“கடவுள் ஒரு நகைச்சுவை நடிகர், சிரிப்பதற்கு அஞ்சுகிற பார்வையாளர்களின் மத்தியில் பரிமளிப்பவர்”

-வால்டேர்

எந்தப் படம் ஜெயிக்கும் என யாரால் யோசிக்க முடியும்? ஆரம்பிக்கும்போது எல்லாமே பணமாய் அள்ளிக்கொட்ட வேண்டும் என்கிற ஆசையில்தான் ஒவ்வொருவரும் படமெடுக்க வருவது. எப்படி சீட்டாட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் எனச் சொல்ல முடியாதோ, சினிமா ஆட்டத்திலும் அப்படித்தான்.

வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த அஞ்சலிதேவி, தன் கணவர் ஆதிநாராயணராவ் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் அஞ்சலி பிக்சர்ஸ் சார்பாகத் தயாரித்த படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’. இப்படித்தான் பேசி ஆரம்பித்திருப்பார்கள்போல. ‘என்னங்க, ஜாலியா ஒரு படம் எடுப்போமா?’ தமிழின் உலர் நகைச்சுவைத் திரைப்படங்களின் வரிசையில் முதன்மையான இடத்தை இந்தப் படத்துக்கு வழங்கலாம். டி.ஆர்.ராமச்சந்திரன் குழந்தை பேறில்லாத காரணத்தினால் அறுபது வயதில் இரண்டாம் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தன் செல்வந்த மாமாவிடம் முரண்பட்டுக் கோபித்துக் கொண்டு, அத்தை இருக்கும் வீட்டுக்குச் செல்லும்போது, அடுத்த வீட்டுப் பெண் அஞ்சலி தேவியைப் பார்த்து, அவர் மேல் காதலாகி, அதற்காகத் தன் லீடர் தங்கவேலுவிடம் காதல் ஐடியாக்களைக் கேட்டு, அவற்றில் நாலு பழுத்து, ரெண்டு பலனின்றி, எப்படியாவது அஞ்சலிதேவியின் நன்மதிப்பைப் பெற்றுவிடமாட்டோமா எனக் காதலுக்குச் சரிப்பட்டு வரவே வராத தன் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு வழியாக அவரது காதலை வென்றெடுப்பதுடன் சுபமாகிறது படம்.

அருண் சவுத்ரி எழுதிய பஷேர் பாரி என்ற பெங்காலிப் படம் அடுத்த வீட்டுப் பெண்ணாகத் தமிழிற்பெயர்ந்தது. இதே படம் தெலுங்கில் பக்க இண்ட்டி அம்மாயி என்ற பெயரில் 1953 ஆமாண்டும் பிறகு 1981 ஆமாண்டும் வெவ்வேறு குழுவால் இரண்டு முறை திரையாக்கம் கண்ட படம் இந்தியிலும் இதே படம் இருக்கிறது. சகல திசைகளிலும் வெற்றிபெற இதன் எளிய கதையும் அழகான மலர் போன்ற நகைச்சுவையும்தான் காரணம் அடுத்த ஒன்று இசை.

படத்தின் நாயகன் தங்கவேலுவா டி.ஆர்.ராமச்சந்திரனா என்று கேட்குமளவுக்கு படத்தின் பெரும்பலமானார் தங்கவேலு, ஏ.கருணாநிதி, சட்டாம்பிள்ளை, வெங்கட்ராமன், ஃப்ரெண்ட் ராமசாமி ஆகியோர் தங்கவேலுவின் சகாக்கள். வயோதிகப் பணக்காரர், பாட்டு வாத்தியார், தங்கவேலுவுக்கும் சரோஜாவுக்கும் காதல், சரோஜாவின் அப்பா, மற்றும் அஞ்சலிதேவியின் அப்பா எனப் படத்தின் சகல கதாபாத்திரங்களும் கலகலப்பை ஊட்டுகிறாற்போல் பாந்தமான கதை. ‘எது எது எப்பெப்ப எப்டியெப்டி நடக்குமோ அது அது அப்பப்ப அப்டியப்டிதான் நடக்கும்’ என்று சதா முழங்குவார் அஞ்சலிதேவியின் அப்பா. எப்போதாவது தப்புவிடுவாரா எனப் பார்த்து ஏமாறுவது ஜாலியான புதிர். அதற்கு முந்தைய காலத்தின் மௌனப் படமாக்கலின் செல்வாக்கு இந்தப் படத்தில் குட்டிக் குட்டிக் காட்சிகள் வசனமின்றியும் மௌனகால இசையுடனும் கவர்ந்தன. ஆதிநாராயண ராவ் அதிகம் சோபிக்காத, வெளித்தெரியாத மகா மேதை. இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் இத்தனை இசை வெரைட்டியோடு இன்னொரு படம் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆதிநாராயண ராவின் இசை தேன் ததும்பும் பாடல்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட பாட்டுக்கள் காலம் தாண்டி இன்றளவும் ஜெயித்தொலிப்பதற்கான முக்கிய காரணம் ஆதிநாராயண ராவின் இசைபற்றிய அறிதலும், ரசனை குறித்த புரிதலும் இணையும் புள்ளிதான் எனச் சொல்லத் தோன்றுகிறது.

கற்றார் நிறைந்த சங்கமிது பாடல் ஏ.எல்.ராகவன் பாடியது. இதன் துள்ளியோடும் நீர்த்தன்மை குறிப்பிடத்தக்கது.
வாடாத புஷ்பமே வனிதா மணியே என்றாரம்பிக்கிற பாடல் பீபி ஸ்ரீனிவாஸ் அளித்தது.
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே பாடல் இப்படத்தின் கையெழுத்துப் பாடல்
கண்களும் கவிபாடுதே பாடல் கொண்டாட்டத்தின் ஊடுபாவு
மாலையில் மலர்ச்சோலையில் மனங்களை மயக்கித் தரும் மதுமழை

பாடல்களுக்கு அதன் வகைமைகளைப் படைத்துத் தந்த விதத்தில் அடுத்த காலங்களில் திரைப்பாடல் எனும் பண்டம் என்னவாகவெல்லாம் உருமாற்றம் கொள்ளும் என்பதை மிகத் தெளிவான அறிதலுடன் படைத்தார் ஆதி. நதிக்குத் தெரியும்தானே நாளை தான் வளைந்து நெளியப்போகும் பாதை. இசையென்பது அவருக்கு நதி. தஞ்சை ராமையாதாஸின் எளிய வசனங்களும் இனிய பாடல்களும் வேதாந்தம் ராகவைய்யாவின் திட்டமிட்ட இயக்கமும், மொத்தப் படத்தின் கனத்தையும் தாங்கிப் பிடித்தன. நாகேஸ்வரின் ஒளிப்பதிவும் என்.எஸ்.பிரகாசத்தின் எடிட்டிங்கும் கூறத்தக்கவை.

அஞ்சலி பாட்டு வாத்தியாரை ஏமாற்ற, பாட்டு வாத்தியார் அதை நிஜமென்று நம்ப, தன் காதலனைப்போல் பாட்டு வாத்தியாரைப் பார்க்குக்கு அழைத்துச் செல்வார் அஞ்சலி, அதாவது டி.ஆர்.ராமச்சந்திரனை வெறுப்பேற்றுவதற்காக வாத்திக்கு பிரமோஷன். அஞ்சலியைச் சந்தோஷப்படுத்துவதாக நினைத்து டி.ஆர்.ஆரை ஏழெட்டு நிஜ குண்டர்களோடு சேர்ந்து அடித்து நொறுக்கிவிடுவார் வாத்தி. காயத்தோடு காய்ச்சலும் வந்து படுக்கையில் நொந்து கிடக்கும் மன்னாரு என்கிற டி.ஆர்.ராமச்சந்திரனை மெல்ல மெல்ல கசிந்துருகிக் காதலும் ஆவார் அஞ்சலி.

இந்தப் படத்தை அடுத்து வந்த அறுபது ஆண்டுகள், அதாவது இன்றுவரை மீவுருச் செய்யாத தமிழ்ப்படமே இல்லை என்கிற அளவில் தன் அத்தனை கனிகளையும் உதிர்த்துத் தந்த ஒரு முதிய மரம்போல் இருந்து கொண்டிருக்கிறது இந்தப் படம். ஒரு கல்ட் க்ளாஸிக்காக கலாச்சார அகல் விளக்காகவே அணையா தீபமென இன்றளவும் பாடல்களாலும், நடிப்பாலும், வசனத்தாலும், காட்சிகளாலும் ஓங்கி ஒளிரும் காதலின் எளிய காவியம் அடுத்த வீட்டுப் பெண்.

சிரித்தால் இனிக்கும்

முந்தைய தொடர்: http://bit.ly/35qgtoi