அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாம்பழச் சின்னத்துக்குப் பதில் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள் என மீண்டும் கூறியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளது பாமக. இதில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிராச்சாரக்கள் சூடுபிடித்துள்ளன. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றன.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து.  இவரை ஆதரித்து திண்டுக்கல் அனுமந்த நகரில் வாக்குச் சேகரிக்கச் சென்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். வாக்கு சேகரிக்கும்போது, மாம்பழச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்பதற்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஜோதிமுத்து, இறுக்கமான முகத்துடன் வேறு வழியில்லாமல் சிரித்தபடி வாக்கு சேகரித்தார்.

ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி கன்னிவாடி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போதும், திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னம் என்று கூறி வாக்குச் சேகரித்த நிலையில் மீண்டும் அதையே கூறி வாக்குச் சேகரித்து வருவது பாமக கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.