சத்யராஜ் சென்ற நூற்றாண்டின் கடைசி மிகை யதார்த்த நடிகர். குறிப்பிடத்தக்க அண்டர்ப்ளே நடிகருக்கான அத்தனை தகுதிகளும் கொண்டவர். சிவாஜி கணேசனும் எஸ்.வி.சுப்பையாவும் கலந்து செய்தாற் போன்ற ஆச்சர்யம் சத்யராஜ். தன்னை எம்.ஜி.ஆரின் மாபெரிய ரசிகராகவே அடையாளப் படுத்திக்கொண்ட சத்யராஜின் ட்ராக் ரெகார்டில் பிற தென் நில நடிகர்கள் முயற்சி செய்தே பார்த்திராத பல அரிய வேடங்களை அனாயாசமாகக் கடந்து வென்றிருப்பது புரியவரும். அவரது திரைவாழ்வின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட நூறு படங்கள் அடியாள் வேடம் தொடங்கி வில்லன் வரைக்கும் எதிர்நாயக ஏரியாவிலேயே கடும்பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்புகிற மிலிட்டரிக்காரரைப் போல் ஹீரோவானார். வணிக வரம்புகள் ஒரு நடிகனின் கழுத்தில் புகழ்மாலையாய்த் தொங்குவதுபோலத் தோற்றமளித்தாலும் கூடவே நீ எப்படித் திரும்ப வேண்டும் தெரியுமா என்று எப்போதும் அவனைக் கட்டுப்படுத்திக் கொண்டும் இருப்பவை. சத்யராஜ் தன்னை என்ன செய்தால் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்று முழுமுடிவுகளுக்கு வருவதற்குப் பெரும்பலம் சேர்த்தது பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கடலோரக் கவிதைகள் திரைப்படம்.

பருத்திவீரன் படத்தின் வீரன் கதாபாத்திரத்துக்கு முன்னோடி என்றே தாஸ் கதாபாத்திரத்தைக் கொள்ள முடியும். சிறைப் பறவையான தாஸ் வாழ்வைப் புரட்டிப் போடுவது ஒரு டீச்சர். ஏபிசீடி என்பதை லாங் ஷாட்டில் கூட அறிந்திடாத ஒருவன் சின்னப்பதாஸ். அவனுக்கும் டீச்சரான ஜெனிஃபருக்கும் இடையே முரணாய்த் தொடங்கும் பரிச்சயம் மெல்ல நட்பாக மலர்கிறது. கடலும் கடலின் கரை சார்ந்த நிலமுமாய் இதன் கதைக்களன் முக்கிய கதாபாத்திரமாகவே கடலோரக் கவிதைகள் படத்தில் இடம்பெற்றது. தனி மனிதர்களுக்கு இடையே வாய்க்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் இயலாமை பொருத்தமற்ற தகுதிகள் வேற்றுமைகள் என எத்தனைக்கெத்தனை முரணும் பிளவுகளுமாய்ப் பெருகுகின்றனவோ அத்தனைக்கத்தனை அவை யாவுமே இல்லாமற் போய்க் காதல் மட்டுமாய் எஞ்சுவதுதான் நிதர்சனம். காதல் என்றே இனம் காண முடியாத இரு மன ஊசலாட்டமும் அதை ஒற்றிச் செல்லும் வாழ்வுமாய் கடலோரக் கவிதைகள் முன்வைத்தது காதலின் அபரிமிதமான உறுதியின் கதை ஒன்றை. ராஜா ரஞ்சனி கமலாகாமேஷ் ஜனகராஜ் என இதில் பங்கேற்ற எல்லோருமே உணர்ந்து நடித்தார்கள்.

ராஜேஷ்வரின் கதைக்கு ஆர்.செல்வராஜ் வசனம் எழுத திரைக்கதை அமைத்து இயக்கினார் பாரதிராஜா. பி.கண்ணனின் ஒளிப்பதிவும் திருநாவுக்கரசு எடிட்டிங்கும் ஏற்று வழங்க வைரமுத்து கங்கை அமரன் பாடல்களுக்கு இசைமீட்டினார் இளையராஜா. பொடி நடையா போறவரே பாடல் கங்கை அமரன் எழுத வேறாராலும் தரமுடியாத உற்சாகத்தோடு அதனைப் பாடினார் சித்ரா. கொடியிலே மல்லிகைப்பூ ஒரு கல்ட் க்ளாஸிக். சோக விரும்பிகளுக்கும் காதல் ததும்பிகளுக்குமான பாடல்களாக போகுதே போகுதே பாடலும் அடி ஆத்தாடி இளமனசொண்ணு இரண்டும் மிளிர்ந்தன. பாடல்களின் அத்தனை வரிகளும் துணுக்கிசை தொட்டு மௌன முற்றுதல் வரைக்கும் தமிழகத்தின் இதயநாதமாக இரவுகீதமாக கிட்டத்தட்ட ஒருவருட கால ரேடியோ ஃபர்ஸ்ட் ஹிட் பாடல்களாக இப்படத்தின் பாடல்கள் திகழ்ந்தன.

பாரதிராஜாவின் தொடர் வெற்றிப் படங்களில் கடலோரக்கவிதைகளுக்கு என்றுமோர் இடமுண்டு. காதலைப் போற்றுவதன் மூலமாக அதனைவிடாமல் பற்றிக்கொள்வதன் மூலமாக சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக நீக்கிவிட முடியும் என்ற நம்பகத்துக்கு வலு சேர்க்கும் முகமாய் சென்ற நூற்றாண்டின் கலாச்சாரக் கலகக் குரல்களில் ஒன்றெனவே இத்தகைய திரைப்படங்கள் விளங்கின. கடலோரக் கவிதைகளின் பட நிறைவில் பாரதிராஜாவின் குரலில் ஒலிக்கும் கீழ்க்காணும் வணக்கச்செய்தி அதனை நன்குரைக்கும்.

காதல் கூடக் கடவுள் மாதிரிதான்
காலதேச தூரங்களைக் கடந்தது அது
காதல் எனும் அமுத அலைகள்
அடித்துக்கொண்டே இருப்பதனால்தான்
இன்னும் இந்தப் பிரபஞ்சம்
ஈரமாகவே இருக்கிறது.