இலங்கையில் மதக்கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்தில் கொண்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் சிலா நகரைச் சேர்ந்த இருபிரிவினரிடையே, ஃபேஸ்புக்கில் உருவான வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. இதனால் ஒரு பிரிவினர் அப்பகுதியில் உள்ள மசூதிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில். 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்நாட்டில் இரு பிரிவினரிடையே தொடர்ந்து மனக்கசப்பு நிலவி வருகிறது.

இதனை வெளிப்படுத்தும் வகையில் இரு பிரிவை சேர்ந்த சிலர் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட வாக்குவாதம் நேரில் மோதிக்கொள்ளும் அளவிற்குச் சென்றது.

இதனையடுத்து ஒருபிரிவினரின் வழிபாட்டு தலங்கள் மற்றும் சில கடைகள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால் இரு பிரிவினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், சிலா நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது நிலவரம் சீரடைந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பெரும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் சமூக வலை தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகளை முடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.