படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் கவிஞர்மனுஷ்யபுத்திரன்‘. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்புகளை வாசித்துப் பார்த்தீர்களானால் நான் சொல்வதை எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம்அனைத்துமே பெரும்பாலும் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து நான் ஏற்கனவே வாசித்த கவிதைகளே.

என் உலகில் அவருக்கான இடத்தைப் புரிந்துகொள்ள முதலில் நீங்கள் என் உலகுக்குள் வரவேண்டும்சிறுவயதில் இரவு உணவு மட்டுமாவது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒரு விதி இருந்தது. தனியாகச் சாப்பிடுவது என் தந்தைக்குப் பிடிக்காது. இன்றைக்கு வீட்டுக்குச் சென்றாலும் அவருடைய அதே புலம்பலைக் கேட்கலாம்சிறுவயதில் அப்படி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டேயிருக்க நான் கேட்டது – ‘நன்றாக மென்று சாப்பிடுங்கள்என்பதுதான். வாயிலேயே பாதி வேலை முடிய வேண்டும் இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் வரும் என்பார்என்னளவில் இது வாசிப்புக்கும் பொருந்தும். மாடுகள் அசைபோட்டு சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களாஒவ்வொரு படைப்பையும் நான் வெறுமனே வாசித்து முடித்துவிட்டுத் தூக்கி எறிவதில்லை. வாசித்து விட்டு வெகுநேரம் அசைபோடுவது வழக்கம். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாக இருந்தால் நான்கு நாட்களுக்குக்கூட அசைபோட்டுக்கொண்டே இருப்பேன்மாடுகளைப் போன்று. அசைபோட அசைபோட படைப்பின் சாரம் எனக்குள் இறங்குவதை உணர்ந்திருக்கிறேன்   

நான் இதுவரை வாசித்திருக்கும் உலகின் சிறந்த இலக்கியப் படைப்புகள் பெரும்பாலானவற்றிலும் என்னுடனோ, என்னுடைய வாழ்க்கையுடனோ, எனக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கையுடனோ, நான் கேட்டறிந்த செய்திகளுடனோஎன்னை பாதித்த விஷயங்களுடனோ என்று ஏதேனும் ஒரு விதத்தில் என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கவே செய்திருக்கிறது.  

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் மாக்சிம் கார்க்கியின்தாய்நாவலை முதன்முறையாக வாசித்தேன். என்னுடைய சித்தப்பாவின் திருமண நாளுக்கு யாரோ பரிசளித்திருந்தார்கள். இன்றைக்கும் எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியில் அந்தப் புத்தகம் இருக்கிறதுஅந்த வயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த நாவல் அது. ஆனால் எனக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு? அது தற்செயலாக நேர்ந்த தொடர்புதான்அந்த நாவலை ஒரு டிசம்பர் மாத இரவில் குளிருக்குக்  கம்பளி போர்த்தியபடி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்று வாசிக்க ஆரம்பித்தேன். நான் வாசித்த முதல் நாவலும் அதுவேமுதல் பத்து பக்கங்களை வாசித்து முடிக்கவே சிரமமாக இருந்தது. என்னால் அந்த உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை; தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லைபுத்தகத்தின் கனத்தைப் பார்த்தேன். நிச்சயமாக இதை நான் வாசித்து முடிக்கப் போவதில்லை  என்று தோன்றியது. ஆனால் ஒரு குளிர்காலத்தில் வாசிக்க ஆரம்பித்ததால் கதையில் வரும் ரஷ்யாவின் குளிரும், இரவு நேரங்களில் புத்தகங்களை வாசிக்கும் மகனும், அவனுக்குத் தேநீர் போட்டுக் கொடுக்கும் தாயும், குளிர்காய்ந்துகொண்டே இரவு நேர விவாதங்கள் புரியும் நண்பர்களும்தான் என்னை அந்தப் புத்தகத்தை மேலும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டினார்கள். பள்ளியிலிருந்து வீடு வந்த பிறகு, வீட்டு வேலை எல்லாம் முடித்து, இரவு உணவருந்திய பிறகு படுக்கையில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்து, கம்பளி போர்த்திக்கொண்டுதாய்நாவலை வாசித்துக் கொண்டிருப்பேன்அந்த நாவலில் வரும் தாயைப் போலவே என்னுடைய அம்மா தேநீர் போட்டுக் கொடுப்பார்அப்போதெல்லாம் அந்தக் கதையில் வரும் பாவெலைப் போல என்னை உணர்வேன். என்னுடைய அம்மா எனக்கு பெலகேயா நீலவ்னாவாகத் தெரிவார். ஒரே வித்தியாசம், பாவெலுக்கு தொழிற்சாலையில் வேலை, எனக்குப் பள்ளி வாழ்க்கை. ஆசிரியர்களெல்லாம் எனக்கு பிரபுக்களாகத் தெரிந்தார்கள். இப்படி வேடிக்கையான தொடர்புகள் உண்டான பிறகு முழு நாவலையும் ஓரிரு வாரங்களில் வாசித்து முடித்துவிட்டேன். அந்தக் கதையையும் கதாப்பாத்திரங்களையம் என் வாழ்வின் இறுதிவரை என்னால் மறக்க முடியாது. இன்றும்கூட இதையெல்லாம் நினைவிலிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறேன்வாசிக்க ஆரம்பிப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் இது

மனுஷ்யபுத்திரனைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு மாக்ஸிம் கார்க்கியில் வந்து நிற்கிறேன். என்னிடம் இருக்கும் பெரிய பிரச்சினை இதுஎதையும் நினைத்து முடித்துவிட்டு எழுதுவதில்லை. எழுத ஆரம்பித்து, மனதை ஓடவிட்டு அதன் பின்னே சென்று தோன்றுவதை எல்லாம்  பதிவுசெய்வதுதான் என்னுடைய வழக்கம். ஆனால்எழுதி முடித்த பிறகு நிச்சயம் திருத்தங்களைச் செய்வேன். தொடர்பில்லாத விஷயங்களாகத் தெரிந்தாலும் சிலவற்றை அப்படியே விட்டுவிடுவேன். வாசிப்பவர்களுக்கு என் மனம் அப்படித்தான் செயல்படுகிறது என்று தெரிந்து விட்டுப் போகட்டுமே

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்கும் எனக்குமான தொடர்பை விளக்குவதற்கு நான் அவ்வளவு ஒன்றும் சிரமப்படத் தேவையில்லை. பிற படைப்புகளில் என்னோடு தொடர்புபடுத்திக்கொள்ள ஏதாவதொன்று இருக்கும், ஆனால் மனுஷ்யபுத்திரனின் பெரும்பாலான கவிதைகளில் நானே ஏதாவதொரு வடிவில் இருப்பேன். நானில்லாமல் அவர் கவிதையே எழுதுவதில்லை என்றுகூடத் தோன்றுகிறது. நான் என்பதுகூட நான் மட்டும் இல்லை. நாமெல்லோரும்; சாமான்யர்கள்; சாதாரணர்கள் அனைவரும்மனுஷ்யபுத்திரன் நமக்கான கவிஞர். நமக்காகவே எழுதும் கவிஞர் என்றுகூட தோன்றும்.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரது தளத்துக்குப் பிறகு நான் தினமும் பார்க்கும் தளம் மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கமாக இருந்தது. ஆனால் நான் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் சற்று ஒதுங்கியிருந்தேன்அவருடைய  அரசியல் பதிவுகளைப் பார்த்த அடுத்தகணமே உடனே கீழே உருட்டி விடுவேன். இதை அவரின் அரசியல் முகத்துக்கான விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னையும் அவரையும் இணைக்கும் முதல் இழை அவருடைய கவிதைகளே.

ஒருமுறை இடையே வந்த தேர்தல் அவரை என்னை விட்டு வெகுதொலைவு கொண்டு சென்று விட்டிருந்ததாக உணர்ந்தேன்நீண்ட காலமாக அவருடைய கவிதைகளையே பார்க்க முடியாமல் இருந்தபோது திடீரென்று அவருடைய கவிதைகள் மீண்டும் வலம்வர ஆரம்பித்தன. கவிஞர் திரும்பக் கிடைத்ததுபோல் உணர்ந்தேன்இன்னொரு கவிஞர் ஒருவரின் இறப்புக்குப் பிறகு அவர் எழுதிய வலிமிகு பதிவும், அதன் பிறகு வந்த கவிதைகளும் என்னை வெகுவாக பாதித்தது. ‘கவிஞரைத் திரும்பத் தந்த அந்த இறந்தவருக்கு நன்றிஎன்று அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே ஒரு ஸ்மைலியை பதிலாகத் தந்தார். அவருக்கு எப்போது குறுஞ்செய்தி அனுப்பினாலும் உடனே பதில் வந்துவிடும். குறைந்தபட்சம் ஸ்மைலியாவது வரும். அவ்வளவு எளிமையான, எளிதில் அணுகக்கூடிய மனிதர். இத்தனைக்கும் நான் அவரை ஒரே ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன். அதுவும் புத்தகச் சந்தையில். அன்றைக்கு மட்டும் அவரை ஒரு நூறு பேராவது சந்தித்திருப்பார்கள். முகமறியா மனிதர்களுக்குக்கூட மதிப்பளிக்கும் அவரின் இந்தக் குணமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடந்த தீபாவளி அன்று அவருடைய முகநூல் பக்கத்தில்தீபாவளியைத் தேடிஎன்று ஒரு கவிதையை பகிர்ந்திருந்தார். அது நான் ஏற்கனவே வாசித்ததுதான். மீள்பதிவு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அதிலிருந்து சில வரிகள்

பண்டிகைகள்
எப்போதும்
எங்கோ தொலைவில் இருக்கும்
ஒரு ஊரில் இருக்கின்றன

.. 

நாம் எந்த நிலங்களை விட்டு வந்தோமோ
எந்த முகங்களை விட்டு வந்தோமோ
அங்குதான் பண்டிகைகள்
குடியிருக்கின்றன

தீபாளியன்று, “உங்களுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?” என்று கேட்டு வாட்சப்பில் செய்தி அனுப்பியிருந்தார் தோழி ஒருவர். “இப்படித்தான்..” என்று வெறிச்சோடிப் போன எங்கள் தெருவைப் புகைப்படம் எடுத்து அனுப்பினேன். இப்போது மனுஷ்யபுத்திரனின் வரிகளை படித்துப் பாருங்கள். கொண்டாட்டமாக வாழ்ந்து திரிந்த நிலங்களை விட்டு வெகுதொலைவு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் என் போன்றவர்கள் மட்டுமே உணரக்கூடிய வரிகள் இவை.

எத்தனைப் பொருத்தமான வரிகள்

என்னைப் போன்ற சாதாரண மனிதர்களின் எண்ணங்களுக்கெல்லாம் வண்ணம் தீட்டி வார்த்தைப்படுத்தி, கவிதைகளாக்கும் திறம் படைத்த கவிஞர். உண்மையில் இதுபோன்ற கவிதை வரிகளை நானே எழுதியது போல் உணர்கிறேன்அவர் எழுதியதாக இருந்தால் அவர் என்னுடைய எண்ணங்களை திருடும் வழியறிந்திருக்கிறார் என்று அர்த்தம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதில் எதுவும் இல்லையெனில் அவர் நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். தன் வாழ்க்கையை வாழும் இன்னொருவரை யாருக்குத்தான் பிடிக்காதுஎனவேதான் அவருக்கு ஒருமுறை செய்தி அனுப்பினேன் – “என் வாழ்க்கையை யாராவது எழுவதாயிருந்தால் அது நிச்சயம்  உங்களால்  சாத்தியம்.” என்று. அது அவர் கண்களில் பட்டதா என்று தெரியவில்லை.  

பல கவிதைகள் நம்மைப் பற்றிய ரகசியங்களைச் சொல்வதாக உள்ளது. மனுஷ்யபுத்திரன் கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த “ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு..கவிதை அந்த ரகம்.

நாம் எல்லோருமே ஏதாவதொரு வகையில் ஏதோவொரு அவமானத்தை வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அந்த அவமானத்துக்குப் பிறகு நாம் என்னவெல்லாம் செய்திருப்போம் என்பதை நேரில் இருந்து பார்த்ததுபோலக் கவிதையாக வடித்திருக்கிறார். இதைப் படிக்கும் எவருக்கும், தாம் செய்த அந்தரங்கமான செயல்களை யார் இவரிடம் சொன்னது என்று தோன்றும். அதிலும்  கீழ்வரும் வரிகள் என்னை உலுக்கி விட்டது.   

தனித்த அறை ஒன்றில் 

மனம் கசந்து அழும்போது 

கதவு தட்டும் ஓசை கேட்டு 

கண்களைத் துடைத்துக் கொள்ளவேண்டும்

இதை ஒரு விழிப்புணர்வுக் கவிதையாகவும் பார்க்கலாம்நம்மைப் போலவே இன்னொருவனுக்கும் இது நேர்ந்திருக்கிறது, நாம் மட்டும் படகில் தனியாக இல்லை என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ள உதவும்

டின்னிடஸ்பற்றிய என்னுடைய விழிப்புணர்வுக் கட்டுரையை ஜெயமோகன் அவர்களின் தளத்தில் படித்துவிட்டு ஒரு நண்பர், “மிக்க நன்றி மாதவன். நான் அதை ஒரு மனோவியாதி என்று நினைத்துக்கொண்டு என் குடும்பத்திடம்கூட தெரிவிக்காமல் இருந்தேன். இனி தைரியமாகச்  சொல்வேன். இரண்டு ஆண்டுகளாகத் தனிமையில் உழன்று கொண்டிருந்தேன்என்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை எழுதியதற்கான மொத்தப் பயனையும் அடைந்துவிட்டதாக எனக்கு அன்று தோன்றியது. அதைக் கொண்டுபோய்ச் சேர்த்த ஜெயமோகன் அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்அந்த வகையில் “இதோ நம்மைப் போலவே அழுபவன் இன்னொருவன் இருக்கிறானய்யா..” என்று நம்பிக்கையூட்டக்கூடியஆறுதல் தரக்கூடிய வரிகள் இவை 

இதே கவிதையின் இறுதி வரிகள் முத்தாய்ப்பானவை.  

எல்லையற்றது

இந்த உலகின் தீமை

எல்லையற்றது 

இந்த உலகின் கருணை”   

எல்லையற்ற தீமைக்கும் கருணைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அவமானப்பட்ட மனிதன் ஒருவன் தான், இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.  

நம்முடைய பார்வையைச் சற்று மாற்றி வேறு கோணத்தில் இந்தக் கவிதையைக் காண்போம்கடைசி வரிகளை மாற்றி இதையே அவர்,

எல்லையற்றது 

இந்த உலகின் கருணை

எல்லையற்றது 

இந்த உலகின் தீமை ”  

என்று  எழுதியிருந்தால் கவிதை விழுந்திருக்கும். எனக்கு இந்தக் கவிதை பிடிக்காமலும் போயிருந்திருக்கும். பெரிய அவமானத்துக்குப் பிறகு தனித்த அறையில் அழுதுக் கொண்டிருப்பவனிடம், “எல்லையற்றது இந்த உலகின் தீமைஎன்று முடித்தால், “அவ்வளவுதான் நீ முடிந்தாய்என்று கூறுவதைப் போன்றது அதுதீமைகள் எல்லையற்றதுதான். அவை கொடுங்கனவாக வருகின்றன என்பது உண்மைதான். ஆனால்கருணையும் எல்லையற்றதுஎனும்போது அது உள்ளத்தில் ஒளியூட்டுகிறது; நம்பிக்கையளிக்கிறதுஅந்தக் கருணையை எதிர்பார்த்துத்தானே தீமைகளை சகித்துக்கொள்வதற்கான நெஞ்சுரத்தைப் பெறுகிறோம்.  

இந்தக் கவிதையின் மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால் இதன் தலைப்புதான் இந்தக் கவிதையின் முதல் வரி. தலைப்பை நீக்கி விட்டு இந்தக் கவிதையை வாசிக்க முடியாது; வாசித்தால் புரியாது; கவிதையே ஆகாதுஅந்த வகையில் கவிதையின் தலைப்பும், முதல் வரியுமான, “ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு” ஒரு HOPELESSNESS- காண்பித்துத் தொடங்கினாலும், அதன் இறுதி வரிகளோஎல்லையற்ற கருணையைக்காண்பித்து ஒரு HOPE- தந்து முடிவதால் இதை ஒரு நேர்மறையான கவிதையாகவும் நான் இன்னொரு கண்கொண்டு காண்கிறேன்.       

சங்க காலத்தில் தொடங்கி இந்தக் காலம் வரை அரசர்களைப் பாடுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்களைப் பாடுபவர்கள் சொற்பம். எவரிருக்கிறார் என்றால் நானிருக்கிறேன் என்று வருகிறான் இந்தக் கவிஞன். மேற்குறிப்பிட்ட கவிதைகளே அதற்கு உதாரணம்

அழுகை சார்ந்த இன்னொரு கவிதையானஅழுகை வராமலில்லைவாசித்துப் பாருங்கள். மேலேயுள்ள கவிதைக்கும் இந்தக் கவிதைக்குமுள்ள ஒற்றுமையை உணரலாம்.

அழுகை வராமலில்லை 

ஒரு வைராக்கியம் 

உங்கள் முன்னால் 

அழக்கூடாது  

அவர்கள் முன்னே அழக்கூடாது என்றால் எங்கு அழுவது?” என்ற கேள்விக்கு, “தனித்த அறையில் கதவைப் பூட்டிக்கொண்டு அழச்சொல்கிறது முன்பு நான் எடுத்துரைத்த கவிதை. அங்கே என்ன அவமானமென்றே தெரியாத அவமானம் ஒன்றை நினைத்து அழுகை. இங்கே என்ன காரணத்துக்கோ ஆனதொரு அழுகை. மேலே அவமானப்பட்டதற்கு அழுகிறான், ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளக்கூடாது என்கிற வைராக்கியம். கண்களைத் துடைத்துக்கொள்கிறான்கீழே ஏதோவொரு காரணத்துக்காக அழுகை வருகிறது, ஆனால் அந்த அழுகை வெளியில் தெரிந்தாலே அவமானம் ஏற்படும். இரண்டுக்குமான ஒற்றுமை என்பதை விட, கீழேயுள்ள கவிதையின் தொடர்ச்சியாக மேலேயுள்ள கவிதையை வருவதைக் காணலாம். எனவே,

அழுகை வராமலில்லை 

ஒரு வைராக்கியம் 

உங்கள் முன்னால் 

அழக்கூடாது என்று

தனித்த அறை ஒன்றில் 

மனம் கசந்து அழும்போது 

கதவு தட்டும் ஓசை கேட்டு 

கண்களைத் துடைத்துக் கொண்டேன்” 

என்று சேர்த்து இன்னொரு கவிதையாக்கி வாசிக்கலாம். இப்படிப் பல கவிதைகளை ஒன்றுக்கு இன்னொன்றை தொடர்புபடுத்தி வாசித்திருக்கிறேன். அதில் இருக்கும் தொடர்ச்சியையும் 

ரசித்திருக்கிறேன். எல்லா நல்ல கவிதைகளிலும் வாசகனுக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அதை அவன்தான் இட்டு  நிரப்பவேண்டும். உண்மையில் கவிதையைத் துவங்குவது மட்டுமே கவிஞனின் வேலை. முடிப்பது வாசகனின் கடமை. நான் வாசித்த நல்ல கவிதைகளிலும் கதைகளிலும் எழுத்தாளர்கள் கோடிட்ட இடத்தை நிரப்பிப் பார்ப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு புதிர் தீர்க்கும் விளையாட்டு.  பல விடைகள் கொண்ட விளையாட்டு. சரியான விடையென்று இதில் எதுவும் இல்லை. ஒவ்வொரு வாசகனின் சூழலும் அனுபவங்களும் வெவ்வேறாக இருப்பதால்; விடைகளும் வெவ்வேறாகவே இருக்க வேண்டும். “அவரவர் தமதம தறிவறி வகைவகைஅன்றோ?. நான் இங்கு அவருடைய இன்னொரு கவிதையின் வரிகளை இந்தக் கவிதையில் இட்டு நிரப்பிக்கொள்கிறேன் அவ்வளவே.   

பெருங்கூட்டத்தின் நடுவேஎன்றொரு கவிதை.

பெருங்கூட்டத்தின் நடுவே 

அமர்ந்து தூங்கும் 

மனிதர்களை எனக்குப் பிடிக்கும் 

..

இந்த உலகத்தின் 

வன்முறையை 

நாம் வேறெப்படியும்  

கையாள முடியாது

உலகத்தின் வன்முறையை பெரும் கொந்தளிப்புடன் எதிர்கொண்டிருக்கும் பொழுது இவனால் மட்டும் எப்படி நிம்மதியாக உறங்க முடிகிறதுஎன்கிற அவருடைய ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் இந்தக் கவிதை. அல்லதுஉலகத்தின் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் போதெல்லாம், சற்றே இளைப்பாருங்கள்அமைதியாகப் படுத்து உறங்கப் பழகிக்கொள்ளுங்கள்.” என்கிற தீர்வை இந்தக் கவிதை முன்வைக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவதுதான் எனக்கு இந்தக் கவிதை பிடித்ததற்குக் காரணமே. நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கும் நாட்களில், கொந்தளித்துக் கத்திக் கொண்டிருக்க விரும்புவதில்லை. நேரே என் அறைக்குச் சென்று உறங்கி விடுவேன். “உன்னால் மட்டும் எப்படி இது முடிகிறதுஎன்று என் மனைவி பலமுறை கேட்டிருக்கிறாள். ஆனால் நான் அப்படிச் செய்த பல நேரங்களில் என்னுடைய பிரச்சினைகளைத் தூக்கம் தீர்த்து வைத்திருக்கிறது. சமீபத்தில்கூட இந்த அனுபவம் கிட்டியதுஎனக்கும் என் தந்தைக்குமான கடும் வாக்குவாதத்துக்கு இடையில்நான் அங்கிருந்து வெளியேறி என் மாமாவின் அறைக்குச் சென்று உறங்கிவிட்டேன். இரண்டு மணிநேரம் நல்ல உறக்கம் கழிந்து வெளியே வந்துப்  பார்த்தால் குடும்பத்திலுள்ள அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு குவளை தேநீர் அருந்தி விட்டுப் பிறகு நானும் என் தந்தையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சகஜமாகப் பேசி சிரித்து மகிழ்ந்தோம்

ஒரு சில சமயங்களில் நானுமே அவர் கூறும் பெருங்கூட்டத்துக்கு நடுவே தூங்கும் மனிதனேகுறிப்பாக கவிதை வாசிக்கும் கூட்டங்கள் எனக்கு மிக எளிதாக தூக்கத்தை வரவழைத்து விடும். அதற்கு இரண்டு காரணங்கள். பெரும்பாலானோருக்கு கவிதை வாசிக்கவே தெரிவதில்லை; கவிஞர்கள் உட்படஇரண்டாவது காரணம், கவிதைகளை நான் தனிமையில் வாசிக்கவே விரும்புகிறேன். பெரும்பாலான கவிதை நூல்களை நான் இரவு நேரங்களில் தனிமையில் மட்டுமே வாசித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக மனுஷ்யபுத்திரன் கவிதைகள் அந்தரங்கத்தன்மை வாய்ந்தவை. அவற்றை பொதுவெளியில் வாசிக்கக் கேட்பதென்பது எனக்கு மிகவும் அபத்தமாகப் படுகிறது

தடயம்என்றொரு கவிதையை வாசித்த பொழுது, இந்த மனிதன் நம்மை உளவு பார்ப்பதை எப்போது நிறுத்தப் போகிறான் என்று தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.  

ஒரு அன்னிய இடத்தைப்

பயன்படுத்தும்போது

எல்லாவற்றையும்

நேர்த்தியாக கையாள்கிறோம்

எந்த சந்தேகமும் வராதபடி

எல்லாவற்றையும்

அதனதன் இடத்தில்

மறுபடி வைக்கிறோம்

…”

அதிகம் பழகாத நண்பர்கள் அல்லது உறவுகள் வீடுகளில் நாம் தங்க நேரிடும் சமயங்களில் நிச்சயம் இவற்றையெல்லாம் செய்திருப்போம் இல்லையாஇதுபோன்ற எளிய அந்தரங்கமான விஷயங்களை வைத்துக்கூட எப்படி இவரால் இவ்வாறு கவி படைக்க முடிகிறது. இதையெல்லாம் நாமும் செய்திருக்கிறோம். ஆனால் ஏன் நமக்கு கவிதை எழுதத் தோன்றுவதில்லை. ஒருவேளை நாளைக்கு நான் இவர் வீட்டுக்கே தங்கச் சென்றால்கூட அது எனக்கு எவ்வளவு தர்மசங்கடமான விஷயமாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்இவருக்குத்தான் எல்லாம் தெரியுமே. படைப்பாளிகளை நெருங்குவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையும் அதுவே. அவர்களிடம் எதுவும் பேசத் தேவையில்லை. பேசுவதற்கு முன்பே அவர்கள் புரிந்து கொள்வார்கள். படைப்பாளிகளின் கண்கள் வெறும் கண்களல்ல. பொய்யறியும் கருவிகள்

 என் கல்லறை வாசகம்” 

இங்கே 

யாருமில்லை 

நீங்கள் போகலாம்

இதை  வாசித்தவுடன் ‘wow!’ என்று சொல்லத் தோன்றியது. பிறகு நகுலனின் வரிகள் நினைவுக்கு வந்தது

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.”

இல்லாமல் போய்விட்டேனே எதற்கு வந்தீர்கள் கிளம்புங்கள்என்று நகுலனின் நிலையாமையின் துக்க வாசகத்தின் தொடர்ச்சியாகவே மனுஷ்யபுத்திரனின் கல்லறை வாசகம் எனக்குத் தெரிந்தது. பிறகு சுரீரென்று இன்னொரு கேள்வி எனக்குள் எழுந்தது – “இங்கே யாருமில்லை என்றால், நீங்கள் போகலாம் என்று எனக்குச் சொல்வது யார்?”. 

அப்போது எனக்கு அந்தக் கல்லறை ஒரு தனித்த அறையாகத் தெரிந்தது

தனித்த அறை ஒன்றில் 

மனம் கசந்து அழும்போது 

கதவு தட்டும் ஓசை கேட்டு 

கண்களைத் துடைத்துக் கொள்ளவேண்டும்

பிறகு கதவைத் தட்டியவர்களிடம்

இங்கே 

யாருமில்லை 

நீங்கள் போகலாம்

என்று கூறவேண்டும். இங்குதான் இந்த வரிகள் விசுவரூபம் எடுக்கின்றன. பளிங்கு போல் தெளிந்திருப்பதாய் தோன்றினாலும் பசுபிக் பெருங்கடலாழம் அதில்.  ஆனால்இதற்குப் பிறகு எனக்குத் தோன்றியதை இங்கே விளக்கப்போவதில்லை. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகள் அப்படித்தான். முதன்முறை வாசிக்கும்போது பூடகமற்று, பளிங்கு போன்று தெளிவாகத் தெரியும், ஆனால் அசைபோட அசைபோட படைப்பின் ரசம் இறங்கும் பொழுதுதான் அதன் ஆழம் புரிய ஆரம்பிக்கும். அந்த ஆழத்தில் அந்தரங்கங்களை ஒளித்து வைக்காமல் தெளிவாகக் காட்டிச் செல்கின்றன அவரது  வரிகள்

பளிங்கு போலும் தெளிந்த பசிபிக் பெருங்கடல்” என்னளவில் இதுதான் மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம். தெளிவும், கடலும் என்பது oxy-moron ஆகத் தெரியலாம்ஆயினும் அப்படி ஒரு சமுத்திரம் இருப்பின் அதுவே அவரின் கவிதையுலகம். அத்தனை தெளிவு. அத்தனை ஆழம்

அவருடைய ஒரு கவிதையைப் படித்து முடிப்பதற்குள் 

அந்த ஆழத்துக்குள் சென்று முத்து எடுப்பதற்குள்

கரையைத் தொட்டு கொண்டு வந்த முத்தை ரசிப்பதற்குள்

நேரமாகிவிடுகிறது“. 

ஏனெனில் அதற்குள் அவருடைய அடுத்த கவிதை வந்துவிடுகிறது. மேற்கண்ட வரிகளை எழுதுவதற்கு அவருடைய இந்த வரிகளே அகத்தூண்டுதல் என்று நான் சொல்லத் தேவையில்லை

ஒருமுத்தத்தை இட்டு முடிப்பதற்குள்

ஒரு கரம்பற்றுதலின் வெம்மையை

உணர்வதற்குள்

ஒரு சரியான பிரிவுச் சொல்லைத்

தேர்ந்தெடுப்பதற்குள் நேரமாகிவிடுகிறது

இந்தக் கவிதையின் இறுதி வரியின் இறுதி வார்த்தையைப் பாருங்கள். அதுதான் இந்தக் கவிதையின் உச்சப்புள்ளி.  “நேரமாகிவிடுகிறது“.  உண்மையில் இந்த வரிகளை கவிதையாக்குவதே அதுதான். இன்னும் சொல்லப்போனால் அதுவே எனக்கு ஒரு தனித்த கவிதையாகவும் தெரிகிறது.      

விசுவாசத்தைப் பற்றிய எளிய ஆனால் ஆழமான கவிதையொன்று – “இனி..” 

யாரையும் 

விரும்பவில்லை 

இனி 

யாரோடும் 

இருக்கலாம்” 

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்தக் கவிதையின் ஆழத்தில் இருக்கும் மிருகத்தனத்தைக் கண்டுகொள்ளலாம்

தலைகீழ் உண்மைகள்பற்றி ஒரு அருமையான கவிதையொன்று. இந்தக் கவிதையை அவரது பக்கத்தில்தான் முதலில் வாசித்தேன். அதிலிருந்து சில வரிகள்

உலகம் உருண்டை
என்று திடீரெனெ ஒரு நாள்
அறிவிக்கப்பட்டபோது
இவ்வளவு காலம் 
சதுரமாக இருந்த உலகம்
இப்படிச் சொன்னால்
ஒரே நாளில்
எப்படி நான் உருமாறுவது?’
என்று கேட்டது திகைப்புடன்.”

ஆப்பிள் தானாக விழவில்லை
என்று திடீரெனெ ஒருநாள்
அறிவிக்கப்பட்டபோது
இவ்வளவு காலமாக
தாமே விழுவதாக நம்பிக்கொண்டிருந்த
எல்லா ஆப்பிள்களும் அதிர்ச்சியுடன்
ஒரே குரலில் கேட்டன
விழுவது குறித்து
எங்கள் தேர்வுகள் எதுவும்
இதில் இல்லையா?'”

தலைகீழ் உண்மைகளைப் பற்றிய கவிதையாயினும், கண்டுபிடிப்புகளின் மீதான நையாண்டிக் கவிதையாகவும் நான் இதைப் பார்க்கிறேன். “கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்என்று கேள்விப்பட்டவுடன் அமெரிக்கா எப்படி திடுக்கிட்டிருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.  

இந்தக் கவிதையின் இறுதி வரிகள் இன்னும் வசீகரமானவை

ஓரு நாள் தடுமாறுவீர்கள்

மறுநாள் பழகிவிடுவீர்கள்

தலை கீழ் உண்மைகளுக்கு”   

உண்மைகளைப் பற்றி மீண்டும் வேறொரு இடத்தில்உண்மையுடனான சந்திப்புகள்என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்

முன்பெல்லாம்

உண்மைகளை சந்திப்பது குறித்து

அவ்வளவு பயப்படுவேன்

வருடம் முழுக்கக் கூட

நினைத்து நினைத்து 

அழுதுகொண்டிருப்பேன்

இப்போதெல்லாம்

எவ்வளவு துயரமான உண்மைக்கும்

ஐந்து நிமிடங்களில் தயாராகிவிடுகிறேன்

உண்மையைக் கண்டு அஞ்சியவன் எவ்வாறு இப்படி உருமாறினான் என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. ஆனால் அடுத்த வரிகளைப் பாருங்கள்.

குளித்து முடித்து

சலவை செய்த ஆடைகளை 

அணிந்துகொண்டு

கொஞ்சம் வாசனை திரவியத்தை 

தெளித்துக்கொண்டு

கைப்பையோடு 

சந்திப்பதற்கு கிளம்பி விடுகிறேன்

..”

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகுகவிதையில் வரும் அதே ஆடை இங்கும் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆடைகள் அவரது படைப்புலகில் பல இடங்களில் வருகின்றன

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

நன்றாகக் குளிக்க வேண்டும்

வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது

இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத

தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

..”

இப்போதுசலவை செய்த ஆடையின்அர்த்தம் நமக்கு புலப்பட ஆரம்பிக்கிறது. அது ஒரு யுக்தியாகவே படுகிறது. அவனுக்குள் எந்த மாற்றமும் நிகழவில்லை. அவனுக்கு இப்போதும் உண்மையைச் சந்திப்பது என்பது அச்சத்தையே தருகிறது. ஆனால் அந்த அச்சத்தை ஆடைக்குள் மறைத்து விட்டு கம்பீரமாகக் கிளம்புகிறான்

ஆடை மட்டுமல்லஅழுகையைப் பற்றிதான் எத்தனைக் கவிதைகள்? “அழுகையை ஒரு கலையாகவே பார்க்கிறாரோ இந்த மனிதர்?” என்று ஒரு முறை எனக்கு விளையாட்டாகத் தோன்றியது. ஒரு கவிதைத்தொகுப்பில்அழும் கலைஎன்றே ஒரு கவிதையை எழுதியிருக்கிறார்

நான் என் வழியில் 

அழுதுகொண்டிருந்தேன்

 

யாரோ 

பிறந்த நாள் 

கேக் வெட்டுவதற்காக 

வந்து அழைத்தார்கள்

 

திரும்பி வந்து 

விட்ட இடத்திலிருந்து 

தொடர்ந்து அழுதபோது 

கொஞ்சம்கூட 

சுருதி விலகவில்லை” 

அவருடைய இரண்டு கவிதைகளை இணைத்து நான் உருவாக்கிய கவிதையின் தொடர்ச்சியாகவே இந்த அழுகைக் கவிதையை நான் பார்க்கிறேன்

 

அழுகை வராமலில்லை 

ஒரு வைராக்கியம் 

உங்கள் முன்னால் 

அழக்கூடாது என்று

 

தனித்த அறை ஒன்றில் 

மனம் கசந்து அழும்போது 

கதவு தட்டும் ஓசை கேட்டு 

கண்களைத் துடைத்துக் கொண்டேன்

 

யாரோ 

பிறந்த நாள் 

கேக் வெட்டுவதற்காக 

வந்து அழைத்தார்கள்

 

திரும்பி வந்து 

விட்ட இடத்திலிருந்து 

தொடர்ந்து அழுதபோது 

கொஞ்சம்கூட 

சுருதி விலகவில்லை” 

இப்படி இணைத்துக் கிடைக்கும் மூன்றாவது கவிதைக்குதான் “அழும் கலைஎன்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்

அழுகையை எந்த விதத்தில் எழுதினாலும் அதில் அவருடைய கவித்துவம் உச்சத்தைத் தொடுகிறதுமனிதனின் அழுகை மட்டுமல்ல; இயற்கையின் அழுகையான மழையும் இதில் உள்ளடக்கம். “மழையின் பார்வையாளர்கள்என்கிற கவிதையில் எதிர்பாராமல் வந்த மழையைக்கூட ரசிக்க முடியாத மனிதனின் இயந்திர வாழ்க்கையைப் பற்றி நினைத்து அலுத்துக்கொள்கிறார்.   

எதிர்பாராமல் வந்த மழையை 

என்ன மாதிரியான மழை என்றேன்

என்ன பிரயோஜனம் 

ஒரு வேலை நாளில் 

மழை வருவதால் 

என்றாள் பெருமூச்சுடன்

மனுஷ்யபுத்திரனைப் போலவே மழை என்றால் எனக்கும் அவ்வளவு பிடிக்கும். சென்னையில் இருந்த பொழுது கனமழை பொழியும் காலங்களில் மழையை ரசிப்பதற்காகவே விடுமுறை எடுத்துவிடுவது உண்டு

வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான என்னுடைய எளிய சூத்திரம் இதுதான்: “மழை + புத்தகம் + தேநீர் = மகிழ்ச்சி“. 

இன்றைக்கு இயந்திரத்தனம் மிக்கதொரு வாழ்வில் நம்முடைய விழிப்புணர்வும், ரசனையுணர்வும் நம்மை விட்டு வெகுதூரம் சென்றுகொண்டிருக்கிறது. உணர்வற்ற இயந்திரர்களாகிக் கொண்டிருக்கிறோம் நாம். எனவே மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகள் மனிதனின் ரசனையுணர்வு குறித்த ஒரு நினைவூட்டலாக வருகின்றன

ரோபோக்களுக்கு உரையாட கற்றுக் கொடுத்து அதனுடன் பேச ஆரம்பித்துவிட்ட மனிதன் ஏனோ சக மனிதனின் உரையாடுவதையே குறைத்துக்கொண்டு வருகிறான்தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டு சக மனிதர்களையும் தனிமைப்படுத்தி விடுகிறான்

கடந்த வருடம் நான் வசித்து வரும் பெல்கிய நாட்டு சஞ்சிகை ஒன்றில் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வாசித்தேன். ‘கென்டுஎனும் நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் எட்டு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தவரைப் பற்றி வந்த அந்தச் செய்தி என்னை உலுக்கியதுகுடியிருப்பின் வரவேற்பறையில் அவருடைய அஞ்சல்பெட்டியில் நிரம்பி வழிந்தோடிக் கொண்டிருந்த அஞ்சல்களைச் அப்புறப்படுத்த அறிவுறுத்துவதற்காக அவரது அறைக்கு அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியிருக்கிறதுஅதையடுத்து சந்தேகத்துடன் கதவை உடைத்துப் பார்த்தால் அந்த மனிதர் உள்ளே இறந்து கிடந்திருக்கிறார்பிணக் கூறாய்வில் அவர் இறந்து பல மாதங்களாகிவிட்டதை உறுதி செய்துள்ளார்கள்

ஆயிரம் குடும்பங்கள் வாழும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு மனிதன் இறந்த எட்டு மாதங்களாகியும் தெரியவில்லை என்றால் மானுடம் சென்றுகொண்டிருக்கும் திசை எனக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. குழுக்களாய் வாழ்ந்து வந்தவன்தானே மனிதன். அவனுக்கு என்னவாயிற்றுஅதை விட அதிர்ச்சி என்னவென்றால், இந்தச் செய்தி எனக்கு உடனேயே மனுஷ்யபுத்திரனின் “தனித்து வாழ்பவர்கள்கவிதையை  நினைவுப்படுத்தியது. என்னுடைய நூலக அறைக்குச் சென்று அவருடைய ‘அந்நிய நிலத்தின் பெண்புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். இது ஒரு தீர்க்கதரிசனக் கவிதை. உண்மையில் இந்தக் கவிதையை முதல் முறை வாசித்த பொழுது அது பெரிதாக எந்த வித அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து தனித்து வாழும் நண்பர்கள், உறவுகளின் அவலநிலையை மட்டும் எண்ணி வருத்தப்பட்டேன்ஆனால் இந்தச் செய்திக்குப் பிறகு மண்டையில் யாரோ அடித்தது போன்றதொரு உணர்வு ஏற்பட்டதுஅதிலும் அந்த இறுதி வரிகள் ஒருவேளை மனுஷ்யபுத்திரன் இந்த செய்தியைக் கேட்ட பிறகு எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுமளவிற்குத் துல்லியமாக இருக்கிறது.  

“…

காலை 9 மணிவரை 

கேட்டில் செய்தித்தாளும் 

பால் பாக்கெட்டும் இருந்தால் 

பெல் அடியுங்கள் 

திறக்காவிட்டால் 

தயக்கமின்றி 

கதவை உடையுங்கள்

ஐரோப்பாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏதோ ஒரு மூலையில் இறந்து போன பெயர் தெரியாத அந்த சாதாரண மனிதருக்குத் தெரிந்திருக்குமாஅவரைப் பற்றி ஏற்கனவே தமிழில் ஒரு கவிஞன் இரண்டு பக்கங்களுக்குக்குறி சொல்லிக்‘ கவிதை ஒன்று வரைந்திருக்கிறான் என்று

எனவேதான் கூறுகிறேன், இவன் ‘சாமான்யர்களுக்கான கவிஞன்என்று. இவன் ‘சாதாரணர்களின் பாணன்என்று.