நவநாகரீக வளர்ச்சியில் உச்சம் தொட்டு உலகையே சுற்றி வந்தாலும், இந்திய மக்களின் மனதில், ஆயுள் காப்பீடு என்று சொன்னதும் முதலில் நினைவிற்கு வருவது எல்.ஐ.சி.யாகதான் இருக்கும்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சென்னை அண்ணா சாலையில் பயணிப்பவர்கள் பிரமிப்பாகப் பார்க்கப்படும் கட்டிடம் என்றால்! அது எல்.ஐ.சியின் 14 அடுக்கு கட்டிடம்தான் என்பதை மறுக்க முடியாது.

அதேபோல், 1956-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அண்ணாசாலை கட்டிட பிரமிப்பையும் தாண்டி விண்ணை முட்டும் அளவு வளர்ந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட பிறகான காலங்களில், இந்த நிறுவனம் 31 லட்சம் கோடி சொத்து மதிப்புடன், 4,826க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களுடன், 40 கோடி வாடிக்கையாளர்கள், 1.11லட்சம் ஊழியர்கள் மற்றும் 11.48 லட்சம் முகவர்கள் என உலகின் 14 நாடுகளில் தன் கிளை நிறுவங்களுடன் இயங்கிவரும் எல்ஐசி நிறுவனம். ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 2.5 கோடி புதிய பாலிசிகளை விற்பனை செய்கிறது என்றால் வியப்பின் சரித்திரக் குறியீடு இதுவாகத்தானே இருக்க முடியும். உலகிலேயே அதிகப்படியான காப்பீட்டு சந்தை மதிப்பையும் அதிகப்படியான ஊழியர்கள் மற்றும் சொத்து மதிப்பைக்கொண்ட பொதுத்துறை நிறுவனமாக திகழ்கின்றது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்.

இப்படி 60 ஆண்டுகள் பழமையான பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பயணம் இந்திய மக்களின் வாழ்வில் ஒருங்கிணைந்து பயணிப்பது அற்புதமானது. இந்திய காப்பீட்டு சந்தையில் 2019 நவம்பர் வரையிலான காலத்தில் சுமார் 76.28 சதவிகிதம் எல்.ஐ.சியின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்திய பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதில் குறிப்பாக எல்.ஐ.சி மற்றும் ஐடிஆர்பி மூலமாக 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளது தற்போது காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் மற்றும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதாக அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் அதிகப்படியான முதலீட்டு சாதனமாக கருதும் ஆயுள் காப்பீடு கழகத்தின் ஒரு பகுதி பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்ததில் இருந்து, பல்வேறு வகையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது மத்திய அரசு.

1956ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது, எல்ஐசியின் 95 சதவிகித சதவீத லாபத்தினை மக்களுக்குத் திருப்பித் தர வேண்டும், 5 சதவீத ஈவுத் தொகையினை மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். எல்.ஐ.சி. திரட்டும் நிதியில் 10 முதல் 20 சதவீதம்வரை நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சி பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 3 நிபந்தனைகள் போடப்பட்டன.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் எல்.ஐ.சி. நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்காக உதவி வருகிறது. 2019-20ஆம் ஆண்டில் மட்டும் மத்திய அரசுக்கு 3 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளது.

இன்றைய காலகட்டத்தின்படி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ. 31 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. கணக்கில் வராமல் இன்னும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் எல்ஐசி நிறுவனம் அரசின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொகை தொகை மட்டுமே ரூ.28 லட்சத்து 84 ஆயிரத்து 331 கோடியாகும்.

இப்படி எந்தக் காலத்திலும் சரிவை சந்திக்காத நிறுவனமாக இருந்து வரும் எல்.ஐ.சியைத் தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைந்து வரும் இந்த வேளையில், இந்தியப் பொருளாதாரத்திற்கே ஓர் அமுதசுரபியாக திகழும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை விற்பனை செய்ய பல்வேறு தரப்பில் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.

கடைக்கோடி இந்தியனுக்கும் பணப் பாதுகாப்பை வழங்கிய நிறுவனத்திற்கு. இன்று பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு காட்டும் சிலர்.2000 ஆண்டுக்கு பிறகு இந்திய காப்பீட்டு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பல தனியார் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொண்டு சென்றுள்ளதையும், ஏஐஜி. ஏஎம்பி போன்ற நிறுவனங்கள் காப்பீட்டு துறையில் இருந்து வெளியேறியது போல. புதிதாக உருவாகும் தனியார் நிறுவனங்களும் செயல்படும் பட்சத்தில், இந்திய காப்பீட்டு சந்தையே ஒரு பெரும் கேள்விக்குறிக்கு தள்ளப்படும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், மக்களை வெறும் லாபம் தரும் பாலிசிதாரராக மட்டுமே பார்க்கிறன என்றும், எதிர்காலத்தில் எல்ஐசி தனியார் வசப்படும் காரணமாக மக்களின் முதலீடுகளும் கேள்விக்குறியாகிவிடும் எனவும். இதன் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும் என்று எச்சரிக்கின்றார் எல்.ஐ.சி. ஊழியர்கள் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணைத் தலைவர் க.சுவாமிநாதன்

2021 நிதியாண்டில் எல்.ஐ.சியின் சந்தை மூலதனம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பீடு மற்றும் சட்டரீதியான சவால்கள் உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு. இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஜாம்பவானாக எல்ஐசி மாறப்போவதாக தெரிவிக்கிறது அறிக்கை ஒன்று.

இந்திய பங்குச் சந்தையில் சுமார் 11 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் தற்போது முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி நிறுவனம் பங்குச் சந்தையில் காலூன்றும் பட்சத்தில் இந்திய வணிக உலகின் அதிகாரப்பூர்வ மன்னனாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வலம் வரும் என்று ஆருடம் கூறுகின்றனர் மற்றொரு தரப்பினர்.

ஏற்கனவே இந்திய பங்குச்சந்தையில் எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது.

ஐடிபிஐ. கார்பொரேஷன் வங்கி. பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பல வங்கிகளில் எல்.ஐ.சி நிறுவனம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மெதுவாக அதன் பங்குகளை குறைந்துள்ளது.

2009 ஆண்டு முதல் நாட்டின் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க பொதுத்துறை நிறுவனங்களை அரசு விற்றபோதெல்லாம்.! எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. இன்று எல்ஐசி நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளதை எண்ணி பலர் ஆச்சரியத்திலும் பலம் ஆவேசத்திலும் முழங்கி வருகின்றனர். எல்ஐசியில் தனியார் துறை முதலீட்டிற்கு பிறகு மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது தனியார் காப்பீட்டு நிறுவனங்களை போல லாபம் ஒன்றையே குறிக்கோளாக செயல்படுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.