பைபிள் கதாபாத்திரமான ஜூதாஸ் காட்டிக் கொடுத்தவன். இந்தக் கதையில் ஒரு ஜூதாஸ் வருகிறார். அவர் ஒரு டாக்டர். காட்டிக் கொடுக்காமல் உயிரை விடும் டாக்டர். கொஞ்சம் மூளையும் நிறையப் பணமும் வச்சிட்டு அதிகாரத்தால பணத்தால ஆள்பலத்தால அரசியல் பலத்தால போலீஸ் பலத்தால விரட்டி விரட்டி ஓட முடியாம செய்றியே எங்களுக்கு இருக்கிற மூளைக்கு நாங்க விரட்டுறோம். நீ ஓடு. எங்க ஓடினாலும் தப்பிக்கவே முடியாது என்றாற் போல் தன் கடைசி வாக்குமூலத்தை ஜூதாஸ் தந்தபடி தன் உயிரை விடுகிற காட்சியில் நாம் வாழும் உலகம் என்னமாதிரியானது என்பதைப் பற்றிய சித்திரம் மனதை நெருக்குகிறது.

நகரின் பரபரப்பான இடங்களில் வரிசையாக வெட்டப்பட்ட மனிதக் கரங்கள் அட்டைப் பெட்டியிலிடப்பட்டு கிடக்கின்றன.மக்கள் பீதியடைகிறார்கள்.காவல் துறையை அரசாங்கம் நெருக்குகிறது.தன் காணாமற் போன தங்கை சாருவைத் தேடுவதற்காக விடுப்பு கோரி தன்னை சந்திக்க வரும் ஜேகேயிடம் நீ இந்த கரங்கள் வெட்டப்பட்ட வழக்கை கண்டுபிடி இதோடு உன் தங்கை காணாமற் போன வழக்கையும் சேர்த்து விசாரிக்க கமிஷனரிடம் அனுமதி வாங்கித் தருகிறேன் என்று சிபிசி ஐடி பிரிவு டிஎஸ்.பி சந்திரமௌலி ஜேகேயைப் பணிக்கிறார்.தனக்கு உதவியாக ஒரு பெண் இரண்டு ஆண் காவலர்களுடன் அந்த வழக்கினுள் நுழைகிறான் ஜேகே.

அடுத்தடுத்த சம்பவங்கள் ஒரு கட்டத்தில் கரங்களுக்கு பதிலாக மனிதத் தலை ஒன்று இமைகள் நீக்கப்பட்டு காவல் நிலையத்தின் எதிரே தர்பூஸ் பழக்கடையின் மூடிய தார்பாலின் போர்வைக்குள் பழங்களுக்கு மத்தியில் இருத்தப்படும் போது வழக்கு சூடுபிடிக்கிறது.

சில காலத்துக்கு முன்பாகக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட டீன் புருஷோத்தமன் குடும்பத்தின் அந்த முடிவுக்கும் தற்போதைய வெட்டுண்ட கரங்கள் ப்ளஸ் மனிதத் தலை ஆகியவற்றோடு இருக்கும் சம்பந்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து செல்கையில் ஜேகேயுடன் பார்வையாளர்களுக்கும் இரண்டே முக்கால் மணி’ நேரத்தின் நகர்தலின் அயர்ச்சி துளியும் இன்றி ஒச்சமற்ற கதைசொலல் மூலமாக மாபெரும் உணர்வு இழைகளைப் பெயர்த்துத் தருகிறார் மிஷ்கின்.பணம் கண்ணை மறைக்கையில் அதிகாரம்

வளைந்து கொடுக்கையில் அன்பைக் கடவுளாகத் தொழுவதைத் தவிர வேறொரு குற்றமும் புரியாத கையறு நிலையில் தள்ளப்படுகிற மென்மன மனிதர்களது வாழ்வில் மிருகங்களாய் நுழைவோர் மனிதர்கள் இல்லை என்பதும் அவர்களைத் தீர்த்துக் கட்டுகிற வரை மனிதத் தன்மையோடு அணுகத் தேவையில்லை என்பதும் அன்பு கொடூரமாய்க் கையாளப்படும் போது கொடிதினும் கொடிய வழிமுறைகளில் தண்டிக்கப் படுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதும் யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதை நகரும் திசைவழி.

மிஷ்கின் தான் நம்புகிற கதையினூடாகத் தானே எல்லாருமாய் புகுந்து திரும்பிய பிறகே கதை தொடங்கும் இயல்புள்ள படைப்பாளி.அவருடைய மனிதர்கள் எளியவர்கள்.அவர் முன்வைக்கிற உலகம் கடும் சட்ட திட்டங்களுக்கான கீழ்ப்படிதலை முன்வைத்த வண்ணம் எப்போதும் பாதுகாக்கப்பட்டுக் கொள்ள வேண்டிய உலகமாகவே இருக்கிறது.அவருடைய உலகம் மனம் கொண்ட்வர்கள் மனமற்றவர்கள் என்று இரண்டாய்க் கிளைக்கிறது.மனம் கொண்டவர்களைத் தீண்டியும் துன்புறுத்தியும் கொன்றும் மனமற்றவர்கள் செயல்படும் போதெல்லாம் மிஷ்கின் பரமாத்மாவாகிறார்.அவருடைய கதை ஒரு போதும் துன்பியலுக்குத் துக்கமே தீர்வு என்று முடிவதே இல்லை.கணக்கைத் தீர்த்துக் கறைகளை சுத்தம் செய்து அச்சத்தை நிலை நாட்டி அன்பை மாற்றற்ற ஒரே ஒரு
ஒன்றாகவே முன்வைப்பவர் மிஷ்கின்.அவருடைய கெட்டவர்களுக்குள் கையறு நிலையும் தொடங்கியதை முடிக்கத் தெரியாத தன்மையும் ஆங்காங்கே காணப்படுவது ரசம்.ஒரு கடவுள் தோன்றிக் கதைகளைப் பாதியில் தீர்த்துத் தந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என
மிஷ்கினின் தீயவர்கள் கூட ஒரு ஓரத்தில் ஏங்குவதைக் காணமுடியும்.இது திரைப்படைப்புகளில் அத்தனை எளிதில் காணக்கிடைக்கிற சமாச்சாரம் இல்லை.அபூர்வமான அரிய ஒன்றுதான்.

யுத்தம் செய் படத்தில் திரிசங்குவாகத் தோன்றும் செல்வா ஜேகேயின் தங்கை சாருவிடம் பேசும் காட்சியும் இசக்கிமுத்துவாகத் தோன்றும் மாரிமுத்து தன் கண்ணில் அடிக்கப் பட்ட ஸ்ப்ரேயைப் பற்றித் திட்டியவாறே வண்டியில் ஏறும் காட்சியும் யதார்த்தமான மனித சித்திரங்களை முன்வைக்கிறவை.அதிகாரத்தின் மீதான சாடலே படைத்தலின் உச்சபட்ச சுதந்திரம்.இந்தப் படத்தில் இன்னும் இரண்டு காட்சிகள் வரும். அதுவரை ஜேகே தன் தங்கை காணாமற் போன இடத்தின் எதிர்வீட்டுப் பெண்ணிடம் தன்னை போலீஸ் என்றே காண்பித்துக் கொள்ளாமல் விசாரிப்பார்.ஆட்டோக்காரர்களிடமும் கூட காவலர் என்றே காண்பித்துக் கொள்ள மாட்டார்.பொது உடுப்பு தான் அணிவது சிபிசி ஐடி பிரிவினரின் வழக்கம் என்பது வசதியாக இருக்கும்.எந்தத் தகவலும் கிடைக்காது.ஒரு கட்டத்தில் ஜேகேவுக்கு இன்னொரு தகவல் கிடைக்கும்.ஆட்டோவில் இரண்டு பேர் இருந்தார்கள் என்ற தகவலை உறுதி செய்வதற்காக இன்னொரு முறை அதே பெண் வீட்டுக்கு செல்வார்.ஜேகேயைப் பார்த்ததும்

“ஏம்பா அறிவில்ல உனக்கு எத்தினி வாட்டி சொல்றது?” என எகிறுவார் அந்தப் பெண்ணின் தாய்.உடனே சேரனுக்கு உதவியாளர் கிட்டப்பாவாக வரும் ஈ.ராமதாஸ் அடி செருப்பால வாயை மூடிட்டு உள்ள போ.ப்ராத்தல் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்..போ உள்ளே என்பார்.ஏற்கனவே பல முறை காவல்துறையினர் விசாரித்து எல்லாம் சொல்லிவிட்டேனே என அதே பெண் சென்றமுறை சேரனிடம் பதில் சொல்லும் காட்சியும் வரும்.சேரன் காவலர் என்று தெரியாமல் அவரைத் திட்டும் அந்த வீட்டின் பெண்மணியிடம் தான் எந்தப் பிரிவில் என்ன பணியிடத்தில் இருந்தாலும் குறைவான அதிகாரத்தை மட்டுமே கையில் கொண்டிருக்கக் கூடிய கிட்டப்பா அந்தப் பெண்மணியிடம் சிந்தும் சொற்கள் போலீஸ் எனும் துறையின் பொது அதிகாரமாக எங்கேயும் தமது கரத்தில் உயர்த்திப் பிடிக்க விரும்புகிற ஒற்றைச் சவுக்காக பார்வையாளன் கண்முன் விரியும்.இன்னொரு காட்சியில் காவல் நிலையத்துக்கு நேர் எதிரே தர்பூஸ் பழங்களை ப்ளாட்ஃபாரத்தில் அடுக்கி வியாபாரம் செய்யும் எளிய மனிதன் தன்னால் இயன்ற அளவு தார்பாலின் ஷீட் கொண்டு அந்தக் கடையை மூடிப் போர்த்திக் கட்டி விட்டு வீட்டுக்குச் செல்வது காட்சியாய் விரியும்.அடுத்த கணமே தன் பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் அந்த ஸ்டேஷன் காவலர் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை அந்தக் கடைமுன் நிறுத்துவதும் தார்பாலீன் ஷீட்டை நெகிழ்த்தி ஒரு தர்பூஸ் பழத்தை எடுத்துத் தன் வாகன பெட்ரோல் டேங்க் மீது இருத்திக் கொண்டு கிளம்பிப் போவதும் காட்சியாகும்.

காவல் நிலையத்திற்கு எதிரே தன் தர்பூஸ் பழக் கடையை நடத்தி வருகிற மனிதன் வீட்டுக்குச் சென்றபின்னரும் கூட தனக்குண்டான கனியைக் கொய்து செல்லும் மாமூலான காவல்கரங்களை கண்ணுறும் அதே வேளையில் அந்தக் கடைக்காரன் நாளும் கடை நடத்துகையில் நித்யத்தின் எத்தனை கனிகளை அதிகாரத்திற்கான வாடகையாக/விலையாக/அன்பளிப்பாக/லஞ்சமாக தரவேண்டி இருக்கும் என்கிற கணக்கு புரியாமல் இல்லை.இன்னும் ஆழ்ந்தால் அது மேற்சொன்ன எந்த வகைமைக்குக் கீழும் வராது என்பதும் ஒரு கம்பீரத்துக்கு மாற்றாய்த் தரவேண்டிய காணிக்கை என்பதும் புரியவரும்.பின்னே காவல் நிலையத்துக்கு நேர் எதிர் ப்ளாட்ஃபாரத்தில் இருக்கிற கடை என்பது கம்பீரமில்லையா என்ன..அந்தக் கடைக்காரனுக்கே அதுவொரு அந்தஸ்தான ஸ்தலமாகவும் அடையாளமாகவும் இருக்கும் தானே..?

மிஷ்கின் தமிழில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான படைப்பாளுமை.அவரது படவரிசையின் மூலமாக மிஷ்கினின் கதாமாந்தர்களும் அவர்தம் கதைகளும் கூட்டு மனங்களின் தனித்த இடத்தை நிரடியபடி நிலைக்கின்றன.

இந்தத் திரைப்படம் முன்வைக்கிற அன்பு எளியவர்களின் வாழ்வின் மீதான வன்முறை இவற்றிற்கெதிரான யுத்தத்தை முன் வைக்கிறது.நல்ல எனும் பதத்திற்கும் கெட்ட எனும் பதத்திற்கும் இருந்து வரக் கூடிய காலகால முரண் இப்படியான யுத்தங்களின் பின்னே இருக்கக் கூடிய குறைவற்ற நியாயமாகிறது.எப்போதும் உலர்ந்துபோகாத ஈரமான அன்பை இறைஞ்சுகிற நல்மனங்களின் கூட்டுக்குரல் யுத்தம் செய்.