நம் கண்முன்னே நம் நண்பர்கள், படித்த புத்திசாலிகள், நேர்மையானவர்கள், பண்பானவர்கள் இந்த தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே நாளில் மறைமுக பாஜக ஆதரவாளர்களாக மாறுவதைக் காண்பது ஒரு பெரிய கொடுமை. அதுவும் எனது கிறித்துவ நண்பர்கள் பலரும் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கே வாக்களிக்கப் போவதாக சொல்கிறார்கள். “பாஜகவின் வேறு கொள்கைகளை நான் ஏற்கவில்லை; அவர்களின் பல முடிவுகளை மறுக்கிறேன். ஆனால் காஷ்மீரின் சிறப்புத் தகுதி சட்டப்பிரிவை அவர்கள் நீக்கியதை ஆதரிக்கிறேன். இதற்காகவே அவர்களுக்கு அடுத்தமுறை ஓட்டளிப்பேன்.” என்றார் ஒரு நண்பர். இதுகூட பரவாயில்லை, சிறுபான்மையினரான அவர் காஷ்மீரிகள் இந்தியாவின் பணத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டு ராணுவத்துக்கு எதிராக கல்லெறிகிறார்கள் என ஒரு முழுமையான சங்கியாகவே மாறி பேசியபோது எனக்கு தலை சுற்றிவிட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்தில் காங்கிரஸ் மட்டுமே தேசிய அளவில் எதிர்த்து பேசியது என்றாலும் அவர்களும் சேற்றில் ஒரு காலுடன்தான் நின்று அரைமனதுடன் கடமையை ஆற்றுகிறார்கள். காங்கிரஸில் பாதிக்கு மேல் தலைவர்கள் பாஜகவின் முடிவு சரி என நம்புகிறார்கள்; பேசுகிறார்கள்; புல்வாமா தாக்குதலுக்கு பிறகான போர்ச்சூழலின் போதும் காங்கிரஸ்நானும் வரேன், நானும் வரேன்என பாஜகவின் பிரச்சார வண்டியில் விடாப்பிடியாக ஏறிக்கொண்டது. இன்று தேசம் முழுவதும் இரண்டு வகையான அரசியல் முகாம்கள் உள்ளன. ஒன்று பாஜக ஆதரவாளர்கள்; மற்றொன்றும், பாஜக ஆதரவாளர்கள்.

பாஜகவையோ மோடியையோ விரும்பாமலே அவர்களின் அணியில் போய் நின்று கொள்பவர்கள் பாஜக உருவாக்கிய தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்படுபவர்கள். ஒருவர் தேசபக்தராக அல்லாதபோது கிரிக்கெட் நடக்கும்போது இந்தியாவை ஆதரிப்பதில்லையா? இந்தியாவுக்காக கண்ணீர் வடிப்பதில்லையா? இந்த இரண்டாவது தரப்பினர் இப்படித்தான் கண்ணீரும் கம்பலையுமாக மோடியின் முகமூடியை அணிந்து கொள்கிறார்கள், அது அவர்களுக்கு பொருந்தவில்லை என்றாலும் கூட

இந்த மாயமாலத்தை பாஜக எப்படி சாதித்தது?

 முதன்முறையாக மோடி பிரதமர் ஆன போது அவரது ஆட்சியில் இந்தியாவுக்கு வரப் போகும் பாதகங்களைப் பற்றி நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில், வேறு பலரையும் போல, மதவாதம் காட்டுத்தீ போல பரவும், பல மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடக்கும், மேலும் பொருளாதாரமும் சீரழியும் என குஜராத்தில் மோடியின் ஆட்சியின் உண்மை நிலவரங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருந்தேன். நான் சொன்ன இரண்டாவது நிஜமானது, முதலாவது பொய்த்தது. (இரண்டுக்குமே நான் வருந்துகிறேன்.) 

இந்துத்துவாவை நான் (வேறு சில நண்பர்களையும் போல) இந்து மத வெறி என எளிமையாக தவறாக புரிந்து கொண்டிருந்தேன். பிரதமர் ஆன பிறகு மோடி தனக்கு இந்தியாவின் சிறுபான்மையினரைஅணைத்துச் செல்வதில்எந்த சிக்கலும் இல்லை எனக் காட்டிக் கொண்டார். பாஜக நாடு முழுக்க கலவரங்களை அவிழ்த்துவிடவும் இல்லை. மாறாக பாஜக ஒரு பிரித்து ஆளும் சூழ்ச்சியை பின்பற்றியது.

முதல் மற்றும் இப்போதைய இரண்டாவது ஆட்சிகளில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுக்கையில் அல்லது அவர்களின் கட்சிக்காரர்கள் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட அதை வேடிக்கை பார்க்கையில் அதை தேசவிரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை என மக்களை நம்ப வைத்தனர். எந்தளவுக்கு என்றால் இன்று காஷ்மீரிய பண்டிட்டுகளுக்கு ஆதரவாக கிறித்துவர்களும் கொந்தளிக்கும் அளவுக்கு. நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான இஸ்லாமிய ஓட்டுகள் கிடைத்தன என ஒரு புள்ளிவிபரத்தை சமீபமாக பார்த்தேன். அது உண்மையோ பொய்யோ, வரும் நாட்களில் என் இஸ்லாமிய நண்பர்களும் சங்கிகளாக உருமாறினாலும் நான் பெரிதாக ஆச்சரியப்படமாட்டேன். தேசியவாதம் அந்தளவுக்கு சக்திவாய்ந்த ஈர்ப்புவிசை

தேசியவாதம் உருக்கொள்வதற்கு மற்றமை மீதான வெறுப்பு அவசியம் என அறிவோம். இந்துத்துவர்களுக்கு இந்த மற்றமை இஸ்லாமியர் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அது உண்மையல்லகடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசை (அல்லது மறைமுகமாக பிரதமரை, பாஜகவை) எதிர்க்கிறவர்கள் அனைவரையும் மற்றமையாக, தேசத்தின் விரோதிகளாக பாஜகவின் பிரச்சார எந்திரம் நம்மை நம்ப வைத்துவிட்டது. அதாவது பாஜகவை எதிர்ப்பவர்கள் பிரதமர் மோடியை எதிர்ப்பவர்; பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் தேசத்தையே எதிர்ப்பவர்கள். தேசத்தின் மற்றமை இஸ்லாமியர். ஆக தேசத்தை எதிர்ப்பவர்கள் இந்துக்களே என்றாலும் அவர்கள்இஸ்லாமியர்என நாம் நம்பத் தொடங்கிவிட்டோம். இதன் விளைவாக, “இஸ்லாமியர்இன்று வெறும் இஸ்லாமியர் அல்ல. “தேசவிரோதத்தில்ஈடுபடுகிறவர்கள் அனைவரும் உடனடியாகஇஸ்லாமியர்எனும் அடையாளத்தை பெற்று விடுகிறார்கள். நம்மால் இப்போது இஸ்லாமியசகோதரர்களைவெறுக்காமலேஇஸ்லாமியர்களைவெறுத்து விரோதிகளாகப் பாவிக்க முடிகிறது

உதாரணமாக, பாஜகவின் ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், வேட்டையாடப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல என நாம் இங்கு கவனிக்க வேண்டும். காஷ்மீரியர்களின் தேசவிரோதத்தைப் பற்றி பேசுகிறவர்கள்கூடவே ஜெ.என்.யுவில் உள்ள அர்பன் நக்சலைட்டுகளையும் இந்த பட்டியலும் சேர்த்து கண்டிக்கிறார்கள்

டிமானிடைசேஷன் நடந்தபோது கள்ளப்பணம் வைத்திருந்தவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என சொல்லப்பட்டது. அவர்களை களையெடுக்கவே அந்த அதிரடி நடவடிக்கை என நம்பவைக்கப்பட்டது. அப்போது நம்மால் யாரையும் எதிர்க்கவோ இந்த நடவடிக்கையை விமர்சிக்கவோ முடியவில்லை. ஏனென்றால் அப்போது நாம் தேசவிரோதிகள் ஆகிவிடுவோமே!

 அதாவது நம்மை கறுப்புப் பணம் வைத்திருப்பவர் என குற்றம் சாட்டினால் அதை மறுப்பது எளிது. ஆனால் தேசவிரோத முத்திரையை நம்மால் எதிர்கொள்ளவோ தாங்கவோ முடியாது. மேலும் மோடியின் அரசு தேசவிரோதம் எனும் சொல்லாடலையே குழப்பமாக பயன்படுத்தி பனிமூட்டத்தை தோற்றுவிக்கும். அதில் நாம் மாட்டிக்கொண்ட பின் தொடர்ந்துயார் தேசவிரோதி?” என நம் தோளுக்குப் பின்னால் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருப்போம்.

புல்வாமா தாக்குதலின்போது அது திட்டமிட்டு அரசின் அறிதலுடன் நடத்தப்பட்ட தாக்குதல் எனச் சொல்ல நாம் தயங்கினோம். தனிநபரை தீவிரவாதியாக அறிவித்து விசாரணையின்றியே கைது செய்து சிறையில் அடைக்கலாம் என மோடி அரசு புதிதாக சட்டம் இயற்றப்பட்டபோதும் இதுவே நடந்தது. தேசபக்திதேசவிரோதம் எனும் இருமையின் பூடகம், வரையறுக்கப்படாத தன்மை ஒரு பீதியை தோற்றுவிக்கிறது. இந்த பீதியில் இருந்து நாம், வேறுவழியின்றி, கண்மூடித்தனமான தேசபக்தியில் போய் விழுகிறோம்

இந்த குழப்பவாதமும் பதற்றமும் மோடி அரசின் தொடர் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளால் தீவிரமாகின்றன. இந்த அரசு என்ன புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என்பதை நீங்கள் ஒரு டிவி செய்தியில் எதேச்சையாக பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி உங்கள் வாழ்க்கை மாறி இருக்கும். அது ஒரு மாநிலத்தை யூனியன் டெரிட்டரியாக அறிவிப்பதோ, இனி இந்தியர் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என சட்டம் இயற்றுவதோ ஆக இருக்கலாம். ஜனங்கள் இப்போது தாம் நிராதவராக, அதிகாரமற்றுப் போவதாய் உணர்வார்கள். இப்படி உணரும்போது அவர்கள் அரசதிகாரத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். இன்னொரு புறம் உருக்குலையும் ஒரு பலவீனமான பொருளாதார அமைப்பு தரும் பாதுகாப்பின்மையும் மக்களை நெருக்க அவர்கள் தம் கோபத்துக்கு ஒரு வடிகாலைத் தேடுகிறார்கள். தாம் உணரும் அச்சுறுத்தலை மக்கள் நேரடியாக உணராமல் வேறு வடிவங்களில் திருப்பிவிட்டு எதிர்கொள்கிறார்கள். உதாரணமாக, ஒரு பாசிச ஆட்சியில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதுள்ள பயமும் பதற்றமும் மற்றமையினர், “தேசவிரோதிகள்”, விளிம்புநிலை மக்கள்மீது திரும்புகிறது. இந்த சிக்கலான உளவியிலே மோடியின் ஆட்சியில் அவருக்கு சாதகமாக வேலை செய்கிறது. அதுவே சிறுபான்மையினரைக்கூட தம்மை பெரும்பான்மையினர் என தற்காலிகமாக நம்பிமோடி ஜி கெ ஜெய்என கூவ செய்கிறது

பாஜகவின்வெற்றிஎன்பது இஸ்லாமிய வெறுப்பை விதைத்தது அல்ல. இஸ்லாமிய வெறுப்பை கருவியாக பயன்படுத்தி கிட்டத்தட்ட அனைத்து மக்களையும் தேசத்தை கேள்வி இன்றி ஆதரிக்கவும், தேசம்பிரதமர்அவரது கட்சிகட்சியின் கொள்கை இந்த நான்கையும் ஒன்றாக, ஒரே கருத்துருவாக, பார்க்கச் செய்தததே

இம்மாதிரி பாசிச அரசியலுக்கு ஒரு வசீகரமான, மூர்க்கமான தலைவர் ஒரு அனுகூலம், ஆனால் தவிர்க்க முடியாதவர் அல்ல என்பதை இப்போது மோடியின் இடத்தை அமித் ஷா சுலபத்தில் ஹைஜேக் பண்ணுவதையும், அந்த புலம்பெயர்வை மக்கள் எளிதாக கேள்வியின்றி எதிர்கொள்வதையும் பார்க்கும்போது புரிந்து கொள்கிறோம். மோடிக்கு அடுத்தபடியாக அமித் ஷாவே அடுத்த பிரதமர் என்பது இப்போதே உறுதியாக தெரிகிறது. ஏனென்றால் பாஜகவின் உண்மையான பலம் மோடி அல்ல; அவர் ஒரு மாயையின் புறத்தோற்றம் மட்டுமே. நிஜமான பலம் தேசியவாதம். மோடி அந்த புறத்தோற்றத்தை பலப்படுத்திவிட்டு போன பிறகு, அதை யாரும் ஒரு சட்டையைபோல எடுத்து அணிய முடியும்

இந்து தேசியவாதம் இப்படித்தான் இந்திய தேசியவாதம் ஆனது. அப்படி அது இருகூறாக பிரிந்து தோன்றியது. ஒரு தந்திரம் என்பதை நாம் தாமதமாகவேனும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் வெற்றி என்பது அதை வெறும் மதவெறி என புரிந்துகொண்டவர்களின் தோல்வி. மிதமிஞ்சிய கார்ப்பரேட் மோகம், வளர்ச்சி எனும் கதையாடல்கள் மீதான நமது சாய்வு, மற்றும் நுகர்வுவாதம் நம்மை அரசியலற்றவர்களாகவும், காற்றடித்தால் தேசியக்கொடியைப் பற்றி மட்டுமே நிற்க முடியுமட்டும் பலவீனர்களாகவும் மாற்றிவிட்டன. பாஜகவின் தேசியத்துக்கும் கார்ப்பரேட் சதிகளுக்கும் பின்னுள்ள கூட்டை அம்பலப்படுத்துவதுடன், அதை நாம் தொடர்ந்து எதிர்ப்பதும் அவசியம். ஒரு எதிர்முதலாளித்துவ, மாநில சுயாட்சியை ஆதரிக்கும், மொழி / இனம்சார் தேசியவாதமே இனி (நாம் விரும்பினாலும் இல்லாவிடினும்) பாசிசத்துக்கு எதிரான நமது கடைசி அஸ்திரமாக இருக்கும் என கணிக்கிறேன்

ஒரு பொய்யான வாழ்க்கைக்குள் நிஜமான வாழ்க்கை இல்லைஎன்றார் அடோர்னொ. அதாவது இந்தியாவின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக போராடும் ஒரு மாநிலம் காயடிக்கப்படும்போது நாம் மட்டும் நிம்மதியாக தனியாக வாழ முடியாது. நிஜம் ஒரு நாள் வெல்லும், அன்று நீதியும் வெல்லும். ஆனால் அதுவரை நாம் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது