ஒரு மன்னன் கடமை தவறியதை உணரும் போது போது உயிர் துறப்பதை சிலப்பதிகாரத்தில் படித்தோம். ஆனால் கொரோனா பாதிப்பால் தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் ஜோசஃப் ஷாஃபரின் தற்கொலை, கொரோனாவின் துயரம் எத்தனை கோணங்களில் நம்மைத் தாக்கப் போகிறது என அச்சுறுத்துகிறது.

ஜெர்மனியின் நிதித் தலைநகரான ஹெஸ்ஸி மாநிலத்திலுள்ள ஃப்ராங்க்ஃபர்ட் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் நிதியமைச்சர் ஜோசஃப். ஒரு மரணக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கொள்ளை நோயின் பொருளாதார பாதிப்பிலிருந்து நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்காக அவர் இரவும் பகலும் வேலை பார்த்து வந்தார் என அல் ஜசீரா செய்தி குறிப்பிடுகிறது. கொரோனா பாதிப்பின் பொருளாதார பாதிப்புகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்ற கையறுநிலையே அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என கூறப்படுகிறது.

கடந்த 10 வருடங்களாக பதவியில் இருக்கும் ஜோசஃப், ஹெஸ்ஸி மாநிலத்தின் அடுத்த முதல்வராவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவர் இந்த துயரமான முடிவை எடுத்திருக்கிறார்.

கொரோனா வெறுமனே நோய் கண்டவர்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என இந்தப் பிரச்சனையை பல்வேறு நிலைகளில் அர்ப்பணிப்புடன் கையாள நேரும் அனைவருமே ஒரு நெருக்கடியை உணர்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளே “ஆரோக்கியமாக” இருந்தாலும் நோய் ஏற்படுத்தும் பீதியும் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதன் பிரச்சனைகளும் நம்மை ஏதோ வழியில் பாதிக்கப் போகின்றன.

கொரோனா நம் முன்னால் நிறுத்தும் அத்தனை பிரச்சனைகளைவிடவும் பொருளாதார பிரச்சனை மிகப் பெரியது என்பதை உணர்த்துகிறது ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சரின் தற்கொலை. நிகழ்காலத்தில் தினக் கூலிகள், வாரக் கூலிகள் பட்டினியில் கிடக்கும் நிலைக்குத் தள்ளலாம். வரும் காலத்தில் பல்வேறு நாடுகளின் வாழ்வும் வளமும் சீரழிந்து போகலாம்.

வெளிமாநில தொழிலாளர்கள் அகதிகள் போல மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பல நூறு கிலோமீட்டர்களை கால் நடையாகக் கடக்க முற்படும் செய்தியைப் படிக்கிறோம். வாரக் கூலிகளுக்கு சம்பளம் தரப்படாததால் போராட்டம் நடத்தியது பற்றி கேள்விப்படுகிறோம். கொரோனா காலத்திலும் வீட்டு வாடகையை சரியாக எடுத்து வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி செய்திகள் வருகின்றன. வியாபாரம் அல்லது தொழில் செய்து ஒரு கையில் பணத்தை வாங்கி, மறு கையில் வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுப்பவர்களால் ஊரடங்கில் எவ்வாறு சம்பளம் கொடுக்க முடியும் என கேள்வி கேட்பவர்களைப் பார்க்கிறோம்.

கொரோனா கிருமித் தொற்றில் சாகிறவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். ஆனால் கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியால் பட்டினியில் சாக நேர்ந்தால் அவர்களின் நிலை அதைவிடக் கொடிது. ஏனெனில் மரணம் உடனே வராது. மெல்ல மெல்ல குடல் ஒட்டி, கண்கள் வறண்டு சாகும்போது அந்த நபர் பல நூறு முறை செத்திருப்பார். இது போன்ற கேள்விகள் அறநெறிகளின்படி ஆட்சி செய்யும் எல்லா அரசியல் தலைவர்களையும் நடுங்கச் செய்யும்.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என நமக்கு கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தவறு செய்த மகனை தேர்க்காலில் இட்டான் என அறநெறிகள் சார்ந்த நமது பண்டைய வாழ்வு முறையினைப் புகழ்கிறோம். ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் அறநெறிகள் மேற்குலகில்தான் வாழ்கின்றனவா என கேள்வி எழுப்புகிறது ஜோசஃபின் தற்கொலை. ஏனென்றால் மக்களைப் பற்றியும் தங்களது நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றியும் கவலை கொள்கிறவர்கள்தான் அறநெறி சார்ந்து வாழ்பவர்கள்.

ஜெர்மனியின் இடதுசாரி கட்சியின் உறுப்பினரான புன்டேஸ்டாக் ஃபேபியோ டி மாஸி, வலது சாரி அரசியல் தலைவரான ஜோசஃபின் தற்கொலை பற்றி இவ்வாறு கூறுகிறார்: “அரசியல் தலைவர்களை ரத்தமும் சதையுமான மனிதர்களாக நாம் இப்போதெல்லாம் அங்கீகரிப்பதில்லை. அரசியல் பொறுப்புகள் அவர்கள் மீதும் சுமைகள் ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்க மறுக்கிறோம்.”

ஜேசஃப் ஸ்டாஃபர் தனது மக்களை மட்டுமல்ல, மனைவியையும் இரு குழந்தைகளையும் நிர்கதியில் விட்டுச் சென்றுள்ளார். அவரின் இறுதிப் பயணத்திலாவது அமைதி நிலவும்படியாகவும் அவரது சுற்றத்தார், நண்பர்கள், குடும்பத்தினர் மனம் ஆறும்படியும் நாம் வேண்டுவோம்.

உணர்வுரீதியாக பலவீனமாக உணர்ந்தாலோ, தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டாலோ, உதவி கேட்கத் தயங்காதீர்கள். உங்களுக்கு உதவுவதற்காக புரஃபஷனல்கள் இருக்கிறார்கள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பின்வரும் இணைய அல்லது மின்னஞ்சல் முகவரிகள் மூலம் உதவி கோரலாம்:

https://www.befrienders.org/

அல்லது

help@snehaindia.org

ஆதாரம்:

https://www.dw.com/en/german-state-finance-minister-thomas-sch%C3%A4fer-found-dead/a-52948976

https://www.thenation.com/article/economy/corona-economy-market/

https://www.aljazeera.com/news/2020/03/german-state-minister-kills-coronavirus-hits-economy-200329165242615.html

https://economictimes.indiatimes.com/news/international/world-news/german-minister-commits-suicide-after-virus-crisis-worries/articleshow/74877039.cms