அல்குவைதா தீவிரவாதிகள் குழு தலைவன் அயமான் அல் ஜவாகிரி “ஒற்றைச் சிந்தனையுடன் இந்தியாவின் மீது கருணையற்று தாக்குதல் நடத்துங்கள்” என்று காஷ்மீரிலுள்ள முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு அறிவுறுத்திய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 14 நிமிட காணொளியில் பாகிஸ்தான், காஷ்மீர், இந்தியா ராணுவம், ஜிஹாத் என பலவற்றையும் பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது “காஷ்மீரை மறந்துவிடாதீர்கள்! பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்துகிறது; இந்தியா மீது கருணையற்று தாக்குதல் நடத்துங்கள்” எனவும் இந்தியா ராணுவத்திற்கு பெரும் உயிர்ச்சேதத்தையும் பொருள் இழப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்தக் காணொளியில்அல்குவைதா தலைவன் பேசியுள்ளான்.

சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்ட ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அம்மாநில இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்நிலையில் “அல்லாவின் பெயரால் நாம் இந்த ஜிஹாதை நடத்த வேண்டும்” என்று இளைஞர்களை குறிவைத்து அல்குவைதா தலைவன் வெளியிட்டுள்ள இந்த காணொளி பெரும் அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பிற்கு சவால்விடும் அந்தக் காணொளி பற்றி ஆய்வு செய்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் ராணுவ தளபதி ஜி.டி.பக்க்ஷி காஷ்மீர் இளைஞர்கள் தேசப்பற்றோடு இந்திய ராணுவத்தில் சேர்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர்கள் நல்ல ஊதியத்தோடு மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறார்கள்; நிச்சயம் இந்தக் காணொளி பெரும் பாதிப்புக்களை இளைஞர் மத்தியில் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.