தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31ஆம் தேதிவரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

2011ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்று ஆண்டுகள் கடந்தநிலையில், இன்னும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படவில்லை. இதற்கிடையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினை தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக திமுக சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தது தமிழக மாநில தேர்தல் ஆணையம்.

மேலும், “வார்டு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் இறுதிவரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை” எனத் தமிழக தேர்தல் ஆணையம் அந்த மனுவில் கூறியுள்ளது.