மனுஷ வாழ்க்கையின் உள்ளே சின்றெல்லா உள்ளிட்ட தேவதைக் கதைகளுக்கு என்றைக்குமே மதிப்பு உண்டு. தான் இருக்கிற இடத்திலிருந்து ஒரு அடியாவது முன்னேறிவிட வேண்டும் என்பதைத்தான் உழைப்பதற்கான காரணமாகக் கொள்ள விரும்புகிற எந்தவொரு சாமான்யனுமே கடவுள் அருள் அல்லது அதிர்ஷ்டம் என்பதைத் தன் உழைப்புக்கு அப்பாலான சின்ன நடுத்தர அல்லது பெரிய உயர்தல்களுக்குக் காரணமாக அமைவதற்கான ஏக்கத்தை எப்போதும் கைக்கொண்டபடி இருக்க விரும்புகிறான். எதாவதொன்று நடந்து தன்நிலை உயராதா என்று ஏங்குவது திறந்திருக்கும் கதவுப்பக்கம் திரும்பிப் பார்த்தபடி ப்ரியமானவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டே காலம் தள்ளத் தலைப்படுகிற அன்பின் அதே யுத்திதான். சிலருக்கு அது பலிதமாகும் போதெல்லாம் அடுத்தது தனக்கான அதிர்ஷ்டத்தின் வரவுதான் என்று இன்னும் காத்திரமாகத் தன் கனவைக் கைப்பற்றிக்கொள்வது மானிட குணாதிசயம் தானன்றி வேறில்லை.

சினிமாவில் நடிகனாவது என்பது எல்லோர்க்கும் எட்டாக்கனியாகவே இன்றளவும் இருந்து கொண்டிருக்கிற அருகில் வர மறுக்கிற அல்லது முரண்டு பிடிக்கிற தங்கச்சுவர்தான். இன்றைக்கு சினிமா வசமாவது எளிதானாற்போல் தோன்றுகிறது என்றாலும் முன்பைவிடப் பரவாயில்லை என்று சொல்லத்தக்க அளவில்தான் அத்தகைய மாற்றத்தைக் கருத வேண்டி இருக்கிறதே ஒழிய எளிதில் தட்டுகிற யாவர்க்கும் அந்தக் கதவு திறப்பதற்கில்லை இன்னும்.

ஏழ்மை என்பது முகவரியின் முதல்வரியாகக் கொள்ள வேண்டியதுதானே ஒழிய அது முழுவரிகளையும் அடைத்துவிடுவதில்லை. ஆனாலும் தான் ஏழை என்பதைத் தன்சுய இரக்கத்திற்கான முதல் நம்பிக்கையாகக் கொண்டவன் சுந்தரம். அதைவிடத்தான் பார்ப்பதற்கு சுமாரான முகவெட்டு உள்ளவன் என்பதன் மீது எக்கச்சக்கமான தாழ்வு மனப்பான்மை கொண்டவன். தன் ஆப்த நண்பன் ராகவன் ஒருவனைத் தவிர வேறாரிடமும் பழக மறுப்பவன். ஓட்டல் அதிபர் சக்கரவர்த்தியின் மனதைக் கவர்ந்து அவரிடமே சர்வராகப் பணிபுரிகிறான். தன்னையே விளக்காக எண்ணி வாழ்ந்து வருகிற தாயிடம் நல்ல வேலையில் தானிருப்பதாகப் பொய் சொல்கிற சுந்தரத்தைக் கடிந்துகொள்கிறாள் தாய். எந்த வேலை என்பதல்ல முக்கியம் செய்வதை பொய்யின்றிப் பகிர்வதுதான் சத்தியம் என்று அவனை நேர்ப்படுத்துகிறாள்.

தன் முதலாளியின் மகள் என்பதை அறியாமல் கண்டதும் ராதாவோடு ஒருதலைக் காதல் கொள்கிறான் சுந்தரம். தன் வாழ்வின் ஆதாரமாகவே தான்கொண்ட காதலை எண்ணி உருகி வருபவனின் காதலை அறியும் ராகவன் அவனை ஊக்கப் படுத்துகிறான். விதி, ராகவனுக்கு மணம்புரிவதற்காகப் பெண் பார்க்கச் செல்லும்போது ராதா என்றறிந்ததும் பாராமுகம் காட்டித் திரும்புகிறான்.

சுந்தரம் சினிமாவில் நடிகனாகிறான். அவனது வாழ்வு ஒளிப்பெருக்கெடுக்கும் வெற்றிச்சுனையாக மாறுகிறது. எண்ணியதெல்லாம் கைவந்துவிட்டதாகவே மகிழும் சுந்தரம் ராதாவைத்தான் மணம் முடிப்பதில் இனி எந்த சங்கடமும் இல்லை என்று மகிழ்கிறான். ராதா தான் ராகவனுக்கானவள் என்பதை சுந்தரத்திடம் தெரியப்படுத்துகிறாள். சினிமா சினிமா என்று பரபரப்பாக சுந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தினம் சுந்தரத்தின் அம்மா மாடியிலிருந்து தவறி விழுந்து அந்தச் செய்தி சுந்தரத்தை அடையவே முடியாமற்போகிறது.

சுந்தரம் திரும்பி வந்து நோக்கும்போது அன்னை உலகத்தைவிட்டுச் சென்று விடுகிறாள். சுந்தரத்துக்குத்தான் பெரிய புகழுச்சியை அடைந்ததனால் எதுவுமே தன் வாழ்வில் மாறிவிடாது என்பதனை உணர்கிறான். சுந்தரம் மறுபடி சர்வர் உடையோடு ராதா ராகவன் திருமண விருந்தில் எல்லோரையும் விருந்துபசாரம் செய்வதோடு படம் முடிகிறது.

தமிழ் சினிமாவின் எப்போதும் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்றாக சர்வர் சுந்தரம் இன்றளவும் விளங்குகிறது. கே.பாலச்சந்தர் நாகேஷ் இருவருடைய திரை வாழ்வின் அதிரிபுதிரி ஆரம்பம் இந்தப் படம்தான். 1964 ஆமாண்டு தமிழ்த் திரையுலகில் நாகேஷின் ஆகச்சிறந்த அதிர்ஷ்டகரமான ஆண்டு என்பதற்கு காதலிக்க நேரமில்லை சர்வர் சுந்தரம் என்ற இரண்டு படங்களே சாட்சி. அந்த ஆண்டின் சிறந்த இரண்டு படங்கள் இவை என்றால் தகும். மேலும் கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசாகத்தான் இருக்கும் இடத்திலிருந்தே சினிமா எடுப்பதே தன் உயிர் லட்சியம் என்று திரியும் செல்லப்பாவாக காதலிக்க நேரமில்லை படத்தில் தோன்றிய அதே நாகேஷ் சினிமா என்பதெல்லாம் தாற்காலிகம் என்று சர்வர் வேலையை நோக்கித் திரும்புவதாக சர்வர் சுந்தரத்தில் காட்சியளித்ததன் பின்னே ஒளிந்திருக்கக்கூடிய முரண்சுவைதான் சினிமா என்னும் கணிக்க முடியாத தேவதையின் கண் சிமிட்டலுக்கு இன்னுமோர் உதாரணம்.

ரஜனிகாந்த் எனும் சூப்பர்ஸ்டாரை வைத்து அதே பாலச்சந்தர் தயாரித்த அண்ணாமலை எனும் மாஸ் ஹிட் திரைப்படத்தின் ஒன் லைன் மட்டுமன்றி அந்தக் கதையின் பூர்த்தி வரைக்கும் பல ஒற்றுமைகளை நம்மால் அவதானிக்க முடியும். என் இயக்குனர் நண்பர் சொல்வார் அதாங்க நாகேஷூக்கு பதிலா ரஜினி. அதனால சர்வருக்கு பதிலா பால்காரர். முத்துராமனுக்கு பதிலா சரத்பாபு. கே.ஆர்.விஜயாவோட அப்பா மேஜர்ங்குறதுக்கு பதிலா சரத்பாபுவோட அப்பா ராதாரவி. அவங்களுக்குள்ள சவாலாய்டுது. கடசீல எல்லாரும் ஒண்ணாகி நான் மறுபடி பால்காரன்தான். அதுதான் நிம்மதின்னு அதே சுந்தரவசனத்தை மறுபடி பேசுவார் ரஜினி.

சினிமாத் துறையின் பல மனிதர்களையும் சூழல்களையும் அருகே சென்று காணச்செய்த திரைப்படம் சர்வர் சுந்தரம் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், எல்.ஆர் ஈஸ்வரி எனக் கலைஞர்கள் பாடல் பதிவில் பங்கேற்பது போலக் காட்சி அமைத்திருந்தார் பாலச்சந்தர். வாலி எழுதிய அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் இப்படத்தின் மகுடமணி ஆயிற்று.

மேடை நாடகமாகப் பலமுறை நிகழ்த்தப்பட்ட கதை சினிமாவாகவும் வெற்றி விளைச்சல் கண்டது. நாகேஷின் நடிப்பும் முத்துராமனின் பரிதவிப்பும் கே.ஆர்.விஜயாவின் குழந்தமை மாறாத புன்சிரிப்பும் மேஜர் சுந்தர்ராஜனின் கணீர் குரலும் என இந்தப் படத்துக்குப் பல ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கே.பாலச்சந்தரின் திரைக்கதை. பின் நாட்களில் இந்தியாவின் பல மொழிகளில் இந்தப் படம் மீவுரு கண்டது.

சர்வர் சுந்தரம் சாமான்யர்களின் ராஜகுமாரன்