காதல் என்ற சொல்லுக்குப் பின்னர் பொதிந்திருக்கிற மர்மம், ஒருபோதும் மொழியினால் கண்டறியப்பட முடியாதது. காதல் என்ற சொல்லைச் சொல்வது, கௌரவக் குறைச்சல் என்ற மனநிலை இன்றும் நிலவுகிறது. தமிழர்களைப் பொருத்தவரையில் காதலைப் பற்றிய மனத்தடைகள் நிரம்பிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காதல், அன்றாட வாழ்க்கையில் முக்கியமானது, தீவிரமான வேட்கையுடையது என அறிந்திருந்தாலும்   காதலுக்காக உயிரையும் இழப்பதற்குத் தயாராக இருந்தாலும் அதன் பெயரைச் சொல்வதற்கே தயக்கமும் நாணமும் நிலவுகின்றன. காதல் என்ற சொல்லுக்கு இணையாக அல்லது மாற்றான சொற்கள் குறைவாக இருப்பதனால், பெரும்பாலான கவிஞர்கள், வழக்கொழிந்த சொற்கள்மூலம் காதலைப் புனைவாக்கியுள்ளனர். இரகசியமான முறையில் காதல் பற்றிய பேச்சுகள் வெளியெங்கும் மிதக்கின்றன. ஒவ்வொரு உடலிலும் மனதிலும் காதலின் வேர்கள் பரவியுள்ளன.

மானுட வரலாற்றில் காதல் என்ற சொல்லை முன்வைத்து நடைபெற்ற நிகழ்வுகள், சம்பவங்கள்தான் மனித இருப்பைச் சாத்தியப்படுத்தியுள்ளன. வற்றாத ஆறுபோல காலந்தோறும் பொங்கிப் பாய்ந்திடும் காதல், புராதன காலம் முதலாக மனித நாகரிகத்தின் ஒளியாக எங்கும் ஜொலிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் மரபணுவில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிற காதல் வேட்கை, மனித குலத்துக்குக் கிடைத்த பேறு அல்லது சாபம். நுகர்பொருள் பண்பாட்டில் எல்லாம்  சந்தைக்கானதாக மாறுகிற இன்றைய சூழலில்கூட, காதல் மாசு மருவற்ற பசும்பொன்னாக மின்னுகிறது. காதல் என்ற ஒற்றைச் சொல்லின் பின்புலத்தை ஆராய்ந்தால் அணுவுக்குள் பொதிந்திருக்கிற பேராற்றல்போல தெளிவற்றதும், குழப்பமானதுமான வரலாற்றைக் கண்டறிய முடியும்.

காதலென்பது பிரேமை அல்லது பித்து மனநிலை. ஆதி மனிதனின் குகைக்குள்ளும் நிச்சயம் காதல் என்ற பிரமாண்டமான விருட்சத்தின் ஆணி வேர் ஊடுருவியிருந்தது. ஆணுடலும் பெண்ணுடலும் இனவிருத்திக்காகச் சேர்ந்திடுவதற்காக இயற்கை உருவாக்கிய மனவேட்கையைக் காதலாக மாற்றியதில், மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா விலங்குகளும் மறுஉற்பத்திக்காகத்தான் பாலுறவில் ஈடுபடுகின்றன. மனித இனம் மட்டும்தான் பொழுதுபோக்கு, கேளிக்கை, கொண்டாட்டம் எனப் பாலுறவை மாற்றியமைத்துள்ளது. எதிர் பாலினரான இரு உடல்களில் பொங்கிடும் காமம், புணர்ச்சியாக மாறுகிற சூழலில், மனங்களில் கொந்தளித்திடும் மகிழ்ச்சிதான், காதல் நீடித்திருப்பதற்கான ஆதாரம்.

காதலை முன்வைத்து உலகமெங்கும் எழுதப்பட்ட பண்டைய இதிகாசங்களும், காப்பியங்களும் ஆண்-பெண் உறவில்  நிகழ்கிற மனதின் துடிப்புகளையும் கொண்டாட்டங்களையும் பதிவாக்கியுள்ளன. இன்னொருபுறம் பாலியல் வேட்கை, உடல்களின் விழைவு, காமத்தின் வெளிப்பாடு  என்ற கண்டனக்குரல் எழுகிறது. காதல் என்பது கணநேரத்தில் தோன்றுவது: அர்த்தமற்றது; அபத்தமானது; துயரத்தின் ஊற்றுக்கண்  எனக் காதலை வன்மையாகக் கண்டிக்கிற பார்வையும் நிலவுகிறது. யோசிக்கும்வேளையில் காதல் இல்லவே இல்லை என்ற வறண்ட பார்வையையும் எளிதில் புறக்கணிக்க முடியாது. சரி, போகட்டும்.

மனித மனதின் புதிர்ப் பாதைகளில் உடலும் மனமும் கலந்தநிலையில் உருவாகிற  காம உணர்வு, மனிதனைப் பூமியுடன் இணைக்கிற பணியை நுட்பமாகச் செய்கிறது. காதல் இல்லாவிடில் ஆண் விலங்கு போலவும், பெண் பேய் போலவும் மாறிடுவதற்கான சாத்தியம் இருக்கிறது. அதிகாரம் எதுவுமில்லாமல், அன்பு வயப்பட்ட மனங்கள், ஒரு புள்ளியில் சங்கமிக்கிறவேளையில் தோன்றுகிற காதல், அறத்தின் வெளிப்பாடு. அங்கே குற்றமும் தண்டனையும் எதுவுமில்லை. இன்னும் சொன்னால், மனிதர்களை லட்சியத்தை நோக்கி நகர்த்துகிற உன்னதமான செயலைக் காதல் வெளிப்படுத்துகிறது. இன்னொருபுறம் காதல் வயப்பட்ட உள்ளங்கள், நடப்பில் கொந்தளிப்பு, சாகசம், தவிப்பு, ஏக்கம், மயக்கம், வேட்கை எனப் பல்வேறு உணர்ச்சிகளின் தொகுதியாகத் தத்தளிக்கின்றன.  ஒவ்வொரு காதலும் ஒருவகையில் அதிசயமானதுதான். எல்லாவிதமான விதிகளையும் மீறிக் காதல்வயப்படுவது மனிதர்களிடையில் காலங்காலமாக இயல்பாக நடந்தேறுகிறது. சமூகம் என்ற நிலையில் உருவாக்கப்பட்டுள்ள மொழி, நிறம், இனம், சாதி, நாடு, பொருளியல் ஏற்றத்தாழ்வு போன்ற தடைகளை எளிதில் தாண்டிச் செல்கிற மனநிலையை உருவாக்கிடும் வல்லமையுடையது காதல்.

நாட்டார் கதைகளில் வரும் மோகினி, சூலி, நீலி, கொல்லிப்பாவை போன்ற அதியற்புத ஆற்றல்மிக்க பெண்கள், கணநேரத்தில் எந்தவொரு ஆணையும் மயக்குகிற பேராற்றல் மிக்கவர்கள். காதல் மூலம் அமானுடத்துடன் கலந்திட விழையும் ஆண் மனப்புனைவுகள், மாயமோகினிகளைக் காதலிக்கத் துடிக்கின்றன. எழுபதுகளில்கூட தமிழ்ப் பத்திரிகைகளில் எதிர்பாலினரை மயக்கிட வசிய மை, வசிய மருந்து போன்ற விளம்பரங்கள் வெளியாகின. விரும்பிய பெண் தன்னைக் காதலிக்காவிட்டால், வசிய மையைக் கண்ணில் தடவிக்கொண்டு அவளைப் பார்க்கிறபோது, நிச்சயம் அவள் காதலிப்பாள் என்று நம்பிக்கையுடன் கிராமத்தினர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இரவுவேளையில் கிராமத்திற்கு வெளியே ஒற்றையாக நடந்துவருகிற இளைஞன் மீது ஆசைப்படுகிற மோகினி, அவனுடன் காதல் சரசமாடும் என்றும், உடலுறவுகொள்ளும் என்றும், விடிந்து பார்த்தால் அவன் இறந்து கிடப்பான் என்று ஆதாரத்துடன் சொல்கிற பெரிசுகள் முன்னர் இருந்தனர். தமிழகத்தில் அறுபதுகள் வரைக்கும் காதல் என்பது கெட்ட வார்த்தையாகக் கருதப்பட்டது. பாடப் புத்தகத்தில் காதல் என்ற சொல் இடம் பெற்றிருந்தால் அதனைக் குறுகுறுக்கிற  மனதுடன் மாணவர்கள் வாசித்தனர். பதினொன்றாம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்றிருந்த பாரதிதாசன் எழுதிய பில்ஹணன் பாடலை நடத்தும்போது, தமிழாசிரியர் இராமநாத சர்மா காதலைக் கேவலமாகத் திட்டித் தீர்த்தது இப்பவும் எனக்கு நினைவில் இருக்கிறது.

உடல்களை இழிவானதாகவும், புலன்களின் கொண்டாட்டங்களைத் தடைசெய்கிற மதங்கள், பெரும்பாலும் காதலுக்கு எதிரானதாக இருக்கின்றன. ஒத்த மனதுடன் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட இளைஞனும் இளைஞியும் காதல்வயப்பட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தனிமனிதர்களின் விருப்பம் சார்ந்தது என்ற புரிதல் இல்லாமல், பிறரின் அந்தரங்கத்தில் நுழைகிற மத அடிப்படைவாதிகள்  செயல்பாடுகள், பாசிசத் தன்மையுடையன.

 

 

காதல், மானுட வாழ்க்கை என்ற இயந்திரத்திற்குள் ஊடுருவி, தலைமுறைகளைச் சீராக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. காதலைப் பேரற்றலாகக் கருதி, காதலிக்கிறவர்களை வாழ்த்துவது பொதுப்புத்தியில் வலுவாக உள்ளது. காதல் வயப்பட்டவர்கள் ஏதோ வசியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்போல மாறுகிற விந்தை நிகழ்கிறது. காதலில் மயங்கியவர்கள், ஏதோ குபேரனின் ஆஸ்தி கிடைத்ததுபோல தங்களை மறந்தநிலையில் மனவெளி மனிதர்களாக மாறுகின்றனர்.  உலகில் இதுவரை யாருமே காதலிக்காததுபோலவும், தாங்கள்தான் முதன்முதலாகக் காதலிக்கிற காதலர்கள்போலவும் சித்தபிரேமையில் மூழ்குகின்றனர்.

காதல் காரணமாக நடந்த போர்கள், நொறுங்கிப்போன அரசுகள், கொல்லப்பட்ட மனிதர்கள், பேரழிவுகள் வரலாறு முழுக்கத் தொடர்கின்றன. காதல்தான் இலக்கியப்  படைப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான கலைகளின் ஆதாரமாகும். கொடூர மனம் படைத்தவர்களை இளக்கிடவும், துயரத்தில் வாடுகிறவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கிடவும், ஆற்றல் மிக்கவர்களை மனப்பிறழ்வுக்குள்ளாக்கிடவும், நலிந்தவர்களைத் தேறுதல்படுத்திடவும் எனக் காதலின் வீச்சுகள் அபாரமானவை. காதலித்த பெண்ணுக்காகத் தனது அரசைத் துறந்த இளவரசர்கள் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளனர். காதல்  என்ற சொல் ஏன் மனிதர்களை இப்படி ஆட்டிப்படைக்கிறது என்ற கேள்விக்கு விடையென எதுவுமில்லை. அதுதான் காதலின் உன்னதம். வேறு என்ன?