சட்டத்தைப் போன்று ஊதாரித்தனமானது ஒன்றும் இல்லை. நீங்கள் ஜெயித்தாலும் தோற்றாலும் செலவு அதிகம்

-கில்பெர்ட் பார்க்கர் (கனடிய நாவலாசிரியர் மற்றும் அரசியல்வாதி)

இந்தியத் திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறதற்கும் உண்மையான நீதிமன்றங்களுக்கும் இடையிலான வித்யாசம் மலையினும் பெரியது. இதுவரை ஒரு சதவீதப் படங்களில்கூட நீதிமன்றங்களை அவற்றின் நடைமுறை இயல்பு மீறாமல் காண்பித்ததே இல்லை. இங்கே படங்களில் காண்பிக்கப்படுகிற அதீதங்கள் ஒருபுறம் என்றால் ‘ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்…’ என்று சுத்தியலால் தட்டிவிட்டு மென்போக்கைக் கடைபிடிக்கக் கூடியவர்களாக நீதியரசர்களைத் திரைப்படங்களில் கண்டவண்ணமே கற்பனை செய்துகொண்டால் உண்மை கடுமையான விளைதல்களைக் கொண்டிருக்கும் என்பது பெருவாரி மக்களுக்குத் தெரியாது.

பாரிஸ்டர் ரஜனிகாந்த் எடுத்த வழக்குகளிலெல்லாம் வெற்றி கண்ட சட்ட மேதை. அவரைவிட அனுபவமும் தகுதியும் குறைந்தவர்களுக்கு நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்படுவதைக் கண்ணுறும் ரஜினிகாந்த் மனம் பாதிக்கப்படுகிறார். இனி சட்டம் யாரையெல்லாம் தண்டிக்கிறதோ அவர்களை நான் குற்றமற்றவர்கள் என நிறுவி விடுதலை பெற்றுத் தருவேன் என்று வினோதமான ஒரு முடிவுக்கு வருகிறார். அவரது அன்பான குடும்பத்தில் அவரது தம்பி, மகன், கண்ணனும் ஒருவன் அவனொரு இளம் வழக்குரைஞன். தன் பெரியப்பாவைத் தொழிலிலும் முன்னொளி தீபமாகக் கைக்கொண்டு நடைபோடுகிறவன். சக வழக்கறிஞரான ராதாவுக்கும் கண்ணனுக்கும் மனப்பொருத்தம்.

மோகன் தாஸ் கோர்ட்டில்தான் நிரபராதி எனவும் தன் மனைவியைத் தான் கொல்லவில்லை என்றும் சப்தமாக முறையிட்டபடி சிறைக்குச் செல்கிறான். அவன் வழக்கை அவனது சார்பாக ரஜினிகாந்த் ஆஜராகி அப்பீல் செய்கிறார். அந்த வழக்கை சின்னச் சின்ன சில்லுகளாக்குகிறார். எதிராட முடியாமல் அரசு தரப்பு திணறுகிறது. ஒரு கட்டத்தில் மோகன் தாஸ் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. விடுதலை செய்யப்படுகிறான். ஊரே ரஜினிகாந்தின் வாதத் திறமையை வியந்து பாராட்டுகிறது. மோகன் தாஸ் தன் கண் அறிந்த கடவுளாகவே ரஜினிகாந்தை வணங்குகிறான். தன் அடிபட்ட சுயத்துக்கு இந்த நம்ப முடியாத வெற்றி மூலமாக மருந்திட்டாற்போல ஆறுதலடைகிறார் சட்டமேதை.

விதி ஒரே ஆட்டத்தை அடுத்தடுத்து ஆடக்கூடியது. இந்த முறை மோகன் தாஸ் அவன் திருமணம் செய்ய இருந்த பெண் மரணத்துக்கு அவன்தான் காரணம் எனக் கைது செய்யப்படுகிறான். இந்த முறையும் ரஜினிகாந்த் அவனுக்கு ஆதரவாக அவன் குற்றமற்றவன் என வாதிட அவன் சார்பில் ஆஜராகிறார். எதிர்த்து கண்ணனை வழக்காட எல்லா வக்கீல்களுமாக முடிவெடுத்து கண்ணனையும் அதற்கு ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். பெரியப்பா வீட்டிலிருந்து கண்ணன் வெளியேறுகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.

யானைக்கும் சறுக்குமல்லவா அடி அப்படித்தான் ரஜனிகாந்தின் கணக்கு இந்த முறை தப்புகிறது. சொல்வதானால் முன்னர் செய்த குற்றத்தை மறுக்கும்போது மோகன் தாஸை விடுதலை செய்ய முடிந்த அவரால் இந்தமுறை செய்யாத தவறிலிருந்து அவனை விடுவிக்க முடியவில்லை. கண்ணன் எல்லாப் பந்துகளையும் அடித்து நொறுக்கும் புதிய புலியெனவே வழக்காட மெல்ல மெல்ல குழப்பத்தில் ஆழ்கிறார் பெரியவர். தீர்ப்பு தினத்தன்று தீர்ப்பு என்னவாக இருக்குமோ என்ற குழப்பத்தில் வீட்டிலேயே இருந்து விடுகிறார். வழக்கில் கண்ணன் வாதம் அரசுத்தரப்புக்கு சாதகமாகிறது தீர்ப்பு செய்த குற்றத்திலிருந்து தப்பிய மோகன் தாஸ் செய்யாத குற்றத்துக்கு இந்த முறை தண்டனை பெறுகிறான்.

தன் வெற்றிச் செய்தியை மட்டுமல்ல பெரியப்பா ரஜனிகாந்த்துக்கு ஜட்ஜாகப் பதவி உயர்வு வந்திருக்கும் செய்தியையும் சேர்த்துச் சொல்வதற்காகத் தேடிச் செல்லும் கண்ணன், ரஜனிகாந்த் காலமான காட்சியைக் கண்டு அதிர்கிறான். நிறைகிறது படம். கௌரவம் நீதிமன்றக் காட்சிகளுக்காகப் பலகாலமாக விரும்பப்பட்டு வருகிற படங்களில் ஒன்று. சுயகர்வமும் பிடிவாதமும் கண்ணை மறைக்கும் தொழில்பெருமையும் கொண்டவராக சிவாஜி தன் மிகை நடிப்பின் உச்சத்தை இப்படத்தில் வழங்கினார் என்றால் இதற்கு நேர்மாறான அண்டர்ப்ளே நடிப்பை கே.பாலச்சந்தர் இயக்கிய ‘எதிரொலி’ படத்தில் வழங்கினார். பிற்காலத்தில் படிக்காதவன் உள்படப் பல படங்களில் வக்கீலாகவும் நீதிபதியாகவும் நடித்திருந்தாலும் கௌரவம் அதன் வசனங்களுக்காகவும் நீயும் நானுமா கண்ணா… நீயும் நானுமா போன்ற அழியாத அதன் பாடல்களுக்காகவும் எப்போதைக்குமான குதூகலச்சித்திரங்களில் ஒன்றாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையும் வின்செண்டின் ஒளிப்பதிவும் தேவராஜனின் எடிட்டிங்கும் கௌரவம் படத்தைத் தூண்களெனத் தாங்கின. இப்படத்தை எழுதி இயக்கிய வியட்நாம் வீடு சுந்தரம் நிஜத்துக்குரிய அதே மாண்போடு இந்தக் கற்பனைச் சித்திரத்தை நிகழ்த்தினார். பொது மனிதர்களை சிவாஜி ரசிகர்களாக மாற்றக் கூடிய குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று கௌரவம்

கௌரவம் நிழல்நதி

முந்தைய தொடர்: https://bit.ly/2XJgK5e