“கனவான்களே..நீங்கள் இங்கே சண்டையிட இயலாது. இது போருக்கான அறை.”

(ஸ்டான்லி குப்ரிக் எழுதி இயக்கிய  டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ் 1964 திரைப்படத்தின் ஒரு வசனம்)

தெலுங்கில் குணசேகர் இயக்கிய ‘ஒக்கடு’தான் தமிழில் கில்லி என்கிற பெயரில் மீவுரு செய்யப்பட்டது என்றபோதிலும் பல காரணங்களுக்காக கில்லி மிக முக்கியமான படமாகிறது. ஒரு பண்டிகை தினத்தின் முன்தின மாலை தன்னைத்தானே தின்று பெருகும் பொழுதுபோகும் திசையறியாத சுவையான பரபரப்பு ஒன்றை முன்பு இல்லாத முதல் முறையாகப் படமாக்கித் தந்தார் தரணி. அமர்ந்ததும் எழுந்ததும் தெரியாமல் இடைவேளை வந்ததை நம்ப மறுத்தது ரசிக மனம். செகண்ட் ஹாஃப் அதற்குரிய அழகுகளோடு நிகழ்ந்து முடிந்தது. தான் முதல்முறை பார்த்ததை நம்புவதற்கே அதே படத்தை இரண்டாம் முறை பார்க்கவேண்டியவனானான் தமிழ் ரசிகன்.

அரிசியில் உருவம் செதுக்கும் கலை ஒன்று உண்டு. நுண்பெருக்கி கொண்டுதான் அதைப் பார்க்கவே முடியும். திருக்குறள் சின்னது. அதைவிடப் பல மடங்கு சின்னதான அரிசியில் திருக்குறளை எழுதியவர் உண்டு. நாயகன் என்பவன் நம்ப முடியாதவற்றைச் செய்பவன் என்பது ஒருபுறம் இருக்க, அரிசியில் திருக்குறள் எழுதினாற்போல் சின்னஞ்சிறு கதையை ஒரு திரைப்படத்துக்கு உண்டான அளவு நீளமாய் விரித்தது சாகசம்.

நாயகன் அறிமுகம் — — கபடிக்காக மதுரை செல்வது — — நாயகியை அடைவதற்காக அண்ணன்களைக் கொல்லும் வில்லன் — — வில்லனிடமிருந்து தப்பித்துச் செல்ல வில்லனை நோக்கியே ஓடும் நாயகி — — கோழி அமுக்குகிறாற்போல் அவளைப் பிடிக்கும் வில்லன் — — அந்த இடத்தில் வந்தால்தானே ஆபத்பாந்தவன் — — வில்லனை நல்லதனமாய் நாலு சார்த்திவிட்டு நாயகியைக் காப்பாற்றி சென்னை திரும்பும் நாயகன் — — இந்த இடத்தில் இடைவேளை ஸ்வாமி

வில்லனின் பிடியில் சிக்காமல் நாயகியைத் தப்பவைக்கும் நாயக வேலையின் நடுவே வரும் வில்லன் அவனைக் கொன்றழிக்கும் நாயகன் இது இரண்டாம் பகுதி.

கில்லி புதுவித சினிமாத் திரையாக்கத்திற்கான வாசலாக விளங்கியது. திரைக்கதையைச் செலுத்தும் விதத்தில் இது தெலுங்கில் முயலப்பட்டதோ வென்றதோ பெரிய செய்தியல்ல. ஏன் எனில் இன்றுவரை சினிமாவின் அத்தனை வகைமை உபவகைகளிலும் அங்கே படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் அப்படி அல்ல.திருவிளையாடல் போன்ற படங்கள் இன்றைக்கு ஒன்றுகூட இல்லை எனலாம். தமிழில் கால இடைவெளிகளுடன் முயன்று பார்க்கப்பட்டு கைவிடப்பட்ட அத்தனை வகை சினிமாக்களும் அங்கே உண்டு. ஆடி வெள்ளியும் உண்டு, ஆயிரத்தில் ஒருவனும் உண்டு, திருவிளையாடலும் உண்டு, மாயாபஜாரும் உண்டு, மர்மத்தீவும் உண்டு எப்போதும் எல்லா வகைமையும் விரும்பப்படுகிற கமர்ஷியல் ப்ரதேசம்தான் தெலுங்கு பேசும் இருதேசமும்.

தமிழில் கில்லி அதுவரைக்குமான கதாமுறையின் அழுத்தம் மற்றும் திருத்தம் ஆகியவற்றை மாற்றி அமைத்தது. இரு வித்யாசமான ஒன்றுக்கொன்று பொருந்தவே பொருந்தாத நாயக வில்ல பாத்திரங்களை சந்திக்க வைப்பதிலிருந்து அவர்களுக்கு இடையிலான முரணை பகையை வெறியை வெற்றி, தோல்விகளை, அழித்தலை, காத்தலை, தப்புதலை என எல்லாவற்றையும் அடுத்தடுத்த நகர்வுகளாக்கி அதையே திரைக்கதையுமாக்கிப் படம் செய்வது என்ற புதிய பாணி உருவானது. ரொம்பக் கேள்வி கேட்காதமாதிரி வேகமா படமெடுத்தா போதும் என்ற உபதேசத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார் தரணி. அதெப்படி என்று யாருமே யோசித்திராத வண்ணம் அப்படியான நாயக வில்ல வாழ்வுகளில் அதிகம் சென்றால் ஒரு வார காலத்து நிகழ்வுகளை மாத்திரம் கொத்தாக்கிக் கதை செய்தது புதியது. நன்றாகப் பலித்தது.

தரணியின் படமாக்கல் கில்லியை எப்போதும் கொதிநிலையிலேயே ரசிகர்களைப் பிடித்து வைத்ததன் மூலமாக பெரு வெற்றிப் படமாக்கிற்று. த்ரிஷாவை விஜய் காப்பாற்ற முனைவதற்கு காதல் என்பதைக் காரணமாக்காமல் இருந்தது பெரிய ஆறுதலாக பார்க்கப்பட்டது. கதையினூடே பெருகும் நகைச்சுவையும் கற்பனைக் காட்சிகளாய்ப் பாடல்களும் கழிந்தன. வித்யாசாகரின் பாடலிசையும் பின்னணி இசையும் பெரிய வேலையை உடனிருந்து பார்த்தாற்போல் நிகழ்ந்தன. தொழில்நுட்ப கச்சிதமும் இதன் வெற்றிக்கு இடுபொருளாயிற்று. த்ரிஷா இந்த நூற்றாண்டின் நதியாவானார். விஜய் எத்தகைய சாகசத்தையும் செய்யத்தக்க வியப்பின் திருவுருவாகவே இப்படத்தில் தன்னை நிகழ்த்தினார். அவரது நாயக மாலையில் முக்கியமான மலராயிற்று கில்லி. ஆசிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர், ஜானகி ,த்ரிஷா, தணிகலபரணி, தாமு, டிகே, கலா, மயில் சாமி, பொன்னம்பலம் என பெரும் பட்டாளமே கில்லியில் தோன்றினார்கள் என்றாலும் இது விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் படம்.

ப்ரகாஷ்ராஜின் நிழல்கூட நடிக்கும். இந்திய சினிமாவில் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கடைசி மிகை நடிகர் என்று தாராளமாய் ப்ரகாஷ்ராஜை சொல்ல முடியும். மிகை நடிப்பின் வசதி அப்படியான நடிகர்கள் அண்டர்ப்ளே செய்தால் அதுவும் பெரிதாக விரும்பப்படும். பல படங்களில் ப்ரகாஷ்ராஜ் இவ்விரண்டு நடிப்பு வகைகளையும் நமக்கு அளித்தார்.

கில்லி படத்தில் மதுரை முத்துப்பாண்டி என உள்துறை அமைச்சரின் செல்ல மகனாக அதகளம் செய்தார். இந்த வேடத்தில் எத்தனை நடிகர்களை யோசித்தாலும் ப்ரகாஷ் அளவுக்கு அவர்களில் யாருமே நியாயம் செய்துவிட முடியாது என்பது அவருடைய நடிப்பின் மேன்மைக்கான சாட்சியம்.

கில்லி : பேரிசையின் ஆரவாரம்

முந்தைய தொடர்: https://bit.ly/2Gf05M7