‘கெவுளி’ அடித்தது. திடீரென சுப்பையாவுக்கு முழிப்பு வந்தது. இப்படித்தான் இப்போது எல்லாம் சரியாகத் தூக்கம் வருவதில்லை. சின்னச் சின்ன சத்தங்களுக்கு எல்லாம் முழித்துக்கொள்கிறார். உடனே பழைய நினைவுகளுக்கு சென்றுவிடுகிறார். பின் தூக்கம் வருவது சிரமமாகிவிடுகிறது. பல நேரங்களில் என்ன செய்கிறோம் என்று மறந்துவிடுகிறார். ஒருநாள் அப்படித்தான், பாத்ரூம் சென்றவர் அப்படியே உட்கார்ந்துவிட்டார். எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்து இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. ஏதோ சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்கவே திடீரென சுதாரித்தவர், பின் கால்களை எல்லாம் கழிவிக்கொண்டு வெளியே பார்த்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அப்படி அமர்ந்து இருக்கிறார். அவருக்கு ஒன்றும் பெரிதாக வியாதி எல்லாம் ஒன்றும் இல்லை.

ஒரு நாள் காபி குடிக்க ஹோட்டல் சென்றார். காப்பியைக் குடித்து முடித்தவர் நினைவில் மனைவி காப்பி கொடுத்த ஒரு சம்பவம் வர, அப்படியே காப்பி டம்ளருடன் அமர்ந்து இருக்கிறார். சர்வர் மிக அருகில் வந்து கூப்பிடவே பின் மீண்டு இருக்கிறார். மீண்டும் கெவுளி அடிக்கவே, அந்தப் பல்லியையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏறக்குறைய பல்லியின் நிலைதான் சுப்பையாவுக்கும். இருவரும் ஒரே அறையில்தான் நாள் முழுவதும் இருக்கிறார்கள். இருவரும் வாய்விட்டு பேசிக்கொள்ளவில்லையே என்பதைத் தவிர, இருவரும் ஒருவரை பார்த்துக்கொண்டே நாட்களைக் கடத்துகிறார்கள். பல்லிக்காவது சாய்ந்து கொள்ளதோள்போல ஒரு சுவர் கிடைத்து இருக்கிறது. ஆனால், தனக்கு… பின் மெல்ல பல்லியையே பார்த்துக்கொண்டிருந்தார். பின் எப்போது தூங்கினார் தெரியவில்லை.

திடீரென முழித்தவருக்குத் தொண்டையடைப்பதுபோல் இருந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் பரவயில்லை என்று நினைத்தார். அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது, வீட்டு வேலை செய்யும் ஆயா இன்று வரவில்லை என்பது. வாட்ச்மேன் இருப்பான், ஆனால் அவன் வீட்டில் உள்ள முன்னறையில் தூங்கிக்கொண்டு இருப்பான். அவனை உடனே கூப்பிட முடியாது. தானே எழுந்து போகலாம் என்று நினைத்தால் முடியவில்லை. கால் எல்லாம் ஒரே வலி. பயம்வர அப்படியே படுத்து இருக்கையில் அவரை அறியாமல் கண்களில் தண்ணிர் வர ஆரம்பித்தது.

நேற்று இரவு தூங்க செல்லும்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவே போய் கதவைத் திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அந்த நேரத்தில் மகள் தன் பிள்ளையுடன் வந்திருந்தாள். எட்டிப் பார்த்தார். மாப்பிள்ளையை காணவில்லை. அவள் கண்கள் கலங்கியதை வைத்து ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை என்று புரிந்துகொண்டார். அதை காலையில் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தார். மகளும் ஒன்றும் சொல்லவில்லை. மாடியில் அவர்கள் படுக்க சென்றார்கள். பின் இவர் வந்து படுத்துக்கொண்டார். பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனார்.

சுப்பையா சிறு வயதில் இருந்தே எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தவர். அவர் அப்பா அப்படி ஒன்றும் பணக்காரரும் இல்லை அதற்காக ஏழையும் இல்லை. நன்றாகப் படித்தார். நல்ல வேலையில் சேர்ந்தார். இரண்டு அக்காக்கள் திருமணம் முடிந்த கையோடு சுப்பையாவிற்கும் திருமணம் செய்ய எவ்வளவோ முயற்சித்தார் அவர் அப்பா. ஆனால் சுப்பையாவிற்கு திருமணம் நடக்கையில் அவருக்கு வயது 33. மிகவும் சந்தோசமாகவே அவர் வாழ்க்கை தொடர்ந்தது.

சுப்பையாவின் மனைவி நல்ல அழகு. நல்ல குணம். மாமியாரை நன்றாக அனுசரித்து நடந்தாள். ஆனால் அவருடைய அப்பாவும், அம்மாவும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. உடனே தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்கள். இவர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.

தனிக்குடித்தனம் சென்ற சுப்பையாவும் கமலாவும் வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்தார்கள். பத்தே மாதத்தில் மிக அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தாள் கமலா. அதே நேரத்தில் சுப்பையாவின் பிஸினசும் நன்றாக நடந்தது. பிள்ளை பிறந்த அதிர்ஷ்டம் என்று கொண்டாடித் தீர்த்தார். மகளுக்கு ப்ரியா என்று பெயர்வைத்தார்.

மகள் பிறந்த அடுத்த நான்கு வருடத்தில் அருண் பிறந்தான். அவ்வளவுதான் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். மகன் பிறந்த சந்தோசத்தில் ஊருக்கே விருந்து வைத்துக்கொண்டாடித் தீர்த்தார். ஒரு சமயத்தில் அவருக்கே வாழ்க்கை சலித்துவிட்டது. அழகான மனைவி. மனதிற்குப் பிடித்த பிள்ளைகள். தேவைக்கு அதிகமாகவே சொத்து. கை நிறைய பணம். இதற்குமேல் என்ன?

ஒருமுறை குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றார். சாமி தரிசனம் முடிந்து பிரகாரத்தில் அமர்ந்து இருக்கையில், மிகுந்த சந்தோசத்தில் மனைவியிடம் சொன்னார்:

“கமலா! நான் எவ்வளவு கொடுத்துவைத்தவன். உன்னைப்போல அழகான, குணமான மனைவி கிடைக்க? நான் இன்று இறந்தால்கூட எனக்குக் கவலை இல்லை. நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட்டேன்”

“சீ வாய மூடுங்க. என்ன பேச்சு பேசறீங்க? கோயில்ல பேசுர பேச்சா இது. என்னவோ 80 வயசு கிழவன் மாதிரி? எழுந்து வாங்க சீக்கிரம் வீட்ட பார்க்க போகலாம்”

“இல்லம்மா. கல்யாணம் ஆகி நமக்கு 14 வருசம் ஆச்சு. நீ எனக்கு எந்த குறையும் வைக்கல. நான் உன்னை நல்லா வைசுருக்கேனா?’

“என்னங்க! இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? நீங்க என் தெய்வங்க” என்றவள் கண் கலங்கவே, உடனே அவளை கோயில் என்று பார்க்காமல் சந்தோசத்தில் கட்டிக்கொண்டார். பிள்ளைகள் வரவே உடனே அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்பினார்.

இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து திடீரென ஒரு நாள் உடம்பெல்லாம் வலிக்கிறது என்று கமலா கூற டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அவர் சில மாத்திரைகள் கொடுத்தார். பின் இரண்டு நாட்கள் கழித்து காலையில் சுப்பையா படுக்கையைவிட்டு எழ முயன்றார். எப்பொழுதுமே சுப்பையாவுக்கு முன்னால் எழுபவள் அன்று எழாமல் இருக்கவே சந்தேகத்துடன் கமலாவைப் பார்க்க, “ஏங்க என்னால முடியலைங்க. தயவு செய்து டாக்டர்கிட்ட கூட்டிப்போங்க. உடம்பை கொஞ்சம்கூட நகர்த்த முடியவில்லை” என்று கதறவே, அப்படியே தூக்கிக்கொண்டு, காரில் போட்டு மருத்துவமனைக்கு ஓடினார். டாக்டர் பல கேள்விகள் கேட்டுவிட்டு ஒரு ஊசிப்போட்டு, பெயின் கில்லர் மாத்திரைகள் கொடுத்தார். என்ன ஆச்சர்யம்? அடுத்த 30 நிமிடங்களில் வலி குறைந்துவிட்டது.

இரண்டு நாட்கள் கழித்து கொஞ்சம் வலி இருப்பதாக சொல்லவே, மீண்டும் கிளினிக் அழைத்துச் சென்றார். ஒரு ஊசி போட்டவுடன் கொஞ்சம் வலி குறைந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு நாள் காலை கமலாவால் உடம்பை அசைக்கக்கூட முடியவில்லை. மீண்டும் ஆஸ்பத்திரி. எல்லா டெஸ்ட்டும் எடுத்த டாக்டர், சுப்பையாவை மட்டும் உள்ளே கூப்பிட்டார்,

“பேக் பெயின் சொல்லவே. ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம். ஒரு மாதிரி டவுட் இருக்கவே மற்றொரு ஸ்கேன் செய்தோம். பின் சிடி ஸ்கேன் செஞ்சு பார்த்தோம். முதல்ல டிபியா இருக்கும்னு நினைச்சோம். ஆனா அதற்கு உரிய எந்த சிம்டமும் அவங்களுக்கு இல்லைங்கறதால இந்த முடிவுக்கு வந்தோம்”
பதட்டத்துடன், “என்ன முடிவு டாக்டர்?” என்றார்.

“உடம்பு முழுவதும் கேன்ஸர் பரவி உள்ளது. எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு சிம்டமும் இல்லாமல் எப்படி இப்படிப் பரவியது என்று தெரியவில்லை”

உடல் நடுங்க பதட்டத்துடன், “குணப்படுத்த முடியாதா டாக்டர்?” என்றார்.

“இனி மருந்து மாத்திரைக் கொடுத்துக் குணப்படுத்தி வீட்டிற்குக் கொண்டு செல்லலாம் என்று நினைக்காதீர்கள்”

“என்ன சொல்லவறீங்க டாக்டர்?”

“அவ்வளவுதான். மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். இருக்கும்வரை இருக்கட்டும்”

“எவ்வளவு காலம் டாக்டர்?”

“மிஞ்சிபோனால் இன்னும் இரண்டு வாரம்”

அமைதியாக வெளியே வந்தவருக்கு நீண்ட நேரம் கழித்துதான் உண்மை உறைக்க கதறி அழுதார். துடித்தார். அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 32 நாட்கள் படாத கஷ்டங்கள்பட்டார்.

ஒரு நாள் மாடியில் உள்ள ஒரு அறையில் பிள்ளைகளுடன் படுத்திருந்தார் சுப்பையா. இரவு முழுவதும் தூங்கவில்லை. அதிகாலை 5 மணி இருக்கும். கமலாவிடம் இருந்து போன் கால். கமலா வீட்டின் கீழே முதல் அறையில் படுத்திருந்தாள். பதறிக்கொண்டு போனை எடுத்தார்.

“ஏங்க?”

“சொல்லும்மா?”

“கீழ வாங்க” ஓடினார். படுத்திருந்தாள்.

“என்னம்மா?’’

“கொஞ்சம் கையைப் பிடித்துத் தூக்கிவிடுங்களேன்”

“உங்க அப்பா எங்க?’’

“இப்பத்தான் டீ சாப்பிட வெளிய போனாங்க”

கையைப் பிடித்துத் தூக்கி உட்காரவைத்தார். நிமிர்ந்து பார்த்தவள், “இங்க வந்து பக்கத்துல உட்காருங்க” என்றாள்.

“ஏங்க டம்ளர்ல இருக்க தண்ணியைக் கொஞ்சம் எடுத்துக்கொடுங்க” எடுத்துக் கொடுத்தார்.

“இன்னும் கொஞ்சம் கொடுங்க” கொடுத்தார்.

“இன்னும் கொஞ்சம் குடுங்களேன்”

“ஏம்மா இவ்வளவு தண்ணீர் குடிக்கிற? அதான் பாத்ரூம் போக கஷ்ட படறீல்ல”

“இல்லங்க ரொம்ப தாகமா இருக்கு” மீண்டும் எடுத்துக் கொடுத்தார்.

“பக்கத்துல வாங்க. கொஞ்சம் முதுகை தடவி கொடுங்க” தடவி கொடுத்துக்கொண்டே கேட்டார்,

“ஏம்மா, என்ன செய்யுது?”

“ஏப்பம் வரணும். வர மாட்டேங்குது அதான்” சிறிது நேரம் தடவி கொடுத்துக்கொண்டே இருந்தார். ஏப்பம் வந்தது.

“அப்பா வந்துட்டார். நீங்க போய் தூங்குங்க” உடனே மாடிக்குச் சென்றவர் தூங்கவில்லை.

அத்தைக் கூப்பிட்டார்கள்.

“என்னடா, இன்னும் காலை சாப்பாடே கேட்கல. கொண்டு வரட்டுமானு ரூம்ல போய் கேளு”

அத்தை பையன் சொன்னான், “இல்லை நைட் முழுவதும் டிவி பார்த்தாங்கபோல. அதான் அக்கா அசந்து தூங்குறாங்க”

உள்ளே போனார். படுத்து தூங்கிக்கொண்டிருப்பவளை எப்படி எழுப்புவது? சாப்பிட்டு தூங்கட்டும் என்று எழுப்பினார். எழவில்லை. பின் எழவே இல்லை.

பின் பல மாதங்கள் பைத்தியம் பிடித்தவர் போல் அலைந்தார். தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்தவர் பின் பிள்ளைகளுக்காக வாழ முடிவெடுத்தார். சொந்தங்கள் இவரை மறு கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார்கள். இவர் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. வயது வந்த பெண்ணை வைத்துக்கொண்டு வாழ்வது கஷ்டம் என்று நினைத்து மறு கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் தன் பெண் ப்ரியா ஒப்புக்கொண்டால்தான் கல்யாணம் செய்து கொள்வது என்பதில் உறுதியாக இருந்தார். பெண்ணிடம் மற்றவர்கள் பேச தயங்கவே, சுப்பையாவே பேச தீர்மானித்து, ப்ரியாவிடம் பேச்சை ஆரம்பித்தார்,

“ப்ரியா, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்?”

“என்ன டாடி?”

“நான் சொல்றத கேட்டுட்டு நீ என்ன தப்பா நினைக்க கூடாது”

“பரவாயில்லை. சொல்லுங்கப்பா”

“இல்லம்மா, அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமுனு இருக்கேன். நீ என்ன சொல்ற?’

“ஏம்பா? எப்படிப்பா அம்மாவை உங்களால மறக்க முடிஞ்சுது?”

“இல்லடா, உங்கள பாத்துக்க ஒரு ஆள் வேணாமா?”

“ஏம்பா? உங்கள பாத்துக்கனு சொல்லுங்க. கல்யாணம் பண்ணீங்கன்னா உங்களுக்கு வேணா ஒரு மனைவி கிடைப்பாங்க. எங்களுக்கு ஒரு அம்மா கிடைப்பாங்கன்னு எப்படிப்பா நினைக்கறீங்க?”

“இல்லம்மா”

“நீங்க ஒண்ணும் சொல்லாதீங்கப்பா. நீங்க வேணா கல்யாணம் பண்ணிக்கங்க. என்னையும் தம்பியையும் ஹாஸ்டல விட்டுங்கப்பா” என்றவள் கண்கள் கலங்கியபடி அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றாள்.

அவ்வளவுதான். சுப்பையாவிற்கு யாரோ அவரை செருப்பால் அடித்தது போல் இருந்தது. பின் எத்தனையோ பேர் வற்புறுத்தியும் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை. இதோ மனைவி இல்லாமல், எந்த துணையும் இல்லாமல் முப்பது வருடங்கள் ஓட்டிவிட்டார். பெண் ப்ரியா எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் வீட்டில் தங்க ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணை மிகப்பெரிய பணக்கார இடத்தில் கட்டிக்கொடுத்தார். பையன் மனைவியுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டான்.

இப்படி பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்தவர் தண்ணி கூட குடிக்காமல் தன்னையறியாமல் தூங்கிப்போனார். அடுத்த அறையில் ப்ரியாவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

ப்ரியா வீட்டில் அவளுக்கு எந்த குறையும் இல்லை. நன்றாக பார்த்துக் கொண்டார்கள். கணவன் தங்கமானவன். ஒரு ராஜாத்தி போல ப்ரியாவை தாங்கினான். ஆனாலும் ப்ரியாவின் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருப்பது போல் ஒர் எண்ணம் தோன்றி தோன்றி மறைகிறது. அது என்ன என்ரூ அவளால் கண்டு பிடிக்கவே முடிவதில்லை. ப்ரியா சில நேரங்களில், அவள் கணவன் எத்தனையோ முறை அவளை கேட்டு இருக்கிறான். ஆனால் அவளால் பதில் சொல்ல முடிந்ததே இல்லை. கணவனுக்கோ இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்கிற குழப்பம். அவன் இப்போது எல்லாம் விசாரிப்பது இல்லை.
இப்படி போய்க்கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் ஒரு அதிர்ச்சியான விசயம் காதுக்கு வந்ததில் இருந்து அவள் மனம் இன்னும் தவிக்க ஆரம்பித்தது. பிரச்சனை நல்ல வேலை, கண்வனால் இல்லை. அந்தமட்டும் சந்தோசம். ஆனால் யாரினால் என்று தெரிய வந்த போது, மிகவும் துடித்து போய்விட்டாள். மாமனாருக்கு வயது 68. இந்த வயதில் அவர் சின்ன வீடு வைத்துக்கொண்டிருக்கும் விசயம் அவள் காதுக்கு அரச புரசலாக தெரிய வந்தது. இப்போது ஏற்பட்ட பழக்கம் என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் 20 வருடஙகளாக சின்ன வீடு வைத்துக்கொண்டிருக்கும் விசயம் சின்ன வீட்டம்மாளின் பெண் நிச்சயத்தினத்தன்று வெடித்தது. வீடே சண்டை வீடானது.
ப்ரியா கணவனிடம் ஏதும் கேட்க முடியாத நிலையில் அவன் நொந்து போயிருந்தான். இருந்தாலும் சண்டையிட்டாள். வீட்டில் அழகான மனைவி இருக்கையில் ஒரு சின்ன வீடு. அதுவும் இந்த தள்ளாத வயதிலும் பெண் சுகம் கேட்கிறது.

“ம்ம்ம்…”

ஏனோ அப்பாவின் நினைவு அதிகம் வந்து கொண்டே இருந்தது. எப்படிப்பட்டவர் என் அப்பா/ இளம் வயதில் மனைவியை இழந்து, பிள்ளைகளுக்காக வாழ்ந்து தன் சுக துக்கங்களை இழந்து/??

கணவனிடம் சண்டை போட்டு அப்பாவை பார்க்க அனுமதி கேட்டு, அவர் மறுக்கவே, அவர் வெளியே போன நேரமாக பார்த்து, அப்பாவைப் பார்க்க வந்து சேர்ந்தாள்.

***

காலையில் “அப்பா எழுந்துருங்க” என்று குரல் கேட்கவே எழுந்தார்.

‘என்னம்மா?”

“நான் உங்களுக்கு காலை சாப்பாடு வைச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறேன்பா”?

“ஏம்மா இரண்டு நாள் இருந்துட்டு போயேன்”

“இல்லப்பா, அவர் தேடுவார்”

“அவர்கிட்ட சொல்லிட்டு தானே வந்த?’

“இல்லப்பா”

“நேற்று நீ வந்த கோலத்த பார்த்தோன ஏதோ மாப்பிள்ளை கூட பிரச்சனையோனு பயந்துட்டேன்மா”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. நான் உங்க பொண்ணுப்பா. எப்படி நடந்துக்கறதுனு எனக்கு தெரியாதா என்ன?”

இந்த வயதில் மாமனார் சின்ன வீடு வைத்து இருப்பது குடும்பத்துக்கு தெரிந்து, அதனால் பிரச்சனை வெடித்து, ப்ரியா அவர் கணவருடன் சண்டை பிடித்து, தனிக்குடித்தனம் போக அடம்பிடித்து, அதனால் ப்ரியாவின் கணவர் கடுப்பாகி கண்டபடி திட்ட, கடுப்பான ப்ரியா வீட்டை விட்டு வெளியே அந்த இரவில் கணவனுக்குத் தெரியாமல் வந்ததை, அப்பாவிடம் சொல்ல ஏனோ ப்ரியாவிற்கு தோணவில்லை.

“அப்பா”

“என்னம்மா?”

“இந்த பக்கம் திரும்புங்க” என்றவள் அப்படியே அப்பாவின் காலில் விழுந்து,

“அப்பா என்ன மன்னிசுடுங்கப்பா. உங்க வாழ்க்கைய கெடுத்த பாவிப்பா நான். உங்களை இன்னொரு கல்யாணம் பண்ணக்கூடதுனு சொல்லி உங்க சந்தோசத்த கெடுத்த பாவிப்பா நானு” என்று கதறி கதறி அழும் ப்ரியாவை,

ஆச்சர்யத்துடன் பார்த்து திகைத்து நின்றார் சுப்பையா!

***