டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாகக் கருதி ஒரே பொதுசின்னத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதற்கிடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்றும் கட்சி பதிவு செய்யப்படாததால் அமமுகவிற்கு சின்னம் ஒதுக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அம்ர்வு முன்பு இந்த வழக்கு இன்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் பதிலளித்தார். மேலும், இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது, டெல்லி உயர் நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று உச்ச நீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.

பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரதிநிதித்துவ சட்டப்படி முரணானது: பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுசின்னம் ஒதுக்க முடியும்?” எனத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு தினகரன் தரப்பில், “இன்றைக்கே அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம்; குக்கர் அல்லது வேறு ஒரு பொதுசின்னம் தரவேண்டும் ” என்று வாதிட்டனர்.

இதற்கிடையில், “அமமுகவை இன்றே பதிவுசெய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது. தனி தனி சின்னம்தான் தர முடியும்.” என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்கத் தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் எனத் தெரிவித்தார்.

மேலும், ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் எனக் கூறிய தலைமை நீதிபதி, மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி தரப்புக்கு பொதுசின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது, தினகரன் தரப்புக்கு குக்கரை போன்று பொதுசின்னம் ஒதுக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்ததுடன், அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாக கருதி ஒரே பொதுசின்னத்தை வழங்க உத்தரவிட்டார்.