அவர்கள் எங்களது உயிரைப் பறிக்கலாம். எங்கள் சுதந்திரத்தை ஒருபோதும் கைப்பற்றமுடியாது

 – (மெல்கிப்ஸன் – ப்ரேவ்ஹார்ட் படத்தில்)

முதலில் காளி என்று பெயரிடப்பட்டு அப்புறம் மெட்ராஸ் ஆனது. அட்டக்கத்தி மூலம் கவனம் ஈர்த்திருந்த பா.ரஞ்சித்தின் இரண்டாவது படம் மெட்ராஸ். சந்தோஷ் நாராயணனின் இசையும் ஜீ.முரளியின் ஒளிப்பதிவும் ப்ரவீனின் எடிட்டிங்கும் கானாபாலா கபிலன் உமாதேவி பாடல்களும் ஞானவேல்ராஜா தயாரிப்பும் பா.ரஞ்சித் இயக்கமும் மெட்ராஸின் உருவாக்கப் பின்புலங்கள்.

வெவ்வேறு கட்சிகள் ரெண்டைச் சேர்ந்த அபிமானிகள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி அதன் முகப்பில் ஒரு மாபெரும் சுவர் அதில் வரையப்பட்டிருக்கும் கிருஷ்ணப்பனின் முகப் படம்தான் அவர் மகன் கண்ணன் உள்ளிட்டவர்களுக்கு கௌரவம் பெருமை எல்லாமே. அதே ஏரியாவைச் சேர்ந்த மாரி இன்னொரு கட்சியைச் சேர்ந்தவன். அவனைப் பெருமிதத்தோடு பின் பற்றுபவன் அன்பு காளியின் உயிர் நண்பன். அன்பு திருமணமானவன். காளிக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் அமையவில்லை என்றாற் போலக் கதையின் துவக்கம். கலையரசியை யதார்த்தமாகச் சந்திக்கிற காளி அவள் மீது காதலாகிறான். அன்புவை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு ஆட்களோடு அதை செயல்படுத்த முயலுகிறான் கண்ணனின் மகன் பெருமாள்.

அவனது ஆட்களிடமிருந்து தப்பியோடும் அன்புவும் காளியும் வேறோர் இடத்தில் ஆசுவாசம் கொள்கின்றனர். அங்கே தனியே சிக்கும் பெருமாளை வேறுவழியின்றிக் கொல்கிறான் காளி. அவனுக்கு அரசியல் பகையும் கொலைவழக்கும் வேண்டாத வேலை என்று அன்புதான் மட்டுமே பெருமாளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டு ரிமாண்ட் ஆகிறான். கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகிற அன்புவை கண்ணனின் ஆட்கள் கோர்ட் வாசலில் வைத்தே கொல்கின்றனர். அன்பு கொலைக்கு பழி வாங்கியே தீருவேன் என்று கிளம்பும் காளியை கலையரசி ஆற்று படுத்துகிறாள். தன் கண்முன்னாலேயே அன்பு கொல்லப்பட்டதை நினைத்து மனம் நொந்து போகிறான் காளி. அவனை மெல்ல மெல்ல பழைய நிலைக்குக் கொண்டு வருகிறாள் கலையரசி.  வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறான் காளி.

பின் ஒரு தினம் கலையரசியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஓட்டலில் அடுத்த மேஜையில் மாரியின் ஆளான அணிலைக் கவனிக்கிறான் காளி. எதார்த்தமாக அங்கே வந்த காளியைப் பார்த்து பயந்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் எல்லாம் மாரிக்கு தான் தெரியும் என்றும் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து ஓடுகிறான் அணில். மாரி விலைபோனது காட்டிக் கொடுத்தது கண்ணனிடம் காசு வாங்கிக்கொண்டது. அதன்பின்னரே அன்பு கொல்லப்பட்டது. அரசியல் லாபத்துக்காக நம்பி வந்தவர்களை கைவிடுவதற்கு என்றைக்குமே கலங்காத ஈரமற்ற நெஞ்சம் கொண்டவர்கள்தான் மாரி கண்ணன் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என அறிந்து கொள்கிறான் காளி.

கலையரசியோடு திரும்பி வரும் வழியில் அந்தச் சுவருக்கு முன்னே எலெக்‌ஷனில் வேட்பாளராக போட்டி போட இருக்கிற  மாரிக்கு ஊரே கூடி நின்று பேண்ட் வாத்தியம் முழங்க ஆரத்தி எடுத்து மரியாதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கும் காட்சியை பார்க்கிறான். அருகே சென்று நேருக்கு நேராய் “உனக்கு இப்படி செய்ய எப்படிடா மனசு வந்தது அண்ணே அண்ணே என்று உயிரைவிட  உன்ன பெருசா மதிச்சானேடா அன்பு” எனக்கேட்டு முகத்தில் குத்தி பல்லை உடைக்கிறான்.

முதலில் பசப்பு வார்த்தைகளைக் கூறி ஏமாற்றப் பார்க்கும் மாரி பிறகு தன் சுயரூபத்தை காட்டுகிறான். இன்னிக்கு இந்த மாரி நாளை இன்னொருவன் வருவான் நாம் தொடர்ந்து  வருபவர்களை நம்பி இனியும் மோசம் போகக் கூடாது. அதுக்கு முதல்ல இந்த சுவர்ல இந்தப்படம் இருக்கக்கூடாது என்று ஆவேசமாகி பெயிண்டைக் கொட்டி கிருஷ்ணப்பனின் முகத்தை அழிக்க ஆரம்பிக்க ஊரே அதில் இணைந்து கொள்கிறது. பேண்ட் வாத்தியம் முழங்க எல்லோரும் ஆடிப்பாடுகிறார்கள். மாரியின் முகத்தில் கரிய நிற பெயிண்ட் கரைசலை ஊற்றுகிறாள் அன்புவின் மனைவி மேரி உனக்கு எங்கையால தாண்டா சாவு என்று ஆவேசமாகும் மாரியை முடிஞ்சா பாத்துக்கடா போடா என்று விரட்டுகிறான் காளி. ஆனாலும் விடாமல் காளியை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என முயலும் மாரி கடைசியில் விஜியால் கொல்லப்படுகிறான். அடுத்த அந்த ஏரியாவின் அரசியல் முகமாக விஜி முன் வருகிறான். அவனிடம் பணம் தந்து கண்ணன் எப்படியாவது நாம் சுவரை மீட்க வேண்டும் என்கிறான். நிறைகிறது மெட்ராஸ் படத்தின் கதை.

சாதி, மதம், செல்வந்தம் என எல்லாவற்றையும் தாண்டி அந்த ஏரியாவின் ஆதிக்கத்தின் குறியீடாகவே அந்தச் சுவர் விளங்குகிறது. சுவர் என்பது வெறும் சுவரல்ல. சுவரில் தொடங்கி சுவரிலேயே முடிகிறது படத்தின் கதை. ஆறுதலைத் தாண்டிய மாறுதலாக காளியும் கலையரசியும் அடுத்த தலைமுறையின் குழந்தைகளுக்கு அரசியலின் அடிப்படையை அறிமுகம் செய்து விளக்குவதாக காட்சியை அமைத்து படத்தை நிறைத்திருப்பது அர்த்தமுள்ளதாகிறது.

சென்னை என்பதன் வழக்கமான சித்திரத்தை மாற்றி எழுத முயற்சித்த படங்களின் வரிசையில் மெட்ராஸ் படத்துக்கும் முக்கிய  இடம் உண்டு. இது வரை காட்டப்பட்ட வட சென்னையின் அதீத சினிமா காட்சிகளுக்கு மாற்றாக அதன் ஈரமான மனிதர்களின் இயல்பான வாழ்வியலை ரஞ்சித் தன் இரண்டு படங்களிலும் முன் வைத்தார்.வட சென்னை என்றாலே வெளிப்படையாக ஒரு அச்சத்தை நிரந்தரமாக தோற்றுவித்துக் கொண்டிருந்த வழக்கமான படங்களிலிருந்து விலகி இதன் ஈரமான மனிதர்களும் இயல்பான உரையாடல்களும் படத்தின் பலங்களாகின.

கார்த்தி தொடர்பிம்பத்தை அகற்றிவிட்டு வேடத்துக்கேற்ற அளவுகளில் நடித்திருந்தது கூறத்தக்கது. பா.ரஞ்சித் தன் படங்களில் தொடர்ந்து இயல்பான காதலை அன்பின் நெருக்கத்தைக் காட்சிப்படுத்தி வருபவர். சினிமாவை அதன் அதீதங்களின் கரப்பிடிகளுக்குள் பாடலும் காதலுமாய் சிக்கிக் கொண்டிருக்கும் தொடர்ச்சியைத் தானும் பின்பற்றாமல் தான் எடுக்கிற எல்லாப் படங்களிலும் பா.ரஞ்சித் முன்வைத்து வருகிற காதல் அழகானது அவரது கதைகளின் காதலர்கள் மிகவும் உளப்பூர்வமாக காதலிப்பவர்கள். சரிகைத்தன்மையும் உண்மையற்ற பொய்மையும் தளும்புகிற வசனங்களைப் பேசுகிறவர்களில்லை மாறாக நம் வாழ்வெங்கும் எளிதாகக் காணக்கிடைப்பவர்கள். காதல் என்பது கண்ணாடி அல்லது தொப்பி போலத் தேவைக்கு அணியவேண்டிய ஒன்றுதானே தவிர அது வெகு சிலருக்கு மட்டுமேயான தவப்பலனோ அல்லது நிரூபித்துக் காட்டுகிற வித்தையோ அல்ல. அது யாவர்க்குமான எளிய உணர்தல் மட்டுமே

சினிமா என்பதன் ஊடக பலத்தை முற்றிலுமாக அறிந்த ஒரு படைப்பாளுமையாக பா.ரஞ்சித் தன் படைப்பு யாரிடம் என்ன பேசவேண்டும் என்பதில் தீர்மானமான கதைசொல்லியாக தோற்றம் கொள்கிறார். எளிதான வசனங்கள் உறுத்தாமல் நேர்மையாக சிந்திக்க வைக்கும் உரையாடல்களாக மலர்கின்றன. படமெங்கும் வாதப் பிரதிவாதங்களோ நீட்டி முழக்கும் அறிவிக்கைகளோ இல்லாமல் தெளிந்த நீரோடை போலத் தான் எடுத்துக் கொண்ட கதையின் அளவீடுகளுக்குள் இயன்ற உணர்வுகளை முயன்று பார்க்கிற நம்பிக்கைக்குரிய படைப்பாளியாக பாரஞ்சித் தன் கதை சொல்லலில் வெற்றியும் பெறுகிறார். பா.ரஞ்சித் தன் படத்தில் தோன்றச் செய்கிற மனிதர்கள் பார்வையாளனின் நம்பகத்துக்குள் இயங்குபவர்கள். அதீதமான சொற்களைச் சொல்லி செயல்களைச் செய்து புனைவின் பொய்யுரைகளுக்கு மேலொப்பமிட்டுச் செல்கிறவர்களில்லை. மாறாக ஒவ்வொருவரும் பலம் மிக்க பாத்திரங்களாகத் தனித் தன்மையும் தனித்துவக் குணங்களுமாகப் பரிணமிக்கின்றனர்.

மேரியும் கலையரசியும் காளியின் அம்மாவும் மட்டுமல்ல கடைசிக் காட்சியில் யாருக்கு வேணும் உன் காசு என்று மாரியின் முகத்தில் பணத்தை விட்டெறியும் முதிய பெண் வரைக்கும் பா.ரஞ்சித் சித்தரிக்கும் பெண் கதாபாத்திரங்கள் தனித்துத் தெரிபவர்கள். சுயமரியாதை கொண்டு மிளிர்பவர்கள் காத்திரமான அன்பை முன்வைத்து அதற்கு நிகரான அன்பை எதிர்பார்ப்பவர்கள் அது தவறும் போது மாபெரும் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தயங்காதவர்கள்.

வழக்கமான கதை என்று யூகித்து விடக் கூடியதும் அப்படியே ஆகிவிடக் கூடியதுமான சாத்தியங்களின் விளிம்புகளுக்குள் தொடங்குகிற கதையை அதன் அடுத்தடுத்த நகர்வுகளைச் சொன்னவிதத்தின் மூலமாகவும் மிக தைரியமான க்ளைமாக்ஸ் காட்சியின் மூலமாகவும் தான் எடுக்க நினைத்த சினிமாவை முயன்று பார்த்த வகையில் பா.ரஞ்சித் எழுதி இயக்கிய மெட்ராஸ் தமிழின் சிறப்பான படங்களில் ஒன்றாகிறது.

மெட்ராஸ் மக்களின் நிலவெளி

முந்தைய தொடர்: http://bit.ly/2Pe29Lm