தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் எனக் கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிறன்று நடந்த அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிறு(ஜூலை 14) அன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த பிரச்னையை இன்று எழுப்பிய அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் காலையில் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் இவ்விவகாரம் குறித்து பேசிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிறு அன்று நடந்த தாபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் புதிய தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.