தேவையானதும் போதுமானதுமாக அமையும்போது தொழில்நுட்பத்தின் பெயர் அற்புதம்

-ஆர்தர் சி க்ளார்க்

சுஜாதா எழுத்தின் உச்சத்தை ஆண்ட தமிழின் சூப்பர் ரைட்டர். அவரது இரட்டைத் தொடர்கள் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ என்ற தலைப்புகளில் ஆனந்தவிகடன் இதழில் வெளியாகித் தமிழ்வாசகர் பரப்பில் பலரைக் கவர்ந்தன. அந்தக் கதை எதிர்காலத்தில் நிகழ்வதாக எழுத்தேற்பாடு. அதில் முக்கியப் பாத்திரமாக ஒரு எந்திர நாய் வரும். அதன் பெயர் ஜீனோ. அது பேசும். படிக்கும் எழுதும் ஓரளவுக்கு எல்லாம் வல்ல ஜீனோவாக அதன் உருவாக்கம் அமைந்தது. இன்றிருக்கும் உலகமல்ல எதிர்கால உலகம். அதனை ஒரே கூரையின் கீழ் ஜீவா என்ற தலைவர் ஆண்டுவருவார். அவரது அடியொற்றிப் பார்க்கும்போதுதான் அவரும் ஒரு புனைவு பிம்பம் மட்டுமே என்ற நிசம் வசமாகும். இப்படியான கதையில் ரோபோநாய், ஜீனோ என்பதை மனிதவுரு ரோபோ சிட்டி என்று மாற்றி வார்த்த புனைவின் ஆரம்பமே எந்திரனின் விதையாயிற்று. சுஜாதாவின் ஒரு பாத்திரம் வேறொன்றாக மாற்றம் பெற்றதே ஒழிய காகிதத் தொடர்கதை கொஞ்சம்கூடத் திரைவசமாகவில்லை. இரண்டும் வேறு வேறுகளே.

மனிதனால் வெல்ல முடியாதவைகளில் ஒன்று மரணம் அடுத்தது பொறாமை. வசீகரன் தன் உருவத்திலேயே சிட்டி என்ற ரோபோவைப் படைக்கிறார். அவருடைய காதல் தலைவி சனா. சிட்டி ரோபோ நல்ல ரோபோ என்பதிலிருந்து கெட்ட ரோபோ என்று ஆகிறது. அதைவிட சனாவைக் காதலிக்கிறது. தன் காதல் ஈடேறுவதைவிட வசீகரன் சனா காதலால் இணையவிடாமல் தடுக்கிறது. கடைசியில் மனிதன் வென்றெடுத்த இயந்திரத்தைத்தானே அழித்து நீதிபரிபாலனத்தை நிலை நாட்டுகிறான்.

ரஜ்னி காந்த் எனும் சூப்பர் பிம்பத்தின் அதிகம் தாண்டிய உயரம் அனேகமாக இந்தப் படம். மெனக்கெடல் வணிகம் பாராட்டு வெற்றி என எல்லா விதங்களிலும் குறையேதுமின்றி விளைந்த வெற்றி எந்திரனுடையது.

ஐஸ்வர்யா ராய், டானி டென்ஸோங்க்பா இருவரும் ரஜினிக்கு இணையான கதாபாத்திரங்களை ஏற்றாலும்கூட வில்லனாக மாறிய சிட்டி ரோபோ ரஜினிதான் எல்லோரையும் கவர்ந்தார். காணமுடியாத பழைய வில்லவருகையாகவே சிட்டியின் வருகை நிகழ்ந்தேறியது. அவ்வப்போது தானொரு பழைய வில்லன் என்பதைத் தன் கதாபாத்திரங்களின் குணாம்சங்களின் வழியாக நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் சாதுர்ய நடிகர்தான் ரஜினி. சந்திரமுகி படத்தில்கூட வேட்டைய மகாராஜாவாக அவர் தோன்றக்கூடிய காட்சிகள் அவரது ரசிகர்களின் ஆரம்பக் குதூகலங்களை மீட்டெடுப்பதற்கான உத்தியாகவும் புரிந்துகொள்ளத்தக்கதே.

ரஜினியைத் தாண்டி தொழில்நுட்பம் இந்தப் படத்தின் அனாயாசமாக அமைந்தது. ஷங்கரின் திரைத் தோன்றலும் கணிணி பூர்வமான திரைப்பட உருவாக்கங்களும் ஒரே சமயத்தில் ஆரம்பமானவை என்பதால் ஷங்கர் தன் படங்களில் ஆன மட்டும் அவற்றைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று முயன்று பார்ப்பார். பிற்காலத்தில் யூகிக்க முடியாத மற்றொரு கதையோடு எந்திரன் அடுத்த பாகம் 2.0 என்ற பேரில் உருவானது வரைக்கும் எத்தனையோ சாட்சியங்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லாம் நன்றாக அமைந்தது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் வைரமுத்துவின் தமிழும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஹரிஹரன் உள்ளிட்டோரின் குரலும் மெருகேறி மிளிர்ந்ததில் பாடல்கள் அபாரமாய் ரசிக்கவைத்தன.

பிரம்மாண்டம் என்பதன் ஒரு வகைமை யூகிக்கக்கூடிய கதையின் யூகிக்கமுடியாத நிகழ்வுகளைப் படமாக்குவது. அடுத்தது யூகிக்கமுடியாத கதையை நேரடியாகப் பெயர்த்தெடுப்பது. ஆங்கிலப் படங்கள் பெருமளவு முதல்வகையினைச் சார்ந்தவை. ஷங்கர் எடுத்த எந்திரன் இந்தியத் திரைப்படங்களில் அன்னியத் தன்மையோடு முயலப்பட்டு வெற்றி பெற்ற பெரிய படம். அந்தவகையில் இந்தப் படத்தின் இடைவேளைக்கு அப்புறமான கதை நகர்வு சவாலாகவே அமைந்தது எனினும் சோடை போகவில்லை.

வெளிநாட்டுப் படங்களின் ஓடுபாதையில் தானும் தன்னை நுழைத்துக்கொண்டு நிகழ்ந்தவகையில் எந்திரன் இந்தியப் பெருமிதம்.