உடலரசியலே நாட்டு அரசியலாக… ஈழவாணியின் வெண்ணிறத்துணி

ஒரு மொழியில் எழுதப்பெற்ற பனுவல்களின் மீது பெண்ணியத்திறனாய்வு என்ன வகையான வாசிப்புகளையும் திறனாய்வுகளையும் செய்கிறது? என்ற கேள்விக்குப் பல்வேறு பதில்களைச் சொல்கிறது கோட்பாடாகத் தொடங்குதல் Beginning theory(1995) என்னும் நூல். அந்நூலின் ஆசிரியரான பேரி பீட்டர் Barry Peter ஒரு கல்விப்புலத் திறனாய்வாளர். திறனாய்வுக்கான கோட்பாடுகளின் தோற்றத்தையும் இயங்குதளங்களையும் முன்வைத்து வரைவுகளை உருவாக்கிய அவர் ஒவ்வொரு திறனாய்வுக் கோட்பாட்டையும் இலக்கியப் பனுவல்களின்மீது செய்முறைத் திறனாய்வாக ( Practical Criticism) நிகழ்த்திக் காட்டியுள்ளார். பெண்கள் எழுதிய பனுவல்களைத் திறனாய்வுக்குட்படுத்தும்போது என்ன செய்யவேண்டும் என்பதற்குப் பின்வரும் இரண்டு பதில்களை முதன்மையாகச் சொல்கிறது.

1.பெண்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2.பனுவல்களில் வெளிப்படும் பெண்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்வது இரண்டாவது நிலை.

குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் பெருநிகழ்வுகளைக் கொண்டு நாட்டின் வரலாறுகள் பேசப்படுகின்றன. குறிப்பிட்ட வெளிகளில் நடக்கும் பெருநிகழ்வுகளும் வரலாற்றின் போக்கைத் திசைதிருப்பவும் காரணங்களாக இருக்கின்றன. அப்பெருநிகழ்வுகளை நேரடியாகப் பதிவுசெய்வன கட்டுரை எழுத்துகளாகவும் மறைமுகமாகப் பதிவுசெய்வன புனைவு இலக்கியங்களாகவும் ஆகின்றன.  புனைவிலக்கியங்களைத் தமிழ் மொழியில் பெரும் எண்ணிக்கையில் தோற்றுவித்த பெரும் நிகழ்வு ஈழப்போர்.

தனி ஈழத்தாயகம் ஒன்றை உருவாக்க நினைத்து, போராட்டங்களாகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிரான போராகவும் 30 ஆண்டுகள் நடந்த அப்பெருநிகழ்வு தமிழ் இலக்கியப்பரப்பு அண்மையில் எதிர்கொண்ட பெரும் நிகழ்வுகளில் ஒன்று . தமிழகத்தில் அதனையொத்த பெருநிகழ்வுகள் சில உண்டு என்றாலும் நீண்ட கால அளவு என்ற வகையிலும் கூட்டங்கூட்டமாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உயிர்பலிகளையும் புலம்பெயர்தலையும் அனுபவிக்கக் காரணமாக அமைந்த ஒன்று என்பதால் ஏராளமான இலக்கியப் பனுவல்களை எழுதத்தூண்டியதாக ஆகியிருக்கிறது.

வலிகள், இழப்புகள், அழிவுகள் வழியாக அறியப்படும் பெருநிகழ்வுகள் வெற்றிக்குப் பின் களியாட்டங்கள் வழியாகக் கொண்டாடப்படுவதுண்டு. அதனை எழுதும் பனுவல்கள் பெரிதும் பேசப்படுவதில்லை. அதற்கு மாறாகத் தோல்விகளையும் தொடரும் வலிகளையும் நிகழ்வுகளாக்கிச் செய்யப்படும் பனுவல்களே ஆகச் சிறந்த இலக்கியப் பனுவல்களாகக் கொண்டாடப்படுகின்றன. 2009இல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னால் முடிவுக்கு வந்த ஈழப்போர் அப்படியான பனுவல்களைக் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக எழுதும்படி தூண்டிக்கொண்டே இருக்கின்றது. நேரடி அனுபவங்களாகவும் உள்வாங்கிய உணர்வுகளாகவும் அனுபவத்தவர்களின் கூற்றுகளாகவும் கிடைக்கும் பனுவல்களில் பெண்களின் எதிர்கொள்ளலும் உணர்வும் பலப்பலவாய்ப் பதிவுகளாகியுள்ளன.

அப்பதிவுகளில் பெண்ணுடல்கள் பெரும் நிகழ்வுகளின் கோரத்தைப் படம் வெளிகளாகச் சித்திரித்துக்காட்டியுள்ளன. பெண்ணுறுப்புகளைச் சிதைத்தல் என்னும் சொல்லாடல் ஈழப்போராட்ட காலத்திலும் பின்னரும் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட்ட சொல்லாடல். ஆறு குண்டுகளின் மூலம் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட நிகழ்வொன்றைக் கதையாக்கியுள்ளார் ஈழவாணி. இந்நிகழ்வு அதன் தலைப்பாலும் சொல்லப்பட்ட முறையாலும் இலக்கியப் பனுவல்களின் நுட்பத்தையும் பெண்ணிய எழுத்தின் முன்மாதிரியாகவும் இருக்கிறது.

வெண்ணிறத்துணி என்பது கதையின் தலைப்பு. கதை நிகழும் வெளி போர் நடந்த யாழ்ப்பாணப்பகுதியோ, மட்டக்களப்புப் பகுதியோ அல்ல. இலங்கையின் தலைநகர் கொழும்பு. புத்தமதத்தைப் பின்பற்றும் சிங்கள மொழி பேசும் சிங்களர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு இலங்கை. தமிழ்பேசும் மக்கள் சிங்களர்களைவிட எண்ணிக்கையில் குறைவு. தமிழ் பேசினாலும் மதத்தால் இசுலாமியர்களாகவும் சைவர்(இந்து)களாகவும் பிரிந்திருக்கின்றனர். சைவ சமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் வடக்கிலங்கையில்- யாழ்ப்பாணப் பகுதியில் – பெரும்பான்மையாகவும் கிழக்கிலங்கைப் பகுதியான மட்டக்களப்புப் பகுதியில் இசுலாமியர்கள் பெரும்பான்மையானவர்களாகவும் இருக்கின்றனர். என்றாலும் இலங்கையின் தலைநகரான கொழும்பு அனைத்து மொழியினருக்கும் மதத்தினருக்குமான வெளியாக இருக்கிறது. அவரவர்களுக்கான பகுதியை உருவாக்கிக் கொண்டு கொழும்புப் பெருநகரில் வசிக்கிறார்கள். அப்பெருநகரில் நடக்கும்/ நடந்த கதையாக வெண்ணிறத்துணி கதையை எழுதியிருக்கிறார் ஈழவாணி. கதையின் தொடக்கத்தில் :

“விசர் பிடித்திருக்கலாமோ?”

“இருக்கலாம்… நிச்சயமாக அவள் யாரோ சில ஆண்களுடன் கள்ளத் தொடர்பும் வைத்திருக்கலாம்”

இதுதான் பெருநகரின் பொந்து வீடுகளிலும்கூட உலாவிக் கொண்டிருக்கும் பேச்சு. இராணுவத்தில் இருந்தமையால் சண்டைகள், கொலைகள், ரத்தக் கவுச்சிகளாக கிடந்த மனித பிண்டங்களைப் பார்த்ததிலும் புத்தி பேதலித்து இருக்கலாம். பொடியனைப் பார்த்தால்வயசு ஒரு 35தான் வரும் என்றும் சிலர் பேசிக்கொண்டனர். விசர் பிடித்தது யாருக்கு? அவளுக்கா? அவனுக்கா? என்பதற்கான பதிலைப் பெற விரும்பும் வாசகரைக் கதையின் முடிவுவரை வாசிக்கும்படி தூண்டுவது புனைகதை எழுத்தாளரின் திறன்.

போர்ப் பின்னணி கொண்ட உணர்ச்சிகரமான நிகழ்வொன்றைக் கொண்ட கதையை சிறிய அளவிலான அங்கதத் தொனியுடன் சொல்லியுள்ள ஈழவாணி கதைத் தலைப்பில் ஒரு ரகசியத்தையும் வைத்திருக்கிறார். ஆறு குண்டுகளைத் தனது பிறப்புறுப்பில் தாங்கி மரித்துப் போன நிர்மலினி, தமிழ்ப் பெண். அவள்மீது தீராக் காமத்துடன் காதல் கொண்ட கொடித்துவக்கு சிங்களன்; ஆர்மிக்காரன். அந்தத் தகவல்களைத் தரும் பகுதியை இப்படி எழுதுகிறார். அதில்தான் தலைப்பின் பின்னணியும் இருக்கிறது: நிர்மலியின் புருஷன் வடபகுதியில் இறுதி யுத்தம்வரை ஈடுபட்ட ராணுவக் குழுவோடு இருந்தவன். தற்போதும் வடபகுதியில் சிறப்புப் பிரிவில் உயர்பதவி பெறப்பட்டுக் கடமையாற்றிக் கொண்டிருப்பவன்.  அவன் விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டால் காமத்தி கடவுள் மூலஸ்தானத்தைவிட்டு நகராது. இதுதான் வெளியே தெரிந்த கதை.

ஆனால் மூலஸ்தானத்தில் தெரியாத ஒரு கதை விடுமுறை காலத்தில் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. 2008 காலப்பகுதியில் அவர்களுக்கு திருமணம் நடந்து இருந்தும் நிர்மலி இன்றுவரை கருத்தரிக்கவில்லை. அதற்காக அவளின் ஆர்மிக்காரன் புருஷன் கொடித்துவக்கு எந்தச் சினத்தையோ வன்மத்தையோ அவள்மீது காட்டியதில்லை . அதுமட்டுமல்ல திருமணத்தில் முதலிரவில் சிங்களவர் கலாச்சார படியும் வெள்ளைத்துணி விரித்து விடுவார்கள். கட்டாயமாக அதில் ரத்தம் வடிந்து இருக்கவில்லை என்றால் பெண்ணைக் கற்புடையவள் இல்லை என விலக்கி வைத்துவிடுவார்கள். நிர்மலியின் கொடுத்துவக்கோடான முதலிரவில் ரத்தம் வடியவில்லை. அது தெரிந்ததும் உறவினர்கள் விலக்கி வைத்துவிடக் கூறியும் பொருட்டாகவே மதிக்காமல் அவள் மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவன் விடுமுறைக்கு மட்டுமே கொழும்புக்கு வருபவன். அவள் இல்லாத காலங்களில் நிர்மலியின் உடலும் அதன் அழகும் பலருக்கும் காட்சிப்பொருளாகவும் கற்பனைக்குரியதாகாவும் இருந்தது. அப்படி இருப்பதை அறிந்தவள் என்ற போதிலும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவள் நிர்மலினி.

இங்கே பெண்ணுடலை ஆண்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதில் அந்த உடல் ஒரு பூரணத்துவம் பெறுவதாக அவளே நம்புகிறவளும்கூட. தோள் மூட்டின் ஓரங்களில் கிழிந்தும், மார்புப் பகுதி வெடித்து ஓட்டை விழுந்த ஆடை அணிந்த அலங்கோலங்களுடன் திரிந்து கொண்டிருந்தவள், இப்பொழுதெல்லாம் அந்த இடத்தின் ஓடக்கரை அழகி என்று அனேக வாக்குகளை எட்டிக்கொண்டு இருந்தாள். அந்தச் சேரி குடியிருப்பின் இளசுகள் தொடங்கி முதிர் கிழங்கள் வரை யாழ் பீடாவை வாய்க்குள் போட்டுக் குதப்பி குதப்பிச் சப்புவதின் சுகத்தை அவள் அந்தத் தெருக்களில்திரியும் தருணங்களில் எல்லாம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆர்மிக்காரன்ட மனுஷி என்பது சற்றுத் தள்ளி நிற்க வைத்தாலும் திமிரிக்கொண்டு திரியும் அரபிக்குதிரையைப் போன்ற அவள் அழகை ரசிக்க அந்தச் சேரி குடிசைகளைத் தாண்டிய கண்களும் தவறுவதில்லை.

ஆண்களின் எண்ணங்களுக்கும் கற்பிதமான பாலியல் இச்சைகளுக்கும் காரணமான அந்தப் பெண்ணின் உடல் எதையும் பொருட்படுத்தியதில்லை. ஆர்மிக்காரன்ட மனுசி என்ற பாதுகாப்பு இருப்பதால் கூட அவள் யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம்.  அதையும் கதாசிரியர் கதையில் சொல்லவும் செய்துள்ளார்: காய்கறிக் கடை, இறைச்சிக்கடை என தினம் ஒரு கடையில் அன்றைய நாளுக்கான பிறப்பின் பூரணத்துவம் பெற்றாலும், சேரிக்காரிதானே என்றோ, அல்லது தம் பார்வைகளுக்கும் எண்ணங்களுக்கும் சுகமளிக்கும் காமத்திக் கடவுளை யாரும்வெளிப்படையாகத் தீண்ட முயற்சித்த கதைகளோ அல்லது சாமத்தில் பக்தர்களை அனைத்த கதைகளோ வெளிவரவில்லை. ஏனென்றால் அவள் ஆர்மிக்காரன் மனுஷி என்பதாலிருக்கலாம் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் மூலஸ்தானத்தை – வீட்டைவிட்டு வெளியே வராமல் கொடித்துவக்குக் காமத்தை அள்ளியள்ளித் தருகிறாள் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, மூலஸ்தானத்தில் நடப்பதோ வேறு.

நிர்மலி, தனது உடலை – காமங்கொப்பளிக்கும் உடலை தேச அரசியலுக்கு அர்ப்பணித்த உடலாக ஆக்கிக் கொண்டிருந்தாள். அதைப் பின்வருமாறு எழுதுகிறார் ஈழவாணி.

பின் நாட்களில் காமம் துய்க்கும் தருணங்கள் எல்லாம் அவளுக்குப் பயங்கரமானதாய் இருந்தது. அவள் அடங்காத காமத்தோடு அவளைத் தீண்டி உச்சமடையும் தருணங்களில் எல்லாம் கற்பழித்து சீரழிக்கப்பட்ட இசைப் பிரியாவை பற்றிக் கேட்கத் தொடங்கினாள். இன்னும் சில கூட்டு புணர்ச்சியால் சீரழிக்கப்பட்டும் வன்காமப் புணர்வால் சாகடிக்கப்பட்ட பெண்களிற்கும் காரணமாக இருந்தவர்களில் நீயும் ஒருத்தன்தான் எனவும், எப்படி… எந்த முறையில்.. இப்படியா… இப்போது நீ என்னை புணர்வது போன்றா… என்ற கேள்விகளை ஒவ்வொரு தொடுகையின் போதும் சத்தமிட்டு ஆவேசமாக கேட்கத் தொடங்கினாள். அவன் காமத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டு செல்லும் போதெல்லாம் விசர்ப் பிடித்தவளாய் கத்த ஆரம்பித்து விடுவாள்.

நிர்மலி, கொடித்துவக்குவோடு கூடும் எந்தப் புணர்ச்சியும் அவளின் விருப்பத்தோடும் ஆசையோடும் கூடிய புணர்ச்சியாக இருந்ததில்லை. அதனால்தான் அவளுக்கு ஒரு பிள்ளை உருவாகவில்லை என்றே நம்புகிறாள். தனக்கொரு பிள்ளையைத் தரமுடியாத பாவச்சின்னம் தனது புருஷன் கொடித்துவக்குவின் உடலே என்றே எண்ணுகிறாள். அந்த எண்ணம் விசமாக அவளுக்குள் படர்ந்துகொண்டிருந்தது. இதை அறியாமலேயே அவன் எப்போதும்போல அவளது அக்குள் நாற்றத்தில் கிறங்கிக் கொண்டே இருந்தான்.

அவளது உடலோ பழிவாங்கிவிடும் தீவிரத்தில் அவனிடம் கேள்விகளையே கேட்டுத் துன்புறுத்தியது. பெண்ணுடலின் பழிவாங்கலைத் தாங்கமுடியாத ஆண் உடல் ஆண்குறியையொத்த இன்னொரு ஆயுதத்தைத் – துப்பாக்கியைத் தூக்கிவிடுகிறது. காமத்தின் வெறி தலைமுடி தொட்டு கால் நகம் வரை விறைத்துப்போக, அவள் வார்த்தைகளின் உச்சத்தை தாங்க முடியாது, அருகில் மேசையில் கிடந்த பிஸ்டலை எடுத்து அதே வேகமடங்காமல் நிர்மலியின் பெண்குறியில் ஆறு குண்டுகளையும் வேகமாகச் செலுத்தி தீர்த்தான் விறைப்பு அடங்கும் வரை… அடங்கிக் கிடந்த அவளிடமிருந்து முதலிரவில் விரிக்கப்பட்ட வெண்ணிற துணியில்படிந்து கறைபடாத இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இரத்தம் படிந்த வெண்ணிறத்துணிக் காட்சியோடு கதை நிறைவடைகிறது.

ஆர்மிக்காரன்ட மனுசி என்ற பாதுகாப்புடன் இருக்கும் நிர்மலியின் உடலுக்குள் ஓர் அரசியல் இருந்திருக்கிறது. கொடுத்துவக்குவின் உடலில் கொப்பளிக்கும் காமத்திற்கிணையான காமத்திளைப்பும் தேவையும் நிர்மலியின் உடலிற்கும் தேவை என்றாலும் அந்த உடல் இன்னொரு அரசியலை உள்வாங்கிய உடலாக மாற்றம் கொள்கிறது என்பதைக் கதாசிரியர்முன்வைக்கிறார். அந்த அரசியல் வெளிப்பாடு உடலுக்குள் தேக்கவைத்த காமத்தீ அல்ல; வேறொரு தீ. நாட்டரசியலை உள்வாங்கிய தீ அது. பழி வாங்கும் நோக்கம் கொண்ட உடலரசியல்.

தன்னுடல் மீது ஆதிக்கம் செலுத்துவும் காமத்தைத் தணித்துக் கொள்ளவும் உரிமங்கொண்ட கணவன் கொடித்துவக்குவின் – சிங்களனான கொடித்துவக்குவின் காமத்திற்கு இணங்கிக் கொண்டே அவனைக் காமத்தின் உச்சத்திற்குச் செல்ல விடாமலும், அவனது வாரிசை ஏற்றுப் பிள்ளையொன்றைப் பெற்றுவிடக் கூடாது என்றும் முடிவெடுத்த உடலின் அரசியல் அது. இந்த உடலரசியலைச் சரியாக எழுதிக் காட்டிய கதையாக ஈழவாணியின் வெண்ணிறத்துணி அமைந்துள்ளது.

முந்தைய தொடர்: http://bit.ly/2KKo2wp