திரைப்படக்கலை நம்பமுடியாத அளவு ஜனநாயகத்தன்மை மிகுந்தது மற்றும் அணுகக்கூடியது. நீங்கள் வெறுமனே மறு அலங்காரம் செய்வதை விடுத்து உண்மையாகவே உலகை மாற்ற விரும்பினால் அதுவொரு சிறந்த வழி!

-பாங்க்ஸி

அரிதினும் அரிய படைப்பாளி மகேந்திரன். தமிழில் மகேந்திரன் நிகழ்ந்தது நம் நிலத்தின் கொடுப்பினை. உலக அளவில் பெரும் படைப்பாளிகளுக்கான இலக்கணம் பொய்த்திராத நம் காலத்தின் சாட்சியம் மகேந்திரன். ஆகச் சிறந்த படங்களுக்கு அடுத்து முற்றிலுமாகக் கைவிடப்படுகிற படைப்புகளும் முயன்று பிறகு பெரிய கால ஓய்வைக் கொண்டிருந்து தன் இறுதிக் காலத்தில் நடிகராக சிற்சில பாத்திரங்களில் நடித்து சமீபத்தில் காலத்தோடு கரைந்தார் மகேந்திரன். மிக மிக அரிதாகத் தன் படங்களை நிகழ்த்தித் தந்தவர்.

புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையை எடுத்துக்கொண்டு அதனைத் திரைக்கேற்ப மிக லேசான மாற்றங்களைச் செய்தார் மகேந்திரன். 19.10.1979 உதிரிப்பூக்கள் வெளியாகி நாற்பதாம் ஆண்டில் நிற்கிறோம். இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியாத திரைவைரமாக உச்சத்தில் தனிக்கிறது உதிரிப்பூக்கள். எழுதப்பட்ட கதையைத் திரைப்படுத்துவதற்கான முழுமையான இலக்கணங்களை வகுத்தார் மகேந்திரன். திரைப்படத்திலிருந்து முற்றிலுமாக முடியாதபோதும் இயன்றவரை நாயகன் என்ற பதத்தை நீக்கினார். சொல்லப் போனால் இந்தப் படத்தில் கதைதான் நாயகன் சரத்பாபு, சுந்தர் ஆகியோர் கலைத்து உடைத்தெறியப்பட்ட பழைய நாயகச் சில்லுகளைப்போலத்தான் படமெங்கும் வலம்வந்தார்கள். எது தேவையோ அதுவே நாயகத்துவம் என்பதைக் கடுமையாக நம்பினார் மகேந்திரன்.

தான்சார்ந்த காலம் தனக்கு முன்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செல்திசை இரண்டையும் மறுதலித்தார் மகேந்திரன். அந்த ஊரின் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு (விஜயன்) மனைவி லட்சுமி (அஸ்வினி) குழந்தைகள் (ஹாஜா மற்றும் அஞ்சு) இருவருடனும் வசித்து வருபவர். அவருக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தரவடிவேலு திகழ்கிறார். அந்தப் பதவி ஏற்படுத்தித் தந்திருக்கும் குறுகிய அளவு அதிகாரத்தின் விளைதலான கர்வமும் திமிரும் பணம் வைத்திருக்கிறோம் என்ற ஆணவமும் எப்போதும் தொனிக்கும் மனிதராக வலம் வருபவர். அவருக்கு சங்கீத வாத்தியார் ஒருவர் எப்போதும் எடுபிடி மற்றும் துந்துபியாகத் திகழ்கிறார். அவருடைய சொந்தத் தம்பியையே முரண்பட்டு வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார் சுந்தரவடிவேலு.

லட்சுமிக்கு திருமணமாகாத தங்கை செண்பகம் மதுமாலினி தந்தை சாருஹாசனோடு வாழ்ந்து வருகிறார். அந்தக் குடும்பத்தின் ஏழ்மையை சாக்காக வைத்துக் கொண்டு செண்பகத்தைத் தானே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார் சுந்தரவடிவேலு. அதற்கு மாமனாரும் செண்பகமும் ஒப்புக்கொள்ளவில்லை. லட்சுமியை சீக்காளி என்று முத்திரை குத்தி தள்ளி வைத்துவிட்டு மறு கல்யாணத்துக்கு முயல்கிறார் வடிவேலு. லட்சுமி மரணமடைகிறாள். வேறொரு பெண்ணோடு இரண்டாம் திருமணத்தை முடித்துக்கொள்கிறார் சுந்தரவடிவேலு வாத்தியார் ப்ரகாஷூக்கும் செண்பகத்துக்கும் திருமணம் நிச்சயமாகிறது. தன் ஆத்திரத்தை தான் நினைத்தது நடக்கவில்லை என்ற வெறியை செண்பகத்தை பாலியல் பலாத்காரம் செய்வதன் மூலமாக தீர்த்துக்கொள்ள முனைகிறார் சுந்தரவடிவேலு.

ஊர் கூடி ஆத்திரமடைந்து சுந்தரவடிவேலுவுக்கு நூதனமான முறையில் தற்கொலையை தண்டனையாக நிறைவேற்றுகிறது. இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாக உதிரிப்பூக்களாக உறைவதோடு நிறைகிறது படம்.

விஜயன் உள்ளிட்ட பலரது பாத்திரப் பின்புலம் பாதிக் கதையைச் சுமக்கிறது. தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள் கீஃபிட் ஆக உடை அணிவதை விரும்பாத விஜயன் அவர்களை தொள தொள ஜிப்பா பைஜாமா மட்டுமே அணிய வேண்டுமென நிர்ப்பந்திப்பது ஒரு சோற்றுப் பதம். படத்தின் நடுவே இயல்பாக ஒரு காட்சி வரும், வாத்தியார் ப்ரகாஷ் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது துந்துபி அங்கே வருவார் மிஸ்டர் தயவு செய்து குளிக்கிறதை நிறுத்துங்க.மேனேஜர் சுந்தரவடிவேலு ஸாருக்கு நீச்சல் தெரியாது. மத்தவங்க நீச்சலடிச்சு குளிக்கிறது தெரிஞ்சா அவர் ரொம்ப வருத்தப்படுவார். இந்த ஒரு காட்சியில் வில்லனுக்கு நீச்சல் தெரியாது என்பதையும் தானறியாத எதையும் பிறர் கையிலெடுப்பதை அவர் விரும்புவதில்லை என்பதையும் ஒருங்கே ரசிக மனங்களில் விதைத்துவைப்பார் இயக்குனர். சொட்டாங்கல் விளையாட்டை நிறுத்திவிட்டு ப்ரகாஷை கண்டித்து அனுப்பிவிட்டு யாருமற்ற பொழுதில் தான் அந்தக் கல்லை ஒரு தடவை முயன்று பார்ப்பதெல்லாம் டிபிகல் சாடிசம்.

அதிராத குரல், அமைதியான முகம், லேசான குறுநகை என்று யாராலும் வெறுக்க முடியாத பலவற்றையும் தாண்டித் தமிழின் ஆகச்சிறந்த வில்லனாக இந்தப் படத்தில் காட்சி தந்தார் விஜயன். அமைதியான நடிப்பினால் அஸ்வினியும் அளவான நடிப்பால் சரத்பாபுவும் மாண்பும் ரோஷமும் மிகுந்த மனிதராக சாருஹாசனும் தோன்றினார்கள். அஷோக்குமாரின் ஒளிப்பதிவு அபாரமாய் இருந்தது. தன் ஷாட்களால் பாதி உரையாடல்களை நீக்கிவிடும் வல்லமைதான் சிறந்த ஒளிப்பதிவுக்கு இலக்கணம். அப்படிப் பார்த்தால் மௌனம் பேசாத இடங்களில் மட்டுமே வசனம் எழவேண்டும் என்பது திரைக்கதையின் விதிகளில் ஒன்று. அதனை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்திய படம் உதிரிப்பூக்கள்.

என் குழந்தைகளுக்கு நான் அப்பாவா மட்டும் இருக்கேன். புரோக்கரா இருக்க சொல்லாதீங்க. இது போகிற போக்கில் இடம்பெறும் வசனம் ‘இத்தன நாளும் நான் கெட்டவனா இருந்தேன். அப்பெல்லாம் நீங்க நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இப்போ, உங்களையும் நான் என்னைமாதிரி ஆக்கிட்டேன். நான் பண்ணதிலேயே பெரிய தப்பு இதுதான்’ இதைச் சொன்னபடியே தூக்குமேடை நோக்கிச் செல்லும் வழியற்ற தண்டனைவாசிபோலவே தன் முகபாவங்களை வெளிக்காட்டுவார் விஜயன்.

கொஞ்சம் கூடிக்குறைந்திருந்தாலும் அறுந்து விழுந்துவிடக்கூடிய அபாயமிக்க மெல்லிய சரடு போன்ற முகபாவங்கள் உலகத்தரமாய் அமைந்தன. வசனங்கள் நறுக்குத் தெறித்தன. திரைப்படத்தைக் கலையாகக் கற்க முனையும் யாவருக்கும் படங்கள் அதிகதிகம் உண்டென்ற பட்சத்திலும் பாடங்கள் குறைவானவையே. இந்தப் படம் ஒரு பாடம்.

இளையராஜாவின் இசை அபாரங்களில் முக்கியமான படம் உதிரிப்பூக்கள். பார்வையாளர்களின் தனித்த சமமற்ற மன நிலையை அழிப்பதும் தேவையான கூட்டு மனோநிலை ஒன்றினைத் தன் இசை மூலமாக உருவாக்குவதும் மாற்றி அமைப்பதும் பராமரிப்பதும் வேறொன்றை நிறுவுவதும் இவையெல்லாமும் திரைப்படத்தின் உள்ளே இசை என்பதன் தேவைகளாகத் தொடர்பவை. மேற்சொன்ன யாவற்றையும் துல்லியமாக நிறைவேற்றினார் இளையராஜா. படம் முடிவதற்கு முன்பாக விஜயனை ஊர் நடுவாந்திரத்தில் இருந்து பிடித்து அழைத்துக்கொண்டு ஊர்வெளியே ஆற்றங்கரைக்கு வந்துசேரும் வரையிலான காட்சிப்படுத்தலாகட்டும் அதற்காக ராஜா வழங்கிய இசையாகட்டும் நல்நிறைவு.

கலை என்பது மாபெரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் –  உதிரிப்பூக்கள் அதற்கான நிகழ்கால சாட்சியம்.

முந்தைய தொடர்: https://bit.ly/30ul8lO