ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும்

உரிமைகோரிப் போராடும் அமைப்புகளாக வடிவம் கொண்ட பெண் அமைப்புகளின் தோற்றம் ஐரோப்பா 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் துளிர்விட்டது. அடுத்த நூற்றாண்டில் அவை வேலை வாய்ப்பு, பொதுவெளி உரிமைகள், வாக்குரிமைகள் என நகர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய உருவாக்கத்திலும் விமரிசனத்திலும் தடம் பதித்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்  ஓரளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் பெண்ணிய இயக்கங்கள் தங்களை வலுவான தரப்பாக நிலைநிறுத்திக்கொண்டன. 1960-களில் முழுமை பெற்ற பெண்களின் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களின் நேரடி விளைவாகவே பெண்ணியத் திறனாய்வும் வலுப்பெற்றது.  

திறனாய்வின் தொடக்க நிலையிலேயே பெண் (female), பெண் நிலை (Feminine) பெண்ணியவாதி (Feminist) போன்ற கலைச்சொற்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை விளக்குவதின் வழியே பெண்ணியத்திறனாய்வு தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது. பெண் என்பது  அடிப்படையில் ஓர் உயிரியல் வரையறை (Biological definition) மட்டுமே என விளக்கிய பெண்ணியத்திறனாய்வு, பெண்நிலை என்பது பண்பாட்டுக்கூறுகளால் வரையறுக்கப்பட்ட பாத்திரவார்ப்பு (Culturally defined character) என முன்வைத்தது. இப்படியான வரையறையை உருவாக்கியதில் பெண்களின் பங்களிப்பைவிட ஆண்களின் பங்களிப்பே அதிகம் என்பது அதன் வாதம். ஆனால் பெண்ணியவாதி என்பது இவ்விரண்டிலிருந்தும் வேறுபட்ட  அரசியல் நிலைப்பாட்டுத்தன்மை (Political stand) என விளக்கம் தரப்பட்டுப் பனுவல்கள் விவாதிக்கப்பட்டன. ஆண்களைவிடவும் பெண்களின் பங்களிப்பு வழியாகவே பெண்ணியவாதி/ பெண்ணியவாதம் என்பன முன்வைக்கப்பட்டன. 

இலக்கியப்பனுவல்களில் பெண்களுக்கு – பெண்பாத்திரங்களுக்குத் தரப்படும் பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்யும்போது அவை எவ்வாறு சமூகவயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டதாக இருக்கின்றன எனப் பார்க்கவேண்டும் என பெண்ணியத்திறனாய்வால் வலியுறுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் ஆண்கள் எழுதிய எழுத்துகளில்-குறிப்பாகப் புனைகதைகளில் ஆடவரும் மகளிரும் எந்தவிகிதத்தில் எழுதப்பெற்றார்கள் என்பது தொடங்கி, மகளிர், பெண்கள் என்பவர்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டார்கள் எனவும் விளக்கப்பட்டது. எழுதப்பெற்ற பெண்களில் ஏற்கத்தக்க பெண்களாக முன்னிறுத்தப்பட்டவர்களின் இயல்புகளாக எவை சுட்டிக்காட்டப்பட்டன; ஏற்க முடியாத பெண்களின் இயல்புகளாக எவை முன்னிறுத்தப்பட்டன எனவும் தனித்தனியே பெண்ணியத்திறனாய்வு கவனம் செலுத்திச் சுட்டிக்காட்டியது.

இதுவரையிலான பெண்ணியத் திறனாய்வில் மூன்று கட்டங்களைப் பார்க்கமுடியும்.  முதல் கட்டத் திறனாய்வாளர்கள் இலக்கியப்பனுவல்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து காரணங்களை முன்வைத்தார்கள்.  ஆண்களின் பனுவல்கள் வழியாகப் பெண்கள் சமூக வயமாக்கப்பட்டதைக் கண்டறிந்து சொன்னார்கள். அத்தோடு தந்தைவழிச்சமூக அமைப்பின் வழியாக ஆண்மையவாதம் எவ்வாறு செயல்பட்ட து என்பதையும் பேசினார்கள். இதற்காக இலக்கியம் குறித்த மார்க்சியப்பார்வை, அமைப்பியல் விவாதங்கள், மொழியியல் கோட்பாடுகள் போன்றவற்றையும் துணையாக வைத்துக் கொண்டார்கள். இரண்டாவதாக  ஆண்களின் பிரதிகளில் வெளிப்பட்ட ஒதுக்குதல் மற்றும் ஒடுக்குதலை முன்வைத்துப் பெண்களின் உலகமே எழுதப்படவில்லை; ஆண்கள் ஆண்களின் உலகத்தையே எழுதிக்காட்டியிருக்கிறார்கள் என்று வாதிட்டார்கள். இதன் தொடர்ச்சியாகவே பெண்களின் உலகத்தை எழுதிக்காட்டும் பெண் எழுத்துகளின் தேவை உணர்த்தப்பெற்றது. பெண்களின் எழுத்து வழியாகவே பெண்களின் உலகம் எழுதப்படும் என்றும், அதன் மூலம் பெண்களின் பார்வையில் வரலாறு மறு ஆக்கம் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பெற்றது.

தமிழ்ப் புனைகதை வரலாற்றில் பெண்களின் உலகத்தை எழுதிக்காட்ட வேண்டும் என்ற சிந்தனைபூர்வமான உணர்வுடன் எழுத வந்த சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், அம்பை, திலகவதி, சிவகாமி போன்றவர்கள் தொடக்க நிலையில் ஆண்களின் உலகத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வைக்கப்பட்டார்கள் என்பதை எழுதிக்காட்டிய பின்னரே பெண்களுக்கான வெளியையும் உணர்வையும் எழுதும் நிலைக்கு வந்தார்கள். சிறுகதை வடிவம் எப்போதுமே இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளில் அளவுச் சுருக்கத்தை முன்னிறுத்தும் வடிவம். அதில் ஒரு நிலைபாடு, ஓர் உணர்வு வெளிப்பாடு அல்லது ஒருசில கதாமாந்தர்கள் என்பதாகச் சிறுகதை வடிவம் முடிந்துபோகக் கூடியது. இந்தக் கட்டுமான நெருக்கடி இருந்தபோதிலும் தேர்ந்த பனுவலாக்கக்காரர்கள் இரண்டு மூன்று நிலைகளையும் உணர்வுகளையும்  ஒரே கதைக்குள் கொண்டுவரவும் முடியும் என்றும் காட்டியிருக்கிறார்கள். 

திலகவதியின் ஒரு கதையை வாசிப்பதின் மூலம் அவரது பனுவலாக்கத் திறனையும் பெண்ணிய நிலைபாட்டை முன்வைக்கும் பாங்கையும் விவாதிக்கலாம்: கதையின் தலைப்பு போன்சாய் மனிதர்கள்.

குடும்பவெளி என்ற கட்டமைப்பில் ஒரு பெண்ணையும் ஆணையும் -மனைவியையும் கணவனையும் எதிரெதிராக நிறுத்திக்காட்டி, பெண்ணை ஆண் அடக்கிவிடுபவனாக முன்வைக்கிறார் திலகவதி. ஆனால் அதே கதையின் பின்பாதியில் கதைநிகழ்வை இன்னொரு இட த்திற்கு – பெண்களுக்கான நீதிமன்றத்திற்கு நகர்த்தி, பெண்களின் வலியைப் புரிந்துகொள்ளும் – ஏற்று மனம் மாறும் ஆணை எழுதிக்காட்டுகிறார். கதைக்குள் இருக்கும் இவ்விரு கட்டமைப்புத் தொடர்ச்சி மூலம் திலகவதி ஆண்களை முற்றிலும் ஒதுக்கிவைக்கும் பெண்ணிய நிலைப்பாட்டிற்குள் நகராமல் தவிர்க்கிறார். பெண்ணை ஒடுக்கப்படும் வர்க்கமாகவும் ஆணை ஒடுக்கும் வர்க்கமாகவும் காட்டும் எதிரிணைப் பார்வையை விலக்கிவிட்டு, ஆண்களுடன் நேசத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.   

குடும்ப வெளிக்குள் முரண்பட்ட கருத்தோட்டத்தோடு இயங்கும்  ஆணும் பெண்ணும் விட்டுக்கொடுத்தலின் வழியாகவே அந்த அமைப்பை ஏற்கிறார்கள். இருவரும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றாலும் பெண்களே அதிகம் விட்டுக் கொடுப்பவர்களாகவும் அடங்கிப்போகின்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது நடப்பு வாழ்க்கை உணர்த்தும் உண்மை. அடங்கிப்போகின்றேன் என்பதை உணர்ந்த ஒரு பெண்ணை எழுதிக்காட்டும் இந்தக் கதை இப்படித்தொடங்குகிறது:

ஒரு கைக்குஅடக்கமான புத்தகத்தின் அளவே இருந்த அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்த விளக்கை பார்த்துக்கொண்டே நின்றாள் கல்யாணி. அந்த விளக்கை அவள் கணவன் முகுந்தன் வீட்டுக்குக் கொண்டு வந்த அந்த தினத்தை நினைத்துக்கொண்டாள் அன்றைக்கும் அந்த விளக்கை மையமாக வைத்து வீட்டுக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்தது விளக்கின் பயன் ஒளி தருவதே என்ற கட்சியில்  கல்யாணியும் அவர்களுடைய ஒரே மகள் மகாலட்சுமி பேசினார்கள். எண்ணெய் போட்டு திரியேற்றி விளக்கை ஏற்றும் இந்த மின்சார யுகத்துக்கு தேவையில்லை என்பதும், ஒரு அழகுக்காகவும் வீட்டு அலங்காரத்திற்காகவும் வைக்கப்படும் கலைப் பொருள்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது என்பதுவும் முகுந்தனின் வாதங்கள்.
முகுந்தன் சொன்ன விஷயங்கள்  சரியானவையா இல்லையா முக்கியமல்ல. எப்போதும்போல முகுந்தனே இம்முறையும் வெற்றிக் கொடி நாட்டினான்.

ஒவ்வொன்றிலும் வேறுபட்ட கருத்துகள் கொண்ட கணவன்- மனைவியாக முகுந்தனும் அவன் மனைவி கல்யாணியும் இருந்தார்கள் என்பதை உணர்த்துவதற்கான முன்வைப்பு இது. முன்வைப்பிற்குப் பின்னால் முகுந்தனின் போன்சாய் ஆர்வத்தைக் காட்டும் நிகழ்வை எழுதிக்காட்டுகிறார். அந்த நிகழ்வை – ஆலமரத்தைக் கொண்டு வந்த அவனது ஆர்வத்தை இப்படிச் சொல்கிறான்:

ஆவடி கிட்ட வர்ரப்ப இது கண்ல பட்டது ரோட்டோரமா இருந்த ஒரு பாழுங்கிணத்தில் உடைஞ்ச செங்களுக்குப் பக்கத்தில் தலையை நீட்டிக்கிட்டு நின்னுச்சு. அங்கேயே பஸ்ஸுல இருந்து குதிச்சுட்டு அங்கிருந்தவங்கிட்ட வெசார்ச்சு கிணத்துச் சொந்தக்காரர் யாரென்று தெரிஞ்சு அவர் கிட்டெ கேட்டு, இத எடுத்துகிட்டு வந்தேன். முகுந்தனின் முகத்தில் பெருமை கொப்பளித்தது.

முகுந்தனுக்கு போன்சாய் தாவரங்களில் அப்படி ஒரு ஈடுபாடு வானளாவி வளரும் ஆலமரத்தையும் அரசமரத்தையும் இப்படி இரட்டை ஜானாகக்குறுக்குவது கொடுமை என்று கல்யாணி, கல்யாணம் ஆன புதிதில் அவனோடு வேறுபட்ட துண்டு.

முகுந்தன் அவளுடைய பேச்சுக்கு மசிபவன் அல்ல. எந்தப் பயிரும் எந்த மரமும் வெட்டப்படுவதும், கத்தரிக்கப்படுவதும், அறுவடை செய்யப்படுவதும் தவிர்க்க முடியாதது என்பது அவன் கருத்து. “விளைந்து நிற்கிற பயிரை அறுவடை செய்வது மட்டும் கொடுமை இல்லையா. பூவையும் காயையும் கனியையும் பறிப்பது மட்டும் கொடுமையில்லையா” என்பான்.

நீங்கதான் செடியை கொண்டாந்ததும், ஆணிவேர் எதுன்னு பார்த்து கத்தரிச்சிடறீங்களே. அப்புறம் என்ன பாக்க வேரைக் கூட கத்தரிச் தானே விடுறீங்க

அழகியல் வாதம் x பயன்பாட்டு வாதம் என்பதுபோலக் கட்டமைத்து நகரும் கதை எல்லா நிலையிலும் முகுந்தனின் நிலைபாடே செல்லுபடியாகும் வெளியாக க் குடும்பவெளி இருக்கிறது எனக் காட்டிவிட்டு, தங்கள் பெண்பிள்ளையைப் படிக்க வைப்பதா? திருமணம் செய்து வைப்பதா? என்ற முரண்நிலையைக் கொண்டு வருகிறது.  தனது கருத்தாக இல்லாமல், சுற்றியிருப்பவர்களும் நண்பர்களும் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணை வீட்டில் இருக்க வைத்துத் திருமணத்திற்குத் தயார்படுத்தும் முகுந்தனின் போக்கை ஏற்கமுடியாமல் தவிக்கும் கல்யாணியின் தவிப்பைச் சொல்லும் கூற்று இது:

“எத்தன தடவ சொல்றது அவ கூட படிச்ச பொண்ணுங்கள்ளாம் மேல படிக்குதுங்க. நீங்க மட்டும் கல்யாணம் கல்யாணங்கிறீங்க. அது அவளுக்குப் புடிக்கல இன்னைக்கு காலேஜில இருந்து லெட்டர் வேற வந்துச்சு.. அதப் பார்த்துட்டு ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தா…

இத்தவிப்பை அவனுக்குப் புரியவைக்க அவள் கையாண்ட உத்தியே அவளது தோழி சகுந்தலாவைச் சந்திக்க அழைத்துச் செல்வது. தனது தோழியின் அழைப்பை ஏற்று நீதிமன்றத்தை வேடிக்கை பார்க்கச் செல்வதாகக் கூறிக் கணவனையும் அழைத்துச் செல்கிறாள். சகுந்தலா கல்யாணியின் இளம் பருவத்து தோழி. வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாள். அவர்களை வரவேற்றுப் பேசிய சகுந்தலாவின் பேச்சும் நடைமுறைகளும் அதுவரை முகுந்தன் எதிர்கொள்ளாத பெண்ணின் நடவடிக்கைகளாகவும் பேச்சுகளாகவும் இருந்தன. 

சிரிப்பு ஓய்ந்ததும் சகுந்தலா சொன்னாள் “இதுவும் சர்க்கஸ் தான். இங்கயும் நீங்க சொன்னதைவிட அதிசய சாகசங்களைச் செய்யற பொம்பளைங்க இருக்காங்க. நீங்களே பார்ப்பீங்க. இங்கேயும் கீசக வதம், பாஞ்சாலி சபதம், அர்ஜுனன் தபஸ் எல்லாம் உண்டு வாங்க”

தான் பணியாற்றும் நீதிமன்றத்தைப் பற்றிய புரிதலும் விமரிசனப்பார்வையும் கொண்ட சகுந்தலாவின் முன்னால் முகுந்தன் தனது விவாத த்திறனைக் கைவிட்டவனாய் மாறி நிற்கிறான். அந்த வெளியின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் ஒருவனாகவும், அந்நிகழ்வுகளுக்குப் பின்னே இருக்கும் மனிதர்களின் வலியையும் மனப்பாங்குகளையும் உணர்ந்து  உள்வாங்குபவனாகவும் ஆகிவிடுகிறான். அந்த மாற்றத்தைத் திலகவதியின் சொற்களிலேயே காட்டலாம்:

முகுந்தனின் கண்கள் ஒவ்வொரு வழக்கும் வர வர விரிந்தன. மனிதர்கள் இவ்வளவு கொடியவர்களா? வாழ்க்கைத்துணை என்று ஏற்றுக் கொண்ட ஒருவர்மேல் இத்தனை சித்திரவதைகளை.  ஏன் எப்படி சுமத்துகிறார்கள்?

வரதட்சணைக்காக எரிக்கப்பட்டு இறந்து போய்விட்ட ஒரு பெண்ணின் தாய் மகளின் நினைவில் முட்டிக்கொண்டு அழுதாள். மனைவியின் வாய்க்குள் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றி இருந்தான் ஒரு கணவன். கணவனுக்கும் சொந்தப் பிள்ளைகளுக்கும் சாப்பாட்டில் விஷங்கலந்து கொல்ல முயன்றிருந்தாள் ஒருத்தி. மின்சார விபத்தில் கணவன் இறந்து போக. குழந்தைகளைப் பிடுங்கிக் கொண்டு ஒருத்தியை மாமியார் வீட்டார் விரட்டிவிட்டிருந்தார்கள்.

முகுந்தன் அரண்டு போனான். இது அவன் இவ்வளவு அருகில் இதுவரை தரிசிக்காத உலகம்.

சகுந்தலா வழியெல்லாம் தான் கையாண்ட பலப்பல வழக்குகளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தாள்

நீதிமன்ற வெளி, சகுந்தலாவோடு பேசிய பேச்சுகள், தங்கள் வாழ்க்கையைவிடவும் வேறான வாழ்க்கைக்குள் இருக்கும் மனிதர்கள், அவர்களின் வன்மம், குரூரம், ஆசைகள் என எல்லாம் சேர்ந்து அவனைத் திருப்பிப்போட்டுவிடுகின்றன. அதன் விளைவு என்ன என்பதையும் திலகவதி சொல்கிறார்:  

நீண்ட யோசனைக்குப் பிறகு அன்று இரவு முகுந்தன் கல்யாணியிடம் சொன்னான். “நாளைக்கு காலையில நாம்ப ரெண்டு பேருமா போய் மகாலட்சுமியை காலேஜில சேர்த்துவிட்டு வருவோம்” என்றான்.
கல்யாணி சகுந்தலாவுக்கு மானசீகமாக நன்றி செலுத்தினாள். 

இப்படி முடிக்கப்பட்ட அந்தக் கதையைப் பெண்ணியப் பார்வையோடு வாசிக்காமல் நேரடியாக வாசிக்கும் ஒருவருக்கு இந்தக் கதையின் முன்பாதி நடப்பியல் சித்திரமாகவும், பின் பாதி நடப்பியல் அல்லாத திடீர் திருப்பமாகவும் தோன்றுவது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் பெண்ணெழுத்துகள் எப்போதும் பெண்ணியத்தை உள்வாங்கிய எழுத்துகளாக இருக்கின்றன என்பதை உணர்ந்தால் அப்படித்தோன்றாது. பெண்ணியத்தை உள்வாங்கிய எழுத்துகள், பெண்களின் இருப்பை – அவர்களின் விழிப்புணர்வை – அவர்களின் உலகத்தைப் புதிதாக க்கட்டமைக்க முயல்கின்றன. அந்த உலகத்தில் ஆண்களுக்கும் – மாற்றத்தை ஏற்கும் முகுந்தன் போன்ற ஆண்களுக்கும்- இடமுண்டு என்பதே திலகவதியின் பார்வை.