உன் கைகள் பற்றி நடக்கும் எல்லா நொடிகளும், சமூக மரபின் போர்வைகளில் இழுத்துப் பறித்து மூலையில் கிடத்தப்பட்ட என் முடமான சுதந்திரம், கால்கள் முளைத்து காற்றில் பறக்கின்றன. கௌரவக்கொலைகளையும், சாதியக்கொலைகளையும் சன்னமாய்த் திரித்தே எனக்கு ஊஞ்சல் கயிராய் கட்டிக் கொடுத்தது, நீ தந்த காதல் சுதந்திரம். இரு சிறு பிள்ளைகள் காரணமேயின்றி கெக்கலித்துக்கொண்டு, விளையாட்டு்ச் சோர்வில் அமர்ந்த இடத்திலேயே இணைந்தே உறங்கிப்போகும் காட்சியில் கிடைக்கும் ஆத்யந்த பரவசம்,  நீ தரும் சுதந்திர வாசம். சற்றே திடமான உன் கைகளின் மேலே பரவிக்கிடக்கும் அடர்ந்த உரோமங்களூடே அடைபடுகையில் விடுபடும், இந்த உலகம் எனக்காய் விதித்த வரைமுறைக்கோடுகளின் துவேசம். இன்னும் சொல்லப்போனால்,  உலகத்தின் எனக்கான லட்சுமண ரேகைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, உன் புட்பகவிமானத்தில் எனை மீட்டுச் செல்லும் என் உன்னத இராவணன் உனது என்மீதான உத்தம காதல்!!

உன் காதல், என் சுதந்திரம்!!!