அ, ஆ, இ – வீடு

வீடு என்பது தங்கும் இடத்திலிருந்து வாழும் இடமாக மாறி இருக்கிறது.

அதே சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கவனிக்கிறேன்.

பாக்டீரியா, வைரஸ் பற்றிப் பல அறிவியல் செய்திகள் தினம் வாட்ஸ் அப், மற்றும் இணையத்தில் உலா வருகிறது. அவற்றில் அரிதாக சில உண்மைச் செய்திகள் வந்து விடுகின்றன.

இப்பொழுது வீட்டில் இருக்கும் உணவு பற்றி யோசிக்கும் பொழுது அக்காலத்தில் வீடு எப்படி இருந்தது?

நடுத்தர வீடோ, குடிசை வீடோ வீட்டைச் சுற்றி இடம் இருக்கும். கொல்லை என்பது இருக்கும். வீட்டில் பாத்திரம் கழுவும் தண்ணீர் அல்லது கிணறு நீர் சின்ன வாய்க்காலில் ஓடும். அதில் நான்கு வாழை., ஒரு எலுமிச்சை இருக்கும். கறிவேப்பிலை கிடைத்திடும் கொத்தமல்லி , புதினா இருக்கும் . போனா புதிதாக பறித்துக்கொண்டு வருவோம்எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டுக் கொல்லையில் மா, பலா, வாழை, புளி ( புளியும் கடையில் வாங்கினதில்லை ) , நெல்லி, எலுமிச்சை, பப்ளிமாஸ் , பப்பாளி, பாவிக்காய், அப்ப அப்ப ஏதாவது காய்கறி போடுவார்கள், தேங்காய் ( கடையில் வாங்கினதே இல்லை)

அதற்கு முன் ஒரு தலை முறை கவனிக்கலாம். பாட்டி, வீட்டில் விறகடுப்பு, அடுப்பு களி மண்ணில் வீட்டில் செய்வார்கள். காபி கொட்டை வாங்கி , வறுத்து அரைப்பார்கள், துடைப்பம் வாங்கியதில்லை, கீற்று அறுத்து ஆராய்ந்து துடைப்பம் செய்வார்கள். சுள்ளி எடுத்து அடுப்புக்கும், விறகு எரித்தால் அதில் கரி எடுத்து குமுட்டி அடுப்பில் நெருப்பு மூட்டி சமைப்பார்கள்.  குமட்டி அடுப்பில் கரி தணலில் சுடும் அரிசி அப்பளத்தின் சுவை ஈடுகட்ட முடியாது.

சீசனில் நார்த்தங்காய், மாவடு, மாங்காய் வத்தல்,.கொத்தவரை வத்தல், மோர் மிளகாய் , ஆவக்காய் , எலுமிச்சை, நெல்லி, அருநெல்லி இன்னும் எக்கச்சக்க ஊறுகாய் வகைகள், அப்பள வகைகள். செக்கில் எள் கொடுத்து, காய்ந்த தேங்காய் கொடுத்து எண்ணெய் ஆட்டுவது எனப் பல பழக்கங்கள்.

நான் திருமணம் ஆகி வந்தும் பயத்தம் பருப்பு, உளுந்து எல்லாம் வீட்டில் இயந்திரத்தில் ஆட்டிதான் வரும். கருப்பு உளுந்துதான் பெரும்பாலும்.

ஹோல் கிரயின் பற்றிப் பல இடங்களில் படித்து இருக்கிறோம் . இவை எல்லாம் அப்படிதான். தும்பை விட்டு வாலை பிடித்த கதைதான் நம் நகரத்து வாழ்வு.

காலை எழுந்தோம், கழிவறை இல்லை . கொல்லைப்பக்கம் போகவேண்டும். ஒரு சொம்பு தண்ணீர் இல்லை ஆற்று நீர். பெரும்பாலும் கிராமஙள் நீர் நிலை அருகில்தான் வீடுகள் இருக்கும். அல்லது கிணறு அல்லது நீர் நிலை அமைக்கப்படும்.

திருமணம் ஆகி பெங்களுர் வந்துதான் மக்கள் கடையில் அரிசி வாங்குவதைப் பார்த்தேன். அது தவிர பல பொருட்கள் கிராமத்தில் நாங்கள் வாங்கியது இல்லை. பால் கூட வீட்டில் பின்பக்கம் மாட்டில் இருந்து கிடைக்கும்.

ஆம் ஊரில் பத்தாயம் இருக்கும். அதிலிருந்து நெல் அரைத்து அரிசி எடுப்போம். மில்லில் அரிசி புழுக்கி அதைக் காய வைத்து புழுங்கல் அரிசி செய்வார்கள்.

இப்பொழுது ரிஃபைண்ட் அரிசி உமியை மிக நீக்கி ஃபைபர் சத்து இழக்கச் செய்து தருகிறார்கள். அதை சமயம் அரிசி வெறும் மாவுச் சத்தில் முடிகிறது. சில தரவுகள் புழுங்கள் அரிசியில் குறைந்த அளவு கார்ப் இருப்பதாகக் கூருகிறது தெரிந்தோ , தெரியாமலோ நிறைய நல்ல விஷயங்கள் நாம் கடைப்பிடித்து இருக்கிறோம். அதில் மிக மிக முக்கியமான ஒன்று தன்னிறைவு உணவு வாழ்வு.

எனக்குத் தெரிந்து பாட்டி காலத்தில் எந்த உணவுப் பொருட்கள் லாரியும் ஊருக்குள் வந்ததில்லை, மளிகை/ பலசரக்கு கடைகளிலும் கூட அக்கம்பக்க விளைப்பொருட்கள் பெரும்பாலும் இருக்கும்.

காய்கறிகள் பக்கத்துத் தோட்டத்தில் விளைந்து கூடையில் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.

அடுத்து மோர், பால் , முட்டை , இறைச்சி எதற்கும் யாரையும் சார்ந்தது இல்லை. மாடு இல்லாத வீடுகள் குறைவு. அதுபோல் அசைவம் என்றால் வீட்டில் நாட்டுக்கோழி இருக்கும்.

ஒரு வாரமாக ஒவ்வொரு ஊராக தொலைப்பேசி அழைப்புகள் வருகிறது. எங்களுக்குக் காய்கறி கிடைக்கவில்லை. என்ன உணவு எடுக்கிறது.? கீரை கிடைக்கவில்லை. இறைச்சிக் கடைக்குச் செல்ல முடியவில்லை என்று ஒவ்வொன்றாக ஆரம்பித்தாயிற்று.

தன்னிறைவு உள்ள கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன. அவர்களுக்கு பெரும்பாலும் கவலை இருக்காது. கேஸ் சிலிண்டர் ல் இருந்து குப்பை அள்ளும் லாரி வரவில்லை என்பது வரை கவலை நகரத்தில் இருப்பவர்களுக்குதான்.

அறிவியல் வேறு கதை சொல்கிறது. அது சொல்வது காடுகள் அழித்த கிராம பொருளாதார தன்னிறைவை விட மிகச் சிறிய அளவு விவசாயம் செய்வது போதுமானது என்கிறது. இந்த சமயத்தில் எது தப்பி பிழைக்குமோ அது வளரும்.

வீடு என்பது நிம்மதி. இப்பொழுது எல்லாம் வீட்டிற்குள் நிம்மதி இல்லை என்பதால் போன் அது இது என்று இருக்கிறோம். ஏன் வீடு என்பது நிம்மதி குறைந்த இடமாகப் போய்விட்டது. முன்பெல்லாம் வீடு என்றால் பெரும் கூட்டம் இருக்கும். அவரவருக்கு ஆயிரம் வேலைகள். ஸ்ட்ரெஸ் என்பதற்கு வழியே இருக்காது.

பெரும்பாலும் கூட்டு குடும்பங்கள். தனிமை என்பதற்கு வழி இருக்காது. அதனால் ஸ்ட்ரெஸ் என்ற சொல் கிடையாது. அல்லது அதைச் சொல்லி, புலம்பி, அழுது முடிந்து அடுத்த வேலைக்குச் சென்று விடுவோம்.

சரி,,முன்னோர்கள் காலம், தன்னிறைவு என்று பேசும் பொழுது நம் கலாச்சாரத்திலிருந்த பல விஷயங்களை ஆதரிக்கலாம் இல்லையா என கேட்கலாம்.

தன்னிறைவு என்பது தொற்று காலம் சொல்லிக்கொடுக்கும் பாடம். எது எது அறிவியலில் சரியோ அதை மட்டும்தான் எடுக்க முடியும்.

கூட்டு அமைப்பில் மன அழுத்தம் குறைவு. அதில் பெண்களுக்குப் பங்கிடப்படாமல் வேலை அதிகம் இருப்பின் அதில் மன அழுத்தம் ஏற்படும்.

எது சரியோ அது பழமையில் இருப்பினும் சரி, சங்க காலத்தில் இருப்பினும் சரி, நவீனத்தில் இருப்பினும் சரி அதை எடுக்க வேண்டும்.

சமூக விலங்குதான் மனிதன். அவனை சமூகத்திலிருந்து பிரித்து விட்டால் போதும்..அவன் தன் மனித தன்மையை இழக்கும் நிலைக்குச் சென்று விடுவான்.

இந்த தனிமையைப் போக்க இப்பொழுது இணையம் பெரிதும் கைக்கொடுக்கிறது.

அதே சமயத்தில் இணையத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்.?

பொய் தகவல்கள், தேவையற்ற ஃபார்வேர்ட் மெசெஜுகள் , சீனா எப்படி கரோனாவை திட்டமிட்டுப் பரப்பியது போன்ற சுவையான தேவையற்ற செய்திகள் என நிரம்பி வழிகிறது.

மூளை தனக்கு வரும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது. ஆதன நினைவாற்றல் நெகடிவ், பாசிடிவ் என அறியாது. கொடுக்கும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும். தகவல்களுக்கு அடிமையாகும். இப்படிதான் சுவாரசியம் என நம்பி வதந்தி செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

பல சமயம் அதை உண்மை என்றே நம்ப நினைக்கிறோம். வீட்டில் அறிவியலுக்கும், மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் கற்றுத்தர வேண்டும் குழந்தைகளுக்கு.

அறிவியல் ஆர்வமுள்ள எவரும் பொய் செய்தியில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். வதந்திகளை பரப்ப மாட்டார்கள். முக்கிய செய்திகளின் ஆதாரம் தேடுவார்கள்.

நம் வீடு கிராமம், நகரம், பழமை, புதுமை, அடுக்கு மாடி, ஓட்டு வீடு , எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கடைசியில் வீட்டின் ஒவ்வொரு செயலிலும் எது இயற்கை அறிவியல் என்று யோசிக்க வேண்டும்.

மத்திய அமைச்சரே சாணி பற்றிப் பேசினால் சாணிக்குள் இருக்கும் வேதியியல் பொருட்கள், அதன் இயல்பு பற்றி கேள்வி கேட்க நமக்குத் தெரிய வேண்டும்.

அப்படி பழமை செயல்களை வீட்டில் கேள்வி கேட்டுப் பழகினால் மட்டுமே எது தன்னிறைவு. எது மூட நமபிக்கை. எது அறிவியல் எனக் கண்டறியலாம்.

இனி கேள்விகள் கேட்க ஆரம்பிப்போம்.. சரியான பதில்கள் கிடைக்கும் வரை அமைதியாக அதை கடப்போம்.  வீடு என்பது வரம்.  அங்கு மனம், உடல் , பேச்சு எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.  அறிவியல் பற்றிய தேடுதல்கள் வீட்டை இன்னும் அழகாக்கும்.

சில கேள்விகளை தொடர்ந்து கேட்போம்.

நமக்குள்ளும்

குடும்பத்திலும்,

சமூகத்திலும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்
  2. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்
  3. 'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்
  4. எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? - கிர்த்திகா தரன்
  5. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன்
  6. உறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்