அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இன்று (மே 13) வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சசிகலா ஆஜராகவில்லை. இதைதொடர்ந்து, வரும் 28ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

1996-97ஆம் ஆண்டு ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா, பாஸ்கரன் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

அமலாக்கத் துறை தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் சசிகலாவை இன்றைய தினம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தக்கோரி பெங்களூரு சிறை நிர்வாகத்துக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சசிகலாவிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வழக்கு இன்று (மே 13) விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் மட்டும் நேரில் ஆஜரானார். சசிகலா ஆஜராகவில்லை. அப்போது, சசிகலாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாததால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், மே 28ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சசிகலாவை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.