ஜெயமோகன் அவருடைய வலைத்தளத்தில் ஜூன் 6 ஆம் தேதி மாஸ்டர் என்ற தலைப்பில் ஒரு மிக முக்கியமான கட்டுரை எழுதியுள்ளார்.

 இதன் முக்கியத்துவம் என்னவென்றால் நானறிந்து யாருமே மனம் விட்டு தன்னுடைய பிரச்சினை, உளவியல் சிக்கல் என்னவென்பதை இப்படி பகிரங்கமாக எழுதியதில்லை. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கர்வத்துடனும், அகம்பாவத்துடனும் இருப்பதும், அன்றாட வாழ்வில் பிறரை உதாசீனம் செய்வதும், தங்கள் துறையைச் சேர்ந்த பிறரை இகழ்ந்து பேசுவதும் மிகப் பரவலாக நிகழும் ஒன்று என்றாலும், எனக்குத் தெரிந்து யாருமே அந்த மனநிலையை ஒரு நோக்கு நிலையாக, தன்னிலை விளக்கமாக கோட்பாட்டாக்கம் செய்ததில்லை. ஏன் நான் என்னை மாஸ்டர் என்று கூறிக்கொள்கிறேன் என அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கும் பாங்கு முன்னுதாரணமற்றது என்றுதான் தோன்றுகிறது. சமூகத்துடன் முரணுறும் எழுத்தாளன், விமர்சகர்களை கண்டிக்கும் எள்ளி நகையாடும் எழுத்தாளன் ஆகிய வெளிப்பாடுகளை ஜெயகாந்தன் தன் முன்னுரைகளில் செய்திருக்கிறார். நினைவிலிருந்து தரக்கூடிய உதாரணமான வரிகள்: “ஏ ஆடி அழிகிற சமூகமே, உன்னுடைய அங்கம்தான் நான், உன்னுடன் சேர்ந்தாடி அழிய வந்த அங்கமல்ல; உன்னை அழிக்க வந்த அங்கம்; உன்னை அழித்து உருமாற்ற வந்த அங்கம்”. ஆனால் ஜெயகாந்தன் தன்னுடைய தனிப்பட்ட சுயத்தை முன் நிறுத்தியதில்லை; எழுத்தைத்தான் முன்னிறுத்தினார் என்பதே என் மனப்பதிவு. ஜெயகாந்தனின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி ஒரு வரியாவது அந்த முன்னுரைகளில் படித்ததாக நினைவில்லை. அவர் எந்த வயதில் என்ன படித்தார், எப்படியெல்லாம் எழுத பயிற்சி செய்தார் என்பதையெல்லாம் ஜெயகாந்தன் பேசியதாக நினைவில்லை. அதற்கு மாறாக ஜெயமோகன் தன் எழுத்தை முன்னிறுத்தி வாதிடவில்லை. மாஸ்டர் என்று தன்னையே முன்னிறுத்தி வாதிடுகிறார். இதில் ஒரு நுட்பமான, முக்கியமான வேறுபாடு இருக்கிறது. தன் படைப்பைக் குறித்து கர்வம் கொள்வதற்குப் பதில் தன்னைக் குறித்தே கர்வம் கொள்வது.

கலைஞர்கள் எழுத்தாளர்கள் பலருக்கும் இருக்கும் சிக்கல்தான் இது. நார்சிசிஸம் என்று உளவியல் மொழியில் கூறப்படும் சுய பிம்ப ஈடுபாடு அல்லது சுயமோகம். பலர் திடீரென அதன் மறுதலையான தன்னிரக்கத்திற்குச் சென்று மற்றவர்களை உயர்த்தி, தன்னை தாழ்த்திக்கொண்டு புலம்புவதும் நடக்கும். சுருக்கமாகச் சொன்னால் படைப்பாளிகளால் தங்கள் சுயத்தைக் குறித்த சமநிலையை பேண முடியாது அவதியுறுவார்கள். பலர் சட்டென இறைநம்பிக்கை போன்றவற்றில் தங்களை கரைத்துக்கொள்ள முயல்வார்கள். ஜெயமோகன் தன் அந்தரங்க பிரச்சினையை பொதுவெளியில் பகிரங்கமாக பகிர்ந்துகொள்வது ஒருவகையில் பாராட்டுக்குரியது. அதில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம், கன்ஃபெஷன் தொனி அமைந்திருப்பதை கவனிக்கவேண்டும். உளவியல் பகுப்பாய்வில் (சைகோ அனாலிஸிஸ்) முதல் நாள் கெளச் எனப்படும் சாய்நாற்காலியில் அமர்ந்து உளவியல் ஆய்வாளருடன் பேசுவது போன்ற தொனியை மனதில் கொண்டு வாசித்தால் இந்த கட்டுரையின் முக்கியத்துவம் புலப்படும். நான் கூறுவது எதுவுமே வஞ்சப் புகழ்ச்சியோ, நையாண்டியோ அல்ல. கவனமாகவும், சீரிய அக்கறையுடனும், பொறுப்புடனும்தான் எழுதுகிறேன்.

ஜெயமோகனை விமர்சித்து, கண்டித்து இருபது கட்டுரைகளாவது கடந்த பத்தாண்டுகளில் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். நிச்சயம் இன்னமும் விரிவாக அவர் படைப்புகளைக் குறித்து எழுதுவேன். பொதுவாக நானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு செயல்படும் அந்த பணிக்கும், இந்த கட்டுரைக்கும் ஒரு சிறிய மாறுபாடு இருக்கிறது. அது என்னவென்றால் இது ஜெயமோகன் குறித்த விமர்சனம் என்பதைவிட அவர் பதிவேற்றியுள்ள மனோபாவம் குறித்த ஒரு மனம் திறந்த சிந்தனை அல்லது பகுப்பாய்வு. ஏனெனில் அவர் அதை தன்னுடைய மனோபாவமாக, மனோவியலாக பதிவு செய்தாலும் பொதுவாக மானுடர் எதிர்கொள்ளும் சுயகட்டுமானத்தின் அடிப்படை இடர்பாடுதான் அது என்பதால் நாம் அதை பொதுவான பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதுதான் சரியாக இருக்கும். ஜெயமோகன் இங்கே ஒரு உதாரணம்தான். கட்டுரையின் இறுதியில் அவரைப்பற்றிய சில கருத்துக்களை வலியுறுத்திச் சொல்வேன் என்றலும், முக்கியமான பகுதி அதை நோக்கு செல்லும் முற்பகுதிதான். வழக்கம்போல என் கட்டுரை விரிவாகத்தான் இருக்கும் என்பதால், கவனமான ஒரு நீண்ட வாசிப்பிற்குத் தயாராகவும். கூடியவரை உதாரணங்கள் கொடுத்து என் சிந்தனைப் போக்கை எளிமையாகக் கூற முயற்சிக்கிறேன்.

சுய உருவாக்கம்: அகம் கொள்ளும் பாவனை

சுய உருவாக்கத்தின் போக்கில் சுயம் அகவெளியில், அதாவது அதன் நினைவு சேகரத்தின் தளத்தில், தன்னை ஏதொவொரு விதமாக பாவித்துக்கொள்வது, பாவனை செய்துகொள்வது, சித்தரித்துக்கொள்வது என்பது இன்றியமையாதது. உதாரணமாக சிந்தனையாளன் என்று பாவித்துக்கொண்டால்தான் சிந்தனையே செய்ய முடியும். இல்லாவிட்டால் சிந்தனை சிதறிப்போய்விடும். இது எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்தும். நான் ஒரு சமையல்காரன் என்று பாவித்துக்கொள்ளாமல் சமையல் செய்ய முடியாது. செய்தால் சமையல் நன்றாக வராது. நாளிடைவில் எனக்கு சமையல் வராது என்ற உண்மை நிலைபெற்றுவிடும். இன்னொரு எளிய உதாரணத்தைக் காணலாம்.

ஒரு இளைஞன் சிறு வயதிலிருந்தே ஒரு இரு சக்கர வாகன மெக்கானிக் கடையில் உதவியாளராக வேலை செய்து வருகிறான். அவன் தொடர்ந்து அங்கே நடக்கும் பழுது பார்க்கும் செயல்களை கவனிக்கிறான். உதவி செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் தனியாக கடை போட முடிவு செய்கிறான். அப்போது அவனுடைய தன்னிம்பிக்கை என்பது ஒரு பாவனையாகவே இருக்கும். எந்த மேற்பார்வையும் இல்லாமல், ஆலோசனையும் இல்லாமல் தன்னால் பழுது பார்க்க முடியும் என்பதை அவன் நம்பவேண்டும். அந்த பாவனைக்கு அஞ்சினால் அவன் வாழ்நாள் முழுவதும் உதவியாளனாகத்தான் இருக்க நேரிடும். அந்த பாவனை ஒருவாறு சில சிக்கல்களுக்குப் பிறகு அவனை செயல்பூர்வமாகவே ஒரு மெக்கானிக்காக மாற்றினால் அவன் வெற்றியடைந்துவிடுவான். ஆனால் அவன் பாவனை ஒரு மிகையான நம்பிக்கையாக இருந்து, அவனால் சரிவர பழுது பார்க்கமுடியவில்லை என்றால் நாளிடைவில் அவன் தொழில் நலிவடையலாம். திரைப்படத் தொழிலிலும் இந்த உளவியல் முக்கிய பங்காற்றுகிறது. திரைப்படக் கலையை ந ன்கறிந்தவர்கள் கூட தங்களை இயக்குனராக முன்னிறுத்திக்கொள்ள இயலாமல் போகும்போது. அவர்களுடன் விவாதித்து பல திறப்புகளை அடைந்தவர்கள் தங்களை இயக்குனர்களாக முன்னிறுத்திக் கொண்டு வெற்றியடைவது உண்டு. இதன் அடிப்படையிலும் கூட ஒருவர் தன்னை எவ்விதம் பாவித்துக்கொள்கிறார் என்பதே செயல்படுகிறது என்று நினைக்கலாம்.

இதையெல்லாம் விட ஒரு வாகனத்தை ஓட்டுவதையே எடுத்துக்கொள்வோம். அல்லது கணிதம் படிப்பதை எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு உதாரணங்களும் ஜெயமோகன் கொடுத்த உதாரணங்கள்தான். என்னால் வாகனம் ஓட்ட முடியும் என்ற பாவனை இல்லாமல் வாகனத்தை பழக முடியாது. ஒவ்வொரு சிறுமியும், சிறுவனும் அந்த தன்னம்பிக்கை என்று அழைக்கப்படும் பாவனையின் அடிப்படையில்தான் குரங்கு பெடல் போட்டு, விழுந்து எழுந்து சைக்கிள் ஓட்ட கற்கிறாள்/ கற்கிறான். என்னுடைய விழுவது குறித்த அச்சத்தால், என் மெலிந்த தேகத்தால் வலி தாங்கமுடியாது என்ற என் பாவனையால் என்னால் சைக்கிள் கற்க முடியாமல் போயிற்று. இருபத்தைந்து வயதில் முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அந்த பாவனையை கைக்கொள்ள முடியவில்லை. அதேபோல கணிதம் புரிகிறது, எனக்கு கணிதம் புரியும் என்ற பாவனை இல்லாமல் கணிதத்தை புரிந்துகொள்ள முடியாது. பலரும் கணிதம் புரிவதற்குக் கடினம் என நினைத்துவிடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் மனவிலக்கம் கொள்கிறார்கள். அதனால் கணிதம் சிக்கலானதாக மாறுகிறது. மாறிய பிறகு சரி செய்வது கடினம். துவக்கநிலை வகுப்புகளிலேயே நம்பிக்கை வரவேண்டும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பல்வேறு காரணங்களால் எனக்கு அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் எல்லாம் புரியும் என்று நான் நம்பினேன். பாவனை செய்துகொண்டேன். அதனால்தான் வகுப்பறையின் எல்லைகளைத் தாண்டியும் என்னால் அவற்றை பயில முடிந்தது. இந்த பாவனை செய்துகொள்ளும் ஆற்றலை கலாசார மூலதனதனத்தால் தரமுடியும். என் உறவினர்கள் கணிதத்தில் திறனாளர்கள் என்ற தகவலே நான் பாவனை செய்துகொள்ள போதுமானதாக இருந்தது. ஆனால் வரலாறு, இலக்கியம் போன்ற ஹியுமானிட்டீஸ் ஈடுபாட்டால் கல்லூரி புகுமுக வகுப்பிற்குப் பின்னர் கணிதத்தில் விலக்கம் கொண்டுவிட்டேன். இப்போது மீண்டும் உள்நுழைவது கடினமாக இருக்கிறது. மீண்டும் ஒரு பாவனையைப் பயின்று முயற்சி செய்ய வேண்டும்.

ஏதோவொரு துறையில் நமக்கொரு ஆற்றல் இருப்பதாக பாவித்துக்கொண்டால்தான் நாம் அதில் இயங்கமுடியும்.  பல நிலைகளில், தீவிரத்தன்மைகளில் பாவனை கொள்வது நிகழலாம். என்னாலும் மிருதங்கம் வாசிக்க முடியும், நான் மிருதங்கம் வாசிப்பேன் என்று பாவனை கொள்வது வேறு; நான் மிருதங்க சக்ரவர்த்தியாக வேண்டும், மிகப்பெரிய பாடகர்களுடன் இசைக்க வேண்டும் என்று பாவித்துக்கொள்வது வேறு; சமயத்தில் இந்த பாவனை மெள்ள மெள்ள வளர்ச்சி பெறலாம்; அல்லது பெரிய சாதனைக்கான பாவனை எளிய சாதனையில் அமைதியுறுலாம். இந்திய அணிக்காக ஆடுவேன் என்ற கிரிக்கெட் ஆட்டக்கார பாவனை பர்ஸ்ட் டிவிஷனில் நல்ல பெயர் எடுத்ததுடன் அமையதியடையலாம். நான் இங்கு பாவனை என்று சொல்வதை இலட்சியம், குறிக்கோள், விழைவு (ஆஸ்பிரேஷன்) பல வார்த்தைகளில் குறிப்படுவோம். அவற்றிற்கெல்லாம் அடிப்படையில் இயங்குவது மனம் கொள்ளும் பாவனை என்பதே நான் இங்கே கூற முற்படுவது. ஏனெனில் அத்தகைய விழைவு எதையுமே அகம்பாவம் என்று பிறர் கூறலாம். மிக ஒடிசலாக இருக்கும் ஒருவர் ஹெவி வெஹிகில் டிரைவிங் பயில விரும்பினால் அகம்பாவம் என்று ஒருவர் கூறலாம். ஏழை மாணவி நான் மருத்துவராக விரும்புகிறேன் என்று சொன்னால் ஒருவர் அகம்பாவம் என்று கூறலாம். ஒருவர் தகுதிக்கு மீறி கற்பித்துக்கொள்கிறார் என்பதை அகம்பாவம்  என்பார்கள். அந்த அடிப்படையில் யோசித்தால் எல்லா அக விழைவுகளும், இலட்சியங்களும், குறிக்கோள்களும் அகம்பாவத்தின் அடிப்படையில் உருவாவதுதான்.

ஒருவர் பாவம் என்பதெல்லாம் தேவையல்ல; நான் மூன்று வயதிலேயே வயலினை வாசிக்கத் துவங்கிவிட்டேனே என்று கூறலாம். அதுவும் அந்த வயதிலேயே அவரது அகம் கொண்ட பாவம்தான் அது. இசை மேதையின் எல்லா குழந்தைகளும் அதை செய்யும் என்பது விதியல்ல. இன்னொரு குழந்தை அதை உடைப்பதில் அதிக ஆர்வம் காட்டலாம். அதில் விலக்கம் கொள்ளலாம். அல்லா ரக்காவின் மகன் என்பதால் மட்டுமே ஜாஹிர் ஹூசைன் பெரிய தபலா விற்பனராகிவிட்டார் என்று கூறமுடியாது. அது நிச்சயம் உதவிதான். ஆனால் சிறுவயதில் அவருக்கு விளையாட்டின் மீது ஆர்வமும், தபலா மீது வெறுப்பும் ஏற்பட்டிருந்தால் யாராலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. நானும் தபலா வாசிப்பேன் என்று அவர் மனம் கொண்ட பாவனையே அவர் தபலாவில் பெரும் புகழ் பெறக் காரணம். எனவே அகம் கொள்ளும் பாவனை இல்லாமல், சுய சித்தரிப்பு இல்லாமல் மனிதர்கள் இயங்குவதில்லை. எல்லோருக்குமே அகம்பாவம் உண்டு. அதில்லாமல் வாழ்க்கையில்லை. பிறகு ஏன் ஒரு சிலரை மட்டும் அகம்பாவி என்கிறோம்? ஏன் அகம்பாவம் பிரச்சினையாகிறது? பொறுமையாகப் பார்ப்போம்.

அகம்பாவம் திரிந்து அகங்காரமாக மாறும் நிலை

இந்த இடத்தில் என்னுடைய கொலம்பியா பல்கலைகழக பட்டமேற்படிப்பு/ஆய்வுப்படிப்பு அனுபவத்திலிருந்து ஒன்று கூறவேண்டும். அது போன்ற அமெரிக்க பல்கலைகழகங்களில் ஆய்வு மாணவராவது கடும் போட்டிக்கு உட்பட்டது. ஹியுமானிட்டீஸ், சோஷியல் சயன்ஸ் துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் பத்து மாணவ, மாணவியரைத்தான் ஒரு துறையில் சேர்ப்பார்கள். சில துறைகளில் இருபது வரை போகலாம். ஆனால் விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அமெரிக்கர்கள், உலகின் பிற பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து இருநூறு, முன்னூறு பேர் என்ற அளவில் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு துறையில் உள்ள ஆசிரியர்களின் ஆய்வு புலங்களுக்கு, கோட்பாட்டு புலங்களுக்கு ஏற்ப ஆய்வு மேற்கொள்ள விரும்பும் சிலரை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். அதன் விளைவாக பொதுவாக ஆய்வு மாணவர்களின் உளவியலே நாம் முக்கியமான ஒரு பங்களிப்பினை செய்யப் போகிறோம் என்ற அகம்பாவத்தில்தான் இருக்கும். அதை மேலும் தூண்டிவிடும்படி கடுமையான கோட்பாட்டு பயிற்சி, உலகின் சிறந்த முன்னணி அறிஞர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு என சற்றே போதையூட்டும் சூழல் இருக்கும். இதனால் ஆய்வு மாணவர்கள் ஒருவரை ஒருவர் விவாதங்களில் கடுமையாக விமர்சித்துக் கொள்வதும் நடக்கும். பொதுவாகவே சற்றே சண்டைக்கோழி மனோபாவத்தில்தான் நூல்களையும், உரைகளையும் எதிர்கொள்வார்கள். இதை critical energy விமர்சன ஆற்றல் என்று மென்மையாகக் குறிப்பிடலாம்.

பொதுவாக கள ஆய்வு முடிந்து, ஆய்வேட்டினை எழுதும்போது இந்த வேகம் குறைந்து பலரும் பக்குவப்படுவார்கள். பலர் கடுமையான சுய மதிப்பு சிக்கலுக்கு ஆளாவர்கள். தாங்கள் நினைத்த அளவு தாங்கள் மேதையில்லையோ என்ற அச்சம் அவர்களை வாட்டும். தங்கள் மீதான கூடுதல் எதிர்பார்ப்பால் ஆய்வேட்டை எழுத முடியாமல் கஷ்டப்படுவார்கள். கடைசியில் எல்லோரும் பத்தோடு பதினைந்துதானா என்று அயர்ச்சியேற்படும். அதன் பிறகு பணிக்கான வாய்ப்புகளை தேடும்போது மேலும் யதார்த்தம் உறைத்து சற்று பணிவும் கூடிவரும். இந்த பயணத்தில் பலர் கடும் உளவியல் சிக்கல்களுக்கு, சுய நிச்சயமின்மைக்கு, பதட்டத்திற்கு ஆளாவது இயல்பாக இருக்கும். இதில் பெரிய சிக்கலே என்னவென்றால், தன் ஆய்வுத்துறையில் புதியதொரு சிந்தனையை, ஆங்கிலத்தில் cutting edge என்று கூறுப்படும் கூர்மையான எழுத்தை உருவாக்க வேண்டும் என்பதை மட்டுமே ஒரு மாணாக்கர் பாவனை கொள்ள தூண்டப்படுவதால், யாரும் தன்னடக்கத்துடன் நான் சும்மா ஜாலியாக படிக்க வந்தேன் என்று கூற முடியாது. அப்படி வெளித்தோற்றத்திற்குக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் பதட்டம் அதிகரிக்கத்தான் செய்யும். பர்ஃபார்மன்ஸ் ஆன்க்சைடி என்னும் தன் திறன்கள் குறித்த கேள்வி உள்ளுக்குள் கனன்று கொண்டேயிருக்கும். இந்த சூழலில் ஆசிரியர்கள், மாணவர்கள் இருவர் செயல்களிலுமே அகம்பாவம் திரிந்து அகங்காரமாக மாறுவது அடிக்கடி நடக்கும். அடுத்தவரை இகழ்வது, புண்படுத்துவது, புறம்பேசுவது என்று கல்வி உருவாக்க வேண்டிய மாண்பிற்கு மாற்றாக குணக்கேடுகள் தோன்றும். சுயத்தின் பதட்டம் பொதுவாக கொதிநிலையில் இருக்கும். எல்லோர் அனுபவத்தையும் பொதுமைப் படுத்தக் கூடாது என்றாலும் பொதுவாக ஆய்வுப்படிப்பு மனநிலை என்று குறிப்பிடும்படியான அளவு சூழலில் இது போன்ற அம்சங்கள் பரவலாக இருக்கும். இதில் முக்கியமானது என்னவென்றால் புற அங்கீகாரம் என்பதைவிட சுயமதிப்பு சார்ந்த அகவயமான சிக்கல் மிகும் என்பதுதான். அகத்தின் பாவனைகளை ஆய்வு செய்ய கிராட் ஸ்கூல் என்ற ஆய்வுப்படிப்பு முக்கியமான சூழல்.

 சிறுபத்திரிகை சூழல் வித்தியாசமானது. இங்கே பொதுவாகப் பயிலும் கல்வி என்பது கிடையாது. குருகுல வாசம்போல ஏற்கனவே வாசிப்பு, எழுத்தனுபவமும் உள்ள ஒருவரிடம் பழகி, பல விஷயங்களை வாசித்து, எழுதி இந்த சூழலுக்குள் நுழைபவர்கள் அதிகம். பெரும்பாலும் படைப்பிலக்கியமாகத்தான் இருக்கும். அபூர்வமாகத்தான் விமர்சன சிந்தனை, கோட்பாட்டுப் பக்கம் யாரும் வருவார்கள். இந்த சூழலின் முக்கிய பிரச்சினை அங்கீகாரம். அனைவருமே தன் படைப்பு அல்லது எழுத்து முக்கியமானது என்று பாவனை கொள்வது தவிர்க்கவியலாதது. ஆனால் யாருக்குமே போதுமான கவனம் கிடைக்காது. கிடைக்கும் சொற்ப கவனத்திலும் விமர்சனம் அதிகமாகி குறை சொல்லுதலும், தாக்குதல்களும் மிகும். எனவே தான் உழைத்து எழுதியதற்கு என்னதான் மதிப்பு, யார்தான் படிக்கிறார்கள் என்ற நிச்சயமின்மையில் சுயம் பதட்டத்திற்கு உள்ளாகும். கடுமையான அங்கீகாரப் பசி ஏற்படும். அதில் ஏற்படும் மன அவசங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடிக்கொள்வதெல்லாம் இயல்பாக நடக்கும். சிறு பத்திரிகை எழுத்தாளர்களுக்கு பெரிய வாசகப் பரப்பு கிடையாது. தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் கவிஞர் மனுஷ்யபுத்திரனையே ஒருவர் நீங்கள் டாக்டர் ருத்ரன்தானே என்று கேட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு சிறிய வட்டம்தான் இது.

ஆய்வுப்புலமோ, சிறுபத்திரிகைப் புலமோ அகம் கொள்ளும் பாவத்தினால் ஏற்படும் சிக்கல்கள் பொதுவானவை. இவற்றை பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம்: 1) சுயத்தின் பதட்டம், நிச்சயமின்மை. தன்னால் தான் நினைத்த அளவு செயல்படமுடியவில்லையோ என்ற எண்ணத்தால் ஏற்படும் சோர்வு, சுய வெறுப்பு. அதுவே பிறர் மீது கோபமாக, காழ்ப்பாக மாறவல்லது. 2) அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை. இந்த சுழலில் மாட்டிக்கொண்டால் எவ்வளவு அங்கீகாரம் கிடைத்தாலும் பத்தாது. காயசண்டிகைப் பசி.எல்லோர் மீதும் விழுந்து பிறாண்டத் தோன்றும். 3) அகம்பாவத்தில் ஆழ்ந்து போதல். அப்போது அங்கீகாரப் பிரச்சினை இருக்காது. ஆனால் தன்னை புரிந்துகொள்ளாதவர்கள் எல்லோரும் அறிவீனர்கள், பாமரர்கள், ஆட்டு மந்தைக் கூட்டம் என எள்ளி நகையாடத் தோன்றும். ஒருவித மெஸியா மனோபாவம் வந்துவிடும். இந்த நிலையில் சுத்தமாக விமர்சனங்களை செவிமடுப்பது சாத்தியமற்றுப் போகும்.

அகம்பாவத்தின் தீய விளைவுகளிலிருந்து தப்புவது எப்படி?

தன்னடக்கம் என்பது சரியான தீர்வல்ல. அது ஒரு போலி முகமூடி. தன்னடக்கம், நாகரீகம் எல்லாம் அகம்பாவ வாளை போட்டுக்கொள்ள வசதியான உறைகள். அகம்பாவத்தைக் குறித்த தன்னுணர்வு இருந்தாலும் அதை எப்படி கையாள்வது என்பதை அறிவது சுலபமல்ல. இதற்கு மூன்று முக்கிய மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

மிக முக்கியமான முதல்படி சுயகலைப்பும், பன்மையுறுதலும். நான் என்பது ஒற்றை அடையாளம் அல்ல. நான் கற்றவை, படித்தவை, நண்பர்கள் எல்லோரும்தான் நான் என்பதை எப்போதும் மனதில் கொள்வது. நான் என்பது ரயில் வண்டியல்ல; பல்வேறு வண்டிகள் வந்துபோகும் சந்திப்பு நிலையம். நான் ஒரு நாடகப் பாத்திரமல்ல; பல்வேறு நாடகங்கள் அரங்கேறும் மேடை. நான் என்பது அவ்வபோது என்னை குறிப்பிட்ட விதத்தில் வெளிப்படுத்திக்கொள்ளும்  தருணங்களின் தொகுப்பு. இப்படி பார்த்தால்தான் சுயத்தைக் குறித்த சாரம்சவாதப் பார்வையிலிருந்தும், அது ஏற்படுத்தும் அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும். நான் எழுதுகிறேன் என்றும், நான் எழுதியது என்றும் கூறலாமே தவிர என்னுடைய எழுத்து என்று எழுத்தை தன்வயப்பட்ட அடையாளமாக்கத் துவங்கி, நான் எழுத்தாளன் என்பதே முக்கியம், அதனால்தான் நான் எழுதுகிறேன் என்று எழுத்துச் செயல்பாட்டிற்கும் முந்தைய ஒரு சுய விகாசத்தை தனக்கே வழங்கிக்கொள்வது ஆபத்தானது.

இரண்டாவது முக்கியமான படி விமர்சன மனோபாவம். தொடர்ந்து தன் செயல்களை, கூற்றுக்களைக் குறித்த சுய விமர்சனம் இருக்க வேண்டும். அதை மேம்படுத்திக்கொள்ள பிறர் விமர்சனங்களை நாட வேண்டும். பொருட்படுத்த வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் இருப்பை பொருட்படுத்த வேண்டும். தொடர்ந்து அதற்கு அகத்தினுள் எதிர்வினை புரியவேண்டும். இது அகம்பாவத்தின் தாக்கத்திலிருந்து எழுத்தை, படைப்புகளை பாதுகாக்க மிகவும் அவசியமானது, கடைபிடிக்க மிகவும் கடினமானது ஆனாலும் வேறு வழியில்லை.

மூன்றாவது படி உன்னதமான தளம். அதுதான் காருண்யம். வாள்வீச்சில் வல்லவனான ஒருவன் அதை மிக அபூர்வமாகத்தான் பயன்படுத்த வேண்டும். எளிய மனிதர்கள் மீது வீசக்கூடாது. அந்த காருண்யம்தான் பெருங்குணம். எந்த ஒரு துறையிலும் மேதமை அடைபவன், உயர் திறன் அடைபவன் பிறரிடம் காருண்யத்துடன், பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இது சுயகட்டுப்பாடாக இருக்கக் கூடாது; சுய மீட்பாக இருக்க வேண்டும். மலையுச்சிக்குச் சென்ற பிறகு அங்கே வாழ முடியாது என்று சமதளத்திற்கு திரும்பி வந்து பிறருடன் கலப்பதாக இருக்க வேண்டும். ஜென் தத்துவத்தில் ரிட்டர்ன் டு த மார்கெட் ப்ளேஸ் என்று சொல்வதுபோல. “மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற பூங்குன்றன் வரியின் சிறப்பு இதுதான். இத்தகைய மனோபாவத்தை பயிற்சி செய்வது பிறருக்காக அல்ல; இதுவே முழுமையான தற்காப்பு. சுயத்தின் மீட்சி.

இந்த மூன்று உபாயங்களுமே கடினமான பாதைகள்தான். எளிதாக யாரும் பயிற்சி செய்ய முடியாது. பிறருக்குக் கூறலாமே தவிர தானே பின்பற்றுவது கடினம். தொடர்ந்து சறுக்கும். கூடியவரை முயலலாம். எந்த அளவு இதெல்லாம் கைகூடி வருகிறதோ அந்த அளவு நன்மை.

ஜெயமோகனின் மனோவியல்

ஜெயமோகன் மொழி சார் நுண்ணுணர்வு தன்னுடைய பிறவிக்கொடை என்று கூறுகிறார். இரண்டு  வயதிலேயே எழுதப் படிக்கத் துவங்கிவிட்டதாகக் கூறுகிறார். ஒன்றாம் வகுப்பில் ஒரு நாளில் தமிழில் நூறு பக்கம் படிக்க க் கூடியவராக இருந்ததாகக் கூறுகிறார். இந்த திறனை அறியாவயதில் அவர் மனம் கொண்ட பாவனையாக, அகத்தின் பாவமாக அவர் யோசிப்பதாகத் தெரியவில்லை. ஒரு வகையில் இது இயற்கையில் அமைந்துவிட்டதாக நினைக்கிறார். அதுதான் பிறவிக்கொடை என்று சொல்கிறார். பெரும்பாலான சிக்கல்கள் இங்கேதான் துவங்குகின்றன. ஏதோ ஒரு வகையில் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன் போன்ற எண்ணங்கள் உருவாகிவிடுகின்றன. இதன் பலனாக வேறு பல திறன்கள் தனக்கு அமையவில்லை என்று கூறுகிறார். அவையும் மனம் கொண்ட பாவனைகளால்தான் அமையவில்லை. அவரைப் போல மிகத்துரிதமாக மொழிப்புலத்தில் நுழைந்த பலர், வேறு பல திறன்களையும் பெற்றவர்களாக இருப்பதை யாருமே கண்ணுறலாம்க. ஆல்பர்ட் காம்யு கால்பந்து விளையாட்டு வீரராக விளங்கினார். இதெல்லாமே மனம் கொள்ளும் பாவனைகள்தான். பிறப்பில் எதுவுமே நிகழ்வதில்லை, பிறப்பதைத் தவிர. அப்போது நிகழும் ஒரே கொடை உயிர்க்கொடைதான். அதாவது உயிர்ப்புள்ள ஒரு உடல்.

நாம் பிறக்கும்போது அதிக பட்சம் நாம் ஒரு ஹார்ட்வேர் எனப்படும் கணனியின் பெளதீக பகுதிகள் மட்டுமே. அதில் ஆப்பரேடிங் சிஸ்டம், OS, எனப்படும் அடிப்படை மென்பொருள் தளம் கூட கிடையாது. பின்னர் புலன் உறுப்புகள் மென்பொருள் தளத்தை தயாரிக்கின்றன. பின்னர்தான் அதில் பலவிதமான மென்பொருள் செயலிகள் ஏற்றப்படுகின்றன. இதை பிறரால் மட்டும் செய்துவிடமுடியாது. நாமாகவே நம்மை தகவமைத்துக்கொள்கிறோம். அதில்தான் நாம் முதலில் விவாதித்த அகம் கொள்ளும் பாவனை முக்கிய பங்காற்றுகிறது. எத்தகைய மென்பொருள்களை நம்மால் தரவேற்றிக்கொள்ள இயல்கிறது என்பதற்கு பாவனையே காரணம் எனலாம்.

மகாபாரதத்தில் கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல, பிறவிக் கொடையாக யாருடனும் எந்த ஆற்றலும் பிறப்பதில்லை. அப்படி “இயற்கையாகவே” தனக்கு ஆற்றல் அமைந்ததாக நினைப்பதுதான் அகம்பாவம் அகங்காரமாக மாறும் புள்ளி. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி மனம் கொள்ளும் பாவனையும், அந்த பாவனைக்கு ஏற்றபடி சந்தர்ப்ப சூழ்நிலைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்போது நம்மிடம் பிறவிக்கொடையோ என்று தோன்றும்படி சில திறமைகள் அமைந்து விடுகின்றன. கருவிலே திரு, ரத்தத்திலேயே கலந்த திறன் போன்ற கற்பிதங்களெல்லாம் மானுடத்தின் மிக மோசமான மூட நம்பிக்கைகள். மூன்று வயது வரை இசைக்கருவியையே பார்க்காத, இசையையே கேட்காத குழந்தை மாண்டலினை எடுத்து வாசிக்காது. இசைக்கலைஞர் வீட்டிலேயே பிறந்ததிலிருந்து வளர்ந்த குழந்தைதான் மூன்று வயதிலேயே வாசிக்கத்துவங்கி சைல்ட் பிராடிஜி, பிறவிக்கலைஞன் என்றெல்லாம் பெயர் வாங்கும்.

இந்த பிறவியின் கொடை என்பது மிகப்பரவலான, விபரீதமான பாமர மனோபாவம். பிறவிக் கலைஞன், கருவிலே திரு என்றெல்லாம் வெகுஜன மனோபாவத்தை ஊடுறுவி இருப்பது. ஆறாண்டுகளுக்கு முன்னால் ஜெயமோகன் “தேர்வு செய்யப்பட்ட சிலர்” (ஆங்கிலத்தில் chosen few என்பார்கள்) என்ற கட்டுரையை எழுதினார். மே 31, 2014 அவர் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மறுநாள் இதைத் தொடர்ந்து மேலதிக விளக்கமாக விதி சமைப்பவர்கள் என்ற கட்டுரையையும் எழுதினார். “தேர்வு செய்யப்பட்ட சிலர்” கட்டுரையில் நித்ய சைதன்ய யதியிடமிருந்து தான் பெற்ற பார்வையாக ஜெயமோகன் கூறுவதை கவனிக்கவேண்டும்:

“மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை. சிலர்  பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகுதியும் பொறுப்பும் உண்டு. ஆகவே அவர்கள் தியாகங்கள் செய்தாகவேண்டும். அறிஞர்களும் இலட்சியவாதிகளும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கும் பண்பாட்டை சுவைத்து களித்து அதை அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள் பாமரர்கள். தேனீக்கூட்டை பாதுகாப்பதற்காக, தேன் சேகரிப்பதற்காக உயிர்விடுவதற்கென்றே ஒரு தேனீ பிரிவை இயற்கை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப்போன்றவர்களே இந்தச் சிறுபான்மையினரும். அவர்கள் ‘விதி சமைப்பவர்கள் ‘ (டெஸ்டினி மேக்கர்ஸ் ) என்றார் நித்யா.”

ஜெயமோகன் மொழிப்புலத்தில் அவர் மனம் கொண்ட பாவனையை பயன்படுத்த மிகக் கடுமையாக உழைத்தவர். மிகத் துரிதமாக நிறைய எழுதும் ஆற்றலை அவர் அரும்பாடுபட்டு வளர்த்துக்கொண்டார். அதாவது கருதத் தக்கவிதத்தில் நிறைய எழுதுவது. அவர் எழுத்துக்களை விமர் சனம் செய்யும்போது, விமர்சன சிந்தனைக்கு நிறைய வாய்ப்பளிக்கும் ஆற்றல் அவர் எழுத்தில் இருப்பதை கண்டுள்ளேன். விஷ்ணுபுரம் நாவல் சிறந்த உதாரணம். அதன் பிறகு பல நாவல்கள் எழுதிவிட்டார். இப்போது மகாபாரத்தையே உரைநடையில் சுயமான பார்வையில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய இந்த கடும் உழைப்பின் உந்து சக்தி அவர் மனம் கொள்ளும் பாவனையே என்றால் மிகையகாது. அந்த பாவனையின் பகுதியாகத்தான் இந்த பிறவிக்கொடையையும் சேர்த்துக் கொள்கிறார். அதனால் என்ன நிகழ்கிறது என்றால், அகம் கொண்ட பாவனையினால் அவர் நல்கும் உழைப்பு, அதன் வெற்றி தோல்வி ஆகியவை குறித்த மனம் திறந்த அணுகுமுறையைக் கொள்ளாமல், அவருடைய மனோவியல், அவருடைய தனித்துவம் என்பது ஒரு தனிநபரான அவரது ஆளுமை சார்ந்தது என கற்பித்துக்கொள்கிறது. அதைத்தொடர்ந்து அவர் தத்துவார்த்தமாக கற்பித்துக்கொள்ளும் இருவிதமான ஆளுமை குறித்த கோட்பாடுகளும் அவருடைய சுயபிம்பத்துடன் கலந்துவிடுகிறது. என்னுடைய நோக்குநிலையில் பார்க்கும்போது அவர் கிட்டத்தட்ட ஒரு நீட்சேவிய தனித்துவ விகசிப்பை ஹெகலின் வரலாற்று வாதத்தில் பொறுத்திப் பார்ப்பவர் என்று தோன்றுகிறது. அதனால் அவர் வரலாற்றின் இந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மொழியின் ஆன்மாவாக மகத்தான கேள்விகளை எழுப்புபவராகவும், அதற்கான விடைகளைத் தேடி படைப்பியக்கத்தில் ஈடுபடும் எழுத்தாளனாகவும் தன்னை சித்தரித்துக்கொள்ள முடிகிறது. அவர் எழுதிய விதிசமைப்பவர் கட்டுரையில் கூறியது போல தான் ஒரு வரலாற்று ஆகிருதி, ஒரு மாஸ்டர், தன்னுடைய முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியாமல் பிறர் சிறுமைப்பட்டு நிற்கிறார்கள் என்றெல்லாம் யோசித்து விட முடிகிறது. இந்த ஹெகலிய, நீட்சேவிய அணுகுமுறைகளை சற்றே மேலோட்டமாக பரிசீலித்துவிடுவோம்.

படைப்பு வரலாற்றின் சாரமா, தனித்துவ விகசிப்பா?

பத்தொன்பதாம் முற்பகுதியில் ஜெர்மனியில் வாழ்ந்தவர் ஹெகல் (1770-1831). இவரது வரலாற்று வாதம் இவர் பெயரே தெரியாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் போல கடந்த இருநூறு ஆண்டுகளில் பரவி விட்டது. இவரது முக்கிய நூலான Phenomenology of Spirit என்பது 1807 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதைத்தொடர்ந்து அவர் மிக விரிவாக அகவய ஆன்மா, புறவய ஆன்மா, வரலாற்றின் ஆன்மா என விரிவாக எப்படி மானுடப் பிரக்ஞை தனி மனித புலன் உணர்விலிருந்து, புரிந்துணர்வாக பரிணமித்து, அந்த புரிந்துணர்வு தனி மனித பிரக்ஞையாகி, பிற பிரக்ஞைகளுடன் ஊடாடி கூட்டுப் பிரக்ஞையாக பரிணமித்து அது வரலாற்றின் ஆன்மாவினை கண்டடைகிறது என்று விரிவாகத் தத்துவார்த்த மாளிகையை, தர்க்கத்தை கட்டமைத்தார். இதன் பலனாக வரலாற்றின் ஆன்மாவின் வெளிப்பாடுகளே உலக வரலாற்று மாமனிதர்கள் என்றும் அவர் கூறினார். அதாவது மானுடத்தின் ஆற்றல்களின் தொகுதி, வரலாற்றின் ஆன்மா, மானுடத்தை கொண்டு செல்லவேண்டிய திசையில் முன்னேற உதவுபவர்களே உலக வரலாற்று மாமனிதர்கள்.  உதாரணமாக நெப்போலியனை அத்தகைய வரலாற்று மாமனிதனாக மதிப்பிட்டார் ஹெகல். இதிம் மிக முக்கியமானது மானுட த்தின் தொடர்ந்த வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்பது. அந்த முன்னேற்றத்தின் இலக்கு என்பதை நோக்கி சிந்தித்து செல்பவர்களே மாமனிதர்கள். உலகளாவிய, பிரபஞ்ச விகாச பிரக்ஞையின் தனி மனித வெளிப்பாடுகள்.

ஹெகலின் இந்த கருத்தியலுக்கு முதன்மை தந்து வரலாற்றின் முற்போக்கு விசையாக கருதும் போக்கினை, இயங்கியலை தலைகீழாக்க விரும்பினார் கார்ல் மார்க்ஸ் (1818-1883). அவர் கருத்து ரீதியான முன்னேற்றமல்ல, உழைப்பே மனிதனை முன்னேற்றிச் செல்லும், அதுவே மதிப்பை உருவாக்குகிறது என்று கருதினார். ஆனால் வரலாற்று ரீதியான வளர்ச்சி என்பதிலும், வரலாற்றின் ஆன்மா பாட்டாளி வர்க்க பிரக்ஞையாக விளங்கும் என்று ஹெகலின் மொழியில் அவர் பாட்டாளி வர்க்க அரசியலை பேசினார். பின்னாளில் லூகாச் போன்றவர்கள் பாட்டாளி வர்க்க பிரக்ஞை குறித்து விரிவாக கோட்பாட்டாக்கம் செய்தனர். மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தன் சிந்தனைகளைப் பதிவு செய்தார். மார்க்ஸின் சிந்தனையில் வர்க்கம்தான் செயலூக்கத்தின் தளமே தவிர தனி நபர்கள் அல்ல. வரலாறு நிர்ணயிக்கும் சூழலில் பாட்டாளி வர்க்கம் செயல்பட்டு வரலாற்றை உருவாக்கும் என சுருக்கமாகச் சொல்லலாம். வரலாறு மனிதர்களின் செயல்களை தீர்மானிக்கிறதா, மனிதர்கள் செயல்கள் வரலாற்றை உருவாக்குகிறதா என்பதில் உள்ள இருண்மை மார்க்ஸீயர்களை இருபிரிவுகளாக பிரிக்கிறது என்று கருதுகிறார் கொலொகாவ்ஸ்கி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நீட்ஷே (1844-1900) பெரும்பாலும் 1880 முதல் 1900 வரையிலான இறுதி இருபதாண்டிகளில் தன் முக்கியமான படைப்புகளை எழுதினார். இவரது முக்கியமான பிரச்சினை மானுட வாழ்க்கையை தரப்படுத்தும், விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்தும் நறுவனங்கள், மதம், அரசு உள்ளிட்ட நிறுவனங்களாகவே இருந்தது. இவர் பெரும் உடைப்பான மானுட விகசிப்பை, படைப்பாற்றலின் வெளிப்பாட்டை கொண்டாடினார். ஆனால் இவர் தனி நபர்களைக் (individual) கொண்டாடவில்லை; தனித்துவத்தையே (singularity) கொண்டாடினார். மேலும் நீட்ஷே வரலாற்றுவாதத்தை, நேர்கோட்டில் முன்னேறிச் செல்லும் மானுட இயக்கத்தை நம்பவில்லை. வீரமும் பெருந்தன்மையும் மிக்க வலியதொரு மானுட உருவகத்தை விரும்பிய நீட்ஷே, குற்றவுணர்வற்ற, காழ்ப்புணர்ச்சியற்ற வாழ்வை விருப்புறுதியுடன் கொண்டாடி, தனித்துவத்துடன் செயல்படும் மானுட ஆற்றலை, அதன் எல்லையற்ற தற்செயல் வெளிப்பாடுகளையே நேசித்தார்.

ஜெயமோகன் இவற்றையெல்லாம் குழப்பிக்கொண்டு நித்ய சைதன்ய யதி கூறியதாக ஒரு பார்வையை அவருடைய “விதி சமைப்பவர்கள்” கட்டுரையில் முன்வைக்கிறார். இது அவர் 2014 ஆம் ஜூன் ஒன்றாம் தேதி அவர் வலைத்தளத்தில் பதிவேற்றிய கட்டுரை. இதில் அவர் மூவகையான தனித்துவங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று வலதுசாரிகளின் உச்சமான அயன் ராண்டின் சுதந்திரமான, ஆற்றல்மிகு தனிநபர்கள். இவர்களை அதிகாரத்திற்கான விறுப்புறுதி கொண்டவர்கள் என்று கூறி அயன் ராண்டை தவறுதலாக நீட்ஷேவுடன் இணைக்கிறார். நீட்ஷேவைப் பயிலாததால் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பம் இது எனலாம். அடுத்து இடதுசாரிகள், அதாவது மார்க்ஸீயர்கள், மக்களிடமே எல்லா புரிதலும், ஆற்றலும் இருக்கிறது என்றாலும் அவர்கள் பிரதிநிதிகளான புரட்சியாளர்களையே அதிகாரத்தில் இருத்துகிறார்கள் என்கிறார். மூன்றாவதாக, நிலப்பிரபுத்துவ காலத்தில் பிறப்பே ஒருவரது சமூக அந்தஸ்த்தை நிர்ணயிப்பதை கூறுகிறார். அவர்கள் பிறவிலேயே அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதைக் கூறுகிறார். இந்த மூன்று வகையான தேர்வுகளுமே அதிகாரத்தை நோக்கி செல்பவை என்று கூரிவிட்டு யதியின் பார்வையாக தான் கூறும் விதி சமைப்பவர்கள் நான் காவதுவகை என்கிறார்.

அந்த அதிகாரத்தை நோக்கிச் செல்லாத நான்காவது வகை விதி சமைப்பவர்கள் யாரென்றால் “பிறவியிலேயே” படைப்புத் திறன் கொண்டவர்கள். “மானுட குலத்தின் உயிரியல் இயல்பால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.” அதாவது இவர்கள் திறன் பயாலஜிபடி, உயிரியல் அடிப்படையில் பிறவியிலேயே அமைவது. ஆனால் நிலபிரபுவத்துவம் போல சொத்துரிமை கிடையாது. இந்த லாட்டரி பரிசு யாருக்கு வேண்டுமானால் பிறவியிலேயே அடிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஜெயமோகன் வார்த்தைகளில் ”மானுட இனத்தில் மிகமிகக் குறைவானவர்களே உண்மையான ஆக்கத்திறனுடன் இருக்க முடியும் என்பது ஓர் அடிப்படை உண்மை. கற்றுக்கொள்ளும் திறன், செயலாற்றும் திறன் ஆகிய்வை சமூக ரீதியாக மேம்படுத்தத் தக்கவை. ஆனால் படைப்புத்திறன் இயல்பிலேயே வருவது. படைப்பு என்பது சிந்தனை, கலைப்படைப்பு மட்டுமல்ல. புதியது படைக்கும் திறன்.”  இந்த திறன் படைத்தவர்கள் மானுட சமூகத்தை “வளர்த்து முன்னெடுப்பவர்கள்” என்று சொல்கிறார் ஜெயமோகன்.

நீட்ஷேவின் பார்வையில் படைப்பாற்றல் என்பது தனித்துவ விகசிப்பு. அவர் வரலாற்று வளர்ச்சி, முன்னெடுப்பு போன்ற உலகளாவிய வரலாற்று பிரமைகளை ஏற்றவர் அல்ல. ஒரு விதத்தில் நீட்ஷேவின் முன்னோடியான ஷோபன்ஹேர் (1788-1860) ஹெகலை மிகக் கடுமையாக இகழ்ந்தவர். இவர்களுக்கு ஹெகலின் வரலாற்றின் ஆன்மா, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை உடன்பாடனவையல்ல. நீட்ஷே மனிதர்களை ஒருபடித்தானவர்கள் என்று பார்ப்பதை மறுத்து தனித்துவமிக்கவர்கள் என்று கூறினார். சமமானவர்கள் என்பதை மறுத்து சிலர் கருவிலே திருவானவர்கள் என்று கூறவில்லை.

ஜெயமோகன் பார்வையில் மனிதர்களை ஒருபடித்தானவர்களாக்குவதற்கு (uniform) எதிரான தனித்துவ விகசிப்பு சார்ந்த குரல், சமத்துவத்தை மறுத்து சிலர் இயற்கையிலேயே தனிப்பட்ட திறன்களை அடைந்தவர்கள் என்று மாறுகிறது. பின்னர் இந்த திறன் படைத்தவர்கள் ஹெகலிய நோக்கிலான உலக வரலாற்று நாயகர்களாக, மானுடத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்பவர்களாக மாறுகிறார்கள். அதிலும் வேறெந்த துறையையும் விட படைப்பிலக்கியத்தில் அப்படியிருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கூடுகிறது. சென்ற வாரம் எழுதிய கட்டுரையில் இந்த வரலாற்று ஆன்மாவான தனிநபர்களுக்கு மாஸ்டர் என்று பெயர் கொடுத்துள்ளார். வரலாற்று ஆன்மா என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் அந்த பொருளில் கூறுகிறார். இந்த வரிகளை கவனியுங்கள்: “மாஸ்டர் என்பவர் ஒரு தளத்தில் மானுடசாத்தியத்தின் உச்சத்தில் மோதிப்பார்ப்பவர். அப்படி மோதிப்பார்ப்பதும் எல்லை கடப்பதும்  மானுடத்தின் அடிப்படை இயல்பு. அதன் வழியாகவே மானுடத்தின் அறிவும் கலையும் எல்லைகளை விரித்து முன்னேறி வந்துள்ளன. அந்த விசையே மனிதனின் சாராம்சம்”. இது மிகப்பெரிய குழப்பத்தை கலை இலக்கிய தளத்தில் உருவாக்கவல்ல பார்வை. சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தமிழ் இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் திருவள்ளுவரின் மிகப்பெரிய சாதனையான நூல் இருக்கிறது. கணியன் பூங்குன்றனின் பிரமிக்கத் தக்க கவிதையொன்று இருக்கிறது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் என்ற சாதனை இருக்கிறது. கம்பனின் ராமாவதாரம் இருக்கிறது. இதெல்லாம் வெகுகாலம் முன்பே நிகழ்ந்த பிரம்மாண்ட சாதனைகள். அந்த சாதனைகளைக் கடந்து எல்லைகளை விரித்து படைப்பிலக்கியத்தில் “முன்னேற” முடியுமா? ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரை எல்லை கடந்து முன்னேற முடியுமா? சமகால இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் கூட பாரதியின், புதுமைப்பித்தனின் சாதனைகளை கடந்து எழுதமுடியுமா? இந்தக் கேள்விகளெல்லாம் அபத்தம் போலத் தோன்றும். அபத்தம் இந்த கேள்விகளில் இல்லை. மேலே சுட்டப்பட்ட ஜெயமோகன் வரிகளில் இருக்கிறது. அவர் தனித்துவ விகசிப்பை, தனிநபர் உயிரியல் சிறப்பாக மாற்றி அதை வரலாற்று வாதத்தில் வைத்து எல்லைகளைக் கடப்பது, முன்னேற்றம், முன்னேற்றத்தின் விசையான மனிதனின் சாராம்சம் என்றெல்லாம் கூறுகிறார். இதை யோசிக்கும்போது அச்சமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. உண்மையிலேயே தனக்கு முன்னால் எழுதியவர்களை தான் “கடப்பதாக” நினைத்துக்கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. உதாரணமாக மகாபாரதத்தை மீண்டும் எழுதிப்பார்க்கலாம். அனால் அது மூலநூலை கடந்தவிட்டதாக பொருள் கொள்ளப்படுவது எவ்வளவும் ஆபாசம்?

இசையை எடுத்துக்கொண்டால் இந்த முன்னேற்றக் கற்பிதம் அதைவிட அபத்தமாக முடியும். தமிழகத்தின் ஆகப்பெரிய பாமர விவாதங்களான “எம்.எஸ்.விஸ்வனாதனா? இளையராஜாவா?” “இளையராஜாவா, ஏ.ஆர். ரஹ்மானா?” போன்றவற்றை எடுத்துக்கொண்டால் எவ்வளவு பெரிய ஒப்புநோக்கு அபத்தங்கள் நிகழ்கின்ற என்று தெரியும். தனித்துவங்களை ஒப்புநோக்க முடியாது. அவர்கள் இசையமைப்பின் நுட்பங்களை வேறுபடுத்திப் பார்த்து தனித்துவமான குணாம்சங்களை பாராட்டி மகிழலாம். அப்போது இவர்கள் மூவரின் சமகாலத்தினராக இருந்து திரையிசையில் சாதனை செய்த பிறரையும் நாம் கவனித்து அவர்கள் சிறப்பியல்புகளுக்காக பாராட்டலாம்.

கலையில், படைப்புகளில் வரலாற்றுவாதம், ஒருவரை ஒருவர் கடப்பது, எல்லைகளை உடைத்து முன்னேறிச் செல்வது என்பதெல்லாம் மிகத் தவறான பார்வைகளுக்கே இட்டுச்செல்லும். காளிதாசனை, ஷேக்ஸ்பியரை, திருவள்ளுவரை, கம்பனை கடப்பது என்பதெல்லாம் அபத்தம். அதேபோலத்தான் இசையிலும், ஓவியத்திலும், பிற படைப்பாக்கத் துறைகளிலும். இவற்றில் வெளிப்படும் ஆற்றல்கள் தனித்துவ விகசிப்புகள், குறியியக்க நதியின் சுழிப்புகள். யாரோ ஒருவரது பயிற்சியில் அந்த விகசிப்புகள் வெளிவரும். அவற்றை ஒப்புநோக்கி ராங்க் போடுவது பாமர மனநிலை. அவற்றை ஒப்புநோக்கி அவற்றின் தனித்துவங்களை வேறுபடுத்தி புரிந்துகொள்வது முதிர்ச்சி. “தால்ஸ்தாயா? தாஸ்தவஸ்கியா?” என்று யோசிப்பதோ, “ஜெயகாந்தனா? ஜானகிராமனா?” என்று யோசிப்பதோ யாருக்கு முதல் ராங்க் என்று முடிவு செய்வதற்காக அல்ல. அவர்களின் தனித்துவ விகசிப்புகளை வேறுபடுத்திப் பார்த்து புரிந்துகொள்வதற்குத்தான்.

ஜெயமோகனின் விரோத பாவங்கள்

ஜெயமோகன் எழுதத் துவங்கிய  எண்பதுகளில் எழுதத் துவங்கிய, கவனிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு சில பெயர்களை உதாரணத்திற்குச் சொன்னால் கோணங்கி, பிரேதா பிரேதன் (பிரேம் ரமேஷ்), சில்வியா (எம்.டி.முத்துக்குமாரசாமி), பெருமாள் முருகன் என பலரை கூறலாம். இதில் மொழியியல் நுட்பத்தில் கோணங்கி, பிரேதா பிரேதன், சில்வியா ஆகியவர்கள் மிக முக்கியமான சாதனைகளை செய்தவர்கள். வாழ்வியல் சித்தரிப்பு என்பதில் பெருமாள் முருகன், பின்னாளில் யூமா வாசுகி, இமையம் என பலர் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்தவர்கள். பெருமாள் முருகனின் இனவரைவியல் படைப்புகள் மிகுந்த நுட்பமும், ஏராளமான திறப்புகளும் கொண்டவை. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கும் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் பெருமாள் முருகன் படைப்புகளை பெரும் வியப்புடன் வரவேற்கிறார்கள். நான் குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர்கள் யாருமே தன்னை “மாஸ்டர்” என்றெல்லாம் கூறிக்கொள்வதில்லை. தன்னை புரிந்துகொள்ள முடியாத பாமரர்கள் என பிறரை சாடுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு பிரம்மாண்டமான இலக்கிய சாதனைகளை நிகழ்த்திவரும் பா.வெங்கடேசன் தன்னை மாஸ்டர் என்றெல்லாம் எழுதிக்கொள்வதில்லை. ஜெயமோகன் வார்த்தைகளில் “நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளி- மாஸ்டர். அதை உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை ,நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள்” என்றெல்லாம் குத்துச்சண்டை வீரர் முகமது அலி போல மார் தட்டுவதில்லை. ஜெயமோகனுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் எழுத வேண்டி நேற்கிறது என்று யோசித்தால் பல உண்மைகள் புலப்படும்.

ஜெயமோகன் துவக்கம் முதலே தன் படைப்பிலக்கிய எழுத்துக்களைத் தவிர சர்ச்சைக்குறிய கூற்றுக்களால் கவனம் பெறத் துவங்கியர். எந்த கூச்சமும் இல்லாமல் அவரது அகம் கொள்ளும் பாவத்தில் ஏற்படும் கருத்துக்களை பொதுக்களத்தில் வெளிப்படுத்துவார். என் நினைவில் இருந்து சொன்னால் “காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹேவுடையதாக இருக்கும” என்ற கூற்று பிரசித்தமானது. போர்ஹேவை வாசித்த யாரும் இப்படி ஒரு கூற்றை வெளிப்படுத்தும் மனதை நோய்க்கூறானது என்றுதான் முடிவு செய்வார்கள். எந்த காரணத்திற்காக, விமர்சன ஈட்டிற்காக இப்படி ஒரு கூற்றை ஒருவர் கூறுகிறார் என்பதே முக்கியமான கேள்வி. அந்த அளவு படைப்பிலக்கியத்தை கோட்பாட்டக்கம் செய்வதில் ஒருவர் பெரியதொரு விரிவையும், ஆழத்தையும் எட்டி அதன் நுட்பங்களை ஹெகலைப் போல ஆறு வால்யூம்களில் எழுதிவிட்டு பிறகு காரண காரியங்களுடன் இப்படி ஒன்றை கூறலாமோ என்னவோ. ஆனால் அப்படியெல்லால் எந்த ஒரு பயணத்தையும் செய்யாமலே வெறும் பரபரபிற்காக சொன்னார். இதன்மூலம் நிறைய கவனம் கிடைத்தது. ஆனால் பலரது உதாசீனத்தையும், எள்ளலையும் எதிர்கொண்டார். “தமிழில் எழுதப்பட்ட இரண்டே நாவல்கள் புளிய மரத்தின் கதையும், ஜே.ஜே. சில குறிப்புகளும்” என்றார். தன் பங்கிற்கு சுந்தர ராமசாமிக்கும் சில விரோதங்களை பெற்றுக்கொடுத்தார். இப்படியாகத் துவங்கிய அவர் பயணம் பின்னர் பிற அறிவுத்துறைகள், அரசியல் என்று எதைப்பற்றியும் தொடர்ந்து கருத்துக்களை உதிர்க்கும் பயணமாக மாறியது. ஒருவர் தானாக நினைத்துக்கொண்டு இது பொன்ற தடாலடிக் கூற்றுக்களைக் கூறுவதை ஒரு பாணியாகவே மாற்றிவிட்டாரோ என்று எண்ணும்படி இருக்கிறது. ஒரு உதாரணம் கோகுல் பிரசாத் என்ற ஜெயமோகன் வாசகர். தமிழினி இணைய இதழ் ஆசிரியர். உலக திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடும் ரசனையும் கொண்டவர். அதிலிருந்து திரைப்பட விமர்சனம், கோட்பாடு, தத்துவம் என பயில்வதற்குப் பதிலாக பரபரப்பு மதிப்பீடுகளில், ராங்க் போடுவதிலேயே அவருக்கு நாட்டம் போகிறது. “ஹிட்ச்காக் ஒரு திரைப்பட மேதை கிடையாது. அவருடைய திரைக்கலை அளவுக்கு மீறி மதிப்பிடப்பட்டது” என்கிறார். இதைப் படித்ததும் எனக்கு ஜெயமோகனின் போர்ஹே கூற்றுதான் நினைவுக்கு வந்தது.

ஜெயமோகன் தன்னுடைய புனைவு அல்லாத பிற கருத்து உதிர்ப்புகளை, விரோத பாவங்களை, இருபதாண்டுகளாக செய்து வருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரே ஒரு வலைத்தளத்தை வைத்து அதில் எழுதி வருகிறார். அதனால் அவர் மீது உதாசீனமும், கோபமும், மனத்தாபமும் கொண்டவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கணிசமாகப் பெருகி உள்ளார்கள். அவர்கள் தன்னை தூற்றினாலும் அதனால் கிடைக்கும் கவனம் ஜெயமோகனின் அகம்பாவத்திற்கு தீனி போடுகிறது. தான் இந்த காலகட்டத்தின் தனிப்பெரும் குரல்; அதனால் பிறர் தன் மீது கல் எரிகிறார்கள் என்று கற்பித்துக்கொள்கிறார். தன் எழுத்துக்களை குறித்து வரும் விமர்சனங்களை அறியாமையின் பாற்பட்டதாக புறக்கணிக்கிறார். தனது அரைவேக்காட்டு வாசிப்பை, தவறான புரிதல்களை பிறர் சுட்டிக்காட்டினாலும் அதை தன்மீதான காழ்ப்பு என்று கற்பித்துக் கொள்கிறார். தன்னுடைய வாசகர்களை ஒரு அமைப்பாக மாற்றி ஆமை ஓட்டினுள் பதுங்குவது போல அந்த அங்கீகாரத்தின் கதகதப்பில் பதுங்குகிறார்.

பாட்ஷா திரைப்படத்தில் ஆண்டனி பாத்திரம் ஏற்ற ரகுவரன் தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தாதாக்களையும் அழைத்து கூட்டம் போடுவார். அங்கே வரும் பாட்ஷா ரஜினி, தன்னை நம்பி தன்னுடன் வருபவர்களுக்கு பாதுகாப்பும் வளமும் கிடைக்கும், ஆண்டனியுடன் சேர்ந்து அழிபவர்கள் அழியலாம் என சவால் விடுப்பார். மொத்த கூட்டமும் அவர் பின்னால் வந்துவிடும் . ஜெயமோகன் மாஸ்டர் பற்றி கூறுவது அதைத்தான் நினைவு படுத்துகிறது. “மாஸ்டர்களுடன் இணைந்துகொண்டால் நீங்கள் ஒரு காலகட்டத்தின் படைப்புச்செயல்பாட்டுடன், அறிவியக்கத்துடன் இணைந்து கொள்கிறீர்கள். அவர்களுக்கு எதிரான ஒவ்வாமைகளுடன் இணைந்துகொண்டால் அக்காலகட்டத்தின் சிறுமைகளுடன் இணைந்துகொள்கிறீர்கள்.தெரிவு உங்களுடையது உங்களைப்பற்றி நீங்கள் எப்படி மதிப்பிட்டிருக்கிறீர்களோ அதைச் சார்ந்து முடிவெடுக்கலாம்.”

தான் அயன் ராண்ட்டை ஏற்கவில்லை என்று ஜெயமோகன் சொன்னாலும் அயன் ராண்ட்டின் கொச்சைப் புரிதல்களுக்கும், ஜெயமோகனின் உளவியலுக்கும் உள்ள தொடர்பை யாருமே சுலபத்தில் கவனிக்க முடியும். இது ஒருவகையான பாசிச உளவியல். ஒற்றை உண்மையை நம்பும் உளவியல். அப்படியே படைப்பாளிகள், கலைஞர்கள் மாஸ்டர்கள் என்றாலும் ஒரு நேரத்தில் பல்வேறு மாஸ்டர்கள் இருக்கத்தானே செய்வார்கள். அது ஏன் பிற எழுத்தாளர்களுக்கு வராத வசைகள், ஏளனங்கள் ஜெயமோகனுக்கு வருகின்றன? ஏனெனில் அவரே அவற்றை உருவாக்க கடுமையாக வேலை செய்கிறார். தொடர்ந்து விரோதங்களை உருவாக்குகிறார். அதற்காக தினசரி கட்டுரைகளை எழுதுகிறார். தனக்கென ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு ஒரு இலக்கிய அரசியல்வாதியாக, மடாதிபதியாக செயல்படுகிறார். ஜெயகாந்தன் மடம் என்பது தனிமனிதர்கள் கூடி உரையாடும் களம். அதற்கு அதைத்தாண்டிய எந்த நோக்கும் கிடையாது. விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒரு நிறுவனம். பரிசு வழங்கி, உரை நிகழ்த்த அழைத்து அங்கீகார விளையாட்டில் ஈடுபடும் நிறுவனம். தன்னுடைய இத்தகைய அரசியல்தன்மை கொண்ட செயல்பாடுகள் காரணமாக, தன்னை பெரும் பாமரக்கூட்டம் இகழ்ந்து, கல்லை எடுத்துக்கொண்டு துரத்துவது போலவும், தான் ஒரு மெஸியா போலவும் சித்தரித்துக்கொள்கிறார்.

நாம் ஏற்கனவே கட்டுரையின் முற்பகுதியில் விவாதித்தபடி அங்கீகார விளையாட்டில் ஈடுபடும் எல்லா படைப்பாளிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள் அனைவருக்குள்ளும் இப்படிப்பட்ட சுயத்தின் பதட்டங்கள் இருக்கும் என்றாலும் ஜெயமோகன் போல யாரும் அதனை கோட்பாட்டாக்கம் செய்வதில்லை. உழைப்பாளி வேறு, படைப்பாளி வேறு என்றும் பாமர மக்கள் வேறு, பிறவியிலேயே நுண்திறன்கள்  அமையப்பட்டவர்கள் வேறு என்பது போன்ற அவர் கருத்துக்கள் விபரீதமானவை. மிகவும் பிழையானவை. படைப்பாக்கத்தின் தனித்துவத்தை கொண்டாடுவதற்குப் பதிலாக இவை தனிமனித ஃப்யூரர் கலாசாரத்தை உருவாக்கிவிடுபவை.  ஜெயமோகன் தான் கூறும் விதிசமைப்பவர்கள் அதிகார விழைவு கொள்ளாதவர்கள் என்கிறார். ஆனால் பாரதீய ஜனதா கட்சி நடத்திய இளம் தலைவர்களுக்கான பயிற்சியில் தான் பங்கேற்றதைப் பற்றி அவரேதான் எழுதியுள்ளார். அதன் மூலம் தனக்கு ஏற்பட்ட தொடர்புகள் குறித்து அவருக்கு பெருமிதமே. எனக்கு உளவுத்துறை மூத்த அதிகாரிகளைத் தெரியும், அரசு உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றெல்லாம் எழுதும் அல்லது எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். இவ்வளவு தூரம் அதிகாரத்துடன் நெருக்கம் கொண்டபிறகு தான் படைப்பாளி என்ற பொருளில் மட்டும் விதி சமைப்பவன் என்று கூறிக்கொள்வது சாத்தியமில்லை. தன் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் பாசிச கருத்தியல் நிரம்பிய மனிதர் ஜெயமோகன் என்று பாட்ஷா பட வசனத்தையே நினைவு கூர்ந்து கூறலாம்.

சிலர் கேட்பார்கள்; ஏன் ஜெயமோகனின் “மாஸ்டர்” போன்ற கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று. அந்த கட்டுரையை அவர் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய “தேர்வு செய்யப்பட்ட சிலர்” “விதி சமைப்பவர்கள்” கட்டுரைகளுடன் இணைத்து வாசிக்கிறேன். பாசிச மனோபாவம் எங்கே முளைவிட்டாலும் சுட்டிக்காடுவதும், விமர்சிப்பதும், கண்டிப்பதும் என் கடன். நான் கற்ற கல்விக்கு வேறு பொருள் எதுவும் கிடையாது என்பதேயாம். வேறு சந்தர்ப்பத்தில் என்னுடைய தத்துவப் பார்வைகளை நான் விரித்தெழுதும்போது இந்த கட்டுரையில் நான் கூறியவை மேலும் துலக்கம் பெறும். ஏற்கனவே என் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களும் என் இயக்கத்தின் திசையை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். அது ஜெயமோகனை மட்டும் கருதியதல்ல. பாசிசத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்க முனைவது.

 

‘மாஸ்டர்’