அன்பை விட
பணத்தை விட
விசுவாசத்தை விட
புகழை விட
நன்மையை விட
எனக்கு
உண்மையைத் தா
போதும்

(SEAN PENN எழுதி நடித்து இயக்கிய INTO THE WILD 2007 படத்தின் ஒரு வசனம்)

பல தலங்களுக்கும் எடுத்துச் சென்று படமாக்கப்பட்ட விரிந்த நாடகங்களாகவே கே.பாலச்சந்தரின் ஆரம்பகாலப் படங்களைக் கொள்ள முடியும். மனித உணர்வுகளின் அதீதங்கள் வினோதங்கள் விளிம்புகளைத் தாண்ட விழையும் சாமான்ய மனங்களின் சரி மற்றும் தவறுகள் அவரவர் கதையில் வாய்க்கவல்ல அவரவர் நியாயம் எல்லாவற்றினூடாக பாலச்சந்தர் தொடர் குரலொன்றை எழுப்பினார். இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற எல்லா நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக நியாயங்களையும் முன் வடிவமைக்கப்பட்ட சார்புநிலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பாரபட்ச தர்மங்கள் எனத் தன்னாலான அளவு தன் பாத்திரங்களின் தைரியத்தை முன்வைத்து ஆனமட்டிலும் வினவுதலையும் மீறலையும் அந்தத் தொடர்குரல் சாத்தியம் செய்தது. அவர் இயங்க வந்த காலத்தோடு பொருத்திப் பார்க்கையில் கே.பாலச்சந்தர் நல்லதொரு கதைசொல்லி மேலும் தைரியமான படைப்பாளியும் ஆகிறார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு வெளியான வறுமையின் நிறம் சிவப்பு அன்றைய இந்தியாவின் தேசிய பிரச்சினைகளில் தலையாயதான வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான கலைவழிக் கலகக் குரல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறந்த படமாக 1980 ஆமாண்டுக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்ற படம். இதை இயக்கியதற்காக பாலச்சந்தருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மாநில மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஸ்ரீதேவி, எஸ்.வி.சேகர், திலீப், ப்ரதாப் போத்தன், பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தந்தை ஒரு இசைமேதை அவரது சொல்வழி எதிலும் ஈடுபாடற்ற தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ரங்கன் தன் வழி செல்கிறான். வீட்டைவிட்டு ஓடிவந்து டெல்லியை அடைகிறான். அங்கே நண்பர்கள், காதல், வேலையில்லா சூழல், வறுமை, உபகதைகள் எல்லாவற்றுக்கும் அப்பால் என்னவாகிறான் தந்தையை மகன் மறுபடி சந்திக்கையில் எப்படியான சந்திப்பாக அது விளங்குகிறது என்பதெல்லாம் வறுமையின் நிறம் சிவப்பு முன்வைத்த மீதக் கதை.

பாரதியாரின் பாடல்களைத் தன் நெஞ்சகத்தில் ஒளிர்விதையென்றே தூவிய நாயகன் படத்தின் இறுதியில் தன் தகப்பனிடம் சொல்லும் அத்தனை பெரிய வசனம் இந்தப் படத்தின் முதுகெலும்பு எனலாம். ஸ்ரீதேவிக்குத் தெரியாமல் வெறும் கலயங்களை சப்தித்து தாங்கள் விருந்துண்ணுகிறாற்போல நடிக்கும் நண்பர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பது அந்தக் காலகட்டத்தின் துன்பியல் மென்மலர் என்றால் திலீப் என்ற கற்பனை கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட தன் பொய்களால் வழிபடும் திலீப் கதாபாத்திரம் இண்டர்வ்யூவுக்கு ரங்கன் செல்வதற்காக வழிப்போக்கர் ஒருவரிடமிருந்து கோட்டை அவரறியாமல் திருடித் தரும் காட்சி அற்புதம் என்றால் அதே கோட்டை வழியில் செல்கையில் சேறடித்து கமல் திகைப்பதும் இண்டர்வ்யூவில் கோட்டை மடித்து வைத்துக்கொண்டு விரக்தியில் தன் சான்றிதழ்களைக் கிழித்தெறியும் காட்சி யூகிக்கமுடியாத ஒன்று. கல்வியின் பின்னதான இருளும் நிச்சயமற்ற எதிர்காலமும் வறுமையும் பசியும் மெல்ல மெல்ல சமாதானமடைந்து எதாவது செய் என்று தன்னைத்தானே கெஞ்சும் இளைய மனங்களின் யதார்த்தமும் இந்தப் படத்தினூடாக துல்லியமாக வெளிக்காட்டப்பட்டன.

ஸ்ரீதேவி, திலீப் ப்ரதாப், எஸ்.வி.சேகர் நால்வரின் திரைவாழ்விலும் இந்தப் படம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றது. குறிப்பாக ப்ரதாப் பின்னியிருந்தார் எனலாம். சாகாவரம் பெற்ற சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடல் இந்தப் படத்தின் அணிகலனாயிற்று. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை கண்ணதாசனின் பாடல்கள் தவிர பாரதியாரின் தீர்த்தக்கரையினிலே நல்லதோர் வீணை செய்தே போன்றவை இசையுடன் கூடி ஒலித்தன.

கலைப் படைப்பு என்பது தன்னளவில் ஒரு பூர்த்தியை தைரியமான தீர்வை இதுதான் இன்னதுதான் என்று முடிவைக் கொண்டிருத்தல் அவசியம். அந்த வகையில் இந்தப் படம் அப்படியான நிறைவை நோக்கி நகர்ந்தோடியது நல்லதொரு ஆறுதல். கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கதாமுடிவோடு ப்ரதாப்பின் பாத்திர முடிவும் எஸ்.வி.சேகரின் அழிதலும் திலீப்பின் சிதைவுமாக நான்கு மனிதர்களின் கதை-முடிவு-முரண் வாயிலாக அழகான கற்பனைக் கோலமொன்றை சாத்தியம் செய்தார் பாலச்சந்தர்.

கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய வறுமையின் நிறம் சிவப்பு ஓங்கி ஒலித்த சாமான்யர்களின் நடுங்கும் குரல். வாழ்க சினிமா!

முந்தைய தொடர்: https://bit.ly/2L4CYb6