இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம், அந்நாட்டில் இயங்கி வந்த தேசிய தவ்ஹீ ஜமா-அத் என்கின்ற முஸ்லிம் அமைப்பு என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜிதா சேனரத்னே(இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்), ‘தேசிய தவ்ஹீத் ஜமா-அத் அமைப்புக்கு சர்வதேச அளவில் யாராவது உதவினார்களா? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார் சேனரத்னே.

மேலும் AFP செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி இலங்கை காவல் துறையின் தலைவர், ‘வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று தேசிய தவ்ஹீத் ஜமா-அத், தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது’ என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமா-அத் பற்றி இதுவரை சரிவர தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இதற்கு முன்னரும் அந்த அமைப்பு, புத்தர் சிலைகளை சிதைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் தரப்பு, ‘தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்ட 24 பேரும் ஒரு அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்பதை மட்டும் AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளார் என ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.