இன்ஜினியர் படிச்சா வேலை கிடைக்காது என்பது மிகப்பெரிய பழமொழியாக  உருவாகியுள்ளது. நாட்டின் பல பொறியியல் கல்லூரிகள் பல லட்சம் பொறியாளர்கள் என வருடா வருடம் அதிகமாகிக்கொண்டிருக்கிற இந்த நிலையை சீரமைக்க சரியான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.

ஒருபக்கம் சரியான, தகுதியான மாணவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்பதும், இன்னொரு பக்கம் பொறியியல் கல்லூரிகள் சரியாக மாணவர்களை தகுதியுடையவர்களாக உருவாக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டுக்களாக அடிக்கிவைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சரியான உட்கட்மைப்பு வசதி, விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இல்லாத 92 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் குறைத்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 537 தனியார் கல்லூரிகளி்ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐடி, திருச்சி என்ஐடி என மொத்தம் 170 பேராசிரியர்கள் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர். முடிவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சரியான உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை இல்லாதது, ஆய்வுக்கூடம் வசதி இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத மொத்தம் 92 கல்லூரிகளில் மீது அண்ணா பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி, இந்தாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், 25 முதல் 50 சதவீதம் வரையில், என்ஜினியரிங் சீட்டை குறைத்துள்ளது.

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது, ‘மொத்தம் 537 இன்ஜினியரில் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 250 என்ஜினியரிங் கல்லூரிகள், எம்பிஏ, எம்சிஏ கல்லூரிகளில் சரியான வசதி இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கல்லூரி நிர்வாகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பின்னர், கல்லூரிகளின் விளக்கவுரை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 92 இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர், எம்பிஏ, எம்சி கல்லூரிகளில் 300 துறைகளுக்கான சீட்டை 25 முதல் 30 சதவிகிதம் வரையில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’. இவ்வாறு அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.