்கொள்வார். அது காரம் மிகுதியாய் இருக்கும். இருந்தும் அது சுவைதான். பின்பாக எந்த வருடத்திலும் பாத்தியை நான் முழுமையாகத் தோண்டி கிழங்குகளைப் பிடுங்கியதேயில்லை. முளைப்பே வந்து சிறிதாக பச்சை ஓலையே வெளிவந்திருக்கும். இருந்தும் வருடம் தவறாமல் பனம்பழம் சேகரித்துக்கொண்டுதான் இருந்தேன்.

இப்போது சில இடங்களில் சாலையோரத்தில் தென்னமர தெளுவு கிடைக்கிறது. அது நம்பிக்கைக்குரியதா? என்று நான் நிறுத்தி ஒரு கோட்டை தெளுவு அருந்துவதில்லை. அந்தத் தெளுவானது நான்கு சக்கர வாகன்ங்களில் சாலையில் செல்லும் கனவான்களுக்கு. போக குறுநகர பேருந்து நிறுத்தங்களில் ஒரு டஜன் ஒரு டஜன் என்று கட்டி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இருக்கும் ஒருசில பனைமரங்களில் நொங்கு என்றும் சாலைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அதற்கே பனைமரங்கள் மொட்டையாகிவிடும். கிழங்குவரை வருவதெல்லாம் ஆச்சரியம்தான். ஒருவேளை தர்பூசணிக்காய்களைப் பெங்களூரிலிருந்து இறக்குமதி செய்து விற்பதைப்போல பனங்கிழங்கையும் இறக்குகிறார்களோ? பனங்கிழங்கில் நார்ச்சத்து இருப்பதெல்லாம் காலம்போன கடைசியில்தான் தெரியவருகிறது.

நான் மூன்றாம் வகுப்பு வாசித்துக்கொண்டிருக்கையில் என் முன் நெற்றியில் இப்போதும் நான் வைத்திருக்கும் வீரத் தலும்பைப் பெற்றேன். வீட்டின் தெற்குப்புறத்தில் பனைகள் நிறைந்த காடு. ஆயாள் ஒருவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருப்பார். என்ன காரணத்திற்காக காட்டினுள் சென்றேன் என்று தெரியவில்லை. ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன புற்களை. உள்ளூர் மாகாளியாத்தாவுக்கு ஒரு மாதம் முன்பாகவே நேர்ந்து விட்ட கிடாய் ஒன்றும் கூட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அதுவெல்லாம் யாருக்குத் தெரியும்? சாமிக்கு விட்ட கிடாய்கள் கம்பீரமாய்ச் சுற்றும். அதன் கொம்புகள் கூமாச்சியாய் இருக்கும்.

திடீரென அந்த சாமி கிடாய் என்னை நோக்கி பாய்ந்தோடி வந்து ஒரு முட்டு முட்ட நான் தொப்புகடீரென கீழே விழுந்துவிட்டேன். “ஐயோ ஐயோ” என்ற கூப்பாடு வேறு போட்டேன். குப்புற நான் படுத்தே தொலைந்திருக்கலாம். பள்ளியில் நான் பயின்ற பாடங்களில் ஆடு முட்டினால் என்ன செய்வது? என்ற பாடங்களெல்லாம் இல்லை. நான் எழுந்த சமயம் ஆடு பின்னோக்கிச் சென்று வேகமெடுத்து வந்து மீண்டும் ஒரு மோதலில் மீண்டும் ஒரு தொப்புக்கடீர். இந்த முறை என் சப்தம் பெரியது தான்! இருந்தும் ஆடுமேய்க்கும் ஆயாளை அந்த ஏரியாவிலேயே காணோம்.

என் வீடு அருகாமையில் இருப்பதால் என் தாயாருக்கு அவலக்குரல் கேட்டிருக்கும். அந்த ஆயாவும் தண்ணீர் தாகத்திற்காக என் வீடு தான் சென்று ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஓட்டமாய் இருவரும் காடு நோக்கி ஓடி வருகையில் நான் ஆட்டோடு மோதி விடும் முடிவில் நானும் ஆட்டைப் போன்றே குனிந்து கொண்டு சென்று மோதியிருக்கிறேன். என் நெற்றியில் ஆட்டின் கொம்பு சடக்கென ஏறி விட்டதும் மீண்டும் சாய்ந்தேன். எனக்கு ஒரு ஆட்டோடு போரிடத் தெரியவில்லை அப்போது. ஆட்டுக்கு சேதாரம் எதுவும் இல்லை. கிழவி சுண்ணாம்பை காயத்தின் மீது தேய்த்து விட்டாள்.

தந்தையார், ‘அங்கெங்கடா போனத் தாயலி!’ என்று மாலையில் மீண்டும் எனக்கு பூஜை போட்டார். என் தந்தையாரிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டே இருந்திருக்கும் போல. உடலில் காயங்கள் பட்டு வீடு திரும்பினால் பூஜை போடுவார். சக சோட்டாளுடன் சண்டையில் தோற்று வந்தாலும் மிதி போடுவார். இதற்காகவே ஜோட்டாள்களோடு சண்டையிடுகையில் ஒரு தனிக் கவனத்தை அவர்களின் ஒவ்வொரு கைவீச்சிலும் கவனித்து ஒதுங்கி தாக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்து விட்டது. விசயம் எப்படியும் அவர் காதுக்கு தாமதமாக வந்து சேர்ந்து விடும். அவரைச் சந்திக்க வரும் உள்ளூர் நபரிடம் அவர் சொல்வார். ‘ஏப்பா பழனிச்சாமி, எதோ ரெண்டு நாளைக்கிம் மின்ன எங்க கோமுக்குஞ்சு சுப்பன் பையனை ஒதச்சு வாயைக் கிழிச்சுட்டானாமா?’

ஆடு முட்டிய போருக்காக என்னை சிறப்பான வைத்தியரிடம் வைத்தியம் பார்க்கும் முடிவில் கோவை கூட்டிப் போய்விட்டார். என் அப்பிச்சி பதனமாய் என்னை பார்த்துக் கொண்டார். பட்ட காலிலேயே படும் என்பது போல ஒரு சம்பவம் அங்கு நடந்தது. ஓரளவு புண் ஆறிக் கொண்டு வந்த சமயத்தில் சைக்கிளில் என் அப்பிச்சி அமரவைத்து வடமதுரை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

அப்போது அவருக்கு வயிற்றுப் போக்காக இருக்க வேண்டும்! என்னை சைக்கிளின் பின் கேரியரிலேயே அமர வைத்து விட்டு காட்டுக்குள் மறைப்புக்குச் சென்று விட்டார். ஸ்டேண்டிட்டுச் சென்றிருந்த சைக்கிளில் நான் பொறுமை காத்தபடி அமர்ந்திருந்தேன். பின்பாக கால்களை விரித்து சங்கடப்பட்டிருக்கிறேன். இறங்கவும் தெரியாது. இறங்க முயற்சித்த போது தொப்புகடீரென விழுந்தேன். சைக்கிள் என் மேல் கிடந்தது. அப்பிச்சி பதறிக்கையாய் ஓடி வந்து சைக்கிளைத் தூக்கி என்னைக் காப்பாற்றினார். ஆனால் ஆறி வந்து கொண்டிருந்த என் நெற்றிப் புண்ணில் மீண்டும் காயம் ஏற்பட்டு ரத்தம் முகமெல்லாம் வடிந்தது!

டிசம்பர் இறுதியிலும், ஏப்ரல் இறுதியிலும் உள்ளூரில் திருவிழா வந்து விடுகிறது. ஏப்ரலில் நல்ல வெய்யில் சமயம் காடுகளில் வேலையிருக்காதென்றும், டிசம்பர் இறுதியில் காடுகளில் தட்டறுப்பு முடிந்து சனம் நாலு காசு வைத்திருக்கும் என்பதாலும் திருவிழாக்களை கொண்டாடினார்கள்.

நான்காம் வகுப்பில் என் கூடவே வாசித்த வசந்தாமணிக்கு ஒரு வினோத பழக்கம் இருந்திருக்கிறது. கெடா வெட்டு அழைப்புகளுக்கு எங்கு சென்றாலும் அவள் சித்தப்பன் அவளுக்கு சாராயம் அரை டம்ளர் கொடுத்து விடுவானாம். அந்த மவள் அழகாய் இருந்ததால், ஒறவுச் சனம் ‘என்ன சாமி படிக்கிறே? நல்லாப் படிக்கிறியா? இல்ல உங்கொப்பனாட்டம் மந்தியா போயிடுவியா?’ இப்படி மடியில் அமர்திக் கேள்விகள் கேட்டால், ‘நறுக்’ கென ஒரு கடி கடித்து விட்டு ஓடி விடுவாள். அதில் ஜோட்டாளுங்களும் அவளிடம் கடி வாங்கியிருக்கிறார்கள். ’என்ன இப்படி கடி பழக்கி வச்சிருக்கீங்க நாயிங்களாட்டம்?’ என்று யாரேனும் அவள் சித்தப்பனிடம் கையைக் காட்டிப் பேசினால் அவர் சொல்வார். ‘கறி திங்கறதுன்னா துளி ஊத்தி உட்டாத் தானுங்க நல்லா சாப்பிடுவா பாப்பா! ஊத்தாம உட்டுட்டா கறியே திங்க மாட்டா! அப்படி கொஞ்சம் குடிச்சுட்டா சாப்பிடறதுக்கு லேட் ஆச்சுன்னா இப்பிடி வர்றவங்க போறவங்களை கடிக்க ஆரம்பிச்சுடுவா!’

ஆடுகளுக்கு பெயர் வைத்து கூப்பிட்டுக் கொண்டிருப்பார்கள் கிராமத்தில். ‘அடி வெள்ளச்சி, அங்கேம் போயி கிலுவையில ஏறிட்டு இருக்கேடி? இங்க இத்தன கெடக்குது பத்தாதுன்னு அங்க போயி ஏறீட்டு இருக்கா! வாளே இங்கே!” என்று வெள்ளை நிற பெண் ஆட்டைக் கூப்பிட்டால் ஓனரம்மா திங்க வேறு வகைச் செடி வைத்திருக்கிறாள் என்று வந்து விடும். கறுப்பு நிறத்தில் இருக்கும் ஆடு கடுவன் என்றால் கறுப்பன். இப்போது ஆடுகளுக்கு யாரும் பெயரிடுவதில்லை. ‘தாய் தூய் தான்’. போக ரேசன் அரிசியை நீரில் கிடத்தி ஊறிப்போன அரிசியை ஆடுகளுக்கு தீனிக்கு வைத்து விடுகிறார்கள். அந்த ஆட்டை நாம் கிலோ 480 கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு பேசாமல் ரேசன் அரிசியை மற்றோருக்கு விற்காமல் நாமே சாப்பிட்டு விடலாம்.

இப்படியிருக்க நான் ஐந்தாம் வகுப்பில் இருக்கையில் என் தந்தையார் எனக்கொரு தங்கச்சி பாப்பாவை ஏற்பாடு செய்து விட்டார். அவளை மானத்திலிருந்து சாமி கொண்டு வந்து வீட்டுக்குள் போட்டு விட்டு போய் விட்டதாய் நம்பினேன். முன்பாக என் தந்தையாரின் தாயார் சாவுக்கு நான் இங்கில்லை. கோவையில் இருந்தேன் பள்ளி விடுப்பில். ஆத்தாவை குழிக்குள் போட்டு மூடி விட்டதாக தகவலை அம்மாயி சொன்னார். இருந்தும் நான் நம்பியது இப்படித்தான். அதாவது மீண்டும் விடுப்பு முடிந்து ஊருக்கு வந்தால் குழியைப் பறித்து ஆத்தாவைப் பார்த்துக் கொள்ளலாம்.

தங்கச்சி பாப்பாவைப் பார்த்துக் கொள்ள கோவையிலிருந்து என் ஆத்தா கிளம்பி வாய்ப்பாடி வந்து விட்டது. அது வாய்ப்பாடி நோக்கி பயணம் செய்த முதலும் முடிவுமான பயணம். அப்பிச்சியின் அம்மா அது. ஒரு இரவில் பாப்பா தொட்டிலில் தூங்க வீடே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறது. அந்த சமயம் நாகபாம்பொன்று என் அம்மாவின் மீதேறி அடுத்து ஆத்தாவின் மீதேற அது போர்வையை வேகமாய் உதறிவிட்டது. அன்றெல்லாம் மின்சார வசதி வீட்டில் இல்லை. திண்ணையிலிருந்து ஆசாரத்தில் விழுந்த பாம்பின் வால் பகுதி சளீரென இரும்புக் கட்டில் காலில் பட்டு சப்தமாக கொழப்பத்தில் ஆத்தா எழுந்து விட்டது. அப்பாவையும் சப்தமிட்டு எழுப்பி விட்டது. அப்பா திண்ணைக்கு தாவி விட்டாராம்.

‘அப்பும் எம்மேல கனமா எதோ இருந்தாப்ல தோணுச்சு!’ அம்மா பிறகு சொல்லியது. கட்டிலில் கிடந்த என்னை அப்பா திண்ணையிலிருந்து தாவி அள்ளி எடுத்துப் போய் திண்ணையில் நிற்கவைத்துவிட்டார். அடுத்து பக்கத்து வீட்டாருக்கு தகவல் சொல்ல அப்பா வீட்டின் பின்கதவு வழியாக ஓடினார். விளக்குகள் வீட்டினுள் பற்ற வைக்கப்பட்டன. குத்தீட்டியுடன் பக்கத்து வீட்டு அண்ணன் ஓடி வந்தது.

பின்பாக அப்பாவும் அண்ணனும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆசாரத்தில் டார்ச்சோடு இறங்கினார்கள். அடுத்து கட்டிலை நடு வீட்டுக்கு இழுத்தார்கள். மேற்கு மூலையில் நான் கு தட்டக்காய்கள் நிரப்பப்பட்ட மூட்டைகள் இருந்தன. முதல் மூட்டையை இழுத்தார்கள். அடுத்து இரண்டாம் மூட்டையை இழுக்க பாம்பு கோபத்தில் சீரியது. அண்ணன் குத்தீட்டியால் ஒரு குத்துப் போட்டார் மிகச் சரியாக. கடைசியில் பாம்பு அடங்கிய பிறகு முழுதாக இழுத்துப் பார்த்தால் மிக நீளமான கரு நாகன் அது. எப்படி வீட்டுக்குள் பாம்பு வந்திருக்கும்? சாயந்திரத்திலோ மதியத்திலோ அது பாட்டுக்கு திறந்திருந்த கதவு வழியே வீட்டினுள் வந்திருக்கும் தான்.

மயில்கள் இப்போது கிராமத்தில் பெருகிவிட்டதால் பாம்புகளை அதிகம் கண்ணில் காண முடிவதில்லை. எந்த நேரமும் மயில்கள் ஊரையே மேய்ந்துகொண்டு திரிகின்றன. மிளகாய் செடியை காட்டில் போட்டவன் கண்ணில் வெண்ணையை வைத்துக்கொண்டு காவல்கிடக்கிறான்.